ஊடகங்கள் நல்லிணக்கத்துக்காக உழைக்கின்றனவா?..!! (கட்டுரை)
சிலவேளைகளில் தமிழ் ஊடகங்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கும் இடையில் செய்தித் தெரிவு விடயத்தில் காணப்படும் வித்தியாசம் அல்லது இடைவெளி ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் விந்தையாகவும் இருக்கிறது.
சில முக்கிய, தேசிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் பெயருக்காக வெளியிடுகின்றன. அல்லது முக்கியத்துவம் அளிக்காமல் பிரசுரிக்கின்றன.
மறுபுறத்தில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படும் சில விடயங்களை முற்றாக மூடி மறைக்கின்றன. குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான போராட்டங்கள் ஆகியவற்றை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றன. இது தமிழ் ஊடகங்கள் விடும் பிழையை விட மோசமாக இருக்கிறது.
போரின் போது, தமிழ் மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களே போர்க் காலச் சம்பவங்கள் தொடர்பாக நீதி கேட்டுப் போராட வேண்டியுள்ளது. அவர்கள்தான் போராடுகிறார்கள்.
அவர்களுக்கு நீதி வழங்குவதற்கே நல்லிணக்கத்துக்கான பயணத்தின் போது, முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். எனவே, இன்றைய நிலையில் சிங்கள மக்களே இந்த விடயங்களை அறிந்திருக்க வேண்டியுள்ளது.
ஆயினும், சில தமிழ் அரசியல் கட்சிகளையும் சமூகக் குழுக்களையும் சார்ந்த குழுக்களால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்படும் பல போராட்டங்கள் பாரிய போராட்டங்களாகவும் நீண்ட போராட்டங்களாகவும் இருந்த போதிலும், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அவற்றைக் காணாமல் இருப்பதைப் பார்க்கும் போது அது ஆச்சரியமாகவே இருக்கிறது. அவற்றை அவை ஏன் தமது வாசகர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என நினைக்கிறார்கள் என்பது பெரும் புதிராகவே இருக்கிறது.
அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் காணிகளைக் கேட்டு அம்மக்கள் நடத்தும் போராட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பிரதேசத்தில் மக்கள், மாதக் கணக்கில் அவ்வாறானதோர் போராட்டத்தை நடத்தி, இறுதியில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்ற போதிலும் சிங்கள மக்களுக்கு அவ்வாறானதோர் போராட்டம் நடைபெற்றதே தெரியாது. எனவே அவ்வாறானதோர் அநீதி அப் பிரதேச மக்களுக்கு இழைக்கப்பட்டமை அவர்களுக்கு இன்னமும் தெரியாது.
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகளில் வில்பத்து காணிப்பிரச்சினையை மட்டுமே அனேகமாகப் பொது சிங்கள மக்கள் அறிந்திருக்கிறார்கள், அதுவும் முஸ்லிம்கள் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை கைப்பற்றிக் கொண்டு இருப்பதாகவே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஏனெனில், அவ்வாறுதான் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அந்தப் பிரச்சினையை சித்திரித்துள்ளன.
எனவே, முல்லைத்தீவு மாவட்டத்திலோ அல்லது வடமராட்சிப் பிரதேசத்திலோ இராணுவமும் கடற்படையும் விமானப்படையும் கைப்பற்றிக் கொண்டு இருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளைப் பற்றியோ இன்னமும் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் காணிகளைப் பற்றியோ அவற்றுக்காக மாதக் கணக்கில் நடைபெற்ற போராட்டங்களைப் பற்றியோ சிங்கள மக்களுக்குத் தெரியாது.
போர் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் சிங்கள மக்களில் மிகச்சிலரே அறிந்திருக்கிறார்கள்.
அதிலும், அவ்வாறு கைது செய்யப்பட்ட சிலர் பத்து, பதினைந்து வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை வெளியிடுவதில்லை. வெளியிட்டாலும் முக்கியத்துவம் அளித்து வெளியிடுவதில்லை. அவற்றைச் சிங்கள வாசகர்கள் வாசிப்பதும் இல்லை.
சிலவேளைகளில், அரசாங்கம் கடும் போக்குள்ள புலிகளை விடுதலை செய்யப் போகிறது எனச் சிங்கள அல்லது ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. எனவே, அவர்களுக்கு இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினை தெரியாது. தெரிந்தாலும் அதன் பாரதூரத் தன்மையை அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, வடக்கில் மாதக் கணக்கில் நடைபெறும் போராட்டங்களைப் பற்றிய செய்திகளும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளிவருவதில்லை.
வட பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமற் போனார்கள்; உண்மையிலேயே காணாமலாக்கப்பட்டார்கள். இறுதிப் போரின் போதும் அதன் முடிவின் போதும் பலர் ஆயுதப் படையினரிடம் சரணடைந்தார்கள். அவர்களிலும் பலர் காணாமற் போனார்கள். இதனை நம்பவே தென் பகுதி மக்கள் மறுக்கிறார்கள்.
