மராட்டிய மாநிலத்தில் மசூதி – மார்க்கெட் அருகே குண்டுகள் வெடித்து 37 பேர் பலி
இந்திய மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது மலேகான் நகரம். சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம் நாசிக்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நகரில் நேற்று அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 37 பேர் பலி ஆனார்கள். மேலும் 50-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர்.
குண்டு வெடித்தது
மலேகான் நகரின் மையப்பகுதியில் உள்ள படா கப்ரிஸ்தான் என்ற இடத்தில் மசூதி உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் தொழுகைக்காக ஏராளமான பேர் கூடி இருந்தனர். மேலும் மசூதியையொட்டி கல்லறை தோட்டமும் உள்ளது. அங்குள்ள மைதானத்தில், இஸ்லாமியர்களின் புனித இரவான ‘பரா அத்’ இரவையொட்டி 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கூடி இருந்தனர். மறைந்த தங்களுடைய உறவினர்களுக்காக பிரார்த்தனை நடத்துவதற்காக அவர்கள் வந்து இருந்தனர்.
மசூதியில் தொழுகை முடிந்து பிற்பகல் 1-45 மணி அளவில் ஏராளமான பேர் அங்கிருந்து வெளியே வரத் தொடங்கினார்கள். அப்போது மசூதியின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது. வெளியே வந்து கொண்டு இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக அங்கும் இங்குமாக சிதறி ஓடினார்கள். இதன் காரணமாக நெரிசல் ஏற்பட்டதால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடினார்கள். இதனால் ஏராளமான பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலர் குழந்தைகள் ஆவார்கள்.
போலீசார் மீது தாக்குதல்
எனவே, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். போலீஸ் ‘ஜீப்’புக்கு தீவைக்கப்பட்டது. சில கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டினார்கள்.
மற்றொரு குண்டு வெடிப்பு
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் நகரில் உள்ள முஷைரா மார்க்கெட்டிலும் குண்டு வெடித்தது. அந்த பகுதியில் 2 குண்டுகள் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் முதல் குண்டு வெடிப்பு நடந்த மசூதி பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
இந்த 2 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 37 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் நுÖற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் பலர் சிறுவர்கள் ஆவார்கள்.
குண்டு வெடித்த இடங்களில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. சில இடங்களில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் தனியாக கிடந்தன. அந்த பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளின் முன்பு கூடினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது,
பலத்த காயம் அடைந்தவர்களை நாசிக் நகருக்கு கொண்டு சென்றனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
துப்பாக்கி சூடு
குண்டு வெடித்தது பற்றிய தகவல் பரவியதும் சுமார் 500 பேர் திரண்டு அந்த இடங்களுக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.
மேலும் ஆசாத் நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சில வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இதைத்தொடர்ந்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன்பிறகு கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள்.
முதல்-மந்திரி விரைந்தார்
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் மராட்டிய மாநில முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீல் ஆகியோர் மலேகான் நகருக்கு விரைந்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலேகான் நகரில் ஏற்கனவே துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நாசிக்கில் இருந்து மலேகானுக்கு கூடுதலாக துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தீவிரவாத தடுப்பு படை மற்றும் அதிரடிப்படை போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் டெல்லியில் இருந்த தேசிய பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவினரும் விரைந்தனர்.
ஊரடங்கு உத்தரவு
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மலேகான் நகரில் பதட்டமும் பீதியும் ஏற்பட்டது. கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி மராட்டிய மாநில போலீஸ் ‘டி.ஜி.பி.’ பி.எஸ்.பஸ்ரிச்சா கூறுகையில்; படா கப்ரஸ்தான் பகுதியில் வெடித்த குண்டு அங்குள்ள ஒரு கடையிலும், முஷைரா மார்க்கெட்டில் வெடித்த குண்டு ஒரு சைக்கிளிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது என்று கூறினார்.
செல்போன் சேவை பாதிப்பு
மலேகான் நகரில் குண்டுகள் வெடித்தது பற்றிய தகவல் கிடைத்ததும் வெளிïர்களில் இருந்து ஒரே சமயத்தில் ஏராளமான பேர் அங்குள்ள தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். இதனால் நகரில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மும்பை நகரில் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர். நகருக்குள் வரும் வாகனங்களும் நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
இதேபோல் தலைநகர் டெல்லியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. பஸ், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல் குஜராத் மாநிலத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மாநிலங்களுக்கு உத்தரவு
மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தினார்கள். நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
குண்டு வைத்தது யார்?
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த ஜுலை 11-ந் தேதி மின்சார ரெயில்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 200 பேர் பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தனர். அந்த தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் இப்போது மலேகான் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து உள்ளது.