பன்றிகள் மூலம் கோடீஸ்வரரான நபர்..!!
பன்றி வளர்ப்பின் மூலம் கோடிகளில் வியாபாரம் செய்யலாம் என நிரூபித்துள்ளார் மோஹர் சாகு (51).
சாகு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார், இவரின் தந்தை ரிக்க்ஷா ஓட்டுநராக இருந்தார்.
சாகுவுடன் சேர்ந்து அவர் குடும்பத்தில் மொத்தம் நான்கு பிள்ளைகள். இவரின் தந்தைக்கு ரிக்ஷா ஓட்டுவதன் மூலம் தினம் பத்து ரூபாய் வருமானம் வந்தது.
இதை வைத்து குடும்பத்தின் செலவை சமாளிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
சாகுவுக்கு ஐந்து வயது இருக்கும் போது அவரை அரசு பள்ளியில் தந்தை சேர்த்தார், 7ஆம் வகுப்பு வரை படித்த சாகு பின்னர் சீருடை, உணவு போன்றவற்றுக்கு பணம் இல்லாததால் தனது படிப்பை நிறுத்தினார்.
தன்னை தேடி வரும் இளைஞர்களுக்கு பன்றி வளர்ப்பு குறித்த பயிற்சியை சாகு அளிக்கிறார்.
தனது 12வது வயதில் குடும்ப வறுமையை போக்க கனமான பொருட்களை தோளில் தூக்கி செல்லும் கூலி வேலையை சாகு செய்தார்.
இதன் மூலம் தினமும் அவரால் 3 ரூபாய் சம்பாதிக்க முடிந்தது.
தொடர்ந்து 6 மாதங்கள் தொழிலாளியாகப் பணியாற்றிய பின்னர், அவரது தந்தைக்கு இருந்த தொடர்புகள் மூலமாக ரிக்க்ஷா கண்காணிப்பாளர் வேலை சாகுவுக்கு கிடைத்தது.
அங்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் கிடைத்தது. பின்னர், 1984ல் சாகுவுக்கு திருமணம் ஆனது. இந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது என முடிவெடுத்த சாகு வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், அவருக்கு ஒரு பாத்திரகடையில் 400 ரூபாய் சம்பளத்தில் விற்பனையாளர் வேலை கிடைத்தது.
ஆனால் சாகுவுக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
மூன்று வருட பணிக்கு பிறகு அங்கிருந்து விலகிய சாகு சொந்தமாக தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தார்.
இந்த நேரத்தில் ரிக்ஷா ஓட்டியும் அதில் சம்பாதித்து வந்தார். அப்போது தனது மாமியார் வீட்டுக்கு சாகு சென்ற போது அவர் ஒரு பன்றி பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பின்னர் அவரிடம் பன்றி குறித்து சாகு ஆலோசனை பெற்றார். இதையடுத்து சாந்தகுமார் என்ற மருத்துவரிடம் பன்றி வளர்ப்பு குறித்து பத்து நாட்கள் சாகு பயிற்சி எடுத்துக் கொண்டார்.
இதோடு பன்றியை எப்படி பராமரிப்பது, ஊசி போடுவது, சிகிச்சையளிப்பது போன்ற விடயங்களையும் கற்று கொண்டார்.
பிறகு தான் சேமித்து வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாயில் 10 பன்றி குட்டிகளை சாகு வாங்கினார்.
நான் ஒரு போதும் என் நம்பிக்கையை கைவிட்டதில்லை. அது தான் என் வெற்றிக்கு காரணம் – மோஹர் சாகு
அதை திறமையாக வளர்த்த சாகு பின்னர் மொத்த வியாபாரிகளிடம் பன்றிகளை விற்றார். ஒரு ஆண்டு முடிவில் அவரால் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பன்றிகளின் எண்ணிக்கை 45 ஆனது. 1990-ம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டது
அதன் பிறகு சாகுவின் தொழில் நன்றாக வளர தொடங்கி வருமானமும் அதிகரிக்க தொடங்கியது.
1999-ம் ஆண்டில் 100 பன்றிகளை சாகு வைத்திருந்தார். அந்த ஆண்டில் 10 லட்சம் வருமானமும் கிடைத்தது.
பிறகு தனியாக பன்றி பண்ணையை தொடங்கிய சாகு அதற்கு மோஹர் சாகு பன்றி உற்பத்தி மையம் என பெயர் வைத்தார்
இப்படி பன்றி வளர்க்கும் தொழிலில் அசுர வளர்ச்சியை காட்டிய சாகுவின் தற்போதைய ஆண்டு வருமானம் ஒரு கோடி ஆகும்.
மோஹர் சாகுவின் இந்த வெற்றியின் மூலம், ஒருவர் தன்னை நம்புவதைத் தவிர வேறு எதுவும் வெற்றியைத் தராது என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.
Average Rating