புதிய அரசமைப்புக்கான முயற்சியை அரசாங்கம் கைவிடுமா?..!! (கட்டுரை)
புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தாம் பதவிக்கு வந்த நாள் முதல், அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகுமா என்று சந்தேகம் கொள்ளக் கூடிய நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது.
கடந்த வாரம் இலங்கையில் முக்கிய மூன்று பௌத்த பிரிவுகளின் தலைமைப் பிக்குகள், அதாவது மகாநாயக்க தேரர்கள் கூட்டாக எடுத்த முடிவின் காரணமாகவே அந்தச் சந்தேகம் உருவாகியிருக்கிறது.
கடந்த வாரம் கண்டியில் கூடிய இலங்கை பௌத்தர்களின் மூன்று முக்கிய நிகாயாக்கள் என்றழைக்கப்படும் ‘சியம் நிக்காய’, ‘ராமஞ்ஞ நிக்காய’ மற்றும் ‘அமரபுர நிக்காய’ ஆகிய பிரிவுகளின் தலைவர்கள் நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று வேண்டாம் என முடிவு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திலும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.
இது சிறுபான்மை மக்களை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கலாம். ஏனெனில், இந்த உத்தேச அரசமைப்பின் மூலமாகவே அவர்கள் இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றையும் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புத் தகர்க்கப்பட்டுப் போகுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
இலங்கையில் பௌத்த மதகுருமார்களுக்கு இருக்கும் செல்வாக்கின் காரணமாக இது வரை காலமும் புதிய அரசமைப்பொன்றை வரைவது தொடர்பாகச் செயற்பட்டு வந்த அரசியல்வாதிகளில் ஏறத்தாழ அனைவரும் அந்த மதகுருமார்களை எதிர்த்துப் பேச முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
சிங்கள அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போது, புதிய அரசமைப்பொன்றுக்கான முயற்சிகள் நிறுத்தப்படுமேயானால் அது எதிர்கால சந்ததியினருக்குச் செய்யும் துரோகம் எனக் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அன்றே நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “பிக்குகளின் தேவைக்காக அரசமைப்பு மாற்றத்தை நிறுத்துவதாக இருந்தால் நாடாளுமன்றம் தேவையில்லை” எனக் கூறியிருந்தார்.
இதேவேளை, இதுவரை புதிய அரசமைப்பொன்றை வரையும் முயற்சிக்கு எதிராகக் கருத்து வெளியிடாத இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய, ஜாதிக்க ஹெல உருமயவின் உறுப்பினராகவிருந்து தற்போது அந்தக் கட்சியோடு முரண்பட்டுக் கொண்டு இருக்கும் அத்துரலியே ரத்தன தேரரும் அரசமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் அரசமைப்பு விடயத்தில் கருத்துத் தெரிவிக்கும் பிக்குகளை எதிர்க்க வேண்டாமெனவும் கடந்த சனிக்கிழமை காரசாரமான கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார். அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
கண்டியிலுள்ள மல்வத்தை மற்றும் அஸ்கிரிய ஆகிய விகாரைகளின் அதிபர்களாக இருக்கும் மல்வத்தை மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் ஆகியோர் பௌத்த மக்களிடையே பெரும் செல்வாக்குள்ளவர்கள். அவர்கள் ஒரு கருத்தைக் கூறினால், அதை தெய்வ வசனத்தைப் போல் ஏற்க வேண்டும் என்பதே பொதுவாக பௌத்தர்கள் மத்தியில் இருக்கும் நிலைப்பாடாகும். ஆனால், அவர்களின் கருத்தை ஏற்காது செயற்பட்ட ஜனாதிபதிகளும் இருந்தனர்.
1991 ஆம் ஆண்டளவில் தம்புள்ளையிலுள்ள கண்டலம உல்லாசப் பிரயான ஹோட்டலை ஆரம்பிக்கும்போது, பிக்குகள் அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆனால், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாது செயற்பட்டார். அவர் அந்த விடயத்துக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தம்புல்ல ரஜமகா விகாரையின் அதிபராகவிருந்த இனாமலுவே சுமங்கள தேரரை மிரட்டியதாகவும் அக்காலத்தில் தெரியவந்தது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதியின் மகன்மார்களுக்கு கண்டியில் கார் ஓட்டப் போட்டி நடத்த இடம் தேவைப்பட்டது. மல்வத்தை மற்றும் அஸ்கிரிய ஆகிய பிரதான விகாரைகளின் அதிபர்களான மகாநாயக்க தேரர்கள் கண்டியில் அந்தப் போட்டிகளை நடத்துவதை எதிர்த்தனர்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. ஆனால், அவ்வாறு உத்தேச புதிய அரசமைப்பு விடயத்திலும் தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருக்கிறதா என்பது பின்னர்தான் தெரியவரும்.
