திரிகோணமலை அருகே முக்கிய நகரை கைப்பற்றிவிட்டோம் -இலங்கை அறிவிப்பு
திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் நகரை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இயற்கை துறைமுகமாக விளங்கும் திரிகோணமலையில் ராணுவத்தின் கடற்படை தளமும், விமானப்படை தளமும் உள்ளன. திரிகோணமலையில் இருந்து சற்று தொலைவில் உள்ள சம்பூர் நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
அங்கிருந்து விடுதலைப்புலிகள் அவ்வப்போது திரிகோணமலையில் உள்ள கடற்படை, விமானப்படை தளங்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கடும் சண்டை
இதைத்தொடர்ந்து, முக்கிய நகரமான சம்பூரை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது. இதனால் திரிகோணமலை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இதில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
அதிக அளவிலான உயிர்ச் சேதத்தை தவிர்க்க தரைவழி தாக்குதலை குறைத்துக் கொண்டு, விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் மூலம் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. நேற்றும் கடும் சண்டை நடந்தது.
ராணுவம் கைப்பற்றியது
இந்த நிலையில் சம்பூரை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை கொள்கை திட்ட மந்திரி கெகலியா ராம்புக்வெலா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சம்பூரை கைப்பற்றுவதற்காக நேற்று நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளிடம் இருந்து அதிக எதிர்ப்பு இல்லை என்றும் அவர்கள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் சிலர் உயிர் இழந்ததாகவும் அவர் கூறினார்.
புதிய நம்பிக்கை
சம்பூர் நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்ததை இலங்கை அதிபர் ராஜபக்சேவும் உறுதி செய்தார். சம்பூரை ராணுவம் கைப்பற்றியது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நல்லது என்றும் தற்போது நடந்து வருவது போர்அல்ல என்றும் ராணுவம் பதில் தாக்குதல்தான் நடத்தி வருவதாகவும் கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசுகையில் அவர் தெரிவித்தார். போர்க் களத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாகவும் ராஜபக்சே கூறினார்.
நேற்று நடந்த சண்டையில் இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு
சம்பூரை ராணுவம் கைப்பற்றியது பற்றி விடுதலைப்புலிகளின் அமைதிச் செயலகத்தின் தலைவர் எஸ்.புலித்தேவன் கருத்து தெரிவிக்கையில்; விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராணுவம் மீறி இருப்பதாக கூறினார்.
ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கவில்லை என்றும் ஆனால் நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பூரை ராணுவம் கைப்பற்றி விட்டதால் அதற்கு பதிலடியாக விடுதலைப்புலிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.