கணவரின் பலநாள் கள்ளக்காதலியை கையும் களவுமாக பிடித்த மனைவி- மகன்..!!
திருச்சியை சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு என்ஜினீயரிங் மற்றும் 9-ம்வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.
கண்ணன் சில ஆண்டுகளாக குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்தார். தனது இளைய மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கூட கண்ணன் கண்டுகொள்ளவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கண்ணன் அடிக்கடி தனியாக செல்போனில் பேசுவதும், இரவு நேரத்தில் வீட்டிற்கு வராமல் இருப்பதும் மேகலாவுக்கு சந்கேகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கணவனின் செயல்களை கண்காணித்தார். அப்போது கண்ணனுக்கும், துறையூரில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரியும் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது கணவனின் செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.கள் மூலமாக தெரிய வந்தது. போன் பில், இன்சூரன்ஸ் பாலிசிகளை அந்த பெண்ணுக்காக தனது கணவர் கட்டுவதையும் தெரிந்துகொண்டார். அந்த பெண் யார்? என்பதை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு மேகலா தனது மகனுடன் சென்றார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அந்த பெண் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் அந்த வீட்டில் வேறொரு பூட்டை போட்டு வீட்டை பூட்ட நினைத்த மேகலா உடனடியாக அருகில் உள்ள கடைக்கு சென்று பூட்டு வாங்கி வந்தார். அந்த பூட்டு தாழ்ப்பாளுக்குள் செல்லாததால் பிளேடு போட்டு பூட்டை அறுத்து விட்டு மேகலா வீட்டிற்குள் புகுந்தார்.
உள்ளே சென்று பார்த்த மேகலா கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் தனது வீட்டில் உள்ள புடவை, போர்வை, பூஜை பொருட்கள் என்று அனைத்து பொருட்களும், தனது வீட்டில் இருப்பது போல் கணவனின் கள்ளக்காதலி வீட்டிலும் இருப்பது கண்டு ஆத்திரமடைந்தார்.
கள்ளக்காதலியை பிடிக்காமல் வீடு திரும்புவதில்லை என முடிவு செய்த அவர், அந்த வீட்டுக்குள்ளேயே தனது மகனுடன் தங்கிக்கொண்டார். இருவரும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை. 2 தினங்கள் கழித்து அந்த பெண் பெங்களூரில் இருந்து வந்தார். அப்போது வீட்டின் பூட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அப்போது மறைந்திருந்த கண்ணனின் மனைவி மேகலாவும், மகனும் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் மேகலாவையும், அவரது மகனையும் திருட வந்தவர்கள் என நினைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் விவரம் தெரிய வரவே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணன் தனது தவறை ஒப்புக்கொண்டு மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இருவரும் மகனுடன் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating