புறக்கணிக்கப்படும் கூட்டுறவுத் துறை..!! (கட்டுரை)

Read Time:25 Minute, 0 Second

article_1494232078-cooperஇது, முள்ளிவாய்க்கால் நினைவுக்காலம்.

எல்லோரும், இங்கே நடந்த உயிர்ப்பலிகளைப் பற்றியும் கொலைகளைப் பற்றியும் அந்தக் கொலைகளின் அரசியலைப் பற்றியுமே பேசுவார்கள். தொடர்ந்து, இந்த மாதிரியான பேச்சே கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால், வன்னியின் இறுதிப் போர்க்காலத்திலும் அதற்கு முன்னரும், ஒரு வேளை சாப்பாட்டுக்காகவும் ஒரு கிண்ணம் கஞ்சிக்காகவும் மக்கள் அவதிப்பட்டதைப் பற்றி, அதிகமாக யாரும் பேசுவதில்லை. அந்த நாட்களில், பசியையும் பஞ்சத்தையும் தணிப்பதற்குத் துணையாக இருந்த கூட்டுறவுச் சங்கங்களைப் பற்றியும் கதைப்பதில்லை.

அந்த நெருக்கடியான நிலையில், தங்களுடைய குடும்பத்தையும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு உணவுப் பொருட்களைப் பங்கிட்டு வழங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு ஊழியர்களைப் பற்றியும் எவரும் எதுவும் சொல்வதில்லை.

குறுகிய நோக்குடைய அரசியல் பெருந்திரையினால், எப்படி எல்லாம் லாவகமாக மறைக்கப்பட்டு விட்டன?
அன்று, அந்த நெருக்கடி நிலையில் உயிர் காக்கும் பங்கர்களை (காப்பரண் அல்லது பதுங்குகுழிகள்) போலச் செயற்பட்டவை, கூட்டுறவுச் சங்கங்களே. மிகப் பெரிய அர்ப்பணிப்போடு, கூட்டுறவாளர்கள் இயங்கினார்கள்.

ஒப்பற்ற ஒரு செயலில் அவர்கள், ஒன்றிணைக்கப்பட்டு இயங்கினர். அது, உயிர் காத்த பெரும் பணி. வரலாற்றின் ஞாபக அடுக்குகளிலிருந்து எடுத்து, எப்போதும் மீள மீள நினைவுகூரப்பட வேண்டிய ஒன்று.

அப்போது, யுத்தப்பிராந்தியங்களின் மீது முழுமையான அளவில் பொருளாதாரத் தடையை, அரசாங்கம் அமுல்படுத்தியது. இதனால், யுத்தப்பிராந்தியங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கின் பெரும்பகுதிகளில், குறிப்பாக அரச கட்டுப்பாடில்லாத பிரதேசங்களில், உணவுப்பொருட்களுக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு, மாவட்ட செயலகங்கள் வழங்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட அளவிலான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பொருட்களை, அரச கட்டுப்பாடில்லாத பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் அவற்றைப் பகிர்ந்து அளிப்பதற்கும் அனுமதிக்கப்பட்ட ஒரே தரப்பு, கூட்டுறவுச் சங்கங்களே. இவ்வாறு கூட்டுறவுச் சங்கங்கள் அனுமதிக்கப்பட்டபோதும், அவற்றினால் இந்தப் பொருட்களை இலகுவாக எடுத்துச் செல்லவோ, இலகுவாக நிர்வாகப் பிரிவுகளில் தொடர்பு கொள்ளவே முடிந்ததில்லை.

ஏராளமான நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்தே, இந்தப் பணியை, கூட்டுறவுச் சங்கங்கள் செய்ய வேண்டியவையாக இருந்தன.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. இவ்வளவுக்கும் அன்று இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள், மக்களுக்கும் அவசியமானவையாக இருந்தன. புலிகளுக்கும் தேவைப்பட்டன. அரசாங்கத்துக்கும் தேவைப்பட்டது.

குறைந்தளவிலேனும் பொருட்களை முறையாகப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான ஓர் உத்தரவாதமளிக்கப்பட்ட அமைப்பாக, பொதுமக்களுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உதவின. அதைத் தவிர வேறு அமைப்புகளோ பொறிமுறைகளே இருக்கவில்லை.

