எதைச் சாதிப்பார் ராம் நாத் கோவிந்த்?..!! (கட்டுரை)
இந்திய குடியரசுத் தலைவராக, ராம் நாத் கோவிந்த், நேற்று முன்தினம் பதவியேற்றிருக்கிறார். அவரது இந்தப் பதவியேற்பு, பல்வேறு விதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பதவியேற்பின் போது உரையாற்றிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், இராதாகிருஷ்ணன் போன்றோரின் பாதையிலேயே செல்லவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அவரது தனிப்பட்ட திறமைகளையும் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும் போது, இப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்பது, தெளிவாகத் தெரிகிறது. 1994ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, மேலவையின் உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பின்னர், பீஹார் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தார். அரசியலுக்கு வெளியே, டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும், சட்டத்தரணியாக 16 ஆண்டுகள் பதவி வகித்த அனுபவம், அவருக்கு உள்ளது. இவ்வளவு தகுதிகளைக் கொண்ட இவர், இப்பதவிக்குப் பொருத்தமானவர் என்பது தெரிகிறது.
மறுபக்கமாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகவே இவர் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல்,
ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராகவே, தனது பொதுப் பணியை அவர் ஆரம்பித்தார். ஏற்கெனவே பிளவுபட்டுள்ள இந்தியாவில், இவரது இந்த வெற்றியும் குடியரசுத் தலைவர் பதவியும் இந்தியாவை மேலும் பிளவுபடுத்துமா என்பதே, தற்போதைய கேள்வியாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, இந்த வெற்றியென்பது முக்கியமானது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியென்பது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலேயே, வழக்கமாக ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. இதற்கு முன்னர் காணப்பட்ட குடியரசுத் தலைவர்களில், இறுதியாக இருந்த ஏழு பேராக, பிரணாப் முகர்ஜி, பிரதீபா பட்டில், அப்துல் கலாம், கேர். ஆர். நாராயணன், ஷங்கர் தயால் ஷர்மா, இராமசுவாமி வெங்கடராமன், ஜியானி ஸையல் சிங் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இதில், ஒரேயொருவரைத் தவிர, ஏனைய அனைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். பாரதிய ஜனதா கட்சியால் முன்மொழியப்பட்டு, குடியரசுத் தலைவராகத் தெரிவானவர், அப்துல் கலாம். அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியால், வேட்பாளரொருவர் நிறுத்தப்படவில்லை. அப்துல் கலாமை, வழக்கமான பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி என்றழைக்க முடியாது. மாறாக, அரசியல் அனுபவமற்ற, சுயாதீனமான ஒருவராகவே காணப்பட்டார். அந்தளவுக்கு, குடியரசுத் தலைவர் பதவியில், காங்கிரஸின் ஆதிக்கம் காணப்படுகிறது.
இந்தியாவின் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை, வித்தியாசமானதாகக் காணப்படுவதால், இந்த நிலை காணப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து சட்டசபைகளையும் சேர்ந்த உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் ஈர் அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிப்பர்.
மத்தியில் பா.ஜ.க ஆட்சி புரிந்தாலும், காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளும், பல மாநிலங்களை ஆட்சி செய்வது வழக்கம் என்பதால், காங்கிரஸின் வேட்பாளரே வெற்றிபெறுவார்.
ஆனால், காங்கிரஸினதும் அதன் தோழமைக் கட்சிகளினதும் ஆதிக்கத்தில் காணப்பட்ட சில மாநிலங்களை, அண்மையில் நடந்த தேர்தல்களில், பா.ஜ.க கைப்பற்றியது. இதில், இந்தியாவில் அதிக சனத்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் முக்கியமானது.
இவற்றின் விளைவாக, காங்கிரஸின் வேட்பாளரான மீரா குமாரை, பா.ஜ.கவின் வேட்பாளரான ராம் நாத் கோவிந்த், இலகுவாக வெற்றிகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை விட, அதிக வாக்குகளைப் பெற்ற கோவிந்த், நாட்டின் குடியரசுத் தலைவராகத் தெரிவானார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்றவுடன், எமக்கெல்லாம் ஞாபகம் வருகின்ற விடயம், “இலங்கையைப் போலன்றி, இந்தியாவின் ஜனாதிபதிப் பதவி, சம்பிரதாயபூர்வமானது” என, சிறுவயதில் நாம் கற்ற விடயம்தான். இலங்கையில் காணப்பட்ட, முழுமையான நிறைவேற்று அதிகார முறையோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் அவ்வாறானநிலை இல்லை என்பது உண்மையானதுதான்.
ஆனால், முக்கியமான சில அதிகாரங்கள், இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு உள்ளன. நாடாளுமன்றத்தின் கீழவையைக் (மக்களவை) கலைப்பது அதில் முக்கியமானது.
அத்தோடு, சட்டமூலமொன்று நிறைவேற்றப்படும் போது, குடியரசுத் தலைவரின் கையெழுத்தின் பின்னரே, அது சட்டமாகும். அதைத் தாமதப்படுத்தும் வாய்ப்பு, குடியரசுத் தலைவருக்கு உண்டு. அத்தோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்வில் இல்லாதபோது, தற்காலிக சட்டங்களை உருவாக்கவும் அவருக்கு முடியும். நாட்டின் பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், தலைமைத் தேர்தல் ஆணையாளர், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் உள்ளிட்ட பலரை நியமிக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சிறைத்தண்டனை பெற்றோரை மன்னித்தல், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்துதல் என, அவருக்கான அதிகாரங்கள் நீண்டு செல்கின்றன.
