ஜெயலலிதா, வைகோ விடுதலைப்புலிகள் -இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை…-பாரதிராஜா
நெய்வேலி போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி டைரக்டர் பாரதி ராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு காங்கிரசை சேர்ந்த பெரியவர் கிருஷ்ணசாமி கடந்த 2, 3 நாட்களாக காரணம் இல்லாமல் என்னைப்பற்றிய விமர்சனங்களை பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். அறிக்கைகளுக்கு அறிக்கை மூலம் பதில் சொல்வது என்பது அரசியல் நடத்துவதற்கு சரியாக இருக்கலாம். உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினைக்கு பதில் அறிக்கை விட்டு அறிக்கைப்போர் நடத்துவது அநாகரீகம் என்று தான் 2 நாட்களாக நான் ஒதுங்கி நின்றேன்.
ஆனால், ஏதோ காரணத்தை மனதில் கொண்டு தினமும் ஒரே தவறான செய்தியை திரும்பத் திரும்ப சொல்லி என்னை இப்படி ஒரு அறிக்கை விட வைத்து விட்டார்.
நெய்வேலி போராட்டம் ஒரு வரலாற்றுப் பதிவு. காவிரி தண்ணீருக்காக தஞ்சை விவசாயிகளுக்கு அவர்களின் துயர் துடைப்பதற்கு அரசியல் சூழல் காரணமாக நீங்கள் யாருமே குரல் கொடுக்காதபோது, ஒட்டு மொத்த தமிழ்த்திரை உலகமும், விவசாயப் பெருங்குடி மக்களும் தமிழ் உணர்வாளர்களுமான இரண்டு லட்சத்துக்கு மேலான என் இனிய தமிழ் மண்ணின் மைந்தர்கள், கைகோர்த்து நடத்திய உணர்வு பூர்வமான மிகப்பெரிய பயணம் அது. அதற்கு தலைமை தாங்கிய பெருமை எனக்கு எப்போதும் உண்டு.
தமிழ்த் திரை உலகின் எல்லா கலைஞர்களும் ஒரு சேர திரண்ட விழா அது என்பதால் பொறுப்புணர்ச்சியோடு அந்த பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்றைய முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா செய்து தந்தார்.
யாரும் என்னைப் பின்னிருந்த இயக்க வேண்டிய நிலையில் நானும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டவர்களும் இல்லை. நான் பிறப்பால் தமிழன். தமிழ்க் கிராம தெருக்களையே பள்ளிக் கூடங்களாகப் படித்து வளர்ந்து வந்தவன். இந்த மண் என்னை நேசிக்கிறது. நான் இந்த மண்ணை நேசிக்கிறேன். இந்த மக்கள் என்னை நேசிக்கிறார்கள்.
என்னுடைய 40 ஆண்டு கால கலை உலகிலும் சரி என் தமிழ் மக்களோடு இரண்டரக் கலந்த கலை கலாசாரப் பண்பாட்டுப் பரிவர்த்தனைகளிலும் சரி என்னைப் பற்றிய நிர்வாண உண்மைகள் என் இனிய தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., முத்தமிழ் அறிஞர் கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவி ஜெயலலிதா, மக்கள் தலைவர் மூப்பனார், தோழர்கள் நல்லகண்ணு, சங்கரய்யா, டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என்று கட்சி பாகுபாடு இன்றி எல்லா தலைவர்களோடும் நெருங்கிப்பழகுகின்ற வாய்ப்பை பெற்றுத் தந்த கலை உலகம் தான் இந்தப் பேரணிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற வாய்ப்பையும் எனக்கு பெற்று தந்தது.
யாரிடமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எந்த நிழல் குடையிலும் நிற்காத யாருக்கும் கை கட்டாத ஒரு தன்மானத் தமிழன் என்பதில் எனக்கு நானே கம்பீரமாக கர்வப்பட்டுக்கொள்வது உண்டு.
இன உணர்வையும், மொழி உணர்வையும் இந்த மண்ணின் நுகர்வையும் யாரும் சொல்லிக் கொடுத்து வருவது இல்லை. அது பிறப்பால் வருவது. அந்த உணர்வின் அடிப்படையில் தான் என் பேட்டி வெளியானது. இன்றளவும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர்ந்து, நிற்க நாதியில்லாது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நாலா திசையிலும் சின்னாபின்னப்பட்டுக்கிடக்கிற என் தமிழ் சமுதாயத்தை, ஒரு இனத்தை நம்மில் பெரியவர் யாராவது காப்பாற்றி விடமாட்டார்களா? என்ற ஆதங்கத்தில் கொடுத்த பேட்டி அது. அதை கொச்சைப் படுத்தாதீர்கள்.
ஜெயலலிதா, வைகோ விடுதலைப்புலிகள் இந்த ஆடு புலி ஆட்ட விளையாட்டுக்களை அன்பு கூர்ந்து அரசியல் உலகில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் பண்ண உங்களுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நான் வேண்டாம். இவ்வாறு பாரதிராஜா கூறி உள்ளார்.