இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?..!! (கட்டுரை)
அதிகாரப் பரவலாக்கமில்லாத, மிகவும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்திலேயே, நாம் வாழ்கின்றோம். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதிகாரப் பரவலாக்கமில்லாத ஒரு சமுதாயத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.
பாலின சமத்துவம், மனித உரிமைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. “எங்களுடைய பாடசாலையில், ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இணைந்தே கல்வி கற்கின்றனர்.
ஆனால், கூடவே படிக்கும் மாணவிகள் நேருக்கு நேர் வந்தால் கூட, எம்முடைய மாணவர்கள் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ மாட்டார்கள், அவ்வளவு நல்ல பிள்ளைகள்” என்று, சில ஆசிரியர்கள் பெருமிதமாகக் கூறுகின்றனர்.
இவ்வாறான இடைவெளி ஏற்பட்டமைக்கு அல்லது ஏற்படுத்தப்பட்டமைக்கு, பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால், ஏற்பட்ட இந்த இடைவெளியென்பது, பின்னொரு காலத்தில் பாலின சமத்துவம் அல்லது பாலினங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவற்றைச் சாத்தியமற்றதாக்குகிறது என்றால், அது மிகையில்லை.
எனவே, இங்கு, பாடசாலை ஆரம்ப காலத்திலேயே, இருபாலர் கல்வித்திட்டம் என்பது கட்டாயமாக்கப்பட்டால், சில வேளைகளில், பாடசாலைகளில் காணப்படும் இவ்வாறான நிலைமை, இல்லாமல் ஆக்கப்படலாம்.
கொழும்பு போன்ற, சிறிது வளர்ச்சியடைந்த பகுதிகளில், இரு பாலாருக்குமிடையிலான வித்தியாசங்கள் அல்லது அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை என்பது, ஓரளவு குறைவாகக் காணப்படுகின்ற போதிலும், வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில், இந்நிலைமை மோசமாக இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
பெண்களுக்கான உரிமைகள் அல்லது ஆண்களுக்கு நிகரான பெண்களின் வாழ்க்கையை, தென்கிழக்கு ஆசியாவில், இலங்கையே முதன்முதலாகக் கொடுத்துள்ளது என்று கூறலாம். எனினும், பாலின சமத்துவம் என்பது, இலங்கையிலும் ஓர் எட்டாக்கனியாகவே இன்னும் இருந்து வருகின்றது.
கல்வி, உயர்ந்த பதவிகள், பொருளாதார வளர்ச்சி, சமூகப் பொறுப்புகள் போன்றவற்றில், பாலின சமத்துவம் என்பது சற்று முன்னேற்றமாகக் காணப்படுகின்றது என்று கருதினாலும், சாதாரணமாகப் பாதையில் செல்லும் போது, அந்தச் சமத்துவமே இல்லை என்றே கூறலாம்.
பெண்களுக்குச் சமுதாயத்தில் உள்ள மதிப்பும் அவர்களைக் கணக்கிடுவதும், ஆண்களைச் சார்ந்ததாக, கடந்த கால பாரம்பரியமாகவே காணப்படுகின்றது. எவ்வாறாயினும், ஆரம்பத்தில், பாலின சமத்துவம், வரவேற்கத்தக்கதாகவே அமைந்திருந்தது.
1960ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க, உலகின் முதலாவது பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர், மூன்று தடவைகள் பிரதமராகப் பதவி வகித்தார். அதற்குப் பின்னர், அவருடைய மகள், சந்திரிகா குமாரதுங்க, 1993ஆம் ஆண்டு, இலங்கையின் முதலாவது பெண் முதலமைச்சராக பதவியேற்றார்.
பின்னர் பிரதமராகத் தெரிவாகி, அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு, 60 சதவீதமான வாக்குகளைப் பெற்று, இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் மீதான அரசியல் விமர்சனங்கள் ஒருபக்கமிருக்க, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட துறைகளில், தங்களின் பெயரை நிலைநிறுத்தியவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர்.
