மே தினப் பலப்பரீட்சை..!! (கட்டுரை)
தொழிலாளர்களின் உரிமைக்கான நாளான மே தினம், இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் பலப்பரீட்சைகளை நடத்துகின்ற ஒரு நாளாகவே மாறி விட்டது என்பதை இந்த முறை மேதினமும் நிரூபிக்கத் தவறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தைக் காட்டவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது பலத்தை வெளிப்படுத்தவும், இந்த இரண்டு கட்சிகளும் தமது பலத்தை வெளிப்படுத்திய அதேநேரத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிரணியும் இந்த மே தினத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.
ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஏனைய கட்சிகளும் கூட, அடுத்து வரப் போகின்ற தேர்தல்களுக்கான தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த மே தினத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மூன்றுக்கும் இடையே, கூடுதலான ஆதரவாளர்களை மே தினப் பேரணியில் பங்கேற்கச் செய்வது என்பதில் கடுமையான போட்டி காணப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணிதான். பெரியளவில் கூட்டத்தைக் கூட்டி, தமக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்று காண்பிக்க வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்ஷவுக்கே அதிகம் இருந்தது.
ஏற்கெனவே நுகேகொடையில், கண்டியில், குருநாகலில், அநுராதபுரத்தில், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் என்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்களை அணிதிரட்டிக் காண்பித்து, அரசாங்கத்தை எச்சரிக்கை செய்வதிலேயே குறியாக இருந்து வந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இரண்டு வெவ்வேறு எதிரிகளுடன் மோத வேண்டியிருக்கிறது. ஒன்று ஐ.தே.கட்சி. மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் ஐ.தே.கவை பரம்பரை எதிரிகளாகவே இன்னமும் பார்க்கிறார்கள். ஐ.தே.க அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது எதிரி, மைத்திரிபால சிறிசேனவும் அவரது தலைமையின் கீழ் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமாகும். மே தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையின் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு நீண்ட அறிக்கையில் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஐ.தே.கவின் விருப்பப்படி ஆட்சியை நடத்துவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சிதைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மே தினத்தில் ஐ.தே.கவுக்கும் அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பாடம் புகட்டும் வகையில், அவர்களுக்குச் சவால் விடும் வகையில், காலி முகத்திடலை மனிதத் தலைகளால் நிரப்பிக் காண்பித்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
காலி முகத்திடலை மனிதத் தலைகளால் நிரப்பிக் காண்பித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுத்திருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், தமது மேதினப் பேரணியே பிரமாண்டமானதாக இருக்கும் என்று கூறி வந்தது. அதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், காலிமுகத்திடலைப் போன்ற பரந்துபட்ட ஓர் இடத்தில், பலத்தை நிரூபிக்க ஐ.தே.க தவறியிருக்கிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இந்தமுறை மஹிந்த அணியுடன் கொழும்பு நகரில் மல்லுக் கட்டுவதற்கு விரும்பவில்லை. 2016 ஆம் ஆண்டு மே தினத்தின் போது, மஹிந்த- மைத்திரி அணிகள் கொழும்பில் மல்லுக் கட்டிய போதே, மஹிந்த பக்கத்தில்தான் கூடுதலானவர்கள் திரண்டிருந்தனர்.
அதுபோன்று இம்முறையும், ஒப்பீடு செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்படக் கூடாது என்பதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கவனமாக இருந்தது. அதனால்தான், இம்முறை மேதினப் பேரணியை கண்டியில் ஏற்பாடு செய்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினத்தில்தான் அதிகளவானோர் ஒன்று கூடுவார்கள் என்று ஜனாதிபதி தொடக்கம் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் வரையில் மார் தட்டினார்கள்.
நாடெங்கும் இருந்து பஸ்களிலும் ரயில்களிலும் ஆதரவாளர்களை ஏற்றி வந்த போதிலும், காலிமுகத்திடல் சாதனையைக் கண்டியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் உடைக்க முடியவில்லை என்பதே உண்மை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியும் பாரியதாகவே இருந்தது. கூட்டம் நடத்தப்பட்ட மைதானம் சிறியதாக இருந்ததால், அதனை நிரப்பிக் காண்பிக்க முடிந்ததே தவிர, மஹிந்த அணியினரின் பலத்துடன் ஒப்பீடு செய்து நிரூபிக்க முடியவில்லை.
