காலக்கெடு; கெடுகாலம்; வெட்கக்கேடு..!! (கட்டுரை)
இலங்கையில் அரசியல்வாதிகள் காலக்கெடு வழங்குதல் என்பது சர்வசாதாரணமான விடயம் ஆகிவிட்டது.
ஒரு பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு, வாக்குறுதி வழங்கியவருக்கான, ஒரு வகையான இடைக்கால நிவாரணம் என்று கூட இந்தக் காலக்கெடுக்களைக் கூறலாம்.
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில், காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், பல ஆயிரம் காலக்கெடுக்களை, வாக்குறுதிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கி உள்ளார்கள்.
ஆனால், அவர்களின் வாக்குறுதிகள் யாவும் உறுதியற்ற, வெற்றுப் பேச்சுகளாகவே மாற்றம் பெற்றன; இது கசப்பான வரலாறு. தற்போது அரசாங்கம் அடித்துக் கூறும் எந்த வாக்குறுதியையும் படித்துப் பார்க்கக் கூடத் தமிழ் மக்கள் விரும்புவதில்லை. ஏனெனில், வாக்குறுதி கொடுப்பதில் அவர்கள் வல்லவர்கள்; நிறைவேற்றுவதில்?
இந்த வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய சம்பந்தன் ஐயாவும் அண்மைக் காலங்களில் பல வாக்குறுதிகள், காலக்கெடுக்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றார்.
இவ்வாறாக, அவர் வழங்கிய பிரபலமான காலக்கெடு, 2016 ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்பதாகும். இறுதியாக, கடந்த ஜூலை 26 ஆம் திகதி, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களது காணி விடுவிப்பு தொடர்பில் ‘ஐயா’வால் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, “பத்து நாட்களுக்குள், நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருவேன்” எனக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவைச் சந்தித்த மக்களிடம் காலக்கெடு வழங்கப்பட்டது.
‘நல்லதொரு தீர்வு’ என அவர் மக்களுக்குக் கூறியது, முழுமையான காணி விடுவிப்பு எனலாம். அதையே பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்த்து, வீதி ஓரத்தில் காத்திருக்கிறார்கள். மாறாக, மக்களுக்கு நட்டஈடு வழங்குவதையோ அல்லது படை தொடர்ந்தும் கேட்கும் காலக்கெடுவுக்கு ‘ஆம்’ என விடை கொடுப்பதையோ அல்ல எனலாம்.
இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ‘இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உரித்தான முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக் காணி’ என்ற தலைப்பில் சம்பந்தன் ஐயாவுக்குக் கடிதம் வரைந்துள்ளார்.
அதில், கேப்பாப்புலவில் படையினரால் பயன்படுத்தப்படும் காணிகளை, இயன்ற வரையில் விடுவித்து, ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளரையும் இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரியையும் கோரியிருக்கின்றார். மேலும், காலவரையறை தொடர்பில் விட்டுக்கொடுத்து ஒத்துழைக்குமாறும் பொறுமையுடன் செயற்படுமாறும் கேட்டுள்ளார், ஜனாதிபதியின் செயலாளர்.
இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியுடன், சம்பந்தன் ஐயா தன்னைக் கொழும்பில் சந்தித்த மக்களுக்கு வழங்கிய, “பத்து நாட்களுக்குள் காணி விடுவிப்பில் நல்லதொரு செய்தியைப் பெற்றுத் தருவேன்” என்ற காலக்கெடு நிறைவு பெற்று விட்டது.
ஆகவே, மறுபுறத்தில் வாக்குறுதி நிறைவு பெற்றதா? நிலத்தை இழந்த மக்கள் நிலத்தை மீட்டார்களா? இவர்களது, வெற்று வாக்குறுதிகள், மக்களை ஒரு விதமான வெறுமைக்குள் தள்ளுகின்றன.
அத்துடன், வேறு சந்தர்ப்பங்களில் இவர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளிலும் சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. ‘ஐயா சொல்வது பொய்யா’ எனத் தமிழ் மக்கள் ஐயப்படக் கூடாது.