அதேபோல், பெண்களுக்கு, முதன் முதலில் வாக்குரிமை வழங்கிய ஒரு சில ஆசிய நாடுகளுக்குள், இலங்கையும் உள்ளடங்கியிருந்தது. ஆனால், இவ்வாறான வரலாறுகள், இலங்கையில் காணப்பட்ட போதும், தற்போது, ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளமையானது, ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும், தற்போதுள்ள பெண்கள் மிகவும் கணிசமான அளவு பங்களிப்பையே வழங்குகின்றனர். எனினும், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் பெண்கள், இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியிருந்தனர்.
ஆரம்பகாலத்தில், மிகவும் பிரதான ஏற்றுமதியாகக் காணப்பட்ட தேயிலை ஏற்றுமதி, தற்போது, இலங்கையின் அந்நிய செலாவணிக்கு, 2 சதவீத பங்களிப்பை மாத்திரமே கொண்டுள்ளது. இலங்கையில், ஆடைத் துறையில் இருந்து கிடைக்கும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தில், 5 பில்லியன் டொலர்கள் வருமானம், பெண்களாலேயே ஈட்டப்பட்டது.
ஆரம்பத்தில், ஜனநாயக வளர்ச்சியில், பெண்களுக்கு இருந்த அதிகாரம் செல்வாக்கு, பல ஆண்டுகள் ஆகியும் பல்வேறு முறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றதா என்பதைப் பார்த்தால், அவ்வாறு இல்லை என்றே கூறவேண்டும்.
பெண்கள் முன்னேறுவதற்காக, இலவச கல்வி உள்ளிட்ட வசதிகள், நாட்டு மக்கள் தொகையில், மிகவும் உயர்ந்தளவு சதவீதம் என்று காணப்பட்டாலும், இலங்கையிலுள்ள தொழிலாளர்கள் படையில், பெண்கள், சிறுபான்மையினராகவே காணப்படுகின்றனர்.
18 வயதுக்கும் மேற்பட்ட 64 சதவீதமான அளவு தொழிலாளர்கள் படையில் இருக்கவேண்டிய பெண்கள், தற்போது, தொழில் செய்யாமல் இருப்பதாக, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெண்களே, தொழிலாளர்கள் படையில் அதிகமாக உள்ளனர் என்று, பல காலங்களாக கூறப்பட்டு வருகின்றது.
அடுத்ததாக, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றியும் பார்க்க வேண்டியிருக்கிறது. தற்போது இலங்கை அரசியலில், 13 பெண்கள் மாத்திரமே பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். இது, ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 5.7 சதவீதமாகும்.
பெண்கள், அரசியலில் அங்கம் வகிக்காமைக்கு, சில காரணங்களைக் கூறலாம். முதலாவதாக, அரசியல் என்பது, “சாக்கடை”, “வன்முறைகள்”, “ஒழுக்கமான பெண்களுக்கு தகுதியற்ற தொழில்” போன்ற காரணங்கள் பெண்களின் மனதில் பதிந்த ஒன்றாக பலகாலங்களாக் காணப்படுகின்றது.
அரசியலுக்குச் சென்றால், நம்மை பெண் என்றே மதிக்க மாட்டார்களோ என்ற அச்சம், ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் இருக்கின்றது என்றால், அதைப் பலரும் ஏற்றுக்கொள்வர்.
ஏனெனில், அரசியலிலுள்ள ஆண்கள், பெண் போட்டியாளர்களை “மிதித்து” தள்ளிவிடுகின்றார்கள் என்பது, காலங்காலமாகப் பெண்களிடம் இருந்து வரும் கருத்து. தங்களது கட்சியில் இருக்கும் பெண்கள் தேர்தல்களில் போட்டியிடும் போது, அவர்களுக்குப் பாலியல் ரீதியான மன உளைச்சல் ஏற்படும் வகையில், ஆண் போட்டியாளர்கள் அச்சுறுத்தல்களை விடுக்கலாம் என்று, பெண்கள் அச்சப்படுகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவதை, 25 சதவீதமாக ஆக்குவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில், “நடைமுறை சிக்கல்கள்” காணப்படுகின்றன.
