தமிழ் ஜனநாயக அரசியல் அரங்கைத் திறக்க வேண்டும்..!! (கட்டுரை)
வடக்கு மாகாணசபையில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் தமிழ் மக்களிடத்தில் கவலைகளை உண்டாக்கியுள்ளன.
கூடவே, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினையில் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதற்கான கூட்டுப்பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேரும் என்று சிந்திப்போர் குறிப்பிடுகின்றனர்; உண்மையும் அதுதான்.
இதனால்தான் அரசாங்கத்தை நோக்கிய தமிழர்களின் கவனக்குவிப்பு திசை மாறி தமிழர் அரசியலின்மீதும் அதை முன்னெடுக்கும் தமிழ் அரசியலாளர் மீதும் குவிந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் கொதித்துக் கொண்டிருந்த முரண்பாடுகளும் ஜனநாயகப் பற்றாக்குறையும் ‘சம்பிரதாய ஒற்றுமை’த் தோற்றமும் இன்று வெடித்துச் சிதறியுள்ளன. இதன் விளைவே இன்றைய அனர்த்தங்கள்.
அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதற்கான விசாரணை, அமைச்சர்களின் பதவி விலக்கல்கள், ஆளுக்காள் மாறி மாறிக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இதைத் தொடர்ந்த ஏட்டிக்குப் போட்டியான முறுகல் நிலை, பங்காளிகளின் சமரச முயற்சிகள், கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முடிவற்ற கடிதப்பரிமாற்றங்கள் என ஒரு பெரிய அவல நாடகம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
மாகாணசபையின் செயற்பாடுகளும் அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளும் தமிழ் மக்களுக்கு இன்றைய நிலையில் மிகமிக அவசியமானவை.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலான நெருக்கடிக்கும் முப்பதாண்டுகளுக்கும் மேலான பெருந்துயரத்துக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலை இனியும் தவிர்க்கவோ கால நீடிப்புச் செய்யப்படவோ முடியாதது.
இந்த அடிப்படையிலேயே போர் முடிந்த பிறகான அரசியல் சூழலைக் கையாள்வதற்கான அங்கிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர். கூடவே மிகப் பெரும் நம்பிக்கையையும் வைத்திருந்தனர்.
அதுமட்டுமல்ல, ஏறக்குறைய இதற்கெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒரு களச் சூழலாக நல்லாட்சி என்ற புதிய கூட்டரசாங்கத்தையும் மக்கள் எதிர்பார்த்தனர்.
குறிப்பாகப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணத்தை மீள் நிலைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய உளவியல் பாதிப்புகளையும் சீராக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாகாணசபை நிர்வாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மக்கள் ஒப்படைத்திருந்தனர்.
அதிலும், “தமிழரின் அரசியல் உரிமைப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய பலத்தை உண்டாக்குவதற்கு ஒன்றுபட்ட நிலையில் செயற்படுவதே அவசியமாகவுள்ளது. அதற்கான ஆணையைத் தாருங்கள்” என்று தேர்தல்தல்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியிருந்தது என்பதை இங்கே கவனப்படுத்த வேண்டும். இதற்கான அங்கிகாரத்தை மக்களும் வழங்கியிருந்தனர்.
ஆனால், இதற்குப் பிறகு நடந்தவையும் நடந்து கொண்டிருப்பவையும் முற்றிலும் மக்களுக்கு மாறான விரோதச் செயற்பாடுகளாகும்.
“மாகாணசபையின் நிர்வாகம் முறைகேடாகியுள்ளது” என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பலராலும் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இறுதியில் ஆளும் கட்சியினரே அப்படியான ஒரு குற்றச்சாட்டைச் சபையில் சமர்ப்பிக்க வேண்டிய நிலையும் அந்தக் குற்றச்சாட்டுகளைச் சபை ஏற்று விசாரணைக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் உருவானது.