தென் பகுதியில், மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு கிளர்ச்சியின் போதும் ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமற் போனார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது காணாமற்போனோரின் எண்ணிக்கை 60,000க்கும் மேலாகும் எனத் தென் பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
1988-89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது, காணாமல் போனோருக்காகக் குரல் எழுப்பியவர்களில் அப்போது எம்.பியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ முக்கியமான ஒருவர். அவர் 1990 ஆம் ஆண்டு வாசுதேவ நாணயக்காரவுடன் இந்த காணாமற்போனோரின் விவரங்களுடன் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்துக்குச் சென்றார்.
அவர் அவ்வாறு செல்லும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, தடுத்து நிறுத்தப்பட்டு, அவரிடம் இருந்த காணாமல் போனோரின் ஆயிரக் கணக்கான புகைப் படங்கள் மற்றும் ஏனைய விவரங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், அவர்கள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் அந்தத் தகவல்களை வாய் மூலமாகத் தெரிவித்தனர்.
தென் பகுதியில் அவ்வாறு நடைபெற்றதை ஏற்றுக் கொள்ளும் தென் பகுதி மக்கள், வட பகுதியில் அதை விடப் பயங்கர போர் நடைபெற்றும் அவ்வாறான அழிவுகள் இடம்பெற்றதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
இனவாத கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகியதற்குப் புறம்பாகத் தென்பகுதி ஊடகங்கள் வடபகுதி நிலைமையை எடுத்துரைக்காதமையும் திரிபுபடுத்தி எடுத்துரைத்தமையும் அதற்கு முக்கிய காரணமொன்றாகும்.
வடபகுதியில் காணாமற்போனோரைத் தேடித் தருமாறு அடிக்கடி அவர்களது உறவினர்கள் போராட்டம் நடாத்தி வந்துள்ளனர். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அவ்வாறானதோர் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
தமிழ் ஊடகங்கள் தொடர்ச்சியாக அந்தப் போராட்டத்தின் விவரங்களை வெளியிட்ட போதிலும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அந்தப் போராட்டத்தைக் கண்டதாகத் தெரியவில்லை. எனவே, அவ்வாறானதோர் போராட்டம் நடைபெறுவது தென் பகுதி மக்களுக்குத் தெரியாது.
இறுதிப் போரின் போது, எவருமே காணாமற்போகவில்லை என 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். அதற்குத் தென்பகுதி ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு இருந்தன.
ஆனால், அதே ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு நெருக்குதலின் காரணமாக காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அந்த ஆணைக்குழுவுக்கு காணாமற்போனோர் தொடர்பான 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால் அதற்கு சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.
அவர்கள் பதவிக்கு வருவதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே பிரதான காரணமாகியது. பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களது அரசாங்கம் நல்லிணக்கத்தை கட்டிஎழுப்புவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தது.
வெளிநாட்டுத் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கினர். ‘தமிழ்நெற்’ உள்ளிட்ட சில இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கினர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பு என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோல் மனோ தித்தவெல்லயின் தலைமையில் நல்லிணக்கத்துக்கான செயலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீழ் செயலணியொன்றும் உருவாக்கப்பட்டது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பரிந்து பேசும் சிலரே அந்தச் செயலணியில் அங்கம் வகிக்க நியமிக்கப்பட்டார்கள். மனோரி முத்தெட்டுவேகம அந்தச் செயலணியின் தலைவராகக் கடமையாற்றுகிறார்.
இத்தனை ஏற்பாடுகள் இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறிப்பாக காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை மற்றும் காணாமற்போனோரின் பிரச்சினை போன்றவற்றைப் பற்றி சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து அவர்களை அறிவூட்ட எந்த ஏற்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கம், சந்திரிகாவின் தலைமையிலும் மனோரி முத்தெட்டுவேகமவின் தலைமையிலும் நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டு அமைப்புகளை உருவாக்கி இருந்த போதிலும், அந்த அமைப்புகளாவது அரச ஊடகங்கள் மூலம் வட பகுதியில் தற்போது நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்களைப் பற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைக்க முன்வந்ததாகத் தெரியவில்லை.
வில்பத்துப் பகுதியில் முன்னர் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த இடங்களில் அம்மக்கள் மீண்டும் குடியேற முற்பட்டுள்ள நிலையில், இனவாதிகள் சுற்றாடலின் பெயரால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
நல்லிணக்கத்துக்காக தனியான அமைப்புகளை உருவாக்கிய இந்த ‘நல்லாட்சி’அரசாங்கமே அம்மக்கள் வாழ்ந்த பகுதிகளை வன பரிபாலனத் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கி, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. நல்லிணக்கத்துக்காகவே உருவாக்கப்பட்ட சந்திரிகாவினதும் மனோரியினதும் மேற்படி அமைப்புகள் அந்த நிலைமையைக் கண்டதாகத் தெரியவில்லை.
