இனிமை நிறைந்த இன்சொற்கள், இரும்பு மனம் கொண்டவரையும் இளக வைக்கும்..!!
இனிமை நிறைந்த இன்சொற்கள், இரும்பு மனம் கொண்டவரையும் இளக வைக்கும். தீஞ்சொற்களோ, மென்மை மனம் கொண்டவரையும் கோபமடைய வைக்கும். அதனால் தான், ‘யாவர்க்குமாய் பிறர்க்கு இன் உரை தானே…’ என்று மென்மையாக சொல்கிறார் திருமூலர். கடுஞ்சொற்களை பயன்படுத்தி, நாம் எத்தனை நன்மை செய்தாலும், அதனால், எந்த நன்மையும் விளையாது என்பதற்கு, கந்த மாதன முனிவரின் கதையைக் கேளுங்கள்…
தருமர் ராஜசூய யாகம் செய்த நேரம்… பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டிருந்தனர். பீமன் உணவு கூடத்தில் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தான்.
உபசரிப்பு என்கிற பெயரில், இலைகளில் உணவு வகைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டே இருந்தான். எவ்வளவு தான் சாப்பிட முடியும்? சாப்பிட முடியாமல் திணறி மறுத்தவர்களை, கடும் சொல்லால் ஏசியும், கதையை காட்டி பயமுறுத்தியும் சாப்பிட வைத்தான்.
இதன் காரணமாக, நாளுக்கு நாள் உணவு உண்ண வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதை கவனித்த கண்ணன், ‘ஏன் நாளுக்கு நாள் உணவு உண்ண வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது…’ என, பீமனிடம் கேட்டார். பீமனுக்கும் காரணம் தெரியவில்லை.
கண்ணன் ஒரு சில வினாடிகள் யோசித்து, ‘பீமா… இங்கே நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ கந்தமாதன் மலையில் இருக்கும், கந்தமாதன முனிவரை பார்த்து, வணங்கி விட்டு வா…’ என்று பீமனை வழியனுப்பி வைத்தார். உணவு கூடத்தில் உண்ண வருபவர்கள் யாருமே இல்லை. அதனால், சாப்பிடும் அடியார்களை தேடிச் சென்றார் கண்ணன்.
அடியார்களோ, ‘பீமனின் கொடுமை தாங்கவில்லை; அள்ளி அள்ளி கொட்டி, உண்ணச் சொல்லி மிரட்டுகிறான். இழிவாக பேசுகிறான்…’ என்றனர். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்து உணவிட்டார்.
அதேசமயம், கண்ணன் சொல்படி கந்தமாதன மலைக்கு சென்ற பீமன், அங்கே கந்தமாதன முனிவரை தரிசித்தான். தங்க உடம்போடு ஜொலித்துக் கொண்டிருந்த அவரை வலம் வந்து வணங்கினான்.
அவனைப் பார்த்த முனிவர், ‘பீமா… அருகில் வா…’ என்றார். அவர் அருகில் பீமன் சென்றபோது, அவர் வாயில் இருந்து தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. பீமனால், அவர் பக்கத்தில் போக முடியவில்லை.
‘பீமா… உன் தயக்கம் புரிகிறது; போன பிறவியில் நான் ஏராளமான தான, தர்மங்கள் செய்தேன். அதன் பயனாகவே எனக்கு தங்கம் போல இந்த அழகான உடம்பு கிடைத்தது. ஆனால், யாசகம் பெற வந்தவர்களை திட்டி பேசி, தான, தர்மங்கள் செய்ததால், என் வாயில் துர்நாற்றம் வீசுகிறது…’ என்று வருத்தத்துடன் சொன்னார் முனிவர்.
பீமன் நடுங்கினான். ‘இவரைப் போலத் தானே நானும் செய்தேன்; உணவுண்ண வந்தவர்களை கடுமையாக பேசி, கதாயுதத்தை காட்டி மிரட்டி பயமுறுத்தினேன். எனக்கு என்ன கதி கிடைக்குமோ…’ என்று பயந்தான்.
முனிவரோ, ‘பீமா… கண்ணன் அனுப்பிய உன்னைப் பார்த்ததும், என் பாவம் போய் விட்டது. என் வாயில் இதுவரை இருந்த துர்நாற்றம் நீங்கி விட்டது…’ என்றார்.
அரண்மனைக்கு திரும்பிய பீமன், கண்ணன் திருவடிகளில் விழுந்து, ‘என்னை மன்னித்து விடு கண்ணா…’ என, அழுதான்.
‘பீமா… கொடுப்பது பெரிதல்ல; இனிமையாக பேசி கொடுக்க வேண்டும். அதுதான் உயர்ந்தது…’ என்றார் கண்ணன்.
இனிமையாக பேசுவோம்; இறையருளைப் பெறுவோம்.
Average Rating