திசைமாறும் வடக்கு மாணவர்களின் செயற்பாடுகள்..!! (கட்டுரை)
கல்வி வளர்ச்சி என்பது, பலதுறைகளில் அசுரவேகத்தில் முன்னேற்றம் அடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.
தொழில்நுட்ப ரீதியிலானதும் விஞ்ஞான ரீதியிலுமானதுமாக வளர்ச்சியைக்காணும் உலகில், அதனை மேம்படுத்திச்செல்லும் கருவியாக, கற்றலும் கற்பித்தலும், காணப்படுகின்றது.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே, இன்று பெருமளவில் பேசப்படும் விடயங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, மேற்கத்தேய நாடுகளில், மாணவர்கள், ஆராச்சியில் ஈடுபடுவதன் பலனாக, பல்வேறான புதிய தொழில்நுட்ப விடயங்களை, உலகுக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகள், அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில், இலங்கையின் கல்வி நிலை, மேற்கத்தேய கல்விநிலையோடு, போட்டிப் போட்டு, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற தரத்தை எட்ட, நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய நிலைக் காணப்படுகின்றது.
எனினும் இலங்கையின் கல்வி முறைமையானது, ஆசிய நாடுகளில், சிறந்த முறையென கூறப்படுகின்றமையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறான கல்வி நிலையை, மாணவர்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றகரமான பாதைக்கும், எந்த வகையில் நாம் பயன்பாடுள்ளதாக மாற்றி வருகின்றோம் என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.
இலங்கையின் தென்பகுதியில் மாத்திரமன்றி சர்வதேசத்தின் அவதானிப்பாளர்களும், வட புல கல்வியியலாளர்களை வியந்து பார்த்த நிலை காணப்பட்டது. ஆனால் இன்று, அந்நிலை மாறி, கல்வி வீழ்ச்சியடைந்துச் செல்கின்ற போது, அதற்கான காரணத்தைக் கூற மறந்து வருகின்றனர்.
குறிப்பான கல்வி நிலையில் மாகாண மட்டத்தில், 9ஆவது இடத்திலுள்ள வடக்கின் கல்வி நிலை, ஏன் இவ்வாறு சென்றது என்பதை, ஆக்கபூர்வமாக ஆராய, எவரும் இல்லாத நிலை தோன்றியுள்ளது.
யுத்தத்தின் தாக்கம், மாணவர்கள் மத்தியிலான கல்வி நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக, பல்ேவறானக் கருத்தியலை முன்வைத்தாலும் கூட, மாணவர்கள் மத்தியில், வன்மம் நிறைந்த மனோபாவம் அதிகரித்து செல்வதற்கு ஏது காரணமாக அமைந்துள்ளது என்பதே கேள்வியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள், வாள்களுடன் நடமாட்டம், வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல், கிளிநொச்சியில் பாடசாலை மாணவன் திருடியபோது கைது போன்ற செய்திகள், இன்று சாதாரணச் செய்திகளாக மாறிப்போயிருக்கின்ற சூழலே காணப்படுகின்றது.
குறிப்பாக, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கடந்த வாரம், இரு பிரிவு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல், வீதிச்சண்டையாக மாறி, இன்று வவுனியாவில் அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில், சாதாரண தரத்தில், ஆங்கில மொழி மூலம் கற்கும் மாணவர்களின் வகுப்பறை, சற்று சத்தமாக காணப்பட, அங்கு சென்ற மாணவத் தலைவனொருவன் அமைதியாக இருக்குமாறு எச்சரித்துள்ளான்.
இதன்போது, அங்கிருந்த மாணவ, மாணவிகள், மாணவத் தலைவனை நக்கலாக ஏதோ சொல்லவே, மாணவத் தலைவனும் அதனைப் பொருட்படுத்தாது சென்றிருக்கின்றான்.
எனினும், மாணவத் தலைவனின் வகுப்பைச் சேர்ந்த உயர்தரவகுப்பு பிறிதொரு மாணவன், தனது நண்பனுக்கு அவர்கள் நக்கலாக கதை கூறியுள்ளனர் என்று ஆத்திரம் கொண்டு, குறித்த சாதாரணதர மாணவர்களின் வகுப்புக்குச் சென்று, அங்கிருந்த மாணவ, மாணவிகளை கடுமையாகப் பேசியுள்ளான்.
இதன்போது அங்கிருந்த மாணவி, தனது சக மாணவர்களுக்கு, எங்களை பேசும்போது பார்த்துக்கொண்டிருக்கின்றீர்களா என்று உசுப்பேத்தவே, அங்கிருந்த 10 மாணவர்கள், உயர்தர வகுப்பு மாணவனை பிடித்து வைத்து அடித்துள்ளனர்.
