நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு சில மருத்துவ குறிப்புகள்..!!
உலகெங்கிலும் நெஞ்செரிச்சல், உணவு எதிர்ப்பு போன்ற பாதிப்புகள் அநேகருக்கு இருக்கின்றன. 5-ல் 4 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் இரவில் ஒருவித கசப்பு உணர்வு, இருமல், தொண்டை பாதிப்பு சோர்வு என்ற பாதிப்புகளால் தூக்கம் இல்லாமல் மறுநாள் வேலைகளும் பாதித்து இருப்பவர்கள் அநேகம். அவர்களுக்கான சில குறிப்புகள்.
* ஆசிட் அதிகரிக்கச் செய்யும் உணவுகளைத் தவிருங்கள். உதாரணமாக: புளி, கிரேப்ஸ், ஆரஞ்சு, தக்காளி, வினிகர் சேர்த்த உணவுகளைத் தவிருங்கள்.
* மசாலா உணவுகள் அநேகருக்கு நெஞ்செரிச்சலைத் தருகின்றன. காரம், மிளகாய், மிளகு கூட தவிருங்கள்.
* சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரத்திற்கு படுக்காதீர்கள். ஈர்ப்பு சக்தி காரணமாக உணவும், ஆசிடும் இறங்கிவிடும்.
* கொழுப்பில்லாத உணவு, கொழுப்பு குறைந்த அசைவ உணவு இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். பொறித்த வகை உணவுகள் வேண்டவே வேண்டாம்.
* உணவு எதிர்ப்பதை தவிர்க்க சாக்லேட், ஆல்கஹால், காபி, கார்பனேட்டட் பானங்கள் இவை கூடாது.
* அளவு முக்கியம். பெரிய உணவாக எடுத்துக் கொள்ளாமல் சிறிதாக பல முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஆல்கஹால் உணவுக் குழலும் வயிறும் இணையும் இடத்தினை அகலப்படுத்தி விடும். இதனால் உணவும், ஆசிட்டும் எதிர்த்து மேலே வரும் வாய்ப்பு கூடும். கவனம் தேவை.
* அதேபோன்று கோலா பானங்களும் உணவு, ஆசீட் மேலெழச் செய்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.
* படுக்கப்போகும் முன் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடுவது இந்த பாதிப்பு உடையோருக்குக் கூடாது.
* படுக்கப் போவதற்கு 3 மணி நேரம் முன்பே அதாவது 7 மணிக்குள் உங்கள் இரவு உணவினை முடித்துக் கொள்ளுங்கள்.
* இறுகிய பெல்ட், பேண்ட் போன்றவற்றை அணியக் கூடாது. இது வயிற்றினை அழுத்தி நெஞ்செரிச்சலை கூட்டும்.
* சதா டென்ஷன், ஸ்டிரெஸ் என்ற வாழ்க்கை கூடவே கூடாது. இதுவும் நெஞ்செரிச்சலை விடாது அதிகரிக்கச் செய்யும்.
* எடை கூடுதலாக இருக்கின்றீர்களா. எடையைக் குறையுங்கள், பாதிப்பும் குறையும்.
* அடிக்கடி நெஞ்செரிச்சல் மாத்திரை போடுகின்றீர்களா? உடனடி மருத்துவரைப் பாருங்கள்.
* இரவில் ஒரு முறை சூயிங்கம் மெல்லுங்கள். இது உமிழ் நீரை அதிகரித்து ஆசீட் வீரியத்தினைக் குறைக்கும். எப்போதும் இதனையே செய்ய வேண்டாம்.
* உங்களுக்கு பாதிப்பு எந்தெந்த உணவுப் பொருட்களினால் ஏற்படுகின்றது என்பதை நீங்களே ஆய்ந்து அறிய வேண்டும்.
* கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல், உணவு எதிர்ப்பு இவை இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவ ஆலோசனை பெறவும்.
* உணவு உண்ட இரண்டு மணி நேரம் பொறுத்தே உடற்பயிற்சி செய்யுங்கள்.
* புகை பிடிப்பது பாதிப்பினை வெகுவாய் கூட்டும். உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.
* தலையை உயர்த்தி வைத்து படுங்கள்.
* குனியும் பொழுது முட்டியினை மடக்கி குனியுங்கள். அப்படியும் மடிந்து குனிவது ஆசிட்டை மேலெழச் செய்யும்.
சிறுநீரக கல்:
சிறுநீரக கல் கடினமான தாது. சிறுநீரகம் அல்லது சிறுநீரக குழாய்க்குள் உருவாவது. இருபதில் ஒருவர் வாழ்வில் ஒரு முறையேனும் சிறுநீரக கல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். சிறு நீரின் அளவு குறையும் பொழுதோ (அ) அதிக கல் உருவாக்கும் பொருட்கள் சிறு நீரில் சேரும் பொழுதோ சிறுநீரக கல் உருவாகின்றது.
உடலில் அதிக நீர் வற்றுவதும் கல் உருவாக வாய்ப்பு ஆகின்றது.
கீழ் முதுகின் இரு பக்க வாட்டிலும் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ரத்தம் இவை அறிகுறிகளாய் காட்டும். ‘கவுட்’ என்ற பாதிப்பு உடையவர்களுக்கு, சில மருந்துகளும் சிறுநீரக கல் உண்டாகச் செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. உணவு முறையும், பரம்பரையும் கூட காரணமாகின்றன. சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் மற்றும் சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றது.
