கூடவே இருந்து குழி பறிக்க ஆள் தேவை?..!! (கட்டுரை)
அண்மையில் வடக்கு மாகாண அரசியல் அரங்கில் அநாவசியமான, அநாகரிமான, அசிங்கமான விடயம் நடந்தேறியுள்ளது. கொடிய போரால் அனைத்தும் இழந்த தமிழ் மக்கள், ‘குடிக்கும் கஞ்சிக்கு உப்பு இல்லையே’ என்று நாளாந்தம் கதறுகின்றார்கள்.
ஆனால், அவர்களைப் பிரதிநிதித்துவம் ( ? ) செய்யும் அரசியல்வாதிகள் ‘கொண்டைக்கு பூ இல்லையே’ என்று அடம் பிடிக்கின்றனர் என்பது போல, களநிலைவரம் உள்ளது.
தற்போதைய வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல் விவகாரமும் அதற்கான தீர்ப்பும் பின்னர் அதன் வழி வந்த போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, முப்படையினரின் காணி அபகரிப்பு, முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், முழுமை அடையாத மீள் குடியேற்றம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், திடீரென எழும் புத்தர் சிலை விவகாரம், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சிக்கல்கள், வரப்போகும் புதிய அரசியல் யாப்பு, நீடித்த நிலையான அரசியல் தீர்வு என ஏகப்பட்ட சிக்கல்களைப் பின் தள்ளி விட்டன. தேவையற்ற, இதுவே பெரும் பேசு பொருளாகியும் விட்டது.
இந்தநிலையில், இவர்களது தேர்தல் கால வாக்கை நம்பி, வாக்களித்த மக்கள் உச்சக்கட்ட வெறுப்பிலும் திகைப்பிலும் செய்வதறியாது உள்ளனர். இவர்களைத் தங்களது பிரதிநிதிகள் என்று கூறக்கூடக் கூச்சப்படுகின்றனர். வெட்கப்படுகின்றனர்.
நாட்டின் மற்றைய மாகாணசபைகளது கடமைப் பரப்புகள் போலவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளது கடமைப் பரப்புகள் ஒத்தவை என்று கூற முடியாது. பொதுவாகக் கூறின், மாகாணசபைகள் மக்களிடமிருந்து வருமானம் ஈட்டுதல் மற்றும் அவர்களுக்கான நிதி நிர்வாக விடயங்களை ஆற்றுதல் எனக் கூறிக்கொள்ளலாம்.
ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் அதையும் தாண்டி, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் சுதந்திர அரசியல் வாழ்க்கை என்ற இலக்கை நோக்கிய புனிதமான அடிச்சுவட்டில் தடம் மாறாது பயணிக்க வேண்டிய பாரிய பொறுப்பை உடையது.
‘போக்கிரிகளின் கடைசித் தெரிவே அரசியல்’ என்பார்கள். ஆனால், அந்தக் கூற்றுக்கு எதிர் மாறாகப் போரில் வாழ்வு இழந்த, போக்கிடம் அற்ற மக்களுக்காக, உரத்துக் குரல் கொடுப்பவர்களே, அவர்களுக்காகப் பணி ஆற்றுபவர்களே வடக்கு, கிழக்கு அரங்கில் அரசியல் செய்ய வேண்டும்.
வடக்கு மகாண சபை 2013 இல் உருவான போது, தமிழ் மக்களுக்கு அதன்பால் பாரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. தமிழ் அரசு மலர்ந்தது என்று கூட, சில பத்திரிகைகள் செய்தி பிரசுரித்திருந்தன. ஆனால், மாகாண சபையின் நடப்பு நிலைவரங்கள், தமிழ் மக்களைத் தலைகுனிய வைத்துவிட்டன. ஊழல் விவகாரங்களுக்கு அப்பால், அதன் பின்னரான நிகழ்வுகள், வாசம் கமழ வேண்டிய சபையை நாற்றம் எடுக்க வைத்து விட்டன எனலாம்.
தற்போதும் பல கோரிக்கைகளை முன் வைத்து, தமிழ் மக்கள் வீதியில் பசியுடன் இருக்க, அவர்களின் பிரதிநிதிகள் பதவிப் பசியுடன் நடந்து கொண்டமை, அத்துடன் தங்களுக்குள் கடிந்து கொண்டமை பெரும் அவமானம்.
மாகாணசபை முறைமையே, தமிழ் மக்களது விடுதலை தாகத்துக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ போலவே. ஆனாலும், அதற்குள்ளும் ‘கதிரைகளைக் கண் வைத்துக் காய் நகர்த்தியமை’ பெரும் கரையாத கறை; மறையாத குறை.