தமது வாசகர்கள் மற்றும் நேயர்கள் விரும்பாத செய்திகளை வெளியிட எந்தவொரு ஊடகமும் முன்வருவதில்லை. அல்லது தயங்கித்தயங்கியே அவ்வாறான செய்திகளை அவை வெளியிடுகின்றன.
எனவே, இனப் பிரச்சினையோடு தொடர்புள்ள செய்திகளை வெளியிடும் போது, அரசாங்கம் மற்றும் அரச படைகள் குற்றமிழைத்ததாகக் கூறச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தயங்குகின்றன. புலிகள் அல்லது தமிழ்த் தலைவர்கள் குற்றமிழைத்ததாகக் கூறத் தமிழ் ஊடகங்கள் தயங்குகின்றன. முஸ்லிம் தலைவர்கள் குற்றமிழைத்ததாகக் கூற முஸ்லிம்களுக்காகச் செயற்படும் ஊடகங்கள் தயங்குகின்றன. இது ஊடக சந்தை பற்றிய பிரச்சினையாகும்.
வாசகர்களை அணுகும் வகையிலான செய்திகளைத் தெரிவு செய்யும் இந்தப் போக்கை ‘புரொக்சிமிட்டி கன்செப்ட் (proximity concept) என்று ஊடகத் தொழில் துறையினர் கூறுகின்றனர்.
இந்த அடிப்படையிலேயே தற்போது வட பகுதியில் நடைபெறும் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டோரை நினைவு கூரும் நிகழ்ச்சிகளையும் ஊடகங்கள் அணுகுகின்றன.
அவ்வாறான நிகழ்ச்சிகள் வடக்கில் இடம்பெறுவது தென்பகுதி சிங்கள மக்களுக்குத் தெரியாது. சில ஊடகங்களில் அது தொடர்பாக ஓரிரு செய்திகள் வெளியான போதும் அவையும் அந்த நிகழ்ச்சிகளை பயங்கரமாகவே சித்திரித்து இருந்தன.
இறுதிப் போரின் போது கொல்லப்பட்டோர் பற்றிய பிரச்சினை தென்பகுதி மக்களும் அவ்வளவு சுலபமாக உதாசீனம் செய்யக்கூடியதல்ல. ஏனெனில், அது தற்போது சர்வதேச ரீதியில் ஆராயப்பட்டு வரும் விடயமாகும்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவை அந்த விடயம் தொடர்பாக இதுவரை ஆறு பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளது. மஹிந்தவின் அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூற உடன்பட்டுள்ளது. எனவே, அந்தப் பிரச்சினை நாட்டையும் அரசாங்கத்தையும் விடப் போவதில்லை.
எனினும், பெரும்பான்மை மக்களை சென்றடையும் ஊடகங்கள் அதனை ஒரு பாரதூரமான பிரச்சினையாகக் கருதுவதில்லை. கருதினாலும் அதனைப் பாரதூரமான பிரச்சினையாக எடுத்துக் காட்டி, தமது வாசகர்களை, நேயர்களை அதிருப்திப்படுத்தவும் அதன் மூலம் அவர்கள் தம்மைக் கைவிடுவதையும் விரும்புவதில்லை.
இந்தப் ‘புரொக்சிமிட்டி கன்செப்ட்டின்’ காரணமாக தமிழ் மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள, சிங்கள மக்களுக்கு முடியாமல் இருக்கிறது. சிங்கள மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள தமிழ் மக்களால் முடியாமல் இருக்கிறது. இறுதிப் போரின் போது,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும் இந்தப் புரொக்சிமிட்டி கன்செப்டின் படியே ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வெளியிடப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு இறுதிப் போரின் போது கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 7,000 என முன்னாள் அரசாங்கம் கூறியது. 2011 ஆம் ஆண்டு வட பகுதியில் நடைபெற்ற சனத்தொகை மதிப்பீடொன்றின் மூலமும் அதே பெறுபேறு தான் கிடைத்தது என அரசாங்கம் கூறியது. இதனைத் தமிழ்த் தலைவர்கள் இன்னமும் ஆதார பூர்வமாக மறுக்க முன்வரவில்லை.
ஆனால், இறுதிப் போரின் போது 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த தருஸ்மான் குழு கூறியது. அக்காலத்தில் ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2013 ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலின் போது கூறியது. அதேவேளை ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக தமிழகத் தலைவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த விடயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. ஊடகங்களும் தமது வாசகர்கள் மற்றும் நேயர்களின் விருப்பத்துக்கேற்பவே இந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றன. இது ஒருபோதும் நல்லிணக்கத்துக்கு சாதகமான நிலைமையல்ல.
Average Rating