வேம்பின் மகத்துவமும், மஞ்சள் மகிமையும்..!!
ஆடி மாதம் பிறந்தவுடனே ஊர் முழுவதும் வேம்பின் வாசனையும், மஞ்சளின் வாசனையும் காற்றில் பரவி பரவசப்படுத்தும். வேப்பிலையும், மஞ்சளும் அம்மனுக்கு உகந்த அபிஷேக ஆராதனை பொருளாக இருந்தாலும் மக்களை இம்மாதத்தில் பரவும் பெரிய நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாகவும் உள்ளது.
வெயிற்காலம் முடிந்து மழைகாலம் ரதாபங்கு ஆடிமாதத்தில் மாரி (மழை) அம்மனை வணங்கி வரவேற்கிறோம். இவ்வாறு மழை காலம் தொடங்கும் முன் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு வெப்ப நோய்களும், கிருமிகள், காற்றில் பரவும் கிருமிகள் மூலமாக பரவும் காலரா, வயிற்றுப்போக்கு போன்றவைகள் ஏற்படும். இதனை போக்கும் விதமாக முன்னோர்கள் ஆடி மாதம் தொடங்கியவுடனேயே வேப்பிலையும், மஞ்சளையும் வீடுகளிலும், கோயில்களிலும் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.
வீடுகளின் வாசல் முன்பு வேப்பிலை கொத்து சொருகப்பட்டன. மஞ்சள் நீர் வாசல் மற்றும் வீடு பகுதிகளில் தெளிக்கப்பட்டன. இதன் மூலம் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுவதுடன், ஈக்கள் மற்றும் பூச்சுகளின் வரவும் குறைந்து விடும்.
ஆடி மாதத்தில் வேப்பிலை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. காரணம் காற்றில் மூலம் பரவும் பூஞ்சை, காளான், பாக்டீரியாக்கள் போன்றவை பரவாமல் காற்றை சுத்தப்படுத்தும் சிறப்பு பணியையும் செய்கிறது வேம்பு. வேப்பிலையை சர்வரோக நிவாரணி என மருத்துவம் கூறுகிறது.
பன்னெடுங்காலமாக வேம்பின் பயன்பாடுகள் இல்லந்தோறும் இருந்தே வந்துள்ளன. கொள்ளை நோய்களால் மரணங்கள் அதிகமாக நிகழ அதனை தடுக்கவும், இறைவனை வணங்கவும் பயன்படுத்தப்பட்டதே வேப்பிலை.
வேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் புதைந்து உள்ளன. உலகில் பல தொழில் நுட்ப கூடங்கள் ஆராய்ந்து வேம்பின் மகத்துவத்தை பறைசாற்றி உள்ளன. இதனை முன்பே அறிந்திருந்த நம் முன்னோர் ஆடி மாதத்தின் தொடக்கம் முதல் மக்கள் அதிகம் கூடும் ஆலயங்கள் முதல் தனித்தனி வீடு வரை வேப்பிலை தோரணம் கட்டி நோய்கள் பரவாமல் தடுத்து உள்ளனர்.
வேப்பங்கொழுந்தை ஆடி மாதத்தில் கூழ் உடன் அருந்துகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்புகள் அதிகரிக்கின்றன. வேப்பிலை சேலை உடுத்தல், வேப்பிலை அரைத்து தண்ணீர் தெளித்தல், என பலவிதமான சமயசடங்குகள் அனைத்தும் மனிதனின் ஆரோக்கியத்திற்கே உதவுகின்றன.
வேப்பிலையை உடலில் அரைத்து பூசுவது, அதனை உடுத்துவதன் மூலம் சரும நோய்கள் உடலில் அண்டாது. மாரியம்மனின் மாலையாக, ஆடையாக உலா வரும் வேப்பிலை அம்மனுக்கு உகந்தது மட்டுமல்ல மனிதர்களின் நல்வாழ்விற்கும் உகந்தது.
மஞ்சள் பல்வேறு பயன்பாடு சிறப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்டது. உடல் ஆரோக்கியத்திற்கு மஞ்சளின் தேவையறிந்தே அன்றாட சமையலில் அதனை பயன்படுத்துகிறோம். மங்கல பொருளாகவும், தெய்வீக அம்சம் பொருந்தியதாக மஞ்சள் பயன்படுகிறது. ஆடி மாதத்தில் மஞ்சள் கலந்த நீரில் பெண்களை குளிக்க வைப்பதும், மஞ்சள் கலந்த நீரை வாசல் பகுதிகளிலும் தெளிக்கின்றனர்.
மஞ்சள் கலந்த நீரினை தெளிப்பதால் சிறுசிறு விஷபூச்சிகள், ஈக்கள், கிருமிகள் நிலப்பகுதி வழியே இல்லத்திற்குள் நுழையாது. “ஆடிச்செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சள் பூசிக்குளி” என்பது பழமொழி ஆடி செவ்வாயில் எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசிகுளித்தால் உமையவள் கேட்ட வரம் தருவாள் என்பது ஐதிகம்.
மேலும் செவ்வாய் அன்று எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசி குளித்தால் பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பதுடன், தீய சக்திகள் மற்றும் தீய கிரக கோளாறுகள் நீங்கும்.
மஞ்சள் பொதுவாக வணக்கத்திற்குரிய பொருளாக பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாட்டில் அதிகளவு மஞ்சளை பயன்படுத்துவது அதன் மங்கல சிறப்புடன் நம்மை பாதுகாக்கும் அரணாக கருதி தான் என்பதே உண்மை.
Average Rating