இந்தப் பிரச்சினை தற்போது வெளிக்கிளம்பிய ஒன்று அல்ல; மாறாக ஏற்கெனவே புகையும் பிரச்சினையேதான் தற்போது பெரும் தீயாகப் பற்றி உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய மூன்று கட்சிகளுக்கும் இடையிலான பனிப் போர் உலகறிந்த உண்மை. இது நிஜப்போராக உருவெடுக்க, ஊழல் விவகாரம் ‘பிள்ளையார் சுழி’ போட்டது எனலாம்.
ஓர் அரசாங்கத்துக்கு நேர்மை, பொறுப்புக்கூறல், பக்கச்சார்பின்மை என்ற குண இயல்புகள் வலுச் சேர்க்க வேண்டும். அதை வலியுறுத்தியே தமிழ் இனம் கடந்த ஏழு தசாப்த காலமாகப் பெரும் அறப் போரை நடாத்தி வருகின்றது. இந்த நிலையில், வடக்கு மாகாண அரசாங்கமும் அந்த உயர்ந்த விழுமியங்களைப் பரிசோதித்து பார்த்தது என்றே கூறலாம். வயதில் குறைந்த மாகாண சபை, உயர்ந்த தீர்ப்புக்கு முன் உதாரணமாக விளங்கி உள்ளது.
எந்த விடயத்திலும், வெற்றிகரமான தொடர்பாடல் என்பது முக்கியமான ஒரு பண்பாக உள்ளது. இது ஒரு சிறிய வர்த்தக நிலையம் நடத்துவது தொடக்கம், பெரிய அரசாங்கத்தை ஆள்வது வரை பொருந்தும்.
நடப்பு, மத்திய அரசாங்கத்தின் ஐனாதிபதி வேட்பாளராக மைத்திரியை நியமிப்பதில் கூட விவேகமான, வெற்றிகரமான தொடர்பாடலே அவரின் வெற்றிக்கு வழி சமைத்தது. மஹிந்தவின் இறுதிக் கணம் வரை தன்னுடன் மோதப் போகும் வீரரைக் காண ஆவலாகவே இருந்தார்.
இந்நிலையில், வடக்கு மாகாண விவகாரம் தொடர்பில் முடிவெடுக்கக் கூடிய இரு தலைவர்கள், கடிதம் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டது ஒரு பெரும் பிரச்சினை. சம்பந்தன் ஐயா இவ்விடயம் தொடர்பில் நேரடியாகச் சென்று முதலமைச்சரைச் சந்தித்து, பல சிக்கல்களையும் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை; கடிதத் தொடர்பாடல் நம்பகத்தன்மை கூடியது; வலிதானது. ஆனால், விரைவாகவும் விவேகமாகவும் முடிவெடுக்க வேண்டிய இக்கட்டான தருனத்தில் நேருக்குநேர் சந்திப்பது ஆரோக்கியமானது.
இருவரும் விரும்பியிருந்தால், சமயப் பெரியார்கள் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களை அழைத்திருக்கலாம். இவர்களுக்கிடையில் சமரசம் செய்யவே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவைப்பட்டு விட்டது.
இனத்தால், மதத்தால், மொழியால் ஒன்றுபட்ட மற்றும் சட்டப் புலமைமிக்கவர்களும் மக்களால் மதிக்கப்படும் வயது முதிர்ந்த இரு பெரும் தமிழ் அரசியல் தலைவர்கள், ஒரு மேடையில் மனம் விட்டுக் கதைத்து, இப்பிரச்சினை தொடர்பில், தீர்வு காண முடியாத நிலையில் உள்ளபோது, சிங்கள அரசியல் தலைவர்களுடன் கதைத்து, இலங்கை இனப்பிரச்சினைக்குப் பரிகாரத்தை எப்படிக் காணப்போகின்றார்கள்?
தந்தைசெல்வாவின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழரசு என உருவாக்கப்பட்ட கட்சி, வேறு மாதிரியாக முரசு கொட்டுவது போல உள்ளது. ஏனெனில், தமிழரசுக் கட்சியால் வடக்கு முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம், மேடை ஏறியிருப்பின் அதாவது, வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருப்பின் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டுபட்டு வாக்களித்திருக்கும். இதனால், தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெருவிருட்சம் பிளவடைந்திருக்கும்.
தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் கிழக்கில் நடைபெற உள்ள பிரதேச சபை, மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் இரண்டு அணியாகக் கூறுபட்டுப் போட்டியிடுவர். ஏனெனில், வடக்கு பாகப்பிரிவினை, கிழக்கில் எதிரொலிக்கும்.