ஆனால், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியென்பது வெறுமனே “டம்மி” என்ற பார்வை ஏற்படுவதற்கும், நியாயமான காரணங்கள் உண்டு. மேலே குறிப்பிட்ட அதிகாரங்கள் இருந்தாலும், இதற்கு முன்னர் இருந்த குடியரசுத் தலைவர்கள், மத்தியில் ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் முரண்டுபிடிக்காமல், இயலுமானளவில் அனுசரித்துச் செல்வதற்கே முயல்வர்.
அண்மைய உதாரணமாக, இதற்கு முன்னைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வலதுசாரிக் கட்சியான பா.ஜ.கவின் அரசாங்கத்தோடு, இணங்கியே சென்றிருந்தார். முழு நாட்டையும் பாதித்த, 500, 1,000 ரூபாய்த் தாள்களின் பெறுமதியழிப்பு என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய திட்டம் வெளியிடப்பட்டபோது, அதற்குப் பரவலான எதிர்ப்புக் காணப்பட்டது. ஆனால், அதை ஆதரித்து, ஆரம்பத்திலேயே கருத்து வெளியிட்டவர்களில் முக்கியமானவர், பிரணாப் முகர்ஜி. அந்தளவுக்கு அவர், அனுசரித்துச் சென்றிருந்தார்.
ஆனாலும் கூட, பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், இந்தியாவில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொலைகளைக் கண்டித்தவர்களிலும், பிரணாப் முகர்ஜி உள்ளடங்குகிறார். ஆளும் பா.ஜ.கவின் ஆதரவாளர்களே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எனக் கருதப்படும் நிலையில், அதற்கெதிரான குரலை எழுப்புவதென்பது முக்கியமானது.
ஆனால், தற்போது கடும்போக்கு வலதுசாரி அமைப்பிலிருந்து உருவாகி, பா.ஜ.கவின் அதே கொள்கைகளைக் கொண்ட ராம் நாத் கோவிந்த், புதிய குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கான அதிகாரங்கள், மட்டுப்படுத்தப்படாத அளவில் அதிகரித்துள்ளனவோ என்ற சந்தேகம் எழுகின்றது.
மத்திய அரசாங்கம், தன்னுடைய எல்லையை மீறிச் செல்லும்போது, அல்லது அரசமைப்புக்கு முரணான சட்டங்களை உருவாக்கும்போது, அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, குடியரசுத் தலைவர் செயற்பட மாட்டார் என்றால், ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
காங்கிரஸ் ஆட்சி புரிந்தபோது, காங்கிரஸைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் இருந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படக்கூடும். ஆனால், அண்மைக்கால வரலாற்றில், காங்கிரஸ் கட்சியால், நாட்டின் தனிமனித உரிமைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. அக்கட்சியின் மீதான பிரதான குற்றச்சாட்டாக, ஊழலை வளர்த்து விடுதல் என்பதுவும் குடும்ப ஆட்சியை வியாபித்தல் என்பதுவும் காணப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்கள், குடியரசுத் தலைவருக்கு இல்லை. ஆகவே, காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் பதவியென்பது, பா.ஜ.க ஆட்சியில் பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் எனுமளவுக்கு, அச்சத்தை ஏற்படுத்தவில்லை.
இவ்விடயத்தில், பா.ஜ.கவும் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டது. தம்மீது, கடும்போக்கு இந்துத்துவ அடையாளம் காணப்படுவதைப் புரிந்துகொண்ட அக்கட்சி, தலித்தான ராம் நாத் கோவிந்தை, வேட்பாளராக அறிவித்திருந்தது. இதனால், சாதி அடிப்படையிலான பிரசாரங்களைத் தவிர்க்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
தேர்தல் முடிவடைந்து, பதவியேற்பும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், ராம் நாத் கோவிந்தால் எதைச் சாதிக்க முடியும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. அண்மைக்கால ஜனாதிபதிகளில் பிரதீபா பட்டேல், விமர்சனங்களுக்கு உள்ளானவராக இருந்தார். ஆனால், அப்துல் கலாமும் பிரணாப் முகர்ஜியும் பரந்தளவில் மதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
ஆகவே, தன்னுடைய இந்துத்துவ அடையாளத்தைக் கழற்றிவிட்டு, அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒரு தலைவராக, ராம் நாத் கோவிந்தால் இருக்க முடியுமானால், அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒருவராக இருப்பாரானால், ராம் நாத் கோவிந்தின் பெயர், வரலாற்றில் நல்ல வடிவில் பதியப்படும்.
அவர் மீதான எதிர்பார்ப்புகள், குறைவாகவே காணப்படுகின்றன. இது, அவரைப் பொறுத்தளவில் சாதகமானது. ஆனால், இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எதை அவரால் சாதிக்க முடியும் என்பதிலேயே, இந்தியாவினதும் அவரினதும் அடுத்த சில ஆண்டுகள் தங்கியிருக்கின்றன என்ற யதார்த்தத்தை மறந்துவிட முடியாது.
Average Rating