கலங்கிய குட்டையில் முல்லைத்தீவு மீன்பிடி..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 14 Second

article_1494838615-Untitled-newயுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது ஒருவராவது, புலிகளால் பலவந்தமாக போராளிகள் ஆக்கப்பட்டனர். ஒரு தலைமுறை இளைஞர்கள், மனிதக் கேடயங்களாக்கப்பட்டனர். பேரழிவுடன் யுத்தம் முடிந்தபோது, ஆயிரக்கணக்கானோர் இறந்திருந்தனர். இதனால், உழைக்கக் கூடிய மீனவர்கள் தொகை, முல்லைத்தீவில் குறைந்து போயிற்று.

ராஜபக்‌ஷ அரசாங்கம், இந்த மக்களை, முகாம்களில் அடைத்து வைத்து அவமானப்படுத்தியது. மீன்பிடித்தலுக்கு, இராணுவ ரீதியான தடைகளை விதித்தது. கண்காணிப்பு என்ற சாட்டில், அவர்களைப் பயமுறுத்தியது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அரசாங்கம் மாறிய போதும், அவர்களது பொருளாதாரம் மேலும் கீழ்நிலைப்பட்டது. அவர்களது மீன்பிடி வாழ்வாதாரம், நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து பெருமளவில் வந்த படகுகளால் சிதைக்கப்பட்டது. நிலைத்திருக்கக் கூடிய உள்ளூர் மீன்பிடித் தொழிலை விருத்தியாக்கும் பொறுப்பையுடைய மீன்பிடி அமைச்சே, இந்த சர்ச்சைக்குக் காரணமாகவுள்ளது.

அளவுக்கதிகமான மீன்பிடி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன், ஏற்றுமதிக்காக கடல் அட்டைகளையும் பிடிப்பதற்கு, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவர்கள் பலராக இருப்பதனால், அனுமதி பெறாதவர்களும் களவாக மீன்பிடிக்கும் வாய்ப்பு, அதிகரித்துள்ளது.

இவர்கள், சட்டவிரோத முறைகளான டைனமைட் வெடி, ஒளிப்பாய்ச்சல் முறை என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால், முல்லைத்தீவு மீன்பிடிச் சமுதாயம், மீட்சி பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வேறிடத்து மீனவரும் முதலாளிகளும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்று வீசும் காலத்தில், அதாவது, மார்ச் முதல் ஓகஸ்ட் வரையான காலப் பகுதியில், தென்பகுதி மீனவர்கள், நீண்டகாலமாக முல்லைத்தீவுக்கு மீன்பிடிக்க வந்தனர். அப்போது, தென்பகுதி மீனவர்களுக்கும் முல்லைத்தீவு மீனவர்களுக்கும் நல்ல உறவு காணப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், 2012இல், தென்பகுதி மீனவர்களில் ஒரு பகுதியினரை முல்லைத்தீவுக்குத் திரும்பிவர, இராணுவம் உதவிசெய்தது. இராணுவத்தினரின் செயற்பாடுகள் பிரச்சினையாக இருந்த நேரத்திலும் முல்லைத்தீவு மீனவக் கூட்டுறவு சங்கங்கள், முதலில் 30 தென்பகுதி மீனவர்களை ஏற்றுக்கொண்டன. பின்னர் இது 78 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்கள், யுத்தத்துக்கு முன்னர், முல்லைத்தீவில்
மீன்பிடித்ததாகக் கூறினர்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றத்தன் பின்னர், வெளியிடத்து மீனவர்களின் தொகை, சில நூறுகளாக அதிகரித்தது. சிவில் நிர்வாகம் திரும்பியதன் காரணமாக, விசேடமாக மீன்பிடித் திணைக்களத்தின் செயற்பாடு காரணமாக, கூடுதலான மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

கடல் வளங்களைச் சுரண்ட விரும்பிய புதிய தென்பகுதி முதலாளிகள், தமக்கு வேலை செய்யும் மீனவர்களுக்கும், ஏராளமான அனுமதிப் பத்திரங்களைக் கோரி நின்றனர். ஆரம்பத்தில், இறால் பிடிப்பதற்காக தமது கடலை நாசமாக்கிய இந்திய மீனவர்களால் இன்னற்பட்ட முல்லைத்தீவு மீனவ சமூகம், திடீரெனத் தெற்கிலிருந்து வலுமிக்க படகளுடன் வந்த மீன்பிடித் தொழில் புரிவோர் பலரை எதிர்கொண்டது. இது, குறைந்தளவான மீன் அறுவடைக்குக் காரணமாகியது. இதனால், முல்லைத்தீவு மீனவர்கள், தமது வருமானம் குறைய, கடனாளிகள் ஆயினர்.

இந்தப் பின்னணியில், ஒருவருடத்துக்கு முன்னர், முல்லைத்தீவுக்கு மீன்பிடி அமைச்சர் வந்த போது, பிற இடத்து மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியைக் கட்டுப்படுத்துமாறு, முல்லைத்தீவு மீனவ சமூகம் கோரியது.

முல்லைத்தீவு மாவட்டத்தின், குறிப்பாக நாயாறு எனும் இடத்தில், பிற மாவட்ட மீனவர்களின் வருகையால் பதற்றம் ஏற்படுவதாக, அவர்கள் சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து மீன்பிடி அமைச்சில் நடந்த கூட்டங்களில், வடபகுதி மீனவ சமுதாயத்துடன் வேலைசெய்யும் ஆய்வாளர் என்ற வகையில் இக்கூட்டங்களில் பங்குபற்றினேன். 2016 ஆம் ஆண்டு ஜூனில், இந்தப் பிரச்சினையை ஆராயவென, மீன்பிடி அமைச்சு ஒரு குழுவை நியமித்தது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவம் மற்றும் கடற்படையின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைச்சின் பிரதிநிதிகள், முல்லைத்தீவு மீனவர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர், பிற மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்க வருவோரின் பிரதிநிதி, நான் உட்பட இந்தக் குழுவில் ஒன்பது அங்கத்தவர்கள் இருந்​ேதாம்.

தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பின்னர், 2016 செப்டெம்பரில், ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை, கொழும்பில் நடந்த கலந்துரையாடல்கள், முல்லைத்தீவில் நடந்த கலந்துரையாடல்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஆயினும், இதுவரை இந்தக் குழுவின் அறிக்கை வெளிவரவில்லை. ஏனைய குழுக்களின் அறிக்கை போலவே, இந்தக் குழுவின் அறிக்கையும் மறைக்கப்பட்டதாகவே தெரிகிறது.

கூட்டுறவுச் சங்கங்களும் கூட்டுறவு முகாமையும்

மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது, இந்த மீன்பிடி மோதல், சிங்கள – தமிழ் பிரச்சினை போல தெரியினும், அடிப்படையில் இது யுத்தத்தில் அடிபட்ட சிற்றளவு மீன்பிடிச் சமுதாயத்துக்கும் மீன்பிடி அமைச்சில் செல்வாக்குள்ள வேறுமாவட்ட பெருமுதல் கொண்ட பணக்கார, மீன்பிடித் தொழில் செய்வோருக்கும் இடையிலான முறுகலாகவே உள்ளது. இப்படியான பிரச்சினை, மோதலாக மாறலாம், இனங்களிடையே பிரிவினை ஏற்படுத்தலாம், இனச்சாயம் பூசப்பட்டு, பிரச்சினை பூதாகரமாகலாம். அரசாங்கம், நல்லிணக்கம், அரசியற்தீர்வு என்றெல்லாம் பேசுகிறது.

அப்படியானால் இதுபோன்றதொரு கடும் பிரச்சினை – வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடும் என நான் பயப்படும் பிரச்சினை – ஏன் பொறுப்பின்றி அலட்சியப்படுத்தப்படுகிறது?

வடபகுதி சனத்தொகையில் 20 சதவீதமானோர், மீன்பிடித் தொழிலில் உள்ளனர். இவர்கள், சிற்றளவு மீன்பிடித் தொழிலையே செய்கின்றனர். இந்த நாட்டின் மீன்பிடித் தொழில், உள்ளூர் அமைப்புகளாலும் வழமையாக சட்டங்களாலுமே, வரலாற்று ரீதியாக முகாமைத்துவம் செய்யப்பட்டது.

வடக்கில், கிராமங்கள் தோறும் இயங்கும் துடிதுடிப்பாக இயங்கும் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்கள், இந்தத் தொழிலைக் கட்டுப்படுத்தி வருகின்றன. இதனால், வருங்கால சந்ததியினருக்கும் மீன்பிடித் தொழிலை மீன்வளக் குறைபாடு இன்றிச் செய்யமுடியும்.

ஆனால், இப்போது நெருக்குவாரம் கொடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள் ஊடாக, மீன்பிடித் தொழிலை முகாமைத்துவம் செய்து, உற்பத்தியைப் பெருக்கி வளர்ச்சிகாண முயல்வதால், இது நிலைத்திருக்க முடியாததாக மாறிவிட்டது. இப்போதைய முறையில் வளங்களும் உச்ச அளவில் சுரண்டப்படுகின்றன. கிராமிய மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரமும் குறைந்து போகின்றது. எனவே, மீன்பிடித் தொழில் நிலைத்திருக்க வேண்டுமாயின், மீன்பிடித் துறையில், கூட்டு முகாமைத்துவத்தில் உள்ளூர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு, கூடுதல் பங்களிப்புக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.

யாருக்கு அபிவிருத்தி?

இந்திய ட்ரோலர்களாலும் வெளியிடத்து மீனவர்களாலும் அடியுண்டு போயுள்ள முல்லைத்தீவு மீனவர்கள், அரசாங்கத்தின் பெரும் மீன்பிடித்தொழில் அபிவிருத்தி இலக்குகளினால் என்ன நன்மையடைப் போகின்றனர்?

சிறிய இறங்கு துறைகள், பெரிய மீன்பிடித் துறைமுகங்கள் அடங்கலாக, 125 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் முதலீட்டில், வடக்குக்காகச் செயற்படுத்தப்படவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி – மீன்பிடித்துறை அபிவிருத்தித் திட்டம் அமைகிறது.

இது, எவ்வளவு தூரம், தமக்கு எவ்வாறு நன்மையளிக்கும் என்பதே, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் கேள்வியாகும்.

இவ்வாறான பெரிய துறைமுகங்களை, தெற்கிலுள்ள பணக்கார மீன்பிடி முதலாளிகளும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன என அவர்கள் கவலையோடு உள்ளனர். மீன்பிடி அமைச்சு, முல்லைத்தீவிலுள்ள மீன்பிடிப் பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்க்கவேண்டும்.

இதுபோன்று யுத்தத்தில் அழிந்த இடங்களிலுள்ள பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும். இல்லாவிடின் இந்திய இழுவை ட்ரோலர்கள் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததனால், வடமாகாண மீனவ சமுதாயத்திடம் பெற்றுக்கொண்ட நற்பெயரையும் ஆதரவையும், அரசாங்கம் இழக்க நேரிடும். அத்தோடு, எதிர்ப்பு அலைகளையும் தோற்றுவிக்கும், உள்நாட்டு மோதல்களையும் அதிகரிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். சென்ற புகையிரதத்துடன் மோதியதில் இரு இளைஞர்கள் பலி..!!
Next post யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா..!!