சம்பூர்: மீள்குடியேற்றத்தின் பின்னரும் தொடரும் அவலம்..!! (கட்டுரை)
சம்பூர் கிராமத்தின் பிரச்சினை இன்னமும் ஓயவில்லை. தமது பூர்வீக நிலங்களைவிட்டு வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள், பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தமது மண்ணில் மீளக்குடியேறி ஒரு வருடமும் ஆறு மாதங்களும் கடந்துவிட்டன.
இருந்தபோதிலும் அவர்களது அடிப்படைத் தேவைகள் தொடர்பாக, மீள்குடியேற்றத்தின்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் உத்தரவாதங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சம்பூர்ப் பிரதேச மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு மீள்குடியேற்றக் கிராமங்களில் 856 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளின்பின் இந்தப் பிரதேசத்திலிருந்த அனைத்து வளங்களும் அழிக்கப்பட்ட நிலையில், முழுமையாகக் காடு சூழ்ந்த பிரதேசம், துப்புரவு செய்யப்பட்டு, தங்களது நிலம் தமக்கு மீண்டும் கிடைத்த திருப்தியோடு குடியேறிய மக்கள், தமது சொந்த முயற்சியால் கொட்டில்களை அமைத்து, உடனடியாக அங்கு வாழத் தொடங்கினார்கள்.
இவ்வாறு குடியேறிய மக்களுக்கு அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட உதவிகள்கூடத் தாமதமாகவே கிடைத்தன. முதற்கட்டமாக 818 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, குடியேறிய 350 குடும்பங்களில், 288 குடும்பங்களுக்கு யுனிசெப் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மலசலகூட வசதிகள் உட்படத் தற்காலிக கொட்டில்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
இவ்வாறு குடியேறியோரில் 41 அரசாங்க ஊழியர்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. பின்னர், விடுவிக்கப்பட்ட 236 ஏக்கர் காணியில் குடியமர்த்தப்பட்ட 556 குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மலசல கூட வசதிகள் கூட முற்று முழுதாக வழங்குவதற்கு ஒரு வருடம் சென்றது. மீள்குடியேற்றப்பட்டவர்களில் சிலர் வள்ளிக்கேணிக்குச் சென்றுள்ளனர்.
இந்தப் பகுதிமக்கள் பத்து வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை மாவட்டம் வரை இடைத்தங்கல் முகாம்களில் வாழவேண்டிய நிலை, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் ஏற்பட்டது.
வாழ்விடங்கள், வயல் நிலங்கள், பயிர்ச்செய்கை நிலங்கள் உட்படப் பூர்வீக நிலங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், உயர் பாதுகாப்பு வலயம் என அடையாளமிடப்பட்டு, அந்த மக்களுக்கு சொந்த மண்ணில் கால் பதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது ஒன்றரை வருடத்தைத் தாண்டியும் இன்னமும் நிரந்தரமான வீடுகள் இல்லாத நிலையிலேயே இந்த மக்ககள் வாழ்ந்து வருகிறார்கள்.
உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, கையில் அகப்பட்ட பொருள்களுடனும் உடுத்த உடையுடனும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் அந்தப் பிரதேச மக்கள் தங்கியிருந்த வேளையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம், அவர்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இந்த நிலங்கள் மக்களிடமிருந்து அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டாலும் தமது நிலங்கள் பறிக்கப்பட்டதாகவே அந்த மக்கள் இன்னமும் உணருகின்றார்கள்.
2015 ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்டார். புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். ஆட்சிமாற்றமும் ஏற்பட்டது. ஏனைய பிரதேச மக்களைப் போன்று சம்பூர் பிரதேச மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறும் வாய்ப்பைப் பெற்றனர்.
பத்து வருடங்களின் பின்பு, தமது பூர்வீக நிலத்தில் சம்பூர்ப் பிரதேச மக்கள் மீளக்குடியேறினார்கள். இரண்டு கட்டங்களாக மீள்குடியேற்றம் நடைபெற்றது. மீள்குடியேற்ற வைபவங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்படப் பலரும் கலந்துகொண்டார்கள்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மீளக்குடியேறிய சம்பூர்ப் பிரதேச மக்களை, ஏனைய பிரதேசங்களில் மீளக்குடியேறிய மக்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், சம்பூர் மக்கள் தங்களின் பொருளாதாரம் அனைத்தையும் இழந்து பத்துவருடங்கள் நிர்க்கதியாக அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
இவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போது, இருப்பிடம், தொழில்வாய்ப்பு, வாழ்வாதார உதவி உட்பட அடிப்படைத் தேவைகள் தொடர்பாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாக இந்த மக்கள் கூறுகின்றார்கள்.
