தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு…-TMVP பிள்ளையான்

Read Time:7 Minute, 24 Second

TMVP-Pilaiyan.jpgதலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் முதனிலைப் பொறுப்பபாளர் பிள்ளையான் விடுத்துள்ள அறிக்கை…. அண்மைக் காலமாகத் தலைநகர் கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்படுவதும் காணாமல்ப் போவதும் அதிகரித்து வருகின்றது. இதனால் தலைநகரில் வாழும், தேவைகளுக்காக கொழும்பு வரும் தமிழ் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.

இந்நிலைமை தொடர அனுமதிக்கக்கூடாது. தமிழ் மக்களின் அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தலைநகரில் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் முதனிலைப் பொறுப்பாளர் பிள்ளையான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் அரச படைகளுக்கும், பிரபா குழுவுக்குமிடையே மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தமிழ் மக்கள் கடத்தப்படுவதும் காணாமல்ப் போவதும் அவர்களின் நம்பிக்கையீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இது விடயத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் கூடிய கவனஞ்செலுத்தி தமிழ் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும். தமிழ் மக்களின் பாதுகாப்பில் அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்பை அது தட்டிக்கழிக்க முடியாது.

இதேபோன்று தமிழ் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரு ஊடகவியலாளரை அழிப்பதனால் அவர் விதைத்த கருத்துக்களை அழிக்க முடியாது. கருத்துக்களை கருத்துக்களால் அன்றி கருவிகொண்டு அழிக்கக் கூடாது என்பதே எமது தெளிவான நிலைப்பாடாகும். ஜனநாயகத்தின் முதுகெலும்பான ஊடகவியலாளரின் உரிமையையும், பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.

சமீப காலமாக தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சோதனை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. பிரபாகுழுப் பயங்கரவாதிகளிடமிருந்து தலைநகரையும் இங்குள்ள அரசியல் தலைவர்களையும், வெளிநாட்டு இராஜதந்திரிகளையும், பொருளாதார மையங்களையும், சிவிலியன் இலக்குகளையும் பாதுகாப்பது மிக இன்றியமையாதது.

இதில் முப்படையினருக்குள்ள பொறுப்பையும், கடமையையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒரு இனத்திற்கெதிராக அமையக் கூடாது. சோதனைகள், விசாரணை நடவடிக்கைகளின்போது தமிழ் மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படக் கூடாது. அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள்தான்.

தமிழ்மக்கள் பிரபாகுழுவின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றனர். அவர்கள் பிரபாகுழுவின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெறுக்கின்றனர். பிரபா குழுவிற்கும் தமிழ் மக்களிற்குமான இடைவெளி அதிகரித்து வெகுநாட்களாகி விட்டது. இதனை அனைவரும் நன்கு உணரவேண்டும்.

சிங்களக் கட்சிகளும் மக்களும் பிரபாகுழுவுக்கு அப்பால் தம் பார்வையைச் செலுத்தி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். இதுதான் இப்பிரச்சினைத் தீர்வுக்கான மூலாதாரமான சிறந்த வழியாகும் என நாம் திடமாக நம்புகின்றோம்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் கொழும்பில் அத்துருகிரிய மிலேனியம் சிட்டி பகுதியில் அங்குள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்று எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இச் சதிவேலையின் பின்னணியில் யார் உள்ளார் என்பதனை அத்துண்டுப் பிரசுரத்தில் காணப்படும் அதிமேதாவித்தனமான (?) விடயங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

Notice.Atturukiriya.jpg

யாரும் எப்போதும் அச்சுறுத்துவதற்கு தமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதில்லை. குறித்த அத் துண்டுப் பிரசுரத்தில் எமது அமைப்பின் பெயர் எழுத்துப் பிழைகளுடன் உரிமை கோரப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அதில் காணப்படும் இலக்கிய, இலக்கணப் பிழைகள் அத் துண்டுப்பிரசுர சூத்திரதாரிகளை தெளிவாகவே காட்டுகின்றது. இவ்வாறான வெறுக்கத்தக்க, அறிவீனமான செயல்களின் சொந்தக்காரர்கள் நாமல்ல என்பதை எம் மக்கள் நன்கு உணர்வர்.

எமது அரசியல் பணிகள் எம் மக்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் நோக்காக் கொண்டதே. எம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத எதுவுமே எமக்குத் தேவையில்லை. விஸ்திரணம் அடைந்துவரும் எமது அரசியல் செயற்பாடுகளை ஜீரணிக்க முடியாமல் மேற்கொள்ளப்படும் சதிமுயற்சியின் ஒரு அங்கமாகவே நாம் இதனை நோக்குகின்றோம். எமது அரமப்பின் பெயரைக் களங்கப்படுத்த தமிழ் மக்களுக்கு ஏதேனும் ஆபத்துகள் ஏற்படலாம் என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது.

எனவே தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் அச்சமற்ற நிலையில் வாழ்வதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என மீண்டும் ஒருதடவை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

TMVP.pillaiyan.2.jpgTMVP-Pilaiyan.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற அல்-காய்தா அழைப்பு
Next post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, ஹெனின் கால் இறுதிக்கு தகுதி