பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும்..!! (கட்டுரை)
கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது.
தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு, தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
கடந்த சில வருடங்களாகவே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில், குண்டர் குழுக்களை உருவாக்குவதிலும் ஊக்குவிப்பதிலும் பல தரப்புகளும் ஈடுபட்டிருக்கின்றன.
இந்தத் தரப்புகளின் எதிர்பார்ப்பும் நோக்கமும் வெளிநோக்கில் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படை நோக்கம் என்னவோ ஒன்றுதான்.
அது, வடக்கைப் பதற்றத்தோடும் மோதல் நிலைமைக்குள்ளும் வைத்துக் கொள்வது.
அரசியல் அதிகாரங்களுக்கான போராட்டத்தைத் தர்க்க நியாயங்களோடும் கனதியாகவும் முன்னெடுத்து வந்த தரப்பொன்றை நோக்கி, அதன் எதிர்த்தரப்புகள் சதித்திட்டங்களை ஏவிக்கொண்டிருப்பது வழமை.
அப்படியான சூழலொன்றை, வடக்கில் உருவாக்கி வைத்துக் கொள்வது சார்ந்து, தென்னிலங்கை தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. அதன்போக்கில், குண்டர் குழுக்களின் தேவை, தென்னிலங்கைக்கும் அதன் தேசிய பாதுகாப்புத் தரப்புக்கும் அவசியமாகவும் இருக்கலாம்.
ஆனால், அதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்ற தமிழ்த் தரப்புகளில் சில, இந்தக் குண்டர் குழுக்களை நோக்கி, கதாநாயக பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. அதாவது, ‘பொறுக்கிகள்’ மீது போராளிகளுக்கு உண்டான சாயத்தை பூச விளைகின்றன.
தமிழ்ச் சினிமாப் பாணியில், அதிவேக மோட்டார் சைக்கிள்களில் வரும் இந்தக் குண்டர் குழுக்கள், பலவீனமானவர்களைத் தங்களது இலக்குகளாக்கிவிட்டுச் செல்கின்றன.
இதனால், பாதிக்கப்படுவது என்னவோ தமிழ் மக்கள்தான். ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பித்த நேரத்தில், இலங்கை அரசாங்க இயந்திரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களும் இன்றைக்கு நடத்தப்படுகின்ற தாக்குதல்களும் ஒன்றல்ல.
ஆனால், புலிகளின் ஆரம்ப காலக் காட்சிகளை, யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் தாக்குதல்கள், பிரதிபலிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெற்கில் கூறிக்கொண்டிருக்கின்றார். அதனூடு தன்னுடைய இனவாத அரசியலை முன்னோக்கிக் கொண்டு வர முடியும் என்று நம்புகின்றார்.
அப்படியான தோரணையை வடக்கிலுள்ள சில ஊடகங்களும் மறைமுகமாக உருவாக்க முனைகின்றன. சில நேரங்களில், உண்மை வேறுமாதிரியானது என்கிற விடயத்தை அறிந்து வைத்திருந்தாலும் அதைப் பற்றி உரையாடுவதிலிருந்து, தமிழ்த் தரப்பு பின்நிற்பதும் வேதனையானது.
குண்டர் குழுக்களை உருவாக்கி, அதனூடு தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கும் தரப்புகள், பெற்றோரின் கட்டுப்பாடுகளை மீறியுள்ள, பாடசாலைப்பருவத்தைக் கடந்த இளைஞர்களைக் குறி வைக்கின்றன.
ஏவல் கூலிகளாக, அதிவலுக் கொண்ட மோட்டார் சைக்கிள்களையும் போதைப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் அவர்கள், குண்டர்களாக மாறி நின்று, சமூகத்தின் சாபக்கேடாகப் பிரதிபலிக்கின்றார்கள்.
எப்போதுமே அவர்களை உருவேற்றி வைத்துக் கொள்வதினூடு, காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று சதிகாரர்கள் நம்புகின்றார்கள். ஆனால், அந்தச் சதிவலைக்குள் சிக்கும் இளைஞர்களின் மீட்சி என்பது அதிகம் நிகழாமலே போய்விடுகின்ற காட்சிகளையும் நாங்கள் காண வேண்டியேற்படுகின்றது. அது, மிகவும் வருத்தமளிப்பது.
ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் ‘ஆவா குழு’ என்கிற பெயர் வெகு பிரபலம். இந்தக் குழுவை யார், எதற்காக உருவாக்கினார்கள் என்றெல்லாம் நிறையவே பேசப்பட்டுவிட்டது.
இப்போதும், பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்தோடு ‘ஆவா’ குழுவே சம்பந்தப்பட்டிருப்பதாக, பொலிஸ் மா அதிபர் அறிவித்திருக்கின்றார். அத்தோடு இன்னொரு விடயத்தையும் அவர் கோடிட்டுச் சொல்லியிருக்கின்றார். அதாவது, இந்தக் குழுவுக்கு முன்னாள் போராளி ஒருவரே தலைமை தாங்குகின்றார் என்று.
எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சிகளிலும் முன்னாள் போராளிகளே சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருந்தனர். நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் முன்னாள் போராளியே என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இப்போது, வாள்வெட்டுக் குழுவின் தலைவராக இருப்பதும் முன்னாள் போராளியே என்று பொலிஸ் மா அதிபர் கூறியிருக்கின்றார். இதனூடாக தெளிவான படங்கள் வரையப்படுகின்றன.
அதாவது, ஏற்கெனவே, உடல், உள ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு, சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் போராளிகளை, இன்னும் இன்னும் அச்சுறுத்தலுக்குள் தள்ளுவதற்கான முனைப்புகளின் போக்கிலானது இது.
குற்றங்கள் சார்ந்து, சந்தேக நபர்களின் தனி அடையாளங்கள் மீது, ‘முன்னாள் போராளிகள்’ என்கிற பொது அடையாளத்தைத் திணிப்பதன் மூலம், 12,000 பேரின் வாழ்வு மாத்திரமல்ல, அவர்கள் சார்ந்திருக்கின்ற குடும்பங்களின் வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.
இவ்வாறான தன்மைகளைப் பகுத்தாய்ந்து கொள்ள வேண்டிய தேவை, தென்னிலங்கைக்கும் அதுசார் தளங்களுக்கும் அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்த் தரப்புகளுக்கு அதுசார்ந்து பெரும் கடப்பாடு இருக்கின்றது.
இல்லாது போனால், பலவீனமானவர்களாக மாற்றப்பட்டுள்ள முன்னாள் போராளிளை நோக்கி, இன்னமும் அதிகமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் நடைப்பிணங்களாக்கப்பட்டு விடுவார்கள்.
அப்படியான நிலையில், இந்தக் (வாள்வெட்டுக்) குண்டர் குழுக்கள் மீது, கதாநாய பிம்பம் பூசுவதைத் தவிர்த்து, அந்தக் குழுக்கள் எவை என்பதையும் அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதையும் அடையாளப்படுத்த வேண்டும். அது, தேவையற்ற விடயங்களில், முன்னாள் போராளிகளை இழுத்துவிடும் முனைப்புகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்க வேண்டும்.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து, எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவம் உள்ளிட்ட முப்படையினரையும் வெளியேற்றுவது, முடியாத காரியமாகத் தொடர்ந்து வருகின்றது.
ஆயிரக்கணக்கான ஏக்கர்களை ஆக்கிரமித்துள்ள இராணுவத்திடம் இருந்து, சில ஏக்கர் காணியைப் பெறுவதற்கே, வெயில், மழை பாராது பல நாட்கள் வீதியில் உட்கார்ந்து போராட வேண்டியிருக்கின்றது.
இல்லையென்றால், நஷ்டஈடு வழங்க வேண்டியிருக்கின்றது. உலகத்திலேயே எந்தப் பகுதியிலும் வழக்கத்தில் இல்லாத விடயங்களை எல்லாம், பொது மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுவதற்கான நிபந்தனைகளாக, இராணுவம் முன்வைக்கின்ற நிலையில், இந்தக் குண்டர் குழுக்களின் ஆடாவடித்தனம் அவர்களை குஷிப்படுத்துவதாகவே அமையும்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதற்கொண்டு, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயற்பாட்டு இயக்கங்கள், பொது மக்கள் என்று எல்லோருமே இராணுவ அகற்றம் குறித்தே பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு, சட்டம், ஒழுங்கு முற்றுமுழுதாகப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றார்கள். ஆனால், இந்தக் குண்டர் குழுக்களின் அடாவடித்தனத்தை அடக்கவே இராணுவத்தைக் கொண்டு வர வேண்டியிருப்பதாகப் பொலிஸ் மா அதிபர் மறைமுகமாகக் கூறுகின்றார்.
அதன்போக்கிலேயே, தேடுதல் நடவடிக்கைகளுக்காக முப்படையின் ஒத்துழைப்புப் பெறப்படும் என்றும் கூறியிருக்கின்றார். இராணுவ அகற்றத்துக்காக, வருடக்கணக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றவர்களின் ஆன்மா மீது, குண்டர் குழுக்களை முன்வைத்து, ஏறி மிதித்துவிட்டுச் செல்வதில்,தென்னிலங்கை தெளிவாகவே இருக்கின்றது. அப்படியான நிலையில், அதற்குள் அகப்பட்டுத் தொலைவது அபத்தமானதுதான்.
வடக்கில் எப்போதுமே இராணுவ மேலாதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் தென்னிலங்கையும் அதன் தேசிய பாதுகாப்புத் தரப்பும் குறியாகவே இருக்கின்றது.
அதனூடு, அனைத்து வகையான அரசியல் உரிமைப் போராட்டங்களையும் அடக்கி, தமிழ் மக்களைப் பேசா மடைந்தைகளாக்கவே தென்னிலங்கை விரும்புகின்றது.
இராணுவ மேலாதிக்கம் என்னவெல்லாம் செய்யும் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்து வைத்திருக்கின்ற தமிழ்த் தரப்பு, அதிலிருந்து விலகியிருப்பதையே விரும்புகின்றது.
ஆனால், தூரநோக்கற்ற, குறுகிய இலாபங்களுக்காகக் குண்டர் குழுக்களின் அடாவடித்தனங்களை, ஆதரிக்க முயலும் சில தமிழ்த் தரப்புகளின் செயற்பாடு, வரம்பு மீறிச் செல்கின்றது. அதை, என்றைக்குமே மன்னிக்க முடியாது.
அதற்கு, எதிராகத் தனி மனிதர்களாக மட்டுமல்லாது, கூட்டு இயக்கமாகவும் தமிழ் மக்கள், இயங்க முன்வர வேண்டும். அதனூடு குண்டர் குழுக்களை சமூகத்திலிருந்து அகற்றி, கதாநாயக பிம்பத்தைப் பூசியவர்களுக்குச் சாட்டையடி கொடுக்க வேண்டும்.
இது, தற்போதுள்ள நிலையில் மிகவும் அவசியமானது. இதுதான், நீடித்த தீர்க்கமான அரசியலின் போக்கில் முக்கியமானது.
Average Rating