அரசியல் விடயத்தில் ரஜினி தயங்குவது ஏன்? சிந்திக்க வைக்கும் பின்னணி..!!
சமகால சினிமா உலகில் இருந்து அரசியல் கட்சி துவங்கியவர்களின் தற்போதைய நிலையை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் ரஜினி, அரசியலில் களம் காணும் விடயத்தில் ஆழமாக யோசிப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் வயது முதிர்வால் ஏற்பட்டுள்ள ஓய்வு ஆகியவற்றால், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மையே.
ஆனால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் அளவுக்கு ரஜினியால் முடியுமா? என்பது கேள்வி குறியே. அதை ரஜினியும் உணராமல் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி அரசியலில் இறங்க, பாஜக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மட்டுமின்றி பாஜக வில் சேர்ந்து விட்டால், முதலமைச்சர் வேட்பாளராகவே அறிவித்து, தேர்தலை சந்திக்க, பாஜக தயாராகவே உள்ளது.
ஆனால் ரஜினி, அவர்களின் கோரிக்கைக்கு பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். மறுபக்கம், நடிகை நக்மா மூலம், காங்கிரஸ் கட்சியில் சேருமாறு, அதன் தேசிய தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மட்டுமின்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பில் ரஜினியுடன் மிக நீண்ட நேரம் தொலைபேசியில் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் ஒருமுறை, வேட்டிகட்டிய தமிழன் இந்திய பிரதமராக வர வேண்டும் என, ப.சிதம்பரம் மேடையில் இருக்கும்போது ரஜினி பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது காங்கிரஸ் அழைப்பிற்கும் பதில் சொல்ல முடியாமல், தவிர்த்து வருகிறார் ரஜினி. இந்நிலையில், தனியாக ஒரு கட்சி தொடங்கி விடலாம் என்றும் அவர் யோசித்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ஆனால், திமுக, அதிமுக என இரு பெரும் கட்சியையும் சேர்ந்த தொண்டர்கள், அந்தந்த கட்சிகளுக்குதான் வாக்களிப்பார்கள்.
அதையும் தாண்டி, தமது கட்சியால் அந்த இரு கட்சிகளின் வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் வாங்க முடியுமா? என்ற சந்தேகமும் அவருக்கு வலுவாக உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்? என்பதும் அவரை சற்று ஆழமாக யோசிக்க வைத்துள்ளது.
தற்போது தமிழகத்தின் அனைத்து கட்சிகளிலும் ரஜினிக்கு நண்பர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கினால் அவர்கள் அனைவரையும் பகைத்துக் கொள்ள நேரிடும்.
வெற்றி பெற்று விட்டால் தற்போதுள்ள செல்வாக்கு மேலும் கூடும். தோல்வியை சந்தித்தால் அனைவரும் கண்டபடி விமர்சனம் செய்வார்களே என்றும் அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் சினிமாவின் மீதான இளைஞர்களின் மோகத்தை கடுமையாக குறைத்து விட்டது என்று ரஜினி கருதுவதாக அவரது நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இந்நிலையில் அரசியலுக்கு வரலாமா? அல்லது இப்படியே இருந்து விடலாமா? என்ற குழப்பத்தில் இருந்து, இன்னும் அவர் மீண்டு வரவில்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
Average Rating