குறிப்பாகத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகளிடம் இருந்தாலும் மாகாணசபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் குறித்தும், அரசியல் தீர்வு மற்றும் அரசாங்கத்துடனான உறவைக் குறித்தும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி, ஒரு போதும் விவாதித்ததோ, கலந்துரையாடியதோ இல்லை.
பதிலாக, ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறான முறையில், சுய நடத்தைகளை மேற்கொண்டிருந்தனர். முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏறக்குறைய இத்தகைய ஒரு நடத்தையையே மேற்கொண்டிருந்தார்.
முதமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள், செயற்பாடுகள் அனைத்தும் தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாகப் பலரிடம் சற்று அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. குறிப்பாக விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையிலான நெருக்கம் இந்த அதிருப்திக்கான அடிப்படையாக இருந்தது. ‘உள் வீட்டுக்குள்ளிருந்து கொண்டே கல்லை எறிந்து கொண்டிருக்கிறார்’ முதலமைச்சர் என்று கூட்டமைப்பின் ஒரு சாரார் குறிப்பிட்டு வந்தனர்.
இதேவேளை, கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தினரான சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றவர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமானவையாக இல்லை.
அவர்கள் ஏனைய பங்காளிக்கட்சிகளைப் பலவீனப்படுத்தித் தமிழரசுக் கட்சியை வளர்க்க முற்படுகின்றனர். அத்துடன், தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்தி, அரசாங்கத்துடனான நெருக்கத்தை அதிகரித்துச் செயற்படுகின்றனர். நிபந்தனையற்ற ஆதரவளிப்பின் மூலமாக, கட்சி நலனையும் தனிப்பட்ட இலாபங்களையும் பெற்றுக்கொள்வதிலேயே மேற்குறித்த தலைமைப்பீடத்தினர் குறியாக உள்ளனரே தவிர, தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவோ இனப்பிரச்சினைத்தீர்வு குறித்தோ சிரத்தையோடு செயற்படவில்லை” என்ற குற்றச்சாட்டு ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்தது.
ஆகவே, இந்த இரண்டு நிலைகளிலும் ஏற்பட்டிருந்த கேள்விகளும் முரண்நிலை மற்றும் விமர்சனங்களுமே இப்போது உச்சக்கட்டமாக வெடித்துப் புயலாக உருமாறியுள்ளது. யாரும் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு நடவடிக்கைகள் கீழிறங்கிக்கொண்டிருக்கின்றன. மக்கள் இன்று நம்பிக்கையிழப்புக்குள்ளாகி விட்டனர். ஏமாற்றத்துக்குள்ளாகிய மக்களிடம் கவலையே ஏற்பட்டுள்ளது.
உரிய காலத்தில் உரிய முறைகளைப் பேணி, நெருக்கடிகளைத் தணித்திருந்தால், முரண்பாடுகளைத் தீர்த்திருந்தால் இன்று இப்படியான ஓர் அவல நிலை ஏற்பட்டிருக்காது. ஆகவே இன்றைய நிலைக்குக் கூட்டமைப்பிலுள்ள அனைத்துத் தரப்பினருமே பொறுப்பேற்க வேண்டும். இதைத் தவிர்த்து, குற்றச்சாட்டுகளை மாறி மாறி ஆளுக்காள் சுமத்துவதன் மூலமாகப் பிரச்சினைகள் வளருமே தவிர, குறையாது; தீராது.
இப்போது நடந்து கொண்டிருப்பவை எல்லாம் ஒட்டுப்போடும் முயற்சிகளே தவிர; தீர்வுக்குரியவைல்ல.
மக்கள் நம்பிக்கை வைத்த தலைவர்களான சம்மந்தனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் நேரிலே சந்திக்க முடியாமல் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு மூத்த தலைவரும் பொறுப்பு மிக்க பதவியிலிருப்பவருமான மாவை சேனாதிராஜா, பிரச்சினையை நேரிலே தலையிட்டுப் பேசி முடிவுக்குக் கொண்டு வராமல் திரைமறைவிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.