இந்த வகையில், மக்களை தமது கூட்டத்துக்கு அணி திரட்டிக் காட்டுவதில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
“காலி முகத்திடலை நிரப்பிக் காண்பித்து விட்டேன்; இங்கிருந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பயணத்தை ஆரம்பிக்கிறேன்” என்று மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் சூளுரைத்திருந்தார்.
அது மாத்திரமன்றி, உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்திருக்கிறார்.
உண்மையில் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளில் பிரதான கட்சிகள் அனைத்தும் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கு அல்லது பரீட்சித்துப் பார்ப்பதற்கு அதிக கரிசனை காட்டியதற்குக் காரணமே, அடுத்து வரப் போகின்ற தேர்தல்கள்தான்.
உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த சில மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்தல்களில் தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறா விட்டாலும், அதைவிட்டு விலகி, கூட்டு எதிரணியாக நின்று, தனித்துப் போட்டியிட்டு, தனது பலத்தைக் காட்டும் ஆர்வத்தில் இருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மட்ட, ஆதரவு அவருக்கு அதிகளவில் இருப்பது அவரது பெரும் பலம்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடும் வகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தி, வரும் தேர்தலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது மைத்திரிபால சிறிசேனவின் கனவு.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தனித்து ஆட்சியமைக்கும் நிலைக்குக் கொண்டு வர முடியும் என்பதை உள்ளூராட்சித் தேர்தல் மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது,
அவ்வாறான நம்பிக்கையை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தத் தவறி விட்டால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெருமளவு பிரமுகர்களும் ஆதரவாளர்களும் மஹிந்தவின் பக்கம் போய் விடுவார்கள் என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது.
இதனால்தான், மே தினப் பேரணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சவாலாக எடுத்துக் கொண்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும், அதனைத் தனித்துக் கைப்பற்றும் நிலைக்கு கட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில், ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கிறார்.
அதிக தேர்தல் தோல்விகளைச் சந்தித்த தலைவர் என்று ரணில் விக்கிரமசிங்க முன்னர் கிண்டலடிக்கப்பட்டு வந்தவர். 1994 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.தே.கவின் தோல்வி, 2002 நாடாளுமன்றத் தேர்தல் தவிர்ந்த, மற்றெல்லா பிரதான தேர்தல்களிலும் தொடர்ந்து வந்தது. பெரும்பாலான மாகாணசபை, ஜனாதிபதி, உள்ளூராட்சித் தேர்தல்களில் ஐ.தே.கவின் பலம் வெளிப்படுத்தப்படவில்லை.
இப்போது ஆட்சியும் அதிகாரமும் கிடைத்திருக்கின்ற சூழலில் கட்சியின் பலத்தை நிரூபிக்க மே தினத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல், அடுத்த ஆண்டில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்று எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
உட்கட்சிப் பூசல்களைச் சமாளித்து, இந்தத் தேர்தல்களில் வெற்றியைப் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராகியிருக்கிறது.
ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய எல்லாக் கட்சிகளுமே வரப்போகின்ற தேர்தலுக்கான பலப்பரீட்சைக் களமாகத்தான் இம்முறை மேதினப் பேரணியைக் கையாண்டன.
நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களில் சிறிய கட்சிகளுக்குப் பெரிய பங்கு கிடையாது. ஆனால், உள்ளூராட்சித் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் அப்படியல்ல.
சிறிய கட்சிகளும் கூட, ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்களில் கிடைக்கும். அதனைக் கருத்தில் கொண்டுதான், சின்னஞ்சிறிய கட்சிகள் கூட, தமது பலப்பரீட்சைக்கான களமாக இந்த மே தினப் பேரணியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தன.
ஆனால், மே தினப் பேரணிகளில் கூடிய மக்கள் அனைவரும், அந்தந்தக் கட்சிகளுக்குத் தான் வாக்களிப்பார்கள் என்பதில்லை. மே தினப் பேரணிக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தாம் எங்கு, எதற்காகச் செல்கிறோம் என்று தெரியாமல் கூட சென்றிருந்தனர்.
அதுபோலவே, பேரணிகளில் பங்கேற்றவர்கள் மாத்திரம், தேர்தல்களில் வாக்களிக்கப் போவதில்லை. பேரணிகளில் பங்கேற்காத பெருமளவு மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்கள்தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற வல்லமை பெற்றவர்களாக இருப்பவர்கள்.
மே தினப் பேரணிகள் அரசியல் கட்சிகள் தமது பலத்தை பரீட்சிப்பதற்கான ஒரு களமாக இருக்கலாமே தவிர அதுவே, அரசியல் தலைவிதிகளை மாற்றுகின்ற களமாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
Average Rating