அநேக கற்கள் தானே வெளியேறி விடும். வலிக்கான மருந்து, சில நேரங்களில் கல்லை வெளியேற்ற உதவும் மருந்து என சிகிச்சை அளிக்கப்படும். சில நேரங்களில் சிறு அறுவை சிகிச்சை மூலம் கல் வெளியேற்றப்படும்.
யாருக்கு வேண்டுமானாலும் சிறுநீரகக் கல் வரலாம். அதிகம் இது ஆண்களையே தாக்குகின்றது. 20-50 வயதினருக்கு பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. அதிக ‘யூரிக் ஆசிட்’ அளவு உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம். மிக சிறிய சதவிகித அளவில் கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகின்றது. அநேக கற்கள் கால்ஷியம் கற்களாகவே இருக்கின்றன. மேலும் யூரிக் ஆசிட், மக்னீசியம், அம்மோனியம் போன்றவைகளால் கற்கள் உருவாகின்றன.
அதிக உடற்பயிற்சி காரணமாக உடலில் ஏற்படும். நீர் சத்து குறைவு, தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளாமை ஆகியவையும் கற்கள் ஏற்பட காரணம் ஆகின்றன.
அதிக வெப்பம் மிகுந்த கோடையும் ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. சிறுநீர் குழாயில் ஏற்படும் கிருமித் தாக்குதலும் கற்கள் உருவாக ஒரு காரணமே.
* கவுட் எனப்படும் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு அதிகம், சிறுநீரில் ஏற்படும் யூரிக் ஆசிட் உப்பு அதிகம் போன்றவை சிறு நீரக கற்களை ஏற்படுத்தும்.
* சிறுநீரில் அதிக கால்சியம்.
* சிறுநீரக நோய்
போன்ற மேலும் சில மருத்துவ காரணங்களாலும் சிறுநீரகக் கல் ஏற்படும்.
* அதிக உயர் ரத்த அழுத்தம்.
* நீண்ட நாள் சர்க்கரை நோய் பாதிப்பு
* குடல் வீக்கங்கள் போன்றவைகளும் சிறுநீரக கல் உருவாக காரணம் ஆகின்றன.
* அதிக அசைவம், அதிக உப்பு, அதிக சர்க்கரை, அதிக வைட்டமின் பி சத்து சேர்ப்பு.
* பசலை கீரை போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பல நேரங்களில் அறிகுறி ஏதும் இல்லாமல் திடீரென துடிக்கும் வலியாக கீழ் முதுகின் இரு புறமும் மற்றும் தொடை மடிப்பில் ஏற்படும். கூடவே வயிற்றுப் பிரட்டல், வாந்தி இருக்கும். பிரசவ கால வலியினை விட இது அதிக வலியாக இருக்கும். சிறு நீர் வெளி செல்வதில் கடினம், ஜீரம் என அதிக வலி பாதிப்பினைத் தரும்.
பொதுவில் மருத்துவ உதவியோடு 48 மணி நேரத்திற்குள் கற்கள் வெளியேறி விடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை போன்றதொரு சிறிய சிகிச்சை தேவைப்படும்.
கிருமிகள்:- எங்கும் கிருமிகள், எதிலும் கிருமிகள் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
பாக்டீரியா, வைரஸ், பங்கஸ், ப்ராசைட் என பாதிக்கும் கிருமிகள் பல வகை உண்டு.
இவை எப்படி பரவுகின்றன?
* பாதிக்கப்பட்ட உணவு, தண்ணீர் (சுத்தமற்றது).
* கதவின் பிடி, குழாய், டி.வி. ரிமோட், செல்போன், டெலிபோன், பேனா, கம்ப்யூட்டர், ஸ்விட்ச், பொம்மைகள்.
* வாஷ்பேஸின், குப்பை கூடை, டாய்லெட்.
* துவைக்க வேண்டிய துணிகள், பல் தேய்க்கும் பிரஷ்.
* செல்லப்பிராணிகள்
* மற்றவர்கள்
இவை உடலில் எப்படி வந்து சேருகின்றது?
* கிருமி பாதிப்புடைய உணவு
* காற்று
* தும்மல், இருமல்
* சருமம், காயம்
* குழந்தைகளை முத்தமிடுதல்
ஆகியவைகளால் கிருமிகள் பரவுகின்றன.
இதனைத் தவிர்க்க
* அடிக்கடி சோப் கொண்டு கைகளை கழுவ வேண்டும். உணவு உண்ணும் முன்பும், பின்பும், டாய்லெட் சென்ற பிறகும், தும்மல், இருமல் இருந்தாலும் கைகளை சோப்பு கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
* தும்மும் பொழுதும், இருமும் பொழுதும் டிஷ்யூ பேப்பர், கை குட்டை கொண்டு வாயினை பொத்திக் கொள்ளுங்கள்.
* சமையலறை, வாஷ்பேஸின், டாய்லெட் இவற்றினை சுத்தமாக வைத்திருக்க அதிக அக்கறை செலுத்துங்கள்.
* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகளை மருத்துவ அறிவுரை படி கொடுங்கள்.
* நலமாக இருந்தாலும் மருத்துவ பரிசோதனை வருடமொருமுறை அவசியம்.
Average Rating