கடப்பாட்டுக்கா, நிலைப்பாட்டுக்கா இந்தியாவின் முன்னுரிமை?..!! (கட்டுரை)
பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார்.
தனிப்பட்ட பயணமாக வந்திருந்தாலும் அவர் வெளிவிவகார அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரையும் அவர் சந்தித்திருந்தார்.
ஆனாலும், அவர்களையெல்லாம் தானாகத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை என்றும், தம்மைச் சந்திக்க விரும்பியவர்களையே சந்தித்தேன் என்ற பாணியில் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.
யாழ். சென்றிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்திலும் மாகாணசபை அவைத்தலைவர்
சி.வி.கே.சிவஞானம் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களைப் பேரவைச் செயலகத்திலும் தனித் தனியாகச் சந்தித்திருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழிசைக்கும் இடையிலான சந்திப்பு, நீண்டநேரம் இடம்பெற்றிருந்தது. இதன்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அவருக்குத் தாம் எடுத்துக் கூறியதாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
“13 ஆவது திருத்தச்சட்டம், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் போதுமானதல்ல; அதற்கு அப்பால் – கூடுதல் அதிகாரங்கள் பகரப்பட்டு, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் பகரப்படுவதற்கும் நியாயமான தீர்வை எட்டுவதற்கும் இந்தியாவின் உதவி தேவை.
இந்திய அரசாங்கம் பாரதீய ஜனதா கட்சியும் இதற்கு உதவ வேண்டும்” என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்டிருந்தார்.
அதற்கு அவர், தாம் இதுபற்றி இந்திய அரசாங்கத்திடமும், கட்சி மேலிடத்திடமும் கூறுவதாக கூறிச் சென்றிருக்கிறார்.
இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அதிகபட்ச அதிகாரங்கள் கிடைப்பதற்கும் இந்தியாவின் ஆதரவு தேவை என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியிருக்கின்றமை முதலாவது.
இது நடைமுறைச்சாத்தியமான விடயமா? இந்தியாவின் பார்வை என்னவாக இருக்கிறது என்பது இரண்டாவது.
இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்தி, சில விடயங்களை மீட்டுப் பார்ப்பது இந்த வேளையில் பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வில், இந்தியாவுக்குக் கணிசமான பங்கு இருக்கிறது, இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் அதற்குக் கடப்பாடும் இருக்கிறது. ஆனால் அதை இந்தியா நேர்மையாகச் செய்யுமா என்பது கேள்விக்குறி.
இலங்கையில் தமிழ் மக்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அந்த ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது வரையில், இந்தியா ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்தே வந்திருக்கிறது.
தமிழ் ஆயுதக் குழுக்களை ஊக்குவிப்பதில் தொடங்கி, அந்த ஆயுத அமைப்புகளின் எச்சம் கூட இல்லாமல் துடைத்தழித்தது வரை, இந்தியா தலையீடு செய்திருந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, இந்தியா தனது செல்வாக்கைப் பிரயோகித்து தலையீடுகளைச் செய்யவே முயன்றது, ஆனாலும், பிராந்திய அரசியல் போட்டியும் மஹிந்த அரசாங்கத்தின் சீனச் சார்பு நிலையும் இந்தியாவுக்குச் சாதகமாக அமையவில்லை.
இதனால், போருக்குப் பின்னர், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, நியாயமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு, இந்தியா தனது பங்களிப்பை வழங்கவில்லை.
அல்லது கொழும்புக்குப் போதிய அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்பது உண்மை.
இப்போதும் கூட, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ, 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரப்பகர்வுடன் கூடிய தீர்வு ஒன்றை எட்டுவதற்கோ, இந்தியா செயல் ரீதியான அழுத்தங்கள் எதையும் கொடுக்கக் கூடிய நிலையில் இல்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியாவினதும் பா.ஜ.கவினதும் உதவியைக் கோரியிருக்கும் விடயத்துக்கு வரலாம்.
வடக்கில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றுவதற்கு தமிழரசுக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.
இறுதியில் இரண்டு தரப்பினரும் இறங்கி வரும் ஒரு சமரசத்தை எட்டியதால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்பட்டது.
வடக்கு அரசியல் குழப்பங்கள் உச்சத்தில் இருந்தபோது, பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரனை வெளியேற்றும் சதிக்குப் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்றும், இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்பவே, அவரை வெளியேற்ற தமிழரசுக் கட்சி முயற்சிப்பதாகவும் விக்னேஸ்வரனுக்குப் பகிரங்க ஆதரவு அளித்தவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
அதாவது, குறைந்தபட்ச அதிகாரப்பகர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கே, விக்னேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாக அப்போது கூறப்பட்டது.
