நீதியரசரின் நியாயமான நீதி..!! (கட்டுரை)
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் ஒருமுறை தீர்ப்பு எழுதுமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த காலத்தில் அவர் எழுதிய தீர்ப்புகள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதப்பிரதிவாதங்கள் சார்ந்து எழுதப்பட்டவை.
நீதிமன்றங்களில் சட்டமும் அதுசார் அடிப்படைகளுமே பிரதானமானவை. ஆனால், இம்முறை அவர் எழுத வேண்டிய தீர்ப்பு, சட்ட வரையறைகளை மாத்திரமல்ல, தார்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
ஏனெனில், அவர் இப்போது தீர்ப்பு எழுதப் போவது மக்கள் மன்றத்தில். அந்தத் தீர்ப்பு, தமிழ் மக்களை மக்கள் மன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இலங்கைக்கே முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அடுத்து, கடந்த ஆண்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, தன்னுடைய விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் 19ஆம் திகதி கையளித்திருக்கின்றது.
குறித்த அறிக்கையில், கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளைக் கொண்டு, அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, அவர்கள் இருவரையும் பதவி நீக்குமாறும் முதலமைச்சரிடம் பரிந்துரைத்திருக்கின்றது.
விசாரணை அறிக்கையை கடந்த 07ஆம் திகதி, மாகாண சபை அமர்வுகளில் சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர், தான் அமைத்த விசாரணைக்குழு மீது தனக்கு பூரண நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
அத்தோடு, அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் இருவருக்கும், விளக்கமளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகவும் அத்தோடு, விசாரணை அறிக்கை தொடர்பில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள மாகாண சபையின் விசேட அமர்வு, ஊடகவியலாளர்களின் பங்குபற்றுதல் இன்றி நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர்கள் இருவருக்கும் விளக்கமளிப்பதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் ஏதும் எழுந்திருக்காத போதிலும், அறிக்கை மீதான விவாதத்தின்போது, சபையிலிருந்து ஊடகவியலாளர்கள் அகற்றப்பட வேண்டும் என்கிற முதலமைச்சரின் கோரிக்கை, வெளிப்படைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியது.
ஏனெனில், மக்கள் மன்றத்தில் விடயமொன்று வரும்போது, அதன் கண்காணிப்பாளர்களாக ஊடகவியலாளர்கள் இருப்பது அடிப்படைத் தார்மீகம். அதனை, மறுத்துரைப்பது அடிப்படை ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமானது.
தனிப்பட்ட ரீதியில் விசாரணை அறிக்கையின் முன்வைப்புகள் தொடர்பில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று அலைக்கழிப்புக்கு ஆளாகியிருக்கின்றார் என்பதை, அவரின் கடந்த நாட்களின் நடவடிக்கைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
ஏனெனில், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் அமைச்சர்கள் இருவரையும் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில், அவர் மாற்று வழியொன்றுக்கு செல்ல விரும்புவதாகத் தெரிகின்றது.
அதாவது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட மோசடிகளோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருவரையும் பதவி நீக்குவதற்குப் பதில், அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக பதவி நீக்குவது தொடர்பில் அவர் சிந்தித்திருக்கின்றார்.
கடந்த சனி, ஞாயிறு தினங்களில், மாகாண சபை உறுப்பினர்கள் பலருடனும் அவர் இது தொடர்பில் தொலைபேசி வழி ஆலோசனையை நடத்தியிருக்கின்றார். இது, இலங்கைத் தமிழரசுக் கட்சியை எரிச்சலடைய வைத்திருக்கின்றது.
விசாரணைக்குழு, முதலமைச்சர் தவிர்ந்த வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தியே விசாரணை அறிக்கையை முன்வைத்திருக்கின்றது.
நிலைமை அப்படியிருக்க, குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரையும் குற்றமிழைத்ததாகக் கூறப்படும் அமைச்சர்களோடு சேர்ந்துப் பதவி நீக்குவது அடிப்படை அறத்துக்கு ஒப்பானது அல்ல. அதனை, முன்னாள் நீதியரசர் என்ன தோரணையில் செய்ய விளைகின்றார் என்கிற கேள்வி எழுகின்றது.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத் தலைவர் மறைந்த அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சரவையை மாற்றுமாறு கோரி கடிதமொன்றை முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்திருந்தனர்.
குறித்த கடிதத்தின் மீது எந்தவித நடவடிக்கைகளையும் அப்போது எடுத்திராத, முதலமைச்சர் இப்போது, அந்தக் கடிதத்தின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக அமைச்சர்களை பதவி நீக்குவது தொடர்பில் சிந்திப்பது அடிப்படைகள் அற்றது. அது, யாரையோ காப்பாற்றுவதற்கான முனைப்புகளின் போக்கிலானது.
இப்போது முதமைச்சர் விசாரணை அறிக்கையினையும் அதன் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளாமல் மாற்று வழியொன்றுக்கு செல்வாராயின், அது தென்னிலங்கை அரசாங்கங்களின் கடந்த காலக் காட்சிகளின் வழி செல்வதாக அமையும்.
ஏனெனில், இலங்கை அரசாங்கங்கள் காலங்காலமாக ஆணைக்குழுக்கள், விசாரணைக்குழுக்கள், கண்காணிப்புக்குழுக்கள் என்று பல குழுக்களை அமைத்திருக்கின்றன. ஆனால், அந்தக் குழுக்களின் அறிக்கைகளோ பரிந்துரைகளோ கருத்தில் கொள்ளப்பட்ட வரலாறுகள் இல்லை.
அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்கச் செயலணியின் அறிக்கையை அந்தச் செயலணியை அமைத்த நல்லாட்சி அரசாங்கமே எப்படி எதிர்கொண்டது என்பது தெரியும்.
அந்தச் செயலணியின் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தயாராக இருக்கவில்லை. காத்திருந்து கடைசியில் வெளிவிவகார அமைச்சரிடம் அறிக்கையைக் கையளித்துவிட்டு, அகன்றுகொண்டனர் அந்தச் செயலணியின் முக்கியஸ்தர்கள். அந்த அறிக்கையின் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நல்லாட்சி அரசாங்கம், உடனடியாக அறிவித்தும் விட்டது.
கிட்டத்தட்ட அந்தவொரு நிலையை நோக்கி சி.வி.விக்னேஸ்வரன் செல்கின்றாரா என்பதுதான் பெரிய ஏமாற்றத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றது.
விசாரணை அறிக்கை விவாதத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால், அந்த அறிக்கை வெளிவந்த தருணத்திலேயே, அந்த அறிக்கைக்கு அப்பால் நின்று விடயங்களை அணுக முயல்வது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் தற்கொலையாகும்.
ஏற்கெனவே, தன்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் தற்கொலைக்குப் பக்கத்தில் சென்று தப்பித்தவர் அவர். அதாவது, 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாடு என்பது அவரைப் பொது வெளியில் மாத்திரமல்ல, தனிப்பட்ட ரீதியிலும் தோற்கடித்தது.
அப்போது, இரா.சம்பந்தன் தவிர்க்க முடியாமல் பொறுமை காக்க வேண்டி வந்ததன் விளைவு, சி.வி.விக்னேஸ்வரனின் முதலமைச்சர் பதவி தப்பித்தது.
சி.வி.விக்னேஸ்வரனை நேரடி அரசியலுக்கு அழைத்து வந்தவர்களில் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் முக்கியமானவர்கள். ஓய்வுபெற்ற நீதியரசர், கொழும்பு வாழ் தமிழ் சூழலினால் கொண்டாடப்படுபவர்; உயர்நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றவர் என்கிற அடையாளங்களே சி.வி.விக்னேஸ்வரனை அரசியலுக்கு அழைத்துவரக் காரணமானது.
அப்போது, அவரது முகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவசியமாகவும் இருந்தது. ஆனால், முதலமைச்சராக பதவியேற்று சில காலத்துக்குள்ளேயே சி.வி.விக்னேஸ்வரனின் அதீத பதற்றம் மற்றும் நிலைமைகளை எதிர்கொள்வதிலுள்ள சிக்கல் தன்மை என்பன, அவர் மீதான பெரும் பிம்பத்தைக் கலைத்தது.
அதாவது, தான் அணிந்து கொள்ளும் மடிப்புக் கலையாத சால்வை மாதிரியானது அரசியல் என்கிற நினைப்பில், வடக்கு நோக்கி வந்தவருக்கு தேர்தல் – அதிகார அரசியல் என்பது இலகுவில் புரிந்து கொள்ள முடியாத சூத்திரம் என்பதைக் கற்றுத்தந்தது.
அதற்குள் அவரினால் நின்று நிதானித்து செயற்பட முடியவில்லை. அதீத உணர்ச்சிவசப்படுதலினால் பயங்கரமாகத் தடுமாறினார். அதுதான், அவரை கூட்டமைப்பின் தலைமையோடு முரண்பட வைத்து, பொதுத் தேர்தல் காலத்தில் அவரை தோற்கடித்தது.
தென்னிலங்கைக்கும், சர்வதேசத்துக்குமான முகமாக தன்னால் கொண்டுவரப்பட்ட சி.வி.விக்னேஸ்வரனை நீக்குவது அவ்வளவுக்கு நல்லதல்ல என்கிற நிலையில்தான், இரா.சம்பந்தன் அவரை விட்டுவைத்திருந்தார்.
ஆனால், இப்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை அறிக்கையை மீறி வேறு பக்கத்தில் சென்றால், அது அவரின் இரண்டாவது அரசியல் தற்கொலையாக இருக்கும்.
அது, அவரின் தற்கொலையாக மாத்திரமல்லாமல், மக்கள் மன்றங்களின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும். அவர் இப்போது விரும்பியோ விரும்பாமலோ, மக்களின் குரலைக் கேட்க வேண்டும்.
தனிப்பட்ட நபர்களின் அரசியல் வெற்றியும் தோல்வியும் அவர்கள் சார்ந்ததாக மட்டும் இருக்கும்போது, யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், அவர்களின் முடிவுகள் மக்களையும் அவர்களின் அரசியலையும் எதிர்காலத்தையும் பாதிப்பதாக இருக்குமானால், அங்கு அந்த அரசியல்வாதிகள் பெரும் கடப்பாடோடு செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
இப்போது, அப்படியானதொரு கட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிற்கின்றார். அவர், தார்மீகங்களின் வழி நின்று, தனிநபர் அபிமானங்கள் கடந்து, தீர்ப்பை எழுத வேண்டும். அந்தத் தீர்ப்புக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள்.
Average Rating