இவ்வாறே, இம் மோதல் ஆரம்பித்துள்ளது. கற்பதற்காகவும் இதர நற் செயற்பாடுகளுக்காகவும், பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பி விட்டு பிள்ளை நன்றாக படித்து எதிர்காலத்தை தீர்மானிப்பான் என்று ஏங்கியிருக்கையில் அவர்கள் பாடசாலை வளாகத்தினுள்ளேயே கைகலப்பில் ஈடுபட்டுள்ளமை பெற்றோரை மாத்திரமல்ல அப் பாடசாலை ஆசிரியர் சமூகத்தினையே வெட்கித்தலைகுனிய வைக்கும் செயற்பாடாக மாறியிருக்கின்றது.
இவ்வாறாக மாணவர்களுக்கிடையிலான மோதல் சற்றே பூதாகாரமாகி வரும் நிலையில் அதைத் தணிக்க அதிபர் ஆசிரியர்கள் முயன்றுள்ளனர்.
எனினும் மறுநாள் காலை அனைவரும் புதிய சிந்தனைகளுடன் பாடசாலைக்கு வந்து பிரார்த்தனைக்காக மைதானத்தில் கூடிய சமயம், உயர்தர வகுப்பு மாணவனொருவன் சாதாரணதர மாணவரைத் தாக்கியுள்ளான். இதனால் குழப்பம் மீண்டும் தலைதூக்கவே, அன்றைய பிரார்த்தனை சண்டை சச்சரவுடன் நிறைவேறியிருக்கின்றது.
அதிபர், ஆசிரியர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முன்பாக இவ்வாறு சண்டையிடும் தைரியத்தை மாணவர்களுக்கு எவர் வழங்கியிருக்கின்றார்கள் என்பதை நாம் சற்று சிந்திக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்பது மறுப்பதற்கில்லை. வெளிச் சக்திகளின் ஆதிக்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆழ ஊடுருவியிருக்கின்றது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்துகொள்ளமுடிகின்றது.
குறிப்பாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் என்றால் துடியாட்டம் கூடியவர்கள், குழப்படி மாணவர்கள் என்ற பெயர் நிரந்தரமானதாக பதிவிடப்பட்ட நிலையுள்ளது. 1994 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் அதிபரைத் தாக்கிய சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் 1999 மற்றும் 2000 உயர்தர வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்குள் மோதிக்கொண்டமையும் அதன் பின்னணியில் அப்போது வவுனியாவில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் ஆயுதக்குழுக்கள் செயற்பட்டமையும் மாணவர்கள், அந்தக் குழுக்களில் அங்கத்தவர்களாக இருந்தமையும் ஒர் அத்தியாயமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இதைத்தொடர்ந்து வந்த உயர்தர மாணவர்களுக்கிடையிலான மோதல்கள் பல சந்தர்ப்பங்களில் நடந்தேறியிருக்கின்றது. இதன்போது வெளியார்கள் கூட பாடசாலைக்குள் வருகை தந்து மாணவர்களை தாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளமை மிக வேதனையான விடயங்களாக அமைந்துள்ளது.
இவ்வாறான காலச்சூழலிலேயே வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்குப் புதிய அதிபரான த. அமிர்தலிங்கம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் பினன்னரான காலப்பகுதியில் பாடசாலையில் பாரிய மாற்றங்கள் நிகழும் என வவுனியா சமூகத்தினால் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாடசாலையின் ஆசிரியர்கள் மத்தியில் இருந்த வந்த மேலாதிக்க நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன் மாணவர்கள் மத்தியிலும் அதிபர் மீதான அச்சத்துடனான மரியாதை காணப்பட்டிருந்தமையும் மறுப்பதற்கில்லை.
எனினும், அதிபர் மீதான விமர்சனங்களை உள்ளிருந்த சிலரே வெளியில் ஏற்படுத்திவந்த நிலையில், புதிய அதிபரையும் மனதளவில் தாக்கத்துக்கு ஏற்படுத்தி அவரை செயற்றிறன் அற்றவராக வெளிக்காட்டவும் தலைப்பட்டனர்.
எனினும் அதிபர் வெறுமனே பாடாலை அதிபராக அன்றி, சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் கரிசனை கொண்டவராகவும் கிராமத்தில் பிறந்து, கடின உழைப்பினால் முன்னேறிய மனிதராகவும் காணப்படுவதனால் அவரது மனரீதியான நம்பிக்கையை அசைக்கமுடியாத நிலை காணப்பட்டிருந்தமை சிலருக்கு பெரும் இடையூறாகவே காணப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் மத்தியில் சுமூகமான நிலை காணப்பட்டபோதிலும் அங்குள்ள மற்றையவர்கள் தொடர்பாக ஒரு நிலைப்படுத்தல் என்பதில் அதிபர் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான போராட்டத்தின் மத்தியிலேயே உயர்தர மாணவர்களுக்கும் சாதாரணதர மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. காலை பிரார்த்தனையின் போது மைதானத்தில் ஏற்பட்ட மோதலை அதிபர் ஆசிரியர்கள் சிலர் கட்டுப்படுத்தியிருந்ததுடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான கெங்காதரன் ஆகியோர் களத்தில் இறங்கி மாணவர்கள் மத்தியில் சமரசத்தை ஏற்பட்டுத்தியிருந்தனர்.
