பயங்கரவாதம்: முகம் மூடும் முகமூடி..!! (கட்டுரை)
பொருட்கள் உலகளாவிய காலமொன்றிருந்தது. பின்னர் சேவைகள் உலகளாவத் தொடங்கின. பின்னர் அரசியலும் பொருளாதாரமும் உலகளாவின. நடை, உடை, பாவனைகள் அவற்றைத் தொடர்ந்தன. உலகமயமாக்கல் இதைச் சாத்தியமாக்கியது என்று சிலாகிக்கப்பட்டது.
இன்று பயங்கரவாதம் உலகளாவியுள்ளது. உலகமயமாக்கல் அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துள்ளது. எதற்காக உலகமயமாக்கல் போற்றப்பட்டதோ, இன்று அதற்காகவே தூற்றப்படுகிறது.
எவ்வாறு உலகமயமாக்கல் ஏற்படுத்திய சீர்கேடுகளை இலகுவில் சீர்படுத்தவியலாதோ, அதேபோலவே இன்று உலகமயமாகியுள்ள பயங்கரவாதமும் எல்லைகளின்றித் தொடர்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டுமே திட்டமிட்டு சில நலன்களை மையப்படுத்தி செயற்படுத்தப்பட்டது என்பதே.
பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான திட்டமிட்ட வரையறை கிடையாது. 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்களின் மீதான தாக்குதலையடுத்தே ‘பயங்கரவாதம்’ உலகளாவிய ரீதியில் முக்கியமானதும் கவனிப்புக்குரியதுமாக மாறியது. அதை மைய அரசியலுக்கும் கொள்கைவகுப்பின்போது முன்னிலைக்கும் கொண்டு வந்த பெருமை, அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற செயற்பாட்டைச் சாரும்.
கடந்த இருவாரங்களில் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனிலும் ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாதம் பற்றிய மறுவிசாரணை ஒன்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இலண்டனில் நடந்த இரண்டு தாக்குதல்களையும் பற்றிய தகவல்கள் பதிலற்ற, அதிர்ச்சி தரக்கூடிய பல கேள்விகளை எழுப்புகின்றன.
இலண்டன் பாலம் மீது இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவரான யூசெவ் சக்பா சிரியாவுக்குப் பயணிக்க முயன்றபோது, இத்தாலி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரை விசாரணைக்குட்படுத்திய இத்தாலியப் புலனாய்வாளர்களிடம் “தான் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்” என்றும் பயங்கரவாதியாக விரும்புவதாகவும் ஒப்புக் கொண்டார்.
அவரை பிரித்தானியாவுக்குத் திருப்பி அனுப்பிய இத்தாலிய அதிகாரிகள், இவர் பற்றிய தகவலை, பிரித்தானிய உளவுத்துறைக்கு அறிவித்தும் உள்ளனர். இத்தாக்குதல்களில் தொடர்புடைய இன்னொருவர் பிரித்தானியத் தொலைக்காட்சி ஆவணப் படமொன்றில் காட்டப்பட்டவர்.
அங்குள்ள, ‘ரிஜென்ட்’ பூங்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியொன்றை அவர் பறக்கவிட்டதையும் அதைத் தொடர்ந்து பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டதையும் அவ் ஆவணப்படம் காட்டியது.
இதேபோலவே, மான்ஸ்செஸ்டரில் நடைபெற்ற தாக்குதலின் சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி சல்மான் அபேடியை, பிரித்தானிய அதிகாரிகள் நன்கறிந்திருந்தனர். லிபிய இஸ்லாமிய போராளிகள் குழுவின் அங்கத்தவர்களான அவரின் பெற்றோர்கள், அரபு வசந்தத்தின் பெயரில் லிபியாவில் ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா-நேட்டோ நடவடிக்கையில் பங்குபற்றியவர்கள்.
இவர்கள் 2011 ஆம் ஆண்டு, லிபிய ஜனாதிபதி முகம்மர் கடாபியை பதவியிலிருந்து அகற்றும் புண்ணிய காரியத்தைச் செய்வதற்கு உதவும் முகமாக லிபியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள்.