கூட்டுறவுச்சங்கங்களின் வழியாகவே உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவற்றுக்கே அனுமதியளிக்கப்படும் என்ற நிலைப்பாட்டோடு அரசாங்கம் இயங்கியதால், பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட இறுக்கத்தைத் தணிப்பதற்கு, கூட்டுறவுச் சங்கங்கள் சிறந்ததோர் ஊடகமாக இருந்தன.

இதனால் புலிகளும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டனர். இதற்காக அவர்கள், தமிழீழ நிர்வாக சேவையின் கீழ், கூட்டுறவுத்துறை என்றொரு தனிப்பிரிவை உருவாக்கியிருந்தனர். இது, நிழல் அமைப்பாக இருந்து சங்கங்களை வழிப்படுத்தியது.

தன்னுடைய கட்டுப்பாடில்லாத பகுதியில், வரையறுக்கப்பட்ட அளவிலேனும் உணவு, அத்தியாவசியப் பொருட்களை, தன்னுடைய நிர்வாகப் பொறிமுறைக்கூடாக வழங்குவதற்கு, ஆகக்கூடிய பொறிமுறை அமைப்பாக கூட்டுறவுத்துறையே, அரசாங்கத்துக்கு உதவியது.

ஆகவே இந்த மூன்று தரப்புக்கும் அன்று, கூட்டுறவு அமைப்பு உதவியாக இருந்தது. இதனால் 1995க்குப் பிறகு வன்னியில், ஏராளமான கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கின. முறைப்படி 14 சங்கங்கள் இயங்க வேண்டிய வன்னியில், 20 சங்கங்களுக்கு மேல் இயங்கின.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, அளவெட்டி மல்லாகம் போன்ற சங்கங்கள், வன்னியில் கிளிநொச்சிப் பிரதேசத்தில் இயங்கியமை இங்கே குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்.

இவற்றை விட, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்கள், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள், பாரவூர்திக் கூட்டுறவுச் சங்கம் என வெவ்வேறு சங்கங்களும் இயங்கின. ஒவ்வொரு சங்கங்களும், அந்தந்தச் சமூகங்களின் நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டன.

அப்படியிருந்த கூட்டுறவுச் சங்கங்கள், இப்போது இயங்க முடியாத ஒரு நிலைக்குள்ளாகியிருக்கின்றன. இது, தனியே வன்னி அல்லது வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை அல்ல. நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறைக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையாகும். இதற்கு, பல காரணங்கள் கூறப்படுகின்றன.

1. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதகமற்ற மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ள சரிவும் தனியார் மயப்படுத்தலும், கூட்டுறவுத்துறையை நேரடியாகப் பாதித்துள்ளது. அதாவது சுதேச பொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக, வெளிப்பொருளாதாரத்தில் மையமிடப்பட்டதாக, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை உள்ளது.

கூடவே, இன்று தனியார்துறை, மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. வர்த்தகத்தில் மிக நுட்பமான வியாபார உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய நடைமுறையை வைத்திருப்பதால், சடுதியாகத் தீர்மானங்களை எடுப்பதற்கான வாய்ப்பை, தனியார்துறை கொண்டுள்ளது.

இணையத்தளங்களிலேயே பொருட்களைப் பெறக்கூடிய நிலையும் விலைகளின் ஏற்ற, இறக்கத்தைச் செய்யக்கூடிய நிலையும் இருப்பதால், இறுக்கமான சட்ட விதிமுறைகளைக் கொண்டுள்ள கூட்டுறவுத்துறையினால், இதற்குச் சவாலாக நின்று பிடிக்க முடியவில்லை.

ஆகவே, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையிலிருந்து, கூட்டுறவுச் சட்டவிதிகள் வரையில் பரிசீலனைக்குள்ளாகி மாற்றப்படுவது அவசியம். ஒரு கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்காக, நாட்டின் பொருளாதாரக் கொள்கையையே மாற்றியமைக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம்.

கூட்டுறவு அமைப்பு என்பது, மக்களுக்குரிய வலுவான பொருளாதாரக் கட்டமைப்பாகும். ஆகவே, அதைச் சிதைய விடுவதென்பது, நாட்டைச் சிதைய விடுவதற்குச் சமனாகும்.