ஜனாதிபதியின் செயலாளர், கேப்பாப்புலவு காணி விடயத்தில், ஒத்துழைக்குமாறும் பொறுமையுடன் செயற்படுமாறும் கூறியது ஜனாதிபதி கூறியது போலவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, இவ்விடயத்தில் எட்டு வருடங்கள் (அண்ணளவாக 3,000 நாட்கள்) பொறுமை காத்த மக்களை இன்னும் எவ்வளவு நாட்கள் பொறுமை காக்குமாறு, ‘ஐயா’க்கள் கூறப் போகின்றார்கள். இங்கு, மக்களைப் பொறுமை காக்குமாறு கூறுவது என்பது, தொடர்ந்தும் வீதியில் இருக்குமாறு கூறுவதற்குச் சமமானதாகும்.
இது, ஆளும் அரசாங்கத்தால், சம்பந்தன் ஐயாவுக்கு வழங்கப்பட்ட ஒரு விதமான மழுப்பல் பதிலாகும். இனி, சம்பந்தன் ஐயா, எவ்வாறான பதிலை மக்களுக்குச் சொல்லப்போகின்றார். காணி உரிமையாளர்கள் தெருவில் இருக்க, அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் (படையினர்) மக்களின் வீடுகளிலும் வளவுகளிலும் இருக்கின்றார்கள். ஆகவே, இதுதானா தேசிய ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம்?
இது இவ்வாறிருக்க, வடக்கு மாகாண சபையின் ‘போனஸ்’ ஆசன விடயம், புதிய சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கின்றது. சுழற்சி முறையில், தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய ஆசனத்தைத் தமிழரசுக் கட்சி, தனது ஆதரவாளராகச் செயற்படும் நபருக்குச் சத்தம் சந்தடியின்றி, காதோடு காது வைத்தது போல, கைமாற்றி விட்டது என ‘புளொட்’ அமைப்பின் தலைவர், கடும் சீற்றத்தில், சம்பந்தன் அவர்களுக்கு மடல் வரைந்துள்ளார்.
இவ்விடயத்தில், ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதான ஏற்பாடுகள் இருக்கையில், தமிழரசுக் கட்சி பாதை மாறிப் பயணிப்பதாகவே, மக்கள் உணர்கின்றனர்.
நடப்பு மாகாண சபையின், இறுதி நாட்களை அண்மிக்கும் வேளை, இது தேவையா? ஒற்றுமை, ஐக்கியம் தேவை என மக்கள் கோரும் வேளையில், ஐக்கியம் முக்கியமா? எனக் கேட்பது போல உள்ளது இவர்களின் நடப்புகள்.
அனைத்துக் கட்சிகளுக்கும் தாய்க் கட்சியாக உள்ள தமிழரசுக் கட்சியின் நடத்தைக் கோலங்களில், ஏன் இவ்வாறான மாற்றங்கள் என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
வடக்கு மாகாண சபையில், இதுவரை முன் மொழியப்பட்ட பிரேரணைகளில், சதம் விளாசினார்களே தவிர, போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்தக் கூடிய வகையில் சாதித்தார்களா? ஆகவே, மக்களின் மனங்களைக் கைப்பற்றக் கூடிய வகையில், நடவடிக்கைகளைச் செய்யாமல், மாகாண சபை ஆசனத்தைக் கைப்பற்றக் கூடிய நகர்வுகளை ஆற்றுவதன் மூலம், மக்களின் மனதை ஆற்றலாமா? மாற்றலாமா?
அடுத்து, “பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை; நாட்டைப் பிரிக்குமாறும் நாம் கேட்கவில்லை எனச் சிங்கள மக்கள் மத்தியில் உரக்கச் சொல்லப் போகின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், யாழ்ப்பாணம், வடமராட்சி, திக்கம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற, சமகால அரசியல் கருத்தரங்கில் அவர் இவ்வாறாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களது நீண்ட கால அரசியல் அபிலாஷைகள் என்ன? அதற்காக அவர்கள் கொடுத்த விலை யாது? தமிழ் மக்களது அபிலாஷைகளைக் காலம்காலமாகத் தொடர்ந்து, ஆட்சி புரிந்த சிங்கள அரசாங்கங்கள் அடக்கிய விதம். அதற்கு, அவர்கள் சூட்டிய ‘பயங்கரவாத அழிப்பு’ என்ற பெயர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. அப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட வழி முறைகள்; நடப்பு நிலைவரம் எனத் தொடர்ந்து, நீண்டு செல்லும் பல விடயங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் உரக்கச் சொல்ல வேண்டிய பெரும் தேவை உள்ளது.