இவையனைத்தும் பிரித்தானிய உளவுநிறுவமான எம்.ஐ.6 இன் ஆசீர்வாதத்துடனேயே நடந்தது. இவ்வாறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஈராக், லிபியா, சிரியா என ஆட்சிமாற்றங்களுக்காக ஆயிரக்கணக்கானவர்களை உளவுநிறுவனங்கள் இந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளன.
சல்மான் அபேடி, லிபியாவின் இஸ்லாமிய அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு தருபவராகவும் சிரியாவின் உள்நாட்டுப்போரில் பங்குகொண்டு திரும்பியராகவும் இருந்திருக்கிறார். இவையெல்லாம் பிரித்தானிய உளவுத்துறை நன்கறிந்த விடயங்கள்.
இந்நிலையில் பிரித்தானியாவின் மான்செஸ்டரிலும் இலண்டனிலும் இடம்பெற்ற தாக்குதல்கள், பிரித்தானிய உளவுத்துறையின் அறிவுக்கெட்டா வண்ணம் நடைபெற்றதா? அவ்வாறு நடைபெற்றதாயின் உலகின் மிகவும் வல்லமையுள்ள ஒரு புலனாய்வு அமைப்பு, தொடர்ந்து இரண்டு தாக்குதல்களைக் கோட்டை விட்டதா என்ற வினா எழும். பாதுகாப்பின் பெயரால் அனைத்தையும் கண்காணிக்கும் புலனாய்வு அமைப்புகள் இவ்வளவு மெத்தனமாக இருக்க முடியுமா.
இதை இன்னொரு கோணத்தில் அணுகினால், இத்தாக்குதல்கள் நடைபெறப்போவதை அறிந்திருந்தபோதும், அதுகுறித்துக் கண்டும் காணாமல் விட்டிருக்கவியலும். இத்தாக்குதல்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் அத்திசை நோக்கிச் சுட்டி நிற்கின்றன.
தாக்குதல்களைத் தடுப்பதை விட, தாக்குதல்கள் நிகழ்வது அரசுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகளுக்கும் வாய்ப்பானது. இதனால், தேசிய பாதுகாப்பின் பெயரால், அதிகாரங்களை அதிகப்படுத்தவும் அனைத்தையும் சட்டரீதியாக உளவுபார்ப்பதை நியாயப்படுத்தவும் இயலுமாகிறது.
இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்படுகின்ற அரசியல் மிகவும் ஆபத்தானது. பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்ததன் விளைவால் இராணுவம் வீதியில் இறக்கிவிடப்படுகிறது. பயங்கரவாதம் தொடர்பான அச்சவுணர்வு எல்லோரிலும் தொற்றிக் கொள்கிறது. ஊடகங்கள் அதை இன்னும் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்யும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளன.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் பகுதியாக மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மக்கள் அதற்கான ஒப்புதலையும் அளிக்கிறார்கள்.
நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக நெருக்கடிகள் இவ்வகையான பயங்கரவாத அச்சமூட்டுதல்களால் பின்தள்ளப்படுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதல்கள் திசைதிருப்பும் நல்ல உத்திகள் என்பதையும் மறந்துவிடலாகாது.
அதேவேளை, அரசுகளுக்கு எதிராக ஏற்படும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் முறியடிக்கவும் மழுங்கச் செய்யவும் பயங்கரவாதம் என்பது நல்லதொரு முகமூடி.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு கால்கோளாய் அமைந்த இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்கள் (9/11) குறித்தே விடையில்லாத கேள்விகள் பலவுண்டு. உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த விமானத் தாக்குதல் பற்றிய பல உண்மைகள் இன்னமும் அமெரிக்க மக்களுக்குக் கூறப்படவில்லை.
இவ்வளவு நுட்பமாக ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டமிடலும் அதை உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில் செய்து முடிப்பதும் அமெரிக்காவினுள் எவருடையதும் உதவியில்லாமல் நடந்திருக்க இயலுமா?
