கூட்டு அரசாங்கத்துக்கான அபாய எச்சரிக்கை..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 33 Second

ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400சர்வதேச நெருக்கடிக் குழு வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கை ஒன்று, தற்போதைய அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் அடைவுகள், அடையப்பட வேண்டிய இலக்குகளை அடிப்படையாக வைத்து, 34 பக்க அறிக்கையைத் தயாரித்து சர்வதேச நெருக்கடிக் குழு வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதில் சிவில், சமூக அமைப்புகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தன.

அதில் அரசசார்பற்ற அமைப்புகளின் பங்கு கூடுதலானது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இந்த அரசாங்கத்தைத் தாங்கிப் பிடிப்பதில் மேற்குலக நாடுகளைப் போலவே, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் முக்கிய கவனம் செலுத்தி வந்தன. அதற்கு முக்கிய காரணம், இந்த ஆட்சியும் அரசாங்கமும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச நெருக்கடிக் குழு போன்ற அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் என்பன, அரசாங்கத்தைக் காட்டமாக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையை உருவாக்கியது, மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம்தான். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, மக்களிடம் அதிகளவான எதிர்பார்ப்புகள் இருந்தன என்பது உண்மை. தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி, சிங்கள, முஸ்லிம் மக்களிடமும் கூடுதல் எதிர்பார்ப்புகள் இருந்தன. மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்துவ ஆட்சியில் உரிமைகள் நசுக்கப்பட்டிருந்தவர்கள், அச்சுறுத்தப்பட்டிருந்தவர்கள், புதிய ஆட்சியின் மூலம் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இன்னும் கூடுதலான எதிர்பார்ப்பை இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்தனர். அதனால்தான், இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் பெற்றிராத வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றிருந்தார். இதிலிருந்தே அவரிடம் இருந்து கூடுதலான எதிர்பார்ப்புகளைத் தமிழ் மக்கள் வைத்திருந்தார்கள் என்பது வெளிப்படையானது.

ஆனால், தமிழ் மக்களினது எதிர்பார்ப்புகளை மாத்திரமன்றி ஏனைய மக்களின் எதிர்பார்ப்புகளையும் இந்தக் கூட்டு அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இதனால் எல்லாத் தரப்பு மக்களினதும் ஆதரவுகளை அரசாங்கம் இழக்கத் தொடங்கியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயற்படாதது மாத்திரமன்றி, அரசாங்கத்துக்குள்ளே முரண்பாடுகளும் குத்துவெட்டுகளும் ஆரம்பித்துள்ளன. இது, அரசாங்கத்தின் ஆயுள் தொடர்பான கேள்வியையும் எழுப்பத் தொடங்கியுள்ளது.

இப்படியான நிலையில்தான், சர்வதேச நெருக்கடிக் குழுவின் எச்சரிக்கை கலந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த முதல் ஒன்பது மாதங்களிலும் மாற்றங்கள் இருந்ததாகவும், ஆனால், அதற்குப் பின்னர் அரசாங்கத்தின் சீர்திருத்தச் செயற்பாடுகள் மந்தமடைந்துள்ளன அல்லது தலைகீழாக மாறியுள்ளன என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படாதமை, ஊழல் மோசடிகளுக்கு எதிராக, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை, போருடன் தொடர்புடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமை, அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டு வராமை, சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாமை என்று ஒட்டுமொத்த இலங்கைக்குமான பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படாமை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல், படைக்குறைப்பு என்பனவற்றுக்குத் தீர்வு காணுதல், அரசியல் தீர்வு என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளில் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் நெடும் பாய்ச்சல் ஒன்றை நடத்த வேண்டும் என்று நாட்டு மக்களோ, சர்வதேச அமைப்புகளோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், நியாயமான முன்னேற்றங்களைக் கண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது; இன்னமும் இருக்கிறது.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ளத்தக்கதாக அரசாங்கம் செயற்பட்டிருக்கவில்லை. அதற்குள்ளாகவே அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் முற்றத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார இழுபறிகள் நீடிப்பதாக கூறப்படுகிறது. அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக ஒருமித்த முடிவை எடுப்பதற்கு இருவருக்குமே நீண்டகாலம் தேவைப்பட்டிருக்கிறது.
ஐ.தே.கவின் அமைச்சர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை விமர்சிப்பதும், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஐ.தே.கவை விமர்சிப்பதும் இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. இதன் உச்சக்கட்டமாக இரண்டு கட்சிகளினதும் முக்கிய அமைச்சர்கள் கூடப் பதவியை விட்டு விலகி, ஒதுங்கி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூடச் செய்திகள் வெளியாகின்றன.

மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்த, நிலையான ஆட்சியை, இந்த அரசாங்கம் நடாத்தும் என்ற எதிர்பார்ப்புகள் இப்போது மக்களிடம் வெகுவாகக் குறைந்து போயிருக்கின்றன. அதுவும் மே தினத்தன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகக் காலிமுகத்திடலில் திரண்ட கூட்டம், இந்த அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகங்களை வலுப்படுத்தியிருப்பது உண்மை.

ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று மஹிந்த ராஜபக்ஷ அணியினர் அவ்வப்போது வெளியிட்டு வரும் காலக்கெடுக்கள், மக்களை நம்பிக்கையிழக்கச் செய்து வருகின்றன.

இப்படியானதொரு நிலையில்தான், சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வர முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச நெருக்கடிக் குழு.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ தீவிரமாகவே ஈடுபட்டுள்ள ஒரு சூழலில், அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும், இந்த அரசாங்கம் பலவீனப்பட்டு வருவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை.

மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் தோல்வி அல்லது வீழ்ச்சி இடம்பெறுமானால் அது இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கான – ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான, முயற்சிகளுக்கான பெரும் தோல்வியாக அமையும்.

அதிகாரத்துவ ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டு நிலையான அமைதி, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தோல்வியானது, இத்தகைய எதிர்பார்ப்புகள் ஒருபோதும் நிறைவேறாது என்ற கருத்தை மக்களின் மனதில் பதியவைத்து விடும்.

அத்தகையதொரு நிலை ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. அப்படியான நிலை ஏற்பட்டால், மீண்டும் சலுகை அரசியல், அடிபணிவு அரசியலுக்குள் இலங்கை சிக்கி விடும் என்ற அச்சமும் ஜனநாயக சமூகங்களிடம் உள்ளது.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றும் நிலை ஒன்று ஏற்பட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளில் கடினமான சூழலுக்குள் ஏற்படுத்தப்பட்ட சிறியளவிலான மாற்றங்கள், குறைந்தபட்ச ஜனநாயக வெளி என்பன கூட காணாமல் போய்விடக் கூடிய அபாயம் உள்ளது.

அதைவிட, நாட்டில் நிலையான ஆட்சியை, உறுதியான ஆட்சியை வேறு எவராலும் வழங்க முடியாது என்பதை மக்கள் முடிவு செய்து விடக் கூடிய அபாயத்தையும் ஏற்படுத்தி விடும்.

அதனால்தான், மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தை சர்வதேச நெருக்கடிக் குழு போன்ற அமைப்புகள் இப்போது காட்டமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் இருந்தபோது, இதுபோன்ற விமர்சனங்கள், கண்டனங்கள், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து வெளியாவது இயல்புதான். ஆனால் அந்த விமர்சனங்களுக்கும் இப்போதைய அரசாங்கம் தொடர்பான விமர்சனங்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

இந்த விமர்சனங்கள், அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தைக் கொண்டவையல்ல; அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டவை. மஹிந்த ராஜபக்ஷவின் தேசியவாதப் பிரசாரங்கள் குறித்த அச்சத்தினால், மைத்திரிபால சிறிசேன எந்த நடவடிக்கைகளையும் உறுதியாக எடுப்பதற்குத் தயங்குகிறார்.

அவரால் கட்சிக்குள் கூட உறுதியாகச் செயற்பட முடியாத நிலை தற்போது தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதே பிரச்சினையை ரணில் விக்கிரமசிங்கவும் கூட எதிர்நோக்க ஆரம்பித்துள்ளார்.

இப்படியான நிலை நீடித்தால், கூட்டு அரசாங்கத்தின் ஆயுள் குறைந்து விடும். இப்போதைய சூழ்நிலையிலாவது மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்றத் தவறினால், எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்.

அது அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும். அத்தகையதொரு ஏமாற்றத்தை தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகக் கூட சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையைப் பார்க்க முடிகிறது.

இந்த எச்சரிக்கையை, அரசாங்கம் கவனத்தில் கொள்ளுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை கவனத்தில் கொள்ளத் தவறினால், அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் விலைகளைக் கொடுத்து ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் எல்லாப் பலன்களையும் ஒரே நொடியில் இழந்து போகக்கூடிய ஆபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாது போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘கேன்ஸ்’ பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யாராய்..!!
Next post அம்மாவை கண்டித்த சீனு ராமசாமி..!!