இந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தப் பிரதேச மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மக்கள் நடமாட்டம் இன்றி பத்து வருடங்களாகப் பாலைவனம் போன்று காட்சிகொடுத்த அந்தப்பிரதேசத்தை மீண்டும் செழிப்பும் வளமும் மிக்க பூமியாக மாற்றவேண்டும் என்பதில் மக்கள் உறுதியுடன் காணப்படுகிறார்கள். ஆனால், அதற்காள வளங்கள் இல்லை என்ற ஏக்கமும் கவலையும் அவர்கள் மத்தியில் குடிகொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
சம்பூர் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் திருமதி பரமேஸ்வரி முத்துக்குமார் (வயது – 50) கூறும்ேபாது,“2006 ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட எங்களை, மட்டக்களப்பு பாலமீன்மடு முகாமில் தங்க வைத்தார்கள். பின்பு திருகோணமலை மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைத்து, எமது சொந்த ஊரில் குடியமர்த்தி, ஒன்றரை ஆண்டுகள் சென்ற நிலையிலும் இதுவரை அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
நாங்கள் வாழ்ந்த வீடு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், இடைத்தங்கல் முகாமில் கொட்டில் அமைப்பதற்கு வழங்கப்பட்ட தகரத்தைக் கொண்டு தற்காலிக கொட்டில் ஒன்றை அமைத்துள்ளேன்.
மழை காலங்களில் பாம்பு மற்றும் விசஜந்துகளின் தொல்லையும் வெயில் காலங்களில் அதிகளவான வெப்பத்துக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகிறேன். என்னைப் போன்று மீள்குடியேற்றப்பட்ட பல குடும்பங்கள் இந்த நிலையிலே வாழ்ந்து வருகின்றன. மீள்குடியேற்றம் நடைபெறும் போது வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும், வாழ்வாதார வசதிகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் எந்த விதமான வீட்டுத் திட்டங்களிலும் நாங்கள் இணைக்கப்படவில்லை” என்கிறார்.
இந்தியாவிலிருந்து சொந்தநாடு திரும்பிய 57 வயதான சுந்தரலிங்கம் இராஜேந்திரன் கூறும்போது, “மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய நிவாரண உதவிகள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளிடமிருந்து கிடைக்கவில்லை. நான், 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் யுத்தம் ஏற்பட்ட போது, சம்பூர் கிராமத்தை விட்டு வெளியேறி, அகதிகயாக இந்தியாவுக்குச் சென்று, 2003 ஆம் ஆண்டு மீண்டும் சம்பூருக்கு வந்தேன். 2006 ஆண்டு மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த பிரதேசத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதனால் படகு மூலம் மீண்டும் இந்தியாவுக்கு அகதியாகச் சென்றேன். நாட்டில் போர் ஓய்ந்த நிலையில் எங்களது பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெறுவதாக அறிந்து, எங்களது சுய விருப்பத்தின் பேரில் 2016 செப்டெம்பர் மாதம், சம்பூர் கிராமத்தில் குடியேறியுள்ளேன். எங்களுக்கு இதுவரை தற்காலிக கொட்டில் கூட வழங்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் கூறும்ேபாது, “சம்பூர் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட போது, தங்களுக்கு எனச் சிறப்பு வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். ஆனால் அது ஏமாற்றமாகி விட்டது என்று குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகிறார். அவர் மேலும் கூறும்போது, “நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களைப் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்து, அடிப்படை வசதிகள் செய்யப்படுவதைப் போன்று, சம்பூர் பதியில் அடிப்படை வதிகள் செய்துகொடுக்கப்படக் கூடவில்லை. சம்பூர் மக்களுக்கு என விசேட திட்டம் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு நிரந்ர வீடுகள், கழிப்பறை வசதிகள் வாழ்வாதாரத் திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த வித முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட வில்லை” என்கிறார்.
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டங்களின் ஏற்பாட்டளர்களில் இவரும் ஒருவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பூர் மக்கள் இருந்த வேளை, சம்பூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றியவர்.
குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றிய விடயத்தில் முழுமையான திருப்தியான செயற்பாடுகள் நடைபெறவில்லை. குடியேற்றப்பட்ட 856 குடும்பங்களில் 142 பேருக்கு நிரந்தர வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினுடாக வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய மக்களுக்கு இந்த வாய்ப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை.
நாட்டில் ஏனைய மீள்குடியேற்றக் கிராமங்களைப் போன்று புள்ளி அடிப்படையில் வீடுகளை வழங்குவது அல்லது முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு வீடுகளை வழங்குவது சம்பூரைப் பொறுத்தமட்டில் பொருத்தமற்ற விடயமாகும்.
2006 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுத் தொடர்ந்து 10 ஆண்டுகள் அரச படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து, முற்றுமுழுதாக சொத்துகள் அழிக்கப்பட்டு, பாலைவனமாக்கப்பட்ட நிலையில் குடியமர்த்தப்பட்ட இந்த பிரதேசத்தில் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமாகவிருந்தால் அவர்களுக்குரிய ஏனைய வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு விவசாயக் குளங்கள் மற்றும் விவசாய வீதிகள் திருத்தியமைக்க வேண்டும். அவர்களுக்குரிய வாழ்வாதாரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவிக்கு அப்பால் உள்ள படுவான்கரைப் பிரதேசமும் அதனுடன் இணைந்த பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது போன்று திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் என அடையாளம் காணப்பட்ட பிரதேசம் சம்பூர்ப் பிரதேசமாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நிருவாக கட்டமைப்புகள் சம்பூர்ப் பிரதேசத்திலிருந்தே செயற்பட்டன. இதன் காரணமாக அந்தப் பிரதேசம் திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதேசமாக விளங்கியது.
2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவ்வேளை இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, கொழும்பில் இராணுவ தலைமையகத்துக்கு அண்மித்த பகுதிகளில் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கானார். இதற்குப் பதில் நடவடிக்கையாக அன்றிரவு சம்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது.
2006 ஆம் ஆண்டு இலங்கை அரச படைக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் நிறுத்தம் அமுலிலிருந்த காலப்பகுதியில் மாவிலாறு அணை வழியாக விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினையொன்று ஏற்பட்டது. இது தொடர்பில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மாலிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடிவிட்டனர்.
இதன் காரணமாக சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சேருவில பிரதேசத்துக்கு நீர்வழங்கல் தடைப்பட்டது. மாவிலாறு அணை ஊடான நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வொன்றைக் காணும் முயற்சியில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
மாவிலாறு நோக்கி அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மாவிலாறு அணை மீண்டும் திறக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் யுத்தம், சம்பூரில் தொடங்கி அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சான் ஆற்றுடன் முடிவடைந்தது. அதனையடுத்து இராணுவ நடவடிக்கை வன்னி நோக்கி தனது பார்வையைத் திருப்பியது.
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்ட சம்பூர், வெருகல், வாகரை, குடும்பிமலை, கரடியனாறு, வவுணதீவு, கொக்கொட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறி, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தஞ்சம்பெற்றிருந்தனர்.
இந்த மக்களைப் பொறுத்தவரை சம்பூர்ப் பிரதேச மக்களைத் தவிர ஏனைய பிரதேச மக்கள் மூன்று தொடக்கம் ஆறு மாத காலத்துக்குள் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
சம்பூர்ப் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் ஏதோ ஒருவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் பழிவாங்கும் வகையில் தடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பகுதி மக்கள் பத்து வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை மாவட்டம் வரை, இடைத்தங்கல் முகாம்களில் தங்க வேண்டிய நிலை, அன்றைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் ஏற்பட்டது.
இந்தக் காணி சுவீகரிப்பு அறிவித்தல் அந்த மக்களுக்கு அவ்வேளை ‘மின்னாமல் முழங்காமல் இடித்த இடி போல்’ அமைந்தது.
தங்கள் பூர்வீக நிலத்தை மீட்பதற்காக போராடவேண்டிய நிலைக்கு அந்தப் பிரதேச மக்கள் தள்ளப்பட்டனர்.
முதலாவது போராட்டம் மட்டக்களப்பு நகரில் ஆரம்பித்து யு.ன்.எச்.சீ.ஆர் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்து வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். நீதிமன்றத்தை நாடினார்கள்.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல போராட்டங்கள் நடாத்தினார்கள். அதிகாரம் பெற்றவர்களிடம் மகஜர்களைக் கையளித்தார்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கைக்கு கடந்த அரசாங்கம், முன்வைத்த காலை பின்வைக்க முடியாது என்ற கடும்போக்கையே கொண்டிருந்தது.
2015 ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னரே, ஏனைய பிரதேச மக்களைப் போன்று சம்பூர்ப் பிரதேச மக்கள் தங்களின் பூர்வீக நிலங்கள் மீளக் கிடைக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
பத்து வருடங்களின் பின்பு தமது பூர்வீக நிலத்தில் சம்பூர்ப் பிரதேச மக்கள் மீளக்குடியேறினார்கள் .
அனல் மின் நிலையம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்டு மின்சாரசபையிடம் கையளிக்கப்பட்ட காணியில் 540 ஏக்கர் காணியில் 120 ஏக்கர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணி உள்ளடங்கியுள்ளது. தற்போது அனல்மின்நிலையம் கைவிடப்பட்டுள்ளது. வேறு திட்டங்கள் பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.
இதன்காரணமாகப் பொதுமக்களுக்குச் சொந்தமான காணி மீளக் கையளிக்கப்பட வேண்டும். எக்காரணங்கள் கொண்டும் வேறு தேவைகளுக்கு இக்காணிகள் வழங்கக் கூடாது என்றும் சம்பூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Average Rating