அது ஒரு புறமிருக்க, அத்தாக்குதல் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எவரும் இலக்கு வைக்க விரும்பக்கூடிய யூதப் பெருவணிகர்கள் கட்டடத்துக்குள் நுழைவதற்கு முன்னரே ஏன் நடந்தது? அத்தாக்குதலில் இறந்தோர் சுத்திகரிப்புத் தொழிலாளர் போன்ற ஏழைகளாகவே இருந்தனர். தீயணைப்புப் படையினரும் அதில் இறந்தனர்.
இத்தாக்குதல்களை நடாத்தியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தீவிரவாதிகளும் கட்டாயமாக அமெரிக்க நிறுவனத்தின் பகைவர்களாக இருக்க அவசியமில்லை என்பதையும் அவர்கள் மூலம் அமெரிக்க அரசின் சதி நிறுவனம் ஒன்று அமெரிக்க முதலாளி வர்க்கத்தில் எவருக்கும் உடல் சேதம் இல்லாமல் ஒரு பயங்கரப் படுகொலையை நடத்தியிருக்க இயலாதா என்பது நாம் புறக்கணிக்கக்கூடிய வினாவல்ல.
இக்கேள்விகளின் நியாயம் இத்தாக்குதலைத் தொடர்ந்த நிகழ்வுகளால் மேலும் உறுதியடைகிறது என்பதே முக்கியமானது. 9/11 என்பது அமெரிக்க பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க தீங்கு எதையும் செய்யவில்லை என்றே பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறுவர். 9/11 தாக்குதல் அமெரிக்காவின் பாதுகாப்பை இடைஞ்சலானதாக்கியுள்ளது என்று கூற இயலுமா என்றால், அதற்கும் விடை இல்லை என்றே அமையும்.
9/11 இன் பயனாக அமெரிக்கா, உலகின் ஆயுதப் பெரு வல்லரசு என்ற தகுதிக்கு எவ்விதமான கேடும் நேர்ந்துள்ளதா என்றால், அதற்கும் இல்லை என்ற மறுமொழியே கிடைக்கும்.
ஆனால், 9/11 மூலம் அமெரிக்காவால் ஒரு புதிய உலக ஆதிக்கவேலைத் திட்டத்தைத் தொடக்கி வைக்க முடிந்துள்ளது. அத்துடன், அதன் பின்னணியில், திருப்பித் தாக்கும் வலிமையற்ற எந்த நாட்டின் மீதும் எவ்வித நியாயமுமின்றி போர் தொடுக்க அதற்கு இயலுகிறது என்பதையும் நாம் அறிவோம்.
எனவே, 9/11 என்பது அமெரிக்க-சோவியத் ஒன்றியம் கெடுபிடிப்போர் முடிந்த பின்பு, அமெரிக்காவின் போர் முனைப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு வலிய கருவியாகி உள்ளது. அதன்மூலம் அமெரிக்காவால் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற நடவடிக்கையைத் தொடக்கி வைத்து, அதில் தனது கூட்டாளிகளாகச் சில நாடுகளைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டுமுள்ளது.
9/11 எப்படிநிகழ்ந்திருந்தாலும் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன என்பதில் ஐயமில்லை. எனினும் முதலில் தண்டிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான். அங்கு சோவியத் ஆதரவுடன் நிறுவப்பட்ட ஓர் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஊட்டி வளர்த்த தலிபான்கள் இப்போது அமெரிக்காவின் எதிரிகளாகி விட்டனர்.
ஆப்கானிஸ்தானுக்கும் 9/11க்கும் என்ன தொடர்பு என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அங்கே அமெரிக்கத் தலைமையிலான ஒரு போர் தொடுக்கப்பட்டது.
ஈராக் மீது போர் தொடுப்பதற்குச் சொல்லப்பட்ட எக்காரணமும் உண்மையானதல்ல. எனினும், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக் கூறப்பட்டு, அங்கு ஒரு போர் தொடங்கப்பட்டது. அதை நியாயப்படுத்த, சதாம் உசைன் ஆட்சிக்கும் அல்-ஹைதாவுக்கும் தொடர்புகள் கற்பிக்கப்பட்டன.
ஆனால், சதாமின் ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு இனஒழிப்பு நடவடிக்கைகளைக் குர்தியர்களுக்கு எதிராகவும் தென்ஈராக்கின் ஷியா முஸ்லீம்களுக்கு எதிராகவும் மேற்கொண்டபோது, அதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மௌனமாக அங்கிகரித்தன.
