நீங்கள் என்ன சோப் உபயோகம்செய்கிறீர்கள்…!
சோப், ஷாம்பு இல்லாமல் குளியல் அறைக்குச் செல்பவர்கள் உண்டா? இன்றைக்கு உலகம் முழுவதும் குளியல் சோப்பின் வணிகச் சந்தை மிகப்பெரியதாக வளர்ந்துநிற்கிறது.
சோப் விற்பனை மூலம் வணிக நிறுவங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கிறது. சந்தையில் பலப்பல நிறுவனங்களின் பல்வேறு விதமான சோப்கள் கிடைக்கின்றன.
தங்களின் அபிமான நடிகரோ, நடிகையோ விளம்பரங்களில் தோன்றி, குறிப்பிட்ட சோப்பைப் பரிந்துரைத்தால், மக்கள் கண்ணை மூடிக்கொண்டு அந்த சோப்பை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
மக்கள் சூப்பர் மார்க்கெட்டில் குளியல் சோப்பை வாங்கும்போது அதன் கவர்ச்சிகரமான உறைக்கும், தள்ளுபடிக்கும், காம்போ ஆஃபர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சோப்பின் தரத்துக்குக் கொடுப்பதில்லை.
பற்பசை, ஷாம்பு, கண்டிஷனர், லிப்ஸ்டிக், மெஹந்தி, மஸ்காரா, முகப்பொலிவு கிரீம்கள் போன்று சோப்பும் ஒரு ரசாயனப் பொருள்தான். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என ஒவ்வொருவரது சருமமும் ஒருவகை.
எனவே, விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, ஏதேனும் ஒரு கண்கவர் சோப்பை வாங்காமல், தரமான சோப்பைத் தேர்ந்தெடுத்து வாங்கி, உபயோகிப்பதே சருமத்துக்கு நல்லது.
சருமத்துக்கேற்ற சோப்பைத் தேர்தெடுக்க இதோ சில டிப்ஸ்…
உப்பு, கொழுப்பு (Fat), காரம் (Alkaline) சேர்ந்த கலவைதான் குளியல் சோப். இதைத் தயாரிப்பதற்குத் தாவர மற்றும் விலங்கின் கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
பிறந்த குழந்தைகளுக்குச் சருமத் துவாரங்கள் இருக்காது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சோப்பைப் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
பிறந்த குழந்தைகளுக்கு சோப் வாங்கும் போது கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை தேவை. அவர்களுக்கு பேபி சோப்தான் சிறந்தது. வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். பேபி சோப் உபயோகிப்பது அவர்களின் சருமத்துக்கு உகந்ததல்ல.
சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த அல்லது ஆன்டிசெப்டிக் சோப்களை (Ayurvedic, Antiseptic Soap) உபயோகிக்க வேண்டாம். இத்தகைய சோப்கள் ஆன்டிசெப்டிக்காகச் செயல்பட்டாலும், சருமத்தைக் கறுப்பாக்கி விடலாம்.
சோப்களில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. முகத்தைக் கழுவ சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது.
நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ்வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால், சருமத்துக்கு நல்லது.
விளம்பரத்தை நம்பி குளியல் சோப் வாங்குகிறோம். உண்மையில் அது குளியல் சோப்தானா என்று பார்க்க வேண்டும். சோப்பின் மேல் உறையில் டாய்லெட் சோப் என்று போட்டிருக்க வேண்டும்.
பல சோப்களின் மேல் உறைகளில் சிறிய எழுத்துக்களில் பாத்திங் பார் (Bathing Bar) என்றுதான் போட்டிருக்கும். இவை குளியலுக்கு ஏற்ற சோப் அல்ல. ஆனால், பாத்திங் பார் என்று போட்டிருக்கும் சோப்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக, நாம் கவனிக்க வேண்டியது டிஎஃப்எம் சதவிகிதம் (Total Fatty Matter). எல்லா டாய்லெட் சோப்களிலும் டிஎஃப்எம் சதவிகிதம் இருக்கும். இதை வைத்து சோப் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
டிஎஃப்எம் சதவிகிதம் 75 முதல் 80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
டிஎஃப்எம் சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் கிரேடு 2 எனவும், 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது. இந்த வகையான சோப்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை அல்ல.
கிரேடு 2 மற்றும் கிரேடு 3 சோப்கள் போல கிரேடு 1 சோப்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுவது இல்லை. அதனால், சோப் வாங்கும்போது மேலே சொன்ன இந்த இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.
சருமத்தின் தன்மைக்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, மாய்ச்சரைசர் உள்ள சோப் நல்லது.
40 வயதுக்கு மேலானவர்களின் சருமம் முதிர்ச்சி பெற்றிருக்கும். இவர்களும் மாய்ச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். இவற்றைக் குழந்தைகளும் மென்மையான சரீரம் கொண்டவர்களும் உபயோகிக்க கூடாது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ளது என்ற காரணத்துக்காக மட்டும் சோப்களை தேர்ந்தெடுத்துவிட வேண்டாம்.
Average Rating