புதிய அரசமைப்பு தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருண்டு வருடங்களுக்கு மேலாகிய போதிலும் மாகாநாயக்க தேரர்கள் அதை எதிர்ப்பதாக கடந்த வாரம் வரை எவருக்கும் தெரியாது. அந்தத் தேரர்களும் அதை இதற்கு முன்னர் கூறவில்லை. திடீரென அவர்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது.
இந்த எதிர்ப்புக்கு மல்வத்தை விகாரை அதிபர் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார் எனக் கூற முடியாது. அஸ்கிரிய பீடாதிபதியும் அவரது சங்க சபையுமே அரசமைப்புக்கு மட்டுமல்லாது அரசாங்கத்துக்கும் பொதுவாக எதிர்ப்புத் தெரிவிப்பதில் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கு முன்னரே அஸ்கிரிய பீடாதிபதியும் அஸ்கிரிய சங்க சபையும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டி வரும் கலகொட அத்தே ஞானசார தேரர் சம்பந்தமாக அரசாங்கத்தை எச்சரித்து இருந்தனர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரரைக் கைது செய்யப் பொலிஸார் அவரைத் தேடும் போது, அவர் தலைமறைவானார்.
அதையடுத்து அவருக்கு எதிராக ஊடகங்களில் பல கட்டுரைகளும் செய்திகளும் வெளியாகின. அப்போது பிக்குகளின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் அரசாங்கமும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் செயற்படுவதாக சில செய்திகள் கூறின.
அதையடுத்து, அஸ்கிரிய பீடாதிபதியும் தாம் ஞானசார தேரரின் கருத்துத் தெரிவிக்கும் பாணியை விரும்பாவிட்டாலும் அவரது கருத்துகளை ஆதரிப்பதாகவும் அவரைப் பாவித்து அரசாங்கத்தின் சிலர் பொதுவாக பிக்குகளின் கௌரவம் பாதிக்கப்படும் வகையில் கருத்து வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். இது அரசாங்கத்தை விமர்சிப்பதாக அமைந்திருந்தது.
அதன் பின்னர்தான், அவர் அரசமைப்பைப் பற்றிக் கருத்து வெளியிட்டு இருந்தார். பின்னர் மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த தலைமைப் பிக்குகள் கண்டியில் கடந்த வாரம் கூடி, புதிதாக அரசமைப்பு வரையப்படத் தேவையில்லை என்ற அறிக்கையை வெளியிட்டனர். உத்தேச புதிய அரசமைப்பு நாட்டைப் பிரிக்கும் அரசமைப்பாகும் என்பதே அவர்களின் வாதமாகும்.
ஆனால், அரசமைப்பு என்று கூறக்கூடிய எந்தவொரு ஆவணமும் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. அப்படி இருக்கத்தான் புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு உரிய இடம் கிடைக்காமல் போகும் என்றும் நாடு பிரியும் என்றும் கூட்டு எதிரணி என தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் கூறி வருகின்றனர்.
அவர்களது நிலைப்பாட்டிலேயே அஸ்கிரிய பௌத்த பீடம் இப்போது இருக்கிறது எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு புறம் பிக்குகள், திடீரெனப் புதிதாக அரசமைப்பொன்று தேவையில்லை என்கின்றனர். ரத்தன தேரர் போன்ற இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வரப் பாடுபட்டவர்கள் புதிய அரசமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனக் கூறுகிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யக் கூடாது என முடிவு செய்தது.
இப்போது அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் புதிய அரசமைப்பு வேண்டாம், அரசமைப்புத் திருத்தமே வேண்டும் என்கிறார்கள். அரசமைப்பு போன்ற பாரதூரமான விடயமொன்றைப் பற்றி இவ்வாறு பலர் நினைத்ததெல்லாவற்றையும் கூறி வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் ஏன், எவ்வாறு, எப்போது புதிய அரசமைப்பொன்றை வரைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால், அரசாங்கம் தற்போது எதிர்நோக்கி இருக்கும் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும்.
மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார போக்கினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, அந்தச் சர்வாதிகாரத்துக்கு எதிராகவே ஜனாதிபதித் தேர்தலின் போது களமிறங்கினார்.
எனவே, அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதையே தமது பிரதான நோக்கமாகும் எனப் பிரகடனப்படுத்தினார். அதை எவ்வாறு செய்யப் போகிறீர்கள் என ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேட்கப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அதைச் செய்ய வேண்டியுள்ளது என அவர் பதிலளித்தார்.
அத்தோடு, தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு புறமிருக்க தமிழ் தலைவர்களைப் புறக்கணிக்கும் ஓர் அதிகாரியை இடமாற்றம் செய்வது போன்ற சிறிய கோரிக்கையையாவது நிறைவேற்ற மஹிந்த விரும்பவில்லை. எனவே, தமிழ் மக்கள் மஹிந்தவை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என விரும்பினர். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இனவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானதால் அவர்களுக்கும் மஹிநதவை வெளியேற்ற வேண்டும் என்ற தேவை இருந்தது.
