மருந்துகள் சிலவற்றால் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள்..!!
உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் சில மருந்துகள் உங்கள் பாலியல் வாழ்க்கையையே வீணாக்கிவிடக்கூடும் என்பது உங்களுக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் அது உண்மையே!
உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய மருந்துகள் எவை எனப் பார்ப்போம்:
இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் (Blood Pressure medication)
உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் பாலியல் செயலின்மைப் பிரச்சனையுடன் தொடர்புகொண்டவையாக இருக்கின்றன, அவற்றில் சில:
பீட்டா பிளாக்கர்ஸ்: இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்து ஆண்குறி விறைப்புத் தன்மையைப் பாதிக்கிறது.
டையூரெடிக்ஸ் (நீர் மாத்திரைகள்): இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக உடலில் உள்ள நீர்ச்சத்தைக் குறைப்பதற்காக இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றில் சில மருந்துகள் ஆண்குறிக்குச் செல்லும் யாத்த ஓட்டத்தைக் குறைக்கலாம். ஆண்குறி விறைப்படைய இரத்த ஓட்டம் மிக அவசியம்.
இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் எல்லாமே உங்கள் பாலியல் செயல்பாட்டைத் தாக்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்து, உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் அதைப் பற்றிப் பேசுங்கள்.
ஆன்டி-டிப்ரசன்ட் மருந்துகள் (Antidepressant Medication)
மனக்கலக்கம், சாப்பிடுதல் தொடர்பான பிரச்சனைகள் போன்ற மன இறுக்கப் பிரச்சனைகளுக்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட சில செரோட்டோனின் மறு பயன்பாட்டுத் தடை மருந்துகள் (SSRIகள்): இந்த மருந்துகளின் பக்க விளைவுகளில் ஒன்று ஆண்குறி விறைப்பின்மை ஆகும்.
இவற்றைப் போன்ற ஆன்டி-டிப்ரசன்ட் மருந்துகளும் பாலியல் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துபவை:
ட்ரைசைக்கிளிக் ஆன்டி-டிப்ரசன்ட்கள்
மோனோஅமைன் ஆக்சிடேஸ் இன்ஹிபிட்டர்ஸ் போன்றவை
ஆன்டி-டிப்ரசன்ட் மருந்துகள் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும் வேதிப்பொருள்களைத் தடை செய்வதன் மூலமும் பாலியல் செயல்பாட்டுக்குரிய மூளையின் பகுதிகளைப் பாதிப்பதன் மூலமாகவும் பாலியல் செயல்பாட்டைத் தாக்குகின்றன என்று நம்பப்படுகிறது. மற்ற சில மருந்துகள் விந்து வெளியேறாமல் போவது, பாலியல் நாட்டம் குறைவது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
நீங்கள் ஆன்டி-டிப்ரசன்ட் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். அவர் உங்கள் மருந்துகளை மாற்றுவது குறித்து யோசிக்கலாம்.
கொலஸ்டிரால் மருந்துகள் (Cholesterol Medication)
அதிக கொலஸ்டிரால் பிரச்சனைக்காகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளும் பாலியல் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அவற்றில் சில:
ஸ்டேட்டின்கள் மற்றும் ஃபைப்ரேட்கள்: இவை உயர் கொழுப்பு அளவுகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. பாலியல் ஹார்மோன்கள் உருவாக்கத்திற்கு அத்தியாவசியமான கொலஸ்டிரால்களைக் கட்டுப்படுத்துவதால் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம். இது போன்ற மருந்துகள் விறைப்பின்மைப் பிரச்சனையும் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
நீங்கள் உயர் கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர் எனில், உங்களுக்கு உடலுறவின்போது ஏதேனும் பிரச்சனை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் வேறு சிகிச்சை முறைகள் உள்ளதா என்பது குறித்து ஆலோசனை கேட்கவும்.
H2 பிளாக்கர்ஸ் (H2 Blockers)
வயிற்றில் புண், நெஞ்செரிச்சல் பிரச்சனைகள், பெப்டிக் புண் போன்ற வயிறு மற்றும் குடல் சம்பந்தபப்ட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பாலியல் நாட்டம் குறைதலும் விறைப்பின்மையும் இவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகளில் முக்கியமானவையாகும்.
உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்வதும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் உங்கள் பாலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான பெரிதும் உதவும்.
எச்சரிக்கை (Caution)
நீங்கள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் எந்த மருந்தையும் நீங்களாகவே நிறுத்திவிட வேண்டாம். சத்து மருந்துகள் உட்பட, நீங்கள் இப்போது என்னென்ன மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைக் குறித்துக்கொண்டு உங்கள் மருத்துவரிடம் சென்று பாலியல் வாழ்க்கையில் உங்களுக்குள்ள பிரச்சனைகள் பற்றியும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரங்களையும் தெரிவித்து ஆலோசனை பெறவும். உங்கள் தற்போதைய உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் உங்களுக்கான மருந்தளவைக் குறைக்கலாம் அல்லது மருந்துகளை மாற்றலாம்.
Average Rating