கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் பழங்கள்..!!
கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையின் தாக்கம் உடல் நிலையிலும் மாற்றத்தை நிகழ்த்தும். உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும். செரிமான கோளாறு தோன்றும். உடல் உபாதைகளை உண்டாக்கும். கோடை காலத்தில் சீரான செரிமானமே உடல் ஆரோக்கியத்தை காக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது செரிமான சக்தி குறையும். பசியை தூண்டி செரிமானத்தை சீராக வைத்திருப்பதில் பித்தம் முக்கிய பங்காற்றுகிறது. உடலில் பித்தம் அதிகரிக்கும்போது தலைவலி போன்ற உடல் உபாதைகள் தோன்றக்கூடும். கோடை காலத்தில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருகுவது நீரிழப்பை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் போதுமான சத்துக்களை பெற்றுக்கொள்வதற்கும் துணை புரியும்.
பெரும்பாலானோர் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்ந்த நீரை பருகுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதை விட மண் பானையில் இருக்கும் குளிர்ந்த நீரை பருகுவது நல்லது. மொத்தமாக பழச்சாறுகளை தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைக்கவும் கூடாது. அவ்வப்போது பழச்சாறுகளை தயாரித்து அதில் ஐஸ் சேர்க்காமல் பருகி வரலாம். குளிர்ந்த நீர் செரிமானத்தைப் பாதிக்கக் கூடும்.
சமையலில் சுரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அதில் கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை நிறைந் திருக்கின்றன. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கின்றன. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயமும் உடலை குளிர்ச்சிபடுத்தும் தன்மை கொண்டது.
கோடை காலங்களில் உலர் பழ வகைகளை அதிகம் சாப்பிட வேண்டாம். அது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடக்கூடும். எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பதும் நல்லது. சமோசா, பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளையும் கோடை காலத்தில் ஒதுக்கிவிடுவது உடலுக்கு நல்லது.
திராட்சை பழம் பசியையும், தாகத்தையும் தணிக்கும்தன்மை கொண்டது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். எலுமிச்சை பழமும் தாகத்தை தணிப்பதோடு வைட்டமின் சி சத்தை உடலில் தக்கவைத்துகொள்ள துணை நிற்கும். அத்திப்பழம் கோடையில் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆரஞ்சு பழம் உடலில் உள்ள மாசுக்களை வியர்வை மூலம் வெளியேற்ற உதவும். மாம்பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. அது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை கோடை காலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.
அடிக்கடி இளநீர் பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். காய்கறிகளிலும் நீர்ச்சத்து நிறைந்தவைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சாலட்டுகளாக தயார் செய்து சீரான இடைவெளியில் சாப்பிட்டு வர வேண்டும். வெள்ளரி, தக்காளி, தர்ப்பூசணி போன்றவற்றுடன் பசலைக்கீரையும் சேர்த்து சாலட் தயாரிக்கலாம். புதினா, முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது.
Average Rating