ஒற்றுமையை மக்களிடம் எதிர்பார்த்த, வலியுறுத்திய தலைவர்கள் இப்போது தாம் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எப்படி மக்களிடம் மதிப்பைத் தக்க வைக்க முடியும்? மக்களுடைய பிரச்சினைகளை, மக்களின் உணர்வுகளை முதன்மைப்படுத்திச் சிந்தித்தால், இப்படிச் சுய கௌரவத்தைப் பார்க்க வேண்டிய நிலை எவருக்கும் ஏற்பட்டிருக்காது என்கின்றார் வருத்தத்தோடு ஒரு முதியவர். “சிங்களத் தலைவர்களோடு சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்த்தலைமைகளாக இருக்கும் தங்களுக்கிடையில் சந்திக்கத் தயாரில்லை”. “இரவு வேளையிலேயே ஓடோடிச் சென்று ஆளுநரைச் சந்திக்கத் தயாராக இருப்போர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு முடியாமலிருக்கின்றனர்…”, “அறப்போர், உரிமைப்போர், விடுதலைப்போர், ஆயுதப்போர் என்று நடத்தியவர்கள் இப்போது கடிதப்போர், அக்கப்போர் என்ற நிலையைக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றெல்லாம் மக்கள் பல வகையான விமர்சனங்களையும் கவலைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களும் ஊடக வெளியும் கண்டனங்களாலும் கவலைகளாலும் குற்றச்சாட்டுகளாலும் நிரம்பிக்கிடக்கிறது. இதனால் தமிழ் மக்களும் பல நிலைப்பட்டுப் பிளவுபடும் நிலையே தோன்றியுள்ளது.
‘எரிகிற தீயில் எண்ணெய்யை விடும்’ காரியத்தைச் செய்து கொண்டு, இதற்குள் தமக்கான அரசியல் இலாபங்களைப் பெறும் முயற்சியில் பிற சக்திகள் முனைப்புடன் செயற்படுவதும் நடக்கிறது. முறைப்படியான ஜனநாயகப் பண்பு கூட்டமைப்பினுள்ளே இருந்திருக்குமானால் இந்தப் பிரச்சினைகள் இந்த வடிவத்தைப் பெற்றிருக்காது.
ஆகவே, இன்றைய பிரச்சினைகள் ஏதோ ஒரு வகையில் சமரசத்துக்கு வந்தாலும் தீர்வுக்கு வராது. உட்கொதிப்புகள் அப்படியேதான் இருக்கப்போகின்றன. அடுத்த நிலையில் அவை மீண்டும் வெடித்தே தீரும். தவிர, இப்போது கூட கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையில் மேலும் முரண் நிலையும் விரிவடைதல்களுமே காணப்படுகின்றனவே தவிர, இணைவுக்கான முயற்சிகளோ அடையாளங்களோ தென்படவேயில்லை. ஏற்கெனவே இழுபறியும் குறைபாடுகளுமாக இருந்த மாகாணசபை மேலும் பலவீனப்படக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன. இதை ஒரு வாய்ப்பாக கொழும்பு மைய அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய நிலையே காணப்படுகிறது. இந்த நிலையிலே தமிழ்ச் சிவில் சமூகத்துக்குப் பெரும் பொறுப்பொன்று ஏற்பட்டுள்ளது. மக்களின் நலனைக் குறித்துச் சிந்திக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்ச் சிவில் சமூகமே ஏற்படுத்த வேண்டும்.
இது சனங்கள் ஜனநாயக அரங்கைத் திறக்க வேண்டிய ஒரு சூழலாக உருவாகியுள்ளது. அதற்கான அரசியல் கற்கைகளுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்குமான களநிலை இது. இதற்குள்தான் மாற்று அரசியல் சக்தியின் கருக்கட்டல் நிகழும்.
Average Rating