குறிப்பாக சட்டத்தரணி கெங்காரன் பாடசாலைக்கு வருகை தந்து நிலைமை மோதசமடையாதிருப்பதற்கான முழுமையான செயற்பாட்டை வழங்கிருந்ததுடன் அதிபருடன் இணைந்து பெற்றோரை வரவழைத்து மாணவர்கள் மத்தியில் இவ்வாறனதொரு நிலை ஏற்படக்கூடாது எனவும் கண்டித்ததுடன் சுமூகமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தார்.
எனவே, இத்துடன் பிரச்சினை ஓய்ந்தது என்ற நிலையில், அனைவரும் திருப்திப்பட்டுக்கொள்வதற்கு முன்பாகவே அன்று மாலை வைரவபுளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று வந்த சாதாரண தர மாணவர்களை இலக்கு வைத்து உயர்தர வகுப்பு மாணவர்கள் தாக்க முற்பட்டனர்.
இதனால் வைரவபுளியங்குளம் பகுதி சில மணி நேரம் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டது. உடனடியாக சட்டத்தரணி கெங்காதரன் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பொலிஸாரையும் வரவழைத்து குறித்த கல்வி நிலையங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கடமைகளை பலப்படுத்திக்கொண்டார்.
குறிப்பாக வைரவபுளியங்குளம் பகுதியில் நிரந்தரமாகவே பொலிஸ் காவலரனொன்றினை அமைக்கவேண்டும் எனப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதைப் பொலிஸார் அசண்டை செய்யும் செயற்பாடு அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாகவே வைரவபுளியங்குளத்தில் இவ்வாறு மாணவர்கள் தாக்கிக்கொள்வதற்கு சாதகமான சூழலும் அமைந்துதிருந்தது.
இதேபோன்று கனகராஜன்குளம் மாணவனொருவனையும் வைரவபுளியங்குளத்தில் கல்வி நிலையத்தில் இருந்துவரும் போது, மாணவர் குழு வொன்று சில மாதங்களுக்கு முன்னர் தாக்கியதில் அம் மாணவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். எனவே பொலிஸார் அசமந்தம் காட்டுவது மாணவர்கள் மத்தியில் மோதல் சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றமையை மறுப்பதற்கில்லை.
இந்நிலையிலேயே வைரவபுளியங்குளத்தில் உயர் தர வகுப்பு மாணவர்களும் சாதாரண தர மாணவர்களும் மோதிக்கொண்டமையினால் இரு மாணவர்கள் வவுனியா பொது வைத்திசாலையில் அவர்களின் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இச்சண்டை ஓயாத நிலையில் உயர்தர வகுப்பு மாணவனொருவன் கைது செய்யப்பட்ட பின்னர் உயர் தர வகுப்பு மாணவர்கள் சமரச முயற்சிக்கு தாமாகவே வந்திருந்தனர்.
இதன் காரணமாக வழக்குப்பதிவுகள் மேற்கொள்ளப்படாமல் கைது செய்யப்பட்ட மாணவன் விடுவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கிடையில் இணக்கப்பாடும் காணப்பட்டிருந்தது.
எனினும் பழைய மாணவர்கள் சிலரும் பெற்றோர் சிலரும் சண்டையில் ஈடுபட்ட மாணவர்களை பாடசாலையில் இருந்த வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்ற நிலையில் இம் மாணவர்களை வெளியேற்றுவதனால் சமூகத்தில் அங்கிகரிக்கப்படாத மாணவர்களாக அல்லது இளைஞர்களாக வெளிக்கொணர்வதா என்ற கேள்வி மேலெழுந்து நிற்கின்றது.
இதற்குமப்பால் இளம் வயதானவர்கள் ஆபத்து அறியா பருவம்; எனவே இவ்வாறான நிலைமை மாணவர்கள் மத்தியில் ஏற்படும் போது, இதனைக் கட்டுப்படுத்துவதும் சீர்செய்வதும் அதிபர், ஆசிரியர், பெற்றோரின் பொறுப்பாக இருத்தல் வேண்டுமே தவிர மாணவர்களை வெளியேற்றி அவர்களை மேலும் சமூக சீர்கேடுகளில் உள்நுழைப்பதை தவிர்க்க வேண்டும் என்பது அனைவரும் உணரவேண்டும்.
சிறந்த கல்விச்சூழலையும் அதனோடு இணைந்து ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் நெறிகளை புகட்டும் இடமாக பாடசாலையை மாற்ற அதிபருடன் ஆசிரியர்கள் முன்வரவேண்டுமே தவிர சம்பவமொன்று நடந்ததன் பின்னர் அதற்கு விலக்கு தீர்ப்பதும் அதனை ஊருக்கு பறைசாற்றி ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து ஆசிரியத்துவத்துக்கு அப்பாலான செயற்பாட்டை முன்னெடுப்பதையும் நிறுத்தவதனூடாக ஆக்கபூர்வமான மாணவ சமூகத்தினை வடக்கில் உருவாக்க முடியும். என்பதுடன் வடக்கு மாகாண கல்வி வளர்ச்சியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான புதிய பாதையாகவும் அமையும் என்பதே யதார்த்தம்.
Average Rating