இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்..!!
தினசரி வித்தியாசம் வித்தியாசமான நகைகள் அணிவது என்றால் பெண்களுக்கு கொள்ளை பிரியம். அதிலும் இளம் பெண்களுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் புதிய மாடல் நகைகளை தினசரி மாற்றி மாற்றி அனைவரையும் கவர வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஏராளமான டிசைனர் மற்றும் தங்க நகைகள் பல வந்தாலும் உயர் மதிப்புமிக்க வைர நகைகளுக்கு இணை வைர நகைகளே.
முந்தைய நாளில் யாரோ ஒரு சிலர் இடத்தில் மட்டுமே வைர நகைகள் இருக்கும். அதிலும் ஒரே மாதிரியான தோற்ற அமைப்புகள் தான் அதிகம். வைர நகைகள் தற்போது அனைவரும் அணிய ஏற்றவாறு தோஷம் நீக்கப்பட்டவாறும், ஏராளமான டிசைன்கள் கொண்டவாறு உருவாக்கப்படுகின்றன.
அதிலும் சிறப்பான சிறு சிறு வடிவமைப்பு நகைகள் மற்றும் மெல்லிய எடை குறைந்த நகைகள் என்றவாறு வைரம் பதிக்கப்பட்ட நகைகள் பெண்களின் மனதை கவர்கின்றன. இவை அனைத்தும் வாங்க கூடிய வகையில், அதிக அற்புதமான கலைநயம் மற்றும் கைநேர்த்தி வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன. நாம் கொடுக்கும் பணத்திற்கு உத்தரவாதம் தரும் வகையில் வைர நகைகளுக்கு அத்தாட்சி மற்றும் வாரண்டி அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால் எப்போது மாற்றினாலும் அன்றைய வைரத்தின் மதிப்பு பணமாகவும், வேறொரு நகைகளாகவும் மாற்றிக் கொள்ள வசதி கிடைக்கின்றது.
காதிற்கினிய ஒளிக்கும் காதணிகள் :
காதிற்கு இனிய ஒலி தான் மகிழ்ச்சி. ஆனால் தற்போது ஒளி வீசும் வைர காதணிகள் அணியும்போது தான் அவை மகிழ்ச்சி கொள்கின்றன. அதற்கேற்ற அற்புத வடிவமைப்பு மற்றும் பல வண்ண வைரங்கள் பதிக்கப்பட்ட காதணிகள் கிடைக்கின்றன. இவையனைத்தும் சிறிய அளவில் சிறந்த வடிவமைப்பு அதாவது, வைரமாய் மலர்ந்த மலர்கள், பவளமல்லியாய் பூத்த வெள்ளை, இளஞ்சிவப்பு காதணி, இதயங்கள் பேசும் அமைப்பில் இதய காதணிகள், சிறு குண்டுகள் தொங்கும் அமைப்பில் பந்து காதணிகள், பறக்கும் வைர வண்ணத்துப்பூச்சி, ஜொலிக்கும் அரை பந்து என அனைத்தும் அற்புதம். இதன் எடை குறைவு, வைர அணி வரிசையே அதிகம். அதற்கேற்ற விலை எங்கும், எப்போதும் அணிய ஏற்ற டிசைன்.
வைர அணி வரிசையில் பிரகாசிக்கும் பிரேஸ்லெட்:
மெல்லிய தங்க கம்பியில் அதிக டிசைன்கள் மேற்கொள்ளாத உருளை வடிவமைப்புடன், நடுநாயகமான அலங்கார பகுதியில் இருவட்டம், இருதயம், கை இணைப்பு, இதய வடிவம் போன்றவையும், மணி போன்ற செயின் பகுதியின் நடு பகுதியில் தட்டையாய் அதிக வைரங்கள் பதியப்பட்டவாறும் பிரேஸ்லெட்கள் கிடைக்கின்றன. தங்க நிற பின்னணியில் வைரத்தில் ஜொலிக்கும் பிரேஸ்லெட்கள் அணிய சுலபமான, எடை குறைந்த அமைப்புடன் உள்ளதால் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது.
பெண்களின் மனங்கவர்ந்த வைர பென்டன்ட்கள் :
அழகிய செயின்களில் தொங்கும் பென்டன்ட்கள் வைரம் பதிய வைக்கப்பட்டவாறு மாறுபட்ட பல வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய வடிவமைப்பில் மாறுபட்ட நவீன வடிவமைப்பு உத்தியுடன் பார்த்தவுடன் வாங்க தூண்டடும் வகையில் உள்ளன. அதாவது நட்சத்திர சிப்பி நடுவே வைர டால்பின், வைர தோகையுடன் மயில், பல வண்ண வைர பூக்கள், இதய வடிவம், வட்டம், ஓவல், கூம்பு வடிவிலான வைர பென்டன்ட் போன்றவை கிடைக்கின்றன. அதுபோல் இரட்டை சுழல், மூன்று சுழல் போன்ற வளைந்த அமைப்புகள் வைர பின்னணியில் புதுமையாய் மின்னுகின்றன.
வைர வண்ண பூக்களாய் மோதிரங்கள் :
வைர மோதிரங்கள் பல வடிவில் வித்தியாசப்பட்டு கிடைக்கின்றன. இவையனைத்தும் பூக்களை மையமாக கொண்டு வைரங்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. விரலுடன் பொருந்தக்கூடிய அமைப்புடன், மேலெழுந்த விரிந்த பூக்கள் அமைப்புடன் இவை உள்ளன. இதில், வெள்ளை நிற வைரக்கற்கள் மட்டுமின்றி பிங்க் மற்றும் நீல வண்ண கற்கள் இணைத்தும் உருவாக்கப்படுகின்றன. எடை குறைந்த வைர நகைகள் தினசரி அணிய ஏற்றவாறு உள்ளதால் அதற்கேற்ப மாறுபட்ட வடிவமைப்புடன் உலா வருகின்றன.
Average Rating