9/11க்குப் பின்பான அமெரிக்க, அமெரிக்கச் சார்பு மேற்குலக நடத்தையின் பிரதான சமூகப் போக்குகளாக வெளிப்பட்டுள்ள இரண்டு விடயங்களில் ஒன்று, அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை நிறவாத அரசியல் சிந்தனையின் எழுச்சியாகும். மற்றது, இஸ்லாமியப் பகைமை.
இரண்டும் இன்று மேற்குலகை பாசிசவாதத்தை நோக்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தள்ளியுள்ளன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸில் லூயி பென், பிரித்தானியாவில் நைஜில் பராஜ் ஆகியோரின் எழுச்சிக்கும் வெள்ளைநிறவெறிசார், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துருவாக்கம் நெதர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகியவற்றில் பிரதான கருப்பொருளாகவும் வழியமைத்துள்ளது.
ஒருபுறம் இலண்டன் மற்றும் மன்செஸ்டரில் நடந்த தாக்குதல்கள் பற்றிய கவனம் குவிகையில், மறுபுறம் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் கவனம் பெறாமல் போனது. ஈரானிய நாடாளுமன்றம் (மஜ்லிஸ்) மீதும்இஸ்லாமிக் குடியரசின் மறைந்த பெருந்தலைவர் அயதுல்லா கொமேனியின் கல்லறை மாடம் மீதும் நடாத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர், 43 பேர் காயமடைந்தனர். இதை வெறுமனே ஒரு சம்பவமாக மேற்குலக ஊடகங்கள் காட்சிப்படுத்தின.
ஈரானின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கருத்துரைத்த வெள்ளை மாளிகை, “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்கள் அதற்குப் பலியாவதை தவிர்க்கவியலாது” என்று தெரிவித்தது. இது இன்றைய ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா – சவூதி அரேபியாவுடனான நெருக்கத்தையும் ஈரான் மீதான வெறுப்புணர்வையும் காட்டி நின்றது.
மொத்தத்தில் மேற்குலக நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களில் மக்கள் இறக்கிறபோது, அது பாரிய சம்பவம்; அதே தாக்குதல் கீழைத்தேய நாடுகளில் நிகழ்ந்தால் அது புறக்கணிக்கப்படக்கூடியதொன்று.
இதே மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் யெமனிலும் தினம்தினம் குண்டுவீச்சுகளால் அப்பாவி மக்களைக் கொல்கின்றன. அவை ஊடகக் கவனம் பெறத் தகுதியற்ற உயிர்கள். ஏனெனில், அக்குண்டுகளை ஜனநாயகத்தின் காவலர்களே வீசுகிறார்கள்.
பயங்கரவாதத்தை அரசுகள் செய்கிறபோது, அவை ‘பாதுகாப்பு நடவடிக்கைள்’; அதே அரசுகளின் ஆதரவுடன் சில தனிநபர்கள் செய்கிறபோது, அவற்றின் பேரால் தனிமனித உரிமைகள் முடக்கப்படுகின்றன. மொத்தத்தில் அரசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யவிரும்புபவற்றைச் செய்வதற்கான சிறந்த முகமூடியாகப் பயங்கரவாதம் திகழ்கிறது.
ஆபத்தும் அபத்தமும் யாதெனில் இதே முகமூடிகள்தான், புதிய முகங்களுடன் ஜனநாயகத்தின் காவலர்களாகவும் மனிதஉரிமைப் போராளிகளாகவும் மனிதாபிமான செயற்பாட்டாளர்களாகவும் மீட்பர்களாகவும் உலாவுகின்றன.
இன்று, முகங்கள் இழந்த முகமூடிகளும் முகமூடிகளை இழந்த முகங்களும் மெதுமெதுவாய் வெளித்தெரிகின்றன. தேடியறிய வேண்டியது முகமூடிகளை அல்ல, அதை அணிந்திருக்கும் முகங்களையும் அல்ல. இம்முகங்களுக்கு அம்முகமூடிகளை அணிவித்தவர்கள் யார் என்பதையே.
Average Rating