ஆகவே, தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள், மக்களைச் சீரான வழியில் சிந்திக்கத் தூண்டக் கூடிய, சிந்தனைச் சிதறலை ஏற்படுத்தக் கூடிய வேலைத் திட்டங்களுக்கான கருமங்களை இதுவரை ஆற்றவில்லை என்றே கூறலாம். முக்கியமாகச் சிங்கள மக்களது மனங்களில் நீங்காமல் உறைந்து போயிருக்கும், நாட்டைப் பிளவுபடுத்தும் பிரிவினைவாதம் தொடர்பாகச் சிங்கள ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிழையான விம்பத்தை, நீக்க வேண்டிய காத்திரமான, சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
இவ்விடத்தில் நாம் மீண்டும் நினைவு கூருவது, படுகொலை செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆவார்.
அவர் இவ்வாறான பரப்புரை பணியில், சிறப்பாகச் செயற்பட்டார். யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த வேளையில் கூட, சிங்கத்தின் குகையில், அவரது அவ்வாறான உயிரிலும் மேலான சிறப்பான பணியே, மரணத்தை அவருக்குப் பரிசாக வழங்கியது.
மும்மொழியிலும் வல்லவரான, சட்டத்தரணியான அவர், பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் கலந்து, சிங்கள மொழியில், சிங்கள மக்களின் சிந்தனையைத் தமிழ் மக்களது, நியாயமான விடுதலைக் கோரிக்கையின் பக்கம் சரியாகக் கொண்டு வர முயற்சித்தார். ஆனாலும், அவ்வாறான பரப்புரைகளைத் தற்போது நடாத்துவது உயிருக்கு ஊறு விளைவிக்காது. ஆனாலும் அந்த முயற்சி குறித்தான சிந்தனை என்பன மந்தமாகவே உள்ளன.
இவ்விடயத்தில், சிங்கள மக்கள், தமிழ் மக்களது நீண்ட கால அரசியல் பிரச்சினையின் தாற்பரியத்தை நிதர்சனமாகப் புரிய வைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் புரியும் பட்சத்தில், சிங்கள ஆட்சியாளர்களால் கூடத் தடைகள் ஏற்படுத்த முடியாத நிலை தோன்றலாம்.
இந்நிலையில், தந்தை பெரியாரின் ஒரு வேத வாக்கை நினைவுபடுத்தலாம். “என்னுடைய முயற்சி எல்லாம் மக்கள் எதையும் சிந்திக்க வேண்டும் என்பதுதான். எதையும் கண் மூடித்தனமாக நம்பி விடக் கூடாது என்பது தான். இனியும், தொடர்ந்து எனது உயிர் உள்ள வரையில் இதைத்தான் கூறி வருவேன்”
ஆயுத யுத்தம் (மே 2009) முடிவுறுத்தப்பட்டவுடன், தற்போது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்றே சிங்கள மக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றார்கள். படித்தவர்கள் தொடக்கம் பாமரர் வரை இதே நிலைப்பாட்டுடனே இருக்கிறார்கள்.
இவ்வாறான கருத்து நிலையையே, தெற்கிலுள்ள சிங்கள, ஆங்கில ஊடகங்களும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகின்றன. அவ்வாறாகவே, சிங்கள அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர். அண்மைக் காலங்களில் யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அதற்குக் கூட, பயங்கரவாத விதை விதைக்கப்பட்டு, சிங்கள மக்களின் மனங்களில் பிழையான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு, விஷவிதையை விதைப்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது.
ஆனால், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உண்மையான நிலைவரங்களை, உள்ளக்கிடக்கைகளை தெற்கில் விதைக்க வேண்டிய மிகப் பெரிய தார்மீகப் பொறுப்பு, கூட்டமைப்புத் தலைமைக்கு உள்ளது.
இந்தச் செயற்பாட்டைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், நல்ல அரசியல் விளைச்சலைப் பெற முயற்சி செய்யலாம்.
Average Rating