“மக்கள், தங்களுடைய பொதுப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, எவ்வித கட்டாயமுமின்றித் தாமாகவே முன்வந்து, மனிதர்கள் என்ற நோக்கில் சமத்துவ அடிப்படையுடன் மக்களாட்சி முறையில் ஒருங்கிணைந்து இயங்கும் முறையே கூட்டுறவாகும்” என, கல்வெர்ட் என்பவர் கூறியிருப்பதை இங்கே கருத்திற் கொள்ளலாம்.

2. கூட்டுறவுத்துறையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருக்கும் நிலைமை. தற்போதுள்ள கூட்டுறவு அமைப்பில் காணப்படும் முறைமையின் வழியே, இலகுவாக அரசியல் சக்திகள் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக உள்ளது.

உண்மையில் அரசியலுக்கு அப்பாலான பொதுத்துறையாக, அரசியல் கலப்பற்ற துறையாக கூட்டுறவுத்துறை இருப்பது அவசியம். ஏனென்றால் அனர்த்த காலங்களில் மிகப் பெரிய பொறுப்போடு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் துறையாக இருப்பதுடன், சமூக மட்டத்தினாலான ஒருங்கிணைவுச் செயற்பாடுகளுக்கும் உற்பத்தித்துறைக்கும் பங்களிப்புச் செய்வதும், கூட்டுறவு அமைப்பே.

இதை “குடியாட்சி போன்ற அமைப்பு, சுயேட்சையான சேர்தல், சுயாதீனக் கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோகம், உறுப்பினர்களிடையே அன்னியோன்யம், ஒற்றுமை, திருந்திய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை ஏற்றுத் தன்மானம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து உழைப்பதே கூட்டுறவு” என்று, ஈ.எஸ். போகாடஸ் குறிப்பிடுவதிலிருந்து, கூட்டுறவுத்துறையின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.

3. காலவளர்ச்சிக்கு ஏற்றவாறு கூட்டுறவுத்துறையின் சட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாற்றத்துக்கும் நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை.

இது மிக முக்கியமான ஒன்று. தற்போது கூட்டுறவுச் சட்ட விதிமுறைகளாக இருப்பவை, ஏறக்குறை 25 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. அன்றிருந்த சமூக, பொருளாதார முறைகள் வேறு.

இன்றிருக்கும் முறை வேறு. ஆகவே, அன்றைய யாப்பையும் அதிலுள்ள விதிகளையும் சட்டங்களையும் வைத்துக் கொண்டு, இப்போது கூட்டுறவு அமைப்பை வழிப்படுத்தவோ இயக்கவோ முடியாது. இதனை, கூட்டுறவுத்துறையின் அதிகாரிகளும் ஊழியர்களும் முகாமைத்துவத்தினரும் மக்களும், தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர்.

இதைப் பற்றி கூட்டுறவாளர்கள், பல இடங்களிலும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஊழியர்களின் சம்பளம் தொடக்கம் விற்பனை, கொள்வனவு, நடைமுறைகள் போன்ற அனைத்தும், இந்தக் காலத்துக்குப் பொருத்தமற்றவையாகவே உள்ளன. இதனாலேயே, கூட்டுறவுத்துறையை விட்டுப் பலரும் விலகிச் செல்லும் நிலை அல்லது கூட்டுறவுத்துறையின் மீது ஆர்வமற்ற நிலை காணப்படுகிறது.

ஆனாலும் கூட்டுறவுச் சட்ட விதிமுறைகள் மாற்றப்படாதிருப்பதால், இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொண்ட அதிகாரிகளினாலும் முகாமைத்துவத்தினராலும் எதையும் செய்ய முடியவில்லை. இதனால் கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைவதற்குப் பதிலாக, இறுகிப்போயுள்ளது.

அரசியலமைப்பே புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல், இன்று உருவாகியிருக்கிறது. ஆனால், எப்போதோ மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டிய கூட்டுறவுத்துறைக்கான யாப்பு, மாற்றப்படவோ திருத்தப்படவோ இல்லை.

