கேரளாவில் கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த இளம்பெண்..!!
தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை இளம்பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தைரியத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது தந்தை நீண்டகாலமாக படுக்கையாக உள்ளார். இதனால் வேதனையில் இருந்த இந்த குடும்பத்துக்கு கணேசானந்தா தீத்தபாடம் என்கிற ஹரிசுவாமி (வயது 54) என்ற சாமியார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார்.
கொல்லத்தில் உள்ள சட்டம்பி சுவாமி ஆசிரமத்தை சேர்ந்தவர் என்று அந்த இளம்பெண்ணின் தாயிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த சாமியார் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார். அவரை நம்பிய இளம்பெண்ணின் தாயும், தங்கள் வீட்டில் அடிக்கடி பூஜை செய்யுமாறு சாமியாரை கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் அந்த வீட்டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் வேதனைக்குள்ளான அந்த இளம்பெண், காமவெறி பிடித்த சாமியாருக்கு தக்க தண்டனை வழங்க முடிவு செய்தார். இதற்கான தருணம் பார்த்துஅவர் காத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவிலும் சாமியார் ஹரிசுவாமி அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்தார்.
இதை எதிர்பாராத ஹரிசுவாமி வலி தாங்காமல் அலறித்துடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சாமியார் தன்னை கொன்று விடுவார் என்ற நோக்கில் உடனே ‘அவசர எண் 100’ மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சாமியாரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.
பின்னர் சாமியார் ஹரிசுவாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும், சட்டம்பி சுவாமி ஆசிரமத்துக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை என ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அந்த ஆசிரமத்தில் சேர்ந்த அவர், பின்னர் அங்கிருந்து விலகிவிட்டதாக அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளம்பெண் 12-ம் வகுப்பிலிருந்தே சாமியாரின் இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தெரிய வந்தது. எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த குற்றத்தை மறைக்க முயன்றதாக இளம்பெண்ணின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகிறது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இளம்பெண்ணின் தீரச்செயலை பாராட்டி உள்ளார்.
Average Rating