இதற்கு மேலதிகமாக, சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிடும். அத்துடன், தெற்கின் பேரினவாதக் கட்சியிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவர். இவ்வாறாக, கிழக்கு வாழ் தமிழ் சமூக வாக்குகள் சிந்திச்சிதறும். அது இறுதியில், ஏனைய இன மக்களுக்கு கூடுதல் ஆசனங்களைப் பெற்றுத் தரும். ஏற்கெனவே அரசியல் அநாதைகளாக உள்ள மக்கள், ‘சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழ வழி வகுக்கும்’. தெற்கு கொட்டம் போட்டு சிரிக்கும்; பால் சோறு பகரும்.
நம் நாட்டில் தமிழ் மக்களது நாதியற்ற நிலையை விலாவாரியாக விவரிக்க வேண்டிய தேவை இல்லை. அது வடக்கு, கிழக்கு என்றாலென்ன மலையகம் என்றாலென்ன ஒன்றே.
இந்நிலையில், மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான பனிப்போர் உக்கிரமடைந்து வருகின்றது. குப்பைகள் அகற்றுவது தொடர்பான, குப்பை பிரச்சினையில் நுவரெலியா மாவட்ட ஒருங்கணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை ஆறுமுகன் தொண்டமான் உதறித் தள்ளி உள்ளார்.
வடக்கில் ஊழல் பிரச்சினையால் முதலமைச்சர் பதவியை உதறும் படிகோரிக்கைகள், தீர்மானங்கள் வந்து போயின. தீர்க்க வேண்டிய ஆயிரம் சிக்கல்கள் நிறைந்த பிரச்சினைகள் முன் இருக்கின்றன. ஆனால், அவர்களோ குடும்பிச் சண்டை; சந்தி கொட்டம் போட்டுச் சிரிக்கும் நிலையில் அரசியல் உள்ளது.
சார்லஸ் எ கௌல் என்ற அறிஞரின் கருத்துப்படி, அரசியல் என்பது அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க கூடாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆனால், நாம் அரசியல்வாதிகளிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டோம்.
நடந்து முடிந்த, இந்த வடக்கு மாகாண சபை விவகாரத்தை, மதிநுட்பத்துடன் சம்பந்தன் ஐயா கையாண்டதால், தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றிருக்கலாம்; தமிழரசுக் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை மீளத்திருப்பியதால் வடக்கு முதலமைச்சர் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இறுதியில் தோற்றது மக்கள் மட்டுமே.
இலங்கையில் தமிழ் இனத்துக்காக விடுதலை கோரி, அஹிம்சை வழியில் போரிட்ட கட்சிகள், ஆயுத வழியில் போரிட்ட இயக்கங்கள் என்பவற்றுக்குள் பல பிளவுகளைக் கண்டு, தமிழ் மக்களது மனங்கள் பிளவு அடைந்துள்ளன.
மீண்டும் ஓர் உடைவைப் பார்க்கும் தைரியம் அவர்களிடம் அறவே இல்லை. வேற்றுமையிலும் ஒற்றுமையுடன் பயணம் செய்ய வேண்டிய வேளையில், வீண் வார்த்தைகள், விதண்டாவாதங்கள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி இடவேண்டும்.
பெரிய கண்டத்திலிருந்து ஒருவாறு தப்பிய தமிழ்க் கூட்டமைப்பு, கடந்த காலத்துப் பட்டறிவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ‘குழி பறிப்பு’ மற்றும் ‘ஒற்றுமைக்கு வேட்டு’ வைக்காமல் வெற்றி நடையில் கால் தடம் பதிக்க வேண்டும். இது தமிழ் மக்களின் அவா.
அண்மையில், தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகை ஒன்றைப் படித்த போது பிடித்த விடயம். அங்கு மின்கம்பங்களை வீதி ஓரமாக நாட்டும் ஒப்பந்தம் ஒன்று ஒருவருக்குக் கிடைத்துள்ளது. அந்தவேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மின் கம்பங்களை நடுவதற்கான குழி (கிடங்கு) வெட்டும் பொருட்டு நிறுவன உரிமையாளருக்கு வேலையாட்கள் தேவைப்பட்டனர். அதற்கு அவர் வித்தியாசமாக, புது மாதிரியாக விளம்பரம் செய்ய விரும்பினார். ‘கூடவே இருந்து, குழி பறிக்க ஆள் தேவை’ – இதுவே அந்த விளம்பரம்.
ஆனால், பொதுவாக அவ்வாறாக விளம்பரம் செய்யாமலே அரசியலில் ஆள் கிடைக்கின்றனர். ஆனால், அரசியலில் மற்றவருக்கு (எதிரிக்கு) வெட்டும் குழியில் வெட்டுபவரும் விழலாம். ஏனெனில் அது சாக்கடை.
Average Rating