4. கூட்டுறவு முகாமைத்துவத் தெரிவு முறைகளில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீடிப்பதும் முகாமைத்துவத்தில் இருப்போர் பொறுப்புக்கூறலுக்குள்ளாக வேண்டிய அவசியமற்றிருப்பதும். இது யாப்பை மாற்றியமைக்கும்போது, மாற்றத்துக்குள்ளாகலாம். ஆனாலும் யாப்பு மாற்றத்தின்போது கவனிக்கப்படவேண்டியவை விடயங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக, முகாமைத்துவத்துக்குத் தெரிவாகும் இயக்குநர் சபை உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளே வருவதற்கான வழிகள், இப்போது பலவீனமாக உள்ளன. சில உறுப்பினர்களுக்கு, தாங்கள் எப்போது சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டோம், தங்களுடைய உறுப்பினர் எண் என்ன என்று கூடத்தெரியாது.

அவர்களுக்காக யாரோ படிவங்களை நிரப்பி, அங்கத்துவப் பணத்தையும் செலுத்தி விடுகிறார்கள். இவர்களுக்கு, நடப்பது எதுவுமே தெரிவதில்லை. தமக்குச் சார்பானவர்களுக்குக் கையை உயர்த்தினால் சரி என்ற அளவில் இருக்கிறார்கள்.

இப்படிப் பலவீனமான வழிமுறைகளின் வழியாக உள்ளே வருகின்றவர்கள், எத்தகைய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும், யாப்பிலோ நடைமுறையிலோ இல்லை. ஆகவே இவர்கள், சங்கத்தின் இலாப – நட்டங்களுக்கோ சங்கங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமோ பொறுப்பாளிகள் இல்லை என்ற அளவில், தங்களுடைய காலத்தைக் கடத்தி விட்டுச் சென்று விடுகின்றனர்.

இதனால் பல சந்தர்ப்பங்களிலும், பொறுப்பற்ற முறையில் முகாமைத்துவம் செயற்பட்டு, சங்கத்தைப் பாரிய வீழ்ச்சிக்குள்ளாக்கி விட்டுச் செல்கிறது. பின்னர் வருகின்ற நிர்வாகம், இதனைச் சீர்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அல்லது, பின்னர் வருகின்ற நிர்வாகமும் பொறுப்புடன் செயற்படவில்லை என்றால், அந்தச் சங்கம் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். வன்னியில், ஏறக்குறைய ஐந்து சங்கங்கள், இப்படி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆகவே, பொறுப்புக் கூறக்கூடிய வகையில் முகாமைத்துவத்துக்கான, பொதுச்சபை மற்றும் இயக்குநர் சபைக்கான, உறுப்பினர்கள் தேர்வு நடப்பது அவசியம். இதற்கேற்ற முறையில், விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாக இருந்தால் கிளைக்குழுவுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு ஆண்டில் 50,000 ரூபாய்க்குக் குறையாத வகையில், தொடர்பு கொண்டிருப்பது அவசியம்.

அல்லது சங்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான உறவைக் கொண்டிருப்பது கட்டாயம் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இப்போதிருக்கும் நிலையில் ஒருவர், 25 ஆண்டுக்கு முன்னர் உறுப்பினராக இருந்திருக்கக்கூடும்.

இடையில் அவர் எங்கோ இருந்து விட்டு அல்லது சங்கத்துடன் தொடர்புகளே இல்லாத நிலையில் இருந்து விட்டு, திடீரெனத் தன்னுடைய உறுப்பினர் அடையாளத் தகுதியைக் காண்பித்து, நிர்வாகத்துக்குள் நுழையலாம். பின்னர் அவர் தன்பாட்டுக்கு நடந்து கொள்ளலாம். இந்த நிலை தவிர்க்கப்படுவது அவசியம்.

அப்படியென்றால்தான், உயிர்ப்போடு சங்கத்தின் செயற்பாடுகளில் இணைந்து, அதை வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.

5. நெகிழ்ச்சியில்லாத விதிமுறை. இதனால் சந்தை நிலைவரத்துக்கு ஏற்றவாறும் சமூக நிலைமைக்கும் ஏற்றபடியும் தீர்மானங்களை எடுக்க முடியாத இறுக்கத்தை, சங்கங்கள் கொண்டிருக்கின்றன. துரிதமாகச் செயற்படும் உலகத்தில், மிகப் பிந்திய நிலைமையில் சங்க விதிகள் உள்ளன. இந்த முரண் நிலை, சங்கங்களை அப்படியே பின்னோக்கித் தள்ளுகின்றன.

