பிறந்தநாள், நினைவு நாளில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் சூரிய கதிர்கள்: நினைவகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இரண்டாவது நினைவுநாளன்று ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவகத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அறிந்து கொள்வோமா..?
“தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று வள்ளுவப் பெருந்தகை தனது உலகப் பொதுமறையான திருக்குறளில் பதிவிட்ட உவமைக்கு எடுத்துக்காட்டாக இந்த பூவுலகில் வெகு சிலரே தோன்றியுள்ளனர்.
கம்சனின் அடக்குமுறை ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலையில் பிறந்த கண்ணன், பிற்காலத்தில் கீதா உபதேசம் என்னும் பகவத் கீதையின் மூலம் இந்த உலகில் தர்ம நியாயங்களை நிலைநாட்டும் வகையில் பகவத் கீதையை எடுத்துரைத்தார்.
ஜெருசலேம் நாட்டில் கொடுங்கோல் ஆட்சியாளராக செங்கோல் செலுத்திய எரோது மன்னன் காலத்தில் பெத்லகேம் நகரில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த இயேசு பிரான், பிற்காலத்தில் உலகளாவிய அளவில் கிறிஸ்தவம் என்னும் புதிய மார்க்கத்தை உருவாக்கினார்.
நேபாள மண்ணை ஆண்ட சுத்தோத்தன மன்னரின் செல்வ மகனாக இந்த பூமியில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன், தனது மெய்ஞானத் தேடலின் வாயிலாக உலக இச்சைகளை துறந்து, புத்தபிரான் என்ற மாமனிதராக உயர்ந்தார்.
இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு காரண-காரியத்துக்காக இந்த பூவுலகில் பிறந்து, பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் அழியாத வரலாற்றுப் புருஷர்களாக மக்களின் இதயங்களில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த நூற்றாண்டில் எந்த ஒரு மகாபுருஷராவது இந்த பூமியில் அவதரித்துள்ளாரா..? என்ற தேடலில் நாம் ஈடுபட்டால் அதற்கு பதிலாக நமக்கு கிடைக்கும் ஒரே பதில் “அவ்வுல் பக்கிர் ஜைனுல் ஆபிதீன் அப்துல் கலாம்” என்பதாகதான் இருக்கும்.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய குக்கிராமத்தில் ஒரு எளிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் அக்கினி குஞ்சுகளான பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி நமது தாய்நாட்டை உலகின் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இணைத்த அறிவியலாளராக இருந்த அமரர் அப்துல் கலாம், “பொக்ரான்” அணுகுண்டு சோதனையின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
அரசியல் கட்சிகளின் சாயமோ, அடையாளமோ இல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி என்ற மிகப்பெரிய சிறப்புக்குரிய மேதையாக திகழ்ந்த அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தில் எவ்வளவு எளிமையான – இனிமையான – தன்னடக்கமான வாழ்முறையை மேற்கொண்டார் என்பது நாளிதழ் செய்திகளாகவும், ஒரு உயரிய மனிதரின் எளிமையான வாழ்வு என்ற வகையில் பலநூறு புத்தகங்களாகவும், காலத்தால் அழிக்க இயலாத வரலாற்றுச் சான்றாகவும் பதிவாகியுள்ளது.
இப்படிப்பட்ட தன்னிகரற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரரான முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் பிறந்த மண்ணில் அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தின் திறப்புவிழா அவரது இரண்டாவது மறைவு தினமான 27-7-2017 அன்று நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் இந்த நினைவிடத்தின் சிறப்புகளைப் பற்றி பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சுமார் ரூ.15 கோடி ரூபாய் செலவில் இந்த நினைவிடத்தின் முதற்கட்ட பணி நிறைவடைய உள்ளது.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் மக்களுக்கிடையேயான சமத்துவம், சகோதரத்துவத்தை தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த அப்துல் கலாமின் நினைவிடத்தை அமைப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் தருவிக்கப்பட்டுள்ளன என்பது மிக குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த பொருட்களை எல்லாம் பல பகுதிகளில் இருந்து கப்பலின் மூலம் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக, நினைவகத்தின் நிலைக்கதவுகள் மரவேலைப்பாட்டிற்கு பேர் போன தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பளிங்குக்கல் சிற்பங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் மற்றும் ஆக்ரா நகரில் இருந்து வந்து சேர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பளிங்கு கற்களும், பெங்களூர் நகரில் இருந்து வலிமையான கல் தூண்களும் வந்து சேர்ந்துள்ளன. சுவர்களை அலங்கரிக்கும் எழில்மிகு சுவரோவியங்கள் ஐதராபாத், மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சாந்தி நிகேதன் ஆசிரமம், கொல்கத்தா மற்றும் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகத்தை நிர்மாணம் செய்யும் பணிகளில் பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐநூறு தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நினைவகத்தின் சிறப்பு அம்சங்களுள் முக்கியமானதாக முகப்பில் உள்ள அலங்கார வளைவு டெல்லியில் உள்ள இந்தியா கேட் அலங்கார நுழைவு வாயிலின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் மேற்புறத்தில் உள்ள கூம்பு வடிவ கோபுரங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கோபுரங்களின் சாயலில் அமைக்கப்பட்டுள்ளது.
அமரர் அப்துல்கலாமின் வாழ்க்கையை புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களால் நான்கு கட்டங்களாக விளக்கும் வகையில் நான்கு பிரம்மாண்ட அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டத்தின்படி, இதில் முதலாவது அரங்கம் அப்துல் கலாமின் மழலைப்பருவம் மற்றும் மாணவப்பருவத்தை சித்தரிக்கும் வகையில் அமையும். இரண்டாவது அரங்கம் அவர் ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தையும் பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்புரையாற்றிய காலங்களையும் நினைவு கூரும் வகையில் அமையும்.
மூன்றாவது அரங்கம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலகட்டங்களை நினைவு கூரும் வகையில் அமைந்திருக்கும். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் ஆற்றிய கல்விப் பணிகள், மற்றும் இதர சமுதாய தொண்டுகள், ஷில்லாங் நகரில் தனது மூச்சை அவர் நிறுத்திக்கொண்ட காலகட்டம் வரையிலான அவரது இறுதி நாட்களை விளக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
மேலும், அப்துல் கலாம் தனது வாழ்நாளில் பயன்படுத்திய மிக அரிய வகை கலைப்பொருட்கள் இந்த நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, அவர் மிகவும் நேசித்த ‘ருத்ர வீணை’, ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது வயதையும் பொருட்படுத்தாமல் அதி நவீன சக்தி வாய்ந்த ‘மிக் SU-30’ ரக போர் விமானத்தில் அவர் பறந்த போது அணிந்திருந்த பாதுகாப்பு ‘சூட் ’ ஆகியவை இந்த கண்காட்சியில் இடம்பெறும்.
அவரது வாழ்க்கையின் மிக உன்னதமான தருணங்களை விளக்கும் வகையில் 12 சுவர்களில் கலைநயம் மிக்க ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்கள் இடம்பெறும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மிக முக்கியமான சிறப்பம்சமாக அமரர் அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15-ந்தேதி மற்றும் நினைவு நாளான ஜூலை மாதமான 27-ந்தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியின் (ஃகப்ர்) மீது சூரிய கதிர்கள் நேரடியாக ஒளிபாய்ச்சும் வகையில் அதிநுட்பம் மிக்க கட்டுமானத் திறனுடன் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சிறப்புக்குரிய அமரர் அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாளான 27-7-2017 அன்று இந்த நினைவிடத்தின் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அநேகமாக, இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தமிழக முதல்வர் மற்றும் இதர மந்திரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating