ஈராக்குக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க படைகள் துணையுடன் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராகவும், அமெரிக்க ராணுவத்துக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈராக்கில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பயணிகளையும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று கொலை செய்கிறார்கள். இந்த நிலையில் ஈராக்கில் உள்ள கர்பலா நகருக்கு 14 இந்தியர்கள் மற்றும் 26 பாகிஸ்தானியர்கள் புனித பயணம் சென்றனர்.
பாக்தாத் நகரில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 40 பேரும் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த கர்பலா நகருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் அவர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களில் 14 ஆண்களை மட்டும் தீவிரவாதிகள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி கடத்திச் சென்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விட்டு விட்டனர்.
14 பேரையும் தீவிரவாதிகள் தரதரவென்று இழுத்துச்சென்றனர். பிறகு அவர்களை வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் இந்தியர்கள். 11 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட இந்தியர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1.சையத் ஜாபர் மகத்தி 2. அகமது அலி 3. டாக்டர் மொய்தீன் வேக்.
இவர்கள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட 14 பேர்களில் 2 பேர் முதியவர்கள், 2 பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள், மற்றவர்கள் நடுத்தர வயதுக் காரர்கள்.
புனித பயணம் சென்றவர்களை கடத்தி சுட்டுக் கொன்றது பற்றி இந்தியாவை சேர்ந்த மாணவர் அஸ்காரி பாக்தாக்கில் உள்ள இந்தியகுழுவினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.கொலை செய்யப்பட்ட 3 இந்தியர்களின் உடல் அடக்கம் கர்பலா நகரிலேயே நடக்கிறது. ஆந்திராவில் உள்ள அவர்களது உறவினர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த படுகொலை பற்றி இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அகமது கூறும் போது, “இது மிகவும் துரதிஷ்டவசமானது. ஈராக்கில் வன்முறைகள் நடத்தப்பட்டதால் அங்கு யாத்திரை செல்ல வேண்டாம்” என்று இந்தியா ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஆனால் அதையும் மீறி சிரியா வழியாக இவர்கள் ஈராக்குக்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்
ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டில் 3 இந்திய டிரைவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. புனிதபயணம் சென்றவர்களை கொன்றது குறித்து பாகிஸ்தன் அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
கொல்லப்பட்ட சையத் ஜாபர் மகத்தி ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகவிகுரு மலிக்கிபுரம் பகுதியை சேர்ந்தவர். அதிகாரியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர்.
மனைவி மாசூமகதூண், சகோதரி தகருன்னிஷா பேகம், மாமியார் அகருன்னிஷா பேகம் ஆகியோருடன் சேர்ந்து கர்பாலா யாத்திரை சென்றனர். சையத் ஜாபரின் மகள் மற்றும் சகோதரர்கள் கூறுகையில், “புனித பயணம் சென்றுவிட்டு மகிழ்ச்சியாக திரும்புவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் எங்களை வேதனைப்பட வைத்து விட்டார்கள்” என்றனர்.
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அகமது அலி ஐதராபாத்தை சேர்ந்த வர். அந்த பகுதியில் டெலி போன் பூத் நடத்தி வந்தார். அகமத அலி இறந்த தகவல் கேள்விப்பட்டதும் அவரது மகள் ஜகீராபேகம் மயங்கி விழுந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அகமது அலியின் மனைவியும் மற்ற 3 குழந்தைகளும் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.
அகமது அலியின் சகோதரர் சிக்கந்தர் அலி கூறுகையில், “சம்பவம் நடந்த பிறகு இதுவரை எந்த அதிகாரியும் எங்களை வந்து பார்க்கவில்லை. அங்கிருப்ப வர்கள் எப்படி உள்ளனர் என்று கூட தெரியவில்லை” என்றார்.
சுட்டுக்கொல்லப்படட மொய்தீன் வேக் ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கட்கேவர் பகுதியை சேர்ந்தவர். டாக்டரான இவர் அந்தபகுதியில் கிளீனிக் நடத்தி வந்தார். இவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். மனைவி ஜசீரா பாத்திமா(45). மாமியார் உசேனியா பேகம் ஆகியோருடன் புனித பயணம் சென்றார்.
மொய்தின் வேக் மகன் கூறுகையில், “தந்தை இறந்த தகவல் போன் மூலம் தான் எங்களுக்கு தெரிய வந்தது. எனது தாயார், பாட்டி ஆகியோர் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பற்றிய விபரத்தை யாருமே தெரிவிக்கவில்லை” என்றார்.