எனவேதான், பாதிக்கப்பட்ட சகலரும் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப ஒன்று சேர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஜனநாயகத்தை கோரினர். எனவே சகலரினதும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய அரசமைப்பொன்றை வரைவது என்ற முடிவு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே முன்வைக்கப்பட்டதாகும். அந்த வகையில் புதிய அரசமைப்பொன்றுக்கு மக்கள் ஆணை இல்லை எனப் பிக்குகளோ அல்லது ஸ்ரீ ல.சு.கவினரோ கூற முடியாது.
தம்மை எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்து கொள்வதற்காக 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மைத்திரிபால மேற்கண்டவாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியே அரசமைப்பை மாற்றுவேன் எனக் கூறினார்.
அவ்வாறு இருக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனக் கூற முடியாது.
காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரர் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராகவே போராடினார். அவரது ஆதரவும் ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபாலவுக்கு கிடைத்தது. அந்தத் தேர்தலின் போது மைத்திரிபாலவின் சார்பில் நூறு நாள் வேலைத்திட்டமொன்று வெளியிடப்பட்டது.
அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நாளும் அதை நிறைவேற்றிக் கொள்ளும் நாளும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே, நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீ ல.சு.க இப்போது கூற முடியாது.
இவ்வாறு மக்களுக்கு வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே புதிய அரசமைப்பொன்றை வரைய முன்வந்தது.
அதற்காக மக்களிடம் மேலும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள லால் விஜேநாயக்கவின் தலைமையில் குழுவொன்றையும் நியமித்தது. அந்தக் குழு, தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததன் பின்னர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது, இனப்பிரச்சினையைத் தீர்ப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் புதிய அரசமைப்பொன்றை வரைவதற்காகவே கடந்த வருடம் ஜனவரி மாதம் நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டது.
அந்த அரசமைப்புச் சபையின் கீழ் பல்வேறு துறைகள் தொடர்பாக மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அத்தோடு ஒரு வழிகாட்டல் குழுவும் நியமிக்கப்பட்டது. எதிர்க் கட்சி உறுப்பினர்களும் அந்த உப குழுக்களிலும் வழிகாட்டல் குழுவிலும் இருந்தனர். உப குழுக்கள் தமது அறிக்கைகளைக் கடந்த நவம்பர் மாதம் சபாநாயகரிடம் கையளித்தன.
அதனடிப்படையில் வழிகாட்டல் குழு தற்போது புதிய அரசமைப்புக்கான ஆலோசனைகளை திட்டவட்டமாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அரசமைப்புச் சபை அந்த ஆலோசனைகளுக்குச் சட்ட வடிவத்தைக் கொடுத்துப் புதிய அரசமைப்பு வரைவைத் தயாரிக்கும்.
வழிநடத்தல் குழு இதுவரை 65 அமர்வுகளுக்கு மேல் நடத்தியிருக்கிறது. இத்தனையும் நடைபெறும்போது, எவரும் புதிய அரசமைப்பு தேவையில்லை எனக் கூறவில்லை. எனவே, பிக்குகளின் பின்னால் ஏதோ அரசியல் இருப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
தாம் இவ்வளவு காலமும் என்ன நடக்கிறது என்று அவதானித்து வந்ததாகவும் அரசமைப்பு தயாரிக்கும் பணி நாட்டுக்கு பாதகமானதாகத் தெரிந்தபோதே, தாம் அதை எதிர்க்க முற்பட்டதாகவும் பிக்குகள் இப்போது கூறுகின்றனர். ஆனால், புதிய அரசமைப்பு எவ்வாறு நாட்டுக்கு பாதகமாக அமையப் போகிறது என்பதை அவர்கள் விவரிக்கவில்லை.
எனினும், அரசாங்கத்தை எதிர்க்கும் கூட்டு எதிரணி போன்ற சக்திகள் புதிய அரசமைப்பின் மூலம் தற்போதைய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என்றும் நாட்டின் ஒற்றை ஆட்சி முறை இல்லாமல் போகும் என்றும் சிங்கள மக்களை பயமுறுத்திக் கொன்டே இருக்கின்றனர். ஆனால், புதிய அரசமைப்பானது இன்னமும் கருத்துத் திரட்டும் தருவாயில்தான் இருக்கிறது.
அந்தநிலையில் அது நாட்டுக்கு பாதகமாக அமையும் என்று எவ்வாறு கூறமுடியும்?
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சில விடயங்களின் போது, பிக்குகள் இதுபோன்று தலையிட்டு அந்த முயற்சிகளை குழப்பியடித்த முதலாவது முறை இதுவல்ல. 1957 ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் 1966 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தம் முன்வைக்கப்பட்ட போதும் இதேபோல் அவர்கள் அவற்றை எதிர்த்து அவற்றை இரத்துச் செய்யச் செய்தனர்.
இறுதியில் நாடு பெரும் போரை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. ஆனால், இன்றைய நிலையில் அரசாங்கம் அரசமைப்பு விடயத்தை இலகுவாக கைவிட முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியே. ஏனெனில் இம் முறை சர்வதேசம் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறது.
Average Rating