தமிழ்ப் பெண்களைப் பொறுத்த வரைக்கும், பொதுவான வாழ்க்கை முறைமைக்கு, தங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதில், பின்தங்கிய நிலையே காணப்படுகின்றது. அதற்கு நல்லதோர் உதாரணமாக, வடக்கை பொறுத்தமட்டில், வடமாகாண சபையில் 38 அங்கத்தவர்கள் இருந்தாலும், அதில், அனந்தி சசிதரன் மாத்திரமே, பெண்களுக்கான பிரதிநிதித்துவதை வழங்குகின்றார்.
ஆகவே, அரசியலிலும் பெண்கள் உள்நுழைவது, பின்தள்ளப்படுகின்றதா அல்லது அவர்களாகவே பின்நோக்க நடக்கின்றனரா என்பது இங்கும் கேள்வியாகவே காணப்படுகிறது.
ஒரு பெண், தொழிலதிபராகக் இருக்கின்றார் என்றால், “பெண் தொழிலதிபர்” என்று கூறுகின்றார். “தொழிலதிபர்” ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது என்றால், அது ஓர் ஆண் என்பதை அனைவரும் மனதில் ஊகித்துக்கொள்வர். அவ்வாறாயின், தொழிலதிபர் எனும் பதம், ஆணுக்கு மட்டும் தான் சொந்தமானதா என்றொரு கேள்வி எழுகின்றது.
இந்நிலையில், தொழிலதிபருக்கு முன்னால் வரும் அந்த “பெண்” என்ற சொல் எதற்கு என்று சிந்திக்கவேண்டியுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாய், தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.
அவரை நேர்காணல் செய்வோர், நீங்கள் திருமணமானவரா, உங்களுடைய குழந்தைகளை எவ்வாறு வளர்த்தீர்கள், வீட்டு வேலைகளை செய்துகொண்டே எவ்வாறு இந்த நிலைக்கு வந்தீர்கள், இவ்வாறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால், தொழிலதிபராக உள்ள ஓர் ஆணிடம், இவ்வாறான கேள்விகள் கேட்கப்படுவதில்லை.
ஒரு விளையாட்டு வீராங்கனையிடமும் கூட, இவ்வாறான கேள்விகளே கேட்கப்படுகின்றன. ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டை இரசிகர்கள் பார்த்து இரசிப்பதைப் போன்று, பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டை, யாரும் இரசிப்பதில்லை என்பது ஒப்புக்கொள்ளவேண்டியதொன்றே.
கிரிக்கெட் விளையாடும் பெண் வீராங்கனையொருவர், சாம்பியனாகிவிட்டார் என்றால், அவரிடம், உங்களுக்குப் பிடித்தமான ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்பார்கள்.
ஆனால், இதுவே ஓர் ஆண் கிரிக்கெட் வீரரிடம் சென்று, உங்களுக்குப் பிடித்தமான பெண் கிரிக்கெட் வீராங்கைன யார் என்று இதுவரைக்கும் யாரேனும் கேட்டதுண்டா?.
மற்றுமொரு கவனிக்க வேண்டிய விடயம் உண்டு. காதலை ஏற்றுக்கொள்ள பெண் மறுத்தால், அவர் கொலைசெய்யப்படுகின்றார்.
இலங்கையில் இச்செயல் அரிதாகவே காணப்பட்டாலும் இதுவும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டுக்குள் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றே. காதல் மறுக்கப்பட்டதால், தான் காதலித்த பெண்ணையே கொலைசெய்யத் துணியும் ஆண், இதற்கு முன்பு சிறு வன்முறையில் கூட ஈடுபட்டிருந்திருக்கமாட்டார். இங்கு, ஆண்-பெண் உறவு நிலையில் புரிதல் இல்லாததே, இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
முதலாவதாக, பாலினச் சமத்துவம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதை, பலர் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இச்சமூகத்தில் சமமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதே, பாலின சமத்துவம். இதைக் கற்றுத் தருவதற்கு, பல நாடுகளில் சில பாடத்திட்டங்கள் உள்ளன.