இந்தக் குழப்பங்களுக்குப் பின்னர், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர் ஒன்றை மட்டும் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின, வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழர் தலைமைகளிடத்தில் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்பதே அது.
ஒற்றுமையாக செயற்படுங்கள் என்று அறிவுரை பாணியில் கூறப்பட்டது.
குறைந்தபட்ச அதிகாரங்களுக்குத் தலையாட்டக்கூடிய தலைவர்களைப் பலப்படுத்துவதற்காகவே, விக்னேஸ்வரனை வெளியேற்ற, இந்தியா முனைகிறது என்று அவரது ஆதரவு அணியினர் கூறி வருகின்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில்தான், இந்தியாவினதும் பா.ஜ.கவினதும் உதவியை முதலமைச்சர் கோரியிருக்கிறார்.
அதிகபட்ச அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கை, முக்கியமானது. ஆனால், முதலமைச்சருக்காகக் குரல் கொடுப்பவர்கள், இந்தியாவை அவ்வாறு பார்க்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழிசை சௌந்தர்ராஜனிடம் விடுத்திருக்கின்ற கோரிக்கை, புதுடெல்லியின் நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று எவராவது எதிர்பார்த்தால் அது படுமுட்டாள்தனம்.
ஏனென்றால், இந்தியாவை ஆளும் பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூடக் கிடையாது. ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் இருக்கிறார்.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவரின் பேச்சை, புதுடெல்லியில் உள்ள தலைவர்கள் எந்தளவுக்கு செவிமடுப்பார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்ப்பை வைத்திருக்க முடியவில்லை.
அடுத்து, அவ்வாறே தமிழிசை இந்த விடயங்களை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றால் கூட, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் விடயத்திலோ, கூடுதல் அதிகாரங்களைப் பகர்ந்தளிக்கும் விடயத்தில் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையிலோ- இந்திய மத்திய அரசாங்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மாநிலங்களின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு, பரவலாக காணப்படுகிறது.
இப்போது புதுச்சேரி மாநிலத்தில் நடக்கின்ற பிரச்சினையும் அத்தகையதொன்றுதான். அங்கு பா.ஜ.கவை அறிமுகப்படுத்துவதற்காக, புதுச்சேரி ஆளுநராக இருக்கும் பா.ஜ.கவைச் சேர்ந்த, கிரண் பேடி, மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து, அவர்களுக்குச் சத்தியப் பிரமாணமும் செய்து வைத்திருக்கிறார்.
ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் ஆலோசனைப்படிதான், இந்த நியமன உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சு நியமிக்க வேண்டும் என்பதும், சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பாகவே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பதும் பொதுவான வதிமுறை. ஆனால், அதையும் மீறி ஆளுநர் தன்னிச்சைப்படி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதுச்சேரி அரசாங்கத்தை ஆட்டிப்படைத்து வருகிறார்.
ஒரு பக்கத்தில் இது காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை அசைக்கின்ற விடயமாக பார்க்கப்பட்டாலும், இன்னொரு பக்கத்தில் இதன் உண்மையான முகம் ஆபத்தானது. மாநிலங்களுக்கான அதிகாரப்பகிர்வை மத்திய அரசாங்கம் பறிக்கின்ற செயலாகவே பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் இப்போது நடக்கின்ற பல விடயங்கள், 2013 – 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் நடந்த ஆளுநர் சந்திரசிறியின் எதேச்சாதிகாரத்தைத் தான் நினைவுபடுத்துகிறது.
இவ்வாறாக பல்வேறு மாநிலங்களிலும் நடக்கிறது. மாநிலங்களுக்கான உரிமைகளை மத்திய அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பறித்துக் கொள்கிறது.
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க வலுவான இந்தியா என்ற கோசத்தை முன்னிறுத்தி, இந்தியாவின் அரை சமஸ்டிப் பண்பைக் கேள்விக்குறியாக்கி வருவதாக பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இப்படியானதொரு சூழலில், தனது நாட்டிலேயே அதிகாரப்பகர்வைக் கேள்விக்குறியாக்கி வரும் பா.ஜ.க அரசாங்கத்திடம், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்பது எந்தவகையில் அர்த்தபூர்வமானது என்று தெரியவில்லை.
முதலமைச்சரின் கோரிக்கை சம்பிரதாயபூர்வமானதாகவே கொள்ள வேண்டும். அது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, இலங்கைத் தமிழர் விவகாரத்தில், இந்தியாவுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
ஒன்று கடப்பாடு இரண்டாவது நிலைப்பாடு. இதில், இந்தியா எப்போதுமே, கடப்பாட்டைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. நிலைப்பாட்டுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பது வழக்கம் என்பதை நாம் மறந்து விடலாகாது.
Average Rating