ஆகவே இவற்றைப் பரிசீலித்து, பொருத்தமான திட்டங்களை இன்றைய, நாளையை வளர்ச்சிக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும்.

பொருளாதார நிலையில் தளர்வுற்றிருக்கும் சங்கங்களின் நிலைமையை ஆராய்ந்து, அவற்றின் தளர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை மீள் நிலைப்படுத்துவதற்கான அரச மானியமோ நிவராணமளிப்போ செய்யப்பட வேண்டும்.

செயற்படும் மூலதனம் அதாவது ஆரம்ப மூலதனம், காரணங்களைக் கண்டறிந்து ஆரம்ப மூலதனத்தை வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டை, தேசிய மட்டத்தில் கூட்டுறவு அமைச்சுக் கொள்கையாக வரிக்க வேண்டியுள்ளது. அப்படிச் செய்யப்படும்போதே, கூட்டுறவுச்சங்களை மீள் நிலைக்கு, இயங்கு நிலைக்கு கொண்டு வர முடியும்.

6. கூட்டுறவுத்துறை என்பது, சரியளவுக்கு உற்பத்தித்துறையாகவும் உற்பத்திக்கு ஊக்குவிக்கும் துறையாகவும் செயற்பட வேண்டியது அவசியம். 1960கள், 1970களில் அப்படித்தான் இருந்தன. அன்று பல கூட்டுறவுச் சங்கங்கள், ஆடை உற்பத்தி தொடக்கம் ஏராளமான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பெரும் வருவாயை ஈட்டியதுடன், ஏராளமானவர்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அளித்தன.

மக்களிடத்திலும் சங்கங்கள், நெருக்கமான உறவையும் பெரும் நம்பிக்கையையும் பெற்றிருந்தன. பின்னர் இந்த நிலைமை வீழ்ச்சியடைந்தது எப்படி, ஏன் அந்த நிலைமை வந்தது என்பதைக் கண்டறிவது அவசியமாகும்.

யுத்த காலத்தில் மட்டுமல்ல, அனர்த்த காலங்களிலும் பஞ்சம், வரட்சி, வறுமை போன்ற நெருக்கடியான நிலைமைகளின்போதும், கூட்டுறவுச் சங்கங்களே, மக்களுக்கான உணவைப் பகிர்ந்தளிப்பதற்குப் பொருத்தமான பொறியமைப்புகளாக இருந்தன.

இதனால் கூட்டுறவுச் சங்கங்களை, தங்களின் வாழ்க்கையோடு மிக நெருக்கமாக, மக்கள் உணர்ந்தனர். அதிலும், அடிநிலை மக்களின் வாழ்க்கைக்கு மிகக் கிட்டிய உறவாக, கூட்டுறவுச் சங்கங்கள் இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, இடைத்தரக் கல்வித் தகுதியை உடைய ஏராளமானவர்களுக்குத் தொழில் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருந்தவையும், இந்தக் கூட்டுறவுச் சங்கங்களே.

இதை இன்னும் சற்று விரித்து, கூட்டுறவுச் சங்கங்கள் எப்படியெல்லாம் எமது சமூகத்தில் ஓர் உயிர் நாடிச் சக்தியாக இயங்கின என்று ஆராய்ந்தால், இவற்றின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்கின்ற மூன்றாவது துறையாகக் கருதப்படும் கூட்டுறவு வர்த்தகத்தின் செயற்பாடுகளை, நவீன தொழில்நுட்பத்தினதும் உயர்த்த வேண்டும்.

காலவிதிப்புக்கு ஏற்றவகையில், புதிய முறைகளை உபயோகிப்பதன் மூலம், இந்தத் துறையைத் தரமுயர்த்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குதல், வழிகாட்டுதல், ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் என்பன, இன்றைய தேவைகளாகும். சமூக மேம்பாட்டுக்கும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான அடித்தளப் பயிற்சியை வழங்குகின்ற மக்கள் அமைப்பொன்றின் செயற்பாடுகள் பேணப்படுவது அவசியமானது. ஏனென்றால், அது சமூகத்தின் உயிர்நாடியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் கொட்டும் பனியில் காதல் காட்சிகளை படமாக்கிய ரங்கா படக்குழு..!!
Next post கடையம் அருகே ஊனமுற்ற பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது..!!