புதுவை அருகே வாலிபரை கொன்று தலையை போலீஸ் நிலையத்தில் வீசிய நண்பர்கள்..!! (வீடியோ)
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சுவேதன் (வயது 17).
ஐ.டி.ஐ. படித்து வந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ரவுடி போல சுற்றி வந்தார். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திருட்டு குற்றங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவு சுவேதனும், அதே ஊரைச் சேர்ந்த அவரது 2 நண்பர்களும் ஒரே மோட்டார் சைக்கிளில் பாகூர் பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் சுவேதன் பாகூர் ஏரி முன்புள்ள காலிமனை ஒன்றில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அவரது தலையை அந்த கும்பல் துண்டித்து எடுத்தது. அவர்களில் 2 பேர், தலையை கையில் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். சேலியமேட்டில் வந்தபோது சுவேதனின் தலை தவறி கீழே விழுந்தது. அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
பின்னர் தலையை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றனர். தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு சென்ற அவர்கள் சுவேதனின் தலையை போலீஸ் நிலைய வாசலில் தூக்கி வீசினார்கள். அது உருண்டு வந்து விழுந்தது.
இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பொதுமக்கள் சிலரும் நின்றிருந்தார்கள். அவர்களும் தலையை பார்த்ததும் அலறியடித்து ஓடினார்கள். போலீசார் தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் பாகூரில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலை என்று தெரியவந்தது. தலையை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் சுவேதன் கொலை செய்யப்பட்ட விஷயம் பாகூர் போலீசுக்கு தெரியவந்தது. அவர்கள் சுவேதன் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
பாகூர் போலீசார் கொலை பற்றி விசாரித்ததில் துப்பு துலங்கியது. சுவேதனை அழைத்து சென்ற நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுவேதனின் நண்பர்களான இருளன்சந்தையை சேர்ந்த வினோத்குமார் (26), தாஸ் (22), சர்மா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே உள்ள உறுவையாரில் சமீபத்தில் ரவிசங்கர் என்ற பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டார். அவருடைய ஆதரவாளராக சுவேதன், வினோத்குமார் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
ரவிசங்கருக்கு ஊருக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரை தங்கள் ஊருக்கு அழைத்து வந்து வினோத்குமார், சுவேதன் ஆகியோர் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
ஆனால் இடையில் வினோத்குமாருக்கும், ரவிசங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ரவிசங்கர் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றவர்களுக்கு ரவிசங்கர் நடமாட்டம் பற்றிய தகவல்கள் வினோத்குமார் கொடுத்ததாக தெரியவந்தது.
எனவே ரவிசங்கரின் ஆதரவாளர்கள் வினோத்குமாரை கொல்வதற்கு திட்டமிட்டனர். இன்னும் ஒரு வாரத்தில் வினோத்குமாரை கொலை செய்துவிடுவோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் வினோத்குமாருடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சுவேதன் அவருக்கு எதிராக ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளார். வினோத்குமாரின் எதிரிகளுக்கு இவருடைய நடமாட்டத்தை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.
இது வினோத்குமாருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தன்னுடன் இருந்து கொண்டே எதிரிகளுக்கு தகவல் சொல்லியதால் சுவேதனை தீர்த்து கட்ட திட்டமிட்டார். இதற்காக நேற்று இரவு வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாஸ், சர்மா ஆகிய 3 பேரும் குடியிருப்பு பாளையத்துக்கு சென்று சுவேதனை மது குடிக்கலாம் என அழைத்து வந்தனர்.
பாகூர் ஏரிக்கரை அருகே வைத்து மது குடித்தனர். அப்போது ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி சுவேதனை வெட்டி கொலை செய்தனர். பின்னர் தலையை துண்டித்து எடுத்து சென்று ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் வீசினார்கள்.
பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வினோத்குமாரிடம் போலீஸ் நிலையத்தில் ஏன் தலையை வீசினீர்கள் என்று கேட்டதற்கு, நான் பெரிய ரவுடி என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக தலையை போலீஸ் நிலையத்தில் வீசினேன் என்று கூறியுள்ளார்.
Average Rating