ஆனால் இலங்கையில் அவ்வாறான பாடத்திட்டம் இல்லை என்றாலும், அது இருந்தாலும் கூட, அவற்றைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் தாழ்வு இல்லை என்பதைப் பெண்களுக்குக் கற்றுத் தரும்போதே, அதை ஆண்களுக்கும் சேர்த்து கற்றுத்தரவேண்டும் என்பது கட்டாயமானதே.
பாலியலுக்கும் (sex) பாலினத்துக்கும் (gender) இடையில் உள்ள வேறுபாட்டை பாடசாலைகளில் நாம் எவேரனும் கற்றதுண்டா? பாலியல் என்பது உடல் ரீதியானது; அது இயற்கையானது. ஆனால், பாலினத் தன்மைகள் என்பவை ஆண்மை, பெண்மை எனச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவை.
பெண்ணால் மட்டுமே பிரசவிக்க முடியும், ஆணால் முடியாது என்பது உடல் சார்ந்தது. ஆண்கள் அழக் கூடாது; பெண்கள் மென்மையானவர்கள் என்பவை, சமூகத்தால் உருவாக்கப்பட்ட விழுமியங்கள். இவற்றை முதலில் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலின சமத்துவம் என்பது, ஒரு புத்தகத்துக்குள் உள்ளடக்கப்பட்டு, ஆசிரியர் சொல்லித்தர, அவரவர் இருக்கையில் அமர்ந்து மனனம் செய்யும் விடயம் அல்ல. பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்க, முதலில் தங்குதடை இன்றி நினைத்ததை வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒரு நாடக மேடையில், ஆணைப் போலப் பெண்ணும் பெண்ணைப் போல ஆணும் உடல் அசைவுகளால் பிரதிபலிக்கும்போது, அங்கு ஆண்மை, பெண்மை என்கின்ற பிம்பம் தளர்வதற்கான முதல் படியாக உருவாகிறது. அடுத்துத் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆணின் அனுபவத்தைப் பெண்ணும் பெண்ணின் அனுபவத்தை ஆணும் கூடியிருப்பவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோன்ற சில நடவடிக்கைகளின் மூலமே, ஆண்களைப் பற்றிப் பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் புரிந்துகொள்ள உதவுகின்றன.
எல்லா நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சமநிலையிலிருக்க வேண்டும். சலுகைகள் வேண்டாம், உரிமைகளே வேண்டும் என்பதே, பெண்ணியம் சொல்லும் பாடம். பாலின சமத்துவத்தின் அடிப்படையும் இதுவே. பெண்ணின் பங்கு இல்லையென்றால், குடும்பம் மட்டுமல்ல சமூக முன்னேற்றமும் தடைபடும் என்று பெண்ணியத் திறனாய்வு கூறுகிறது.
ஆண்டாண்டு காலமாகப் பெண்களின் உடலை, உடல் உறுப்புகளை “அழகு“ என்ற பெயரில் போகப் பொருளாகவே கருதி வர்ணித்து வருகிறார்கள் என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண், தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெண்ணியம் சொல்லுகிறது.
பாலின வேறுபாடு, உடல் மொழி ஆகியவற்றைக் கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும், இதன் பின்னால் அதிகார அரசியல் செயற்படுவதையும் நிறுத்தவேண்டும்.
மாற்றங்கள் ஒவ்வொருவரின் மனதில் இருந்து தொடங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போகும் பெண்ணை, “கவனமாக இரு, யாரிடமும் அநாவசியமாகப் பேசாதே, ஒழுங்காக உடையணி” என்று ஆயிரம் அறிவுரைகளைக் கூறும் சமூகம், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆணைப் பார்த்து, “ஒழுங்காக, யோக்கியமான ஆண் மகனாக நடந்துகொள்” என்று அறிவுரை சொல்லும் காலம் வந்தால்தான் இந்தப் பாலின பாகுபாட்டுக்குத் தீர்வு ஏற்படும்.
அதுவரைக்கும், இலங்கையில் மாத்திரமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும், பாலின சமத்துவம் என்பது, ஓர் எட்டாக்கனியாகவே இருக்கும்.
Average Rating