தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 44 Second

article_1493274681-France-08-newஉலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும்.

இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது.

இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத்தைக் கடைப்பிடிக்கும் மரின் லு பென், 21.3 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம், 24 சதவீதமான வாக்குகளைப் பெற்ற, மத்திமக் கொள்கைகளைக் கொண்ட இமானுவேல் மக்ரோனும் லு பென்னும், 2ஆவது சுற்று வாக்களிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

லு பென் என்பவர், நவீனகால கடும்போக்கு வலதுசாரிகளைப் பிரதிபலிக்கும் ஒருவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும்; எல்லைகளைப் பலப்படுத்த வேண்டும்; அகதிகளின் வருகையைக் குறைக்க வேண்டும் (2 இலட்சத்திலிருந்து 10,000); பாதுகாப்பை அதிகரித்தல் போன்றன தான், அவரை அடையாளப்படுத்தும் அவரது கொள்கைள்.

கருத்துக் கணிப்புகளின்படி, அவர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள், மிகக்குறைவாகவே உள்ளன. மக்ரோன் வெற்றிபெறுவது, ஓரளவு உறுதியாக உள்ளது என்பது, ஓரளவு ஆறுதல் தரக்கூடிய செய்தி தான். ஆனால், ஹிலாரி கிளின்டனும் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, ட்ரம்ப்பின் வெற்றிவாய்ப்புகளும் இல்லை என்றே கருதப்பட்டது. பின்னர் நடந்ததை, வரலாறு சொல்கிறது. எனவே, இவ்விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவும் முடியாது.

இந்த வாக்களிப்பு முடிவுகளில், முக்கியமான ஒன்றை அவதானிக்க முடிந்தது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில், லு பென் பெற்றுக் கொண்ட வாக்குகள், வெறுமனே 4.99 சதவீதம். பரிஸுக்கு அருகிலுள்ள நகரங்களிலும் இந்நிலை தான். லு பென்னின் பலம், கிராமப்புற வாக்குகள் தான்.

இந்த நிலைமையை, “கிராமப்புற மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒப்பீட்டளவில் படிப்பறிவு குறைவான மக்கள், இனவாதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சொல்விளையாட்டுகளுக்கு மயங்குகிறார்கள்” என்று கூற முடியும்.

ஆனால் உண்மை, அதையும் தாண்டி இருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு, இதற்கு முன்னர் இடம்பெற்ற, இரண்டு பிரதான நிகழ்வுகளைப் பற்றியும் ஆராய்வது அவசியமானது.

முதலாவது, கடந்தாண்டு இடம்பெற்ற, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல். யாரும் எதிர்பார்க்காத விதமாக, டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.

இதுவரை காலமும் இல்லாததைப் போன்று, பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்த ட்ரம்ப், கடும்போக்கு வலதுசாரிகளின் பலத்த ஆதரவுடனேயே, தனது பிரசாரத்தை மேற்கொண்டார். மெக்ஸிக்கோவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையில் சுவர்; எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு; அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துதல்; முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதைத் தடை செய்தல்; வசதி படைத்தோருக்கான வரிக் குறைப்பு என, அவரின் கொள்கைகள், கடும்போக்கு வலதுசாரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருந்தது.

“ஐ.அமெரிக்க மக்கள், ட்ரம்ப்பைத் தெரிவுசெய்ய மாட்டார்கள். அந்தளவுக்கு அறிவில்லாதவர்கள் கிடையாது” என்று, பலரும் நம்பினர். ஆனால் இறுதியில், அவர் வென்றார்.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு, மிகவும் வளர்ச்சியடைந்த பாரிய நகரங்களில் அனேகமானவை, தோல்வியையே வழங்கின. கிராமப்புறங்கள், அவரின் கோட்டைகளாக அமைந்தன. கிராமப்புற வாக்குகளில் 62 சதவீதமானவை, ட்ரம்ப்புக்குக் கிடைத்தன. வெறுமனே 34 சதவீதமானவை மாத்திரமே, ஹிலாரிக்குக் கிடைத்தன. நகரப் புறங்களில் வெறுமனே 35 சதவீத வாக்குகள் மாத்திரமே, ட்ரம்ப்புக்குக் கிடைத்தன. ஹிலாரிக்கு, 59 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.

இவ்விடயம் இவ்வாறிருக்க, முக்கியமான அடுத்த சம்பவமாக, ‘பிரெக்சிற்’ என அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் சர்வஜன வாக்கெடுப்பு அமைந்தது. ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே, இதுவும், நடக்க முடியாத ஒன்று எனக் கருதப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் அவ்வாறு கூறின. ஆனால் இறுதியில், வெளியேற வேண்டுமென, வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின. ஆனால், அந்த வாக்களிப்பில், வெளியேற வேண்டாமென, இலண்டன் வாக்களித்தது. ஒட்டுமொத்தமாக, வெளியேற வேண்டுமென்பதற்கு 51.9 சதவீத ஆதரவு கிடைக்க, இலண்டனோ, வெளியேற வேண்டாமென 59.9 வாக்குகளால் வாக்களித்தது. பிரதான நகரங்களிலும் இதே நிலைமை தான் காணப்பட்டது.

மேலே கூறப்பட்ட 3 சம்பவங்களும், உலகில் கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் எழுச்சிக்கான உதாரணங்களாகக் கருதப்படுகின்றன. அவை மூன்றுமே, ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன: மாபெரும் நகரங்களில், அந்தக் கடும்போக்கு வலதுசாரித்துவம் நிராகரிக்கப்படுகிறது என்பது தான் அது.

இது, சிந்திக்க வைக்கிறது. இதற்குப் பின்னால், நகரங்களில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படும் கல்வியறிவு தான் காரணமா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா என்பதே, தற்போதுள்ள கேள்வி.

கல்வியறிவு என்பது குறிப்பிடத்தக்க ஒரு காரணமாக இருந்தாலும், அதைவிட முக்கியமானதொரு காரணமாக, வளப்பங்கீடு, அபிவிருத்தியில் காணப்படும் பாகுபாட்டைக் குறிப்பிட முடியும்.

சிவாஜி திரைப்படத்தில், சுஜாதா எழுதிய வசனமொன்று, “பணக்காரன், மேலும் பணக்காரன் ஆகிக் கொண்டிருக்கிறான். ஏழை, இன்னும் ஏழையாகிக் கொண்டிருக்கிறான்” என்ற அர்த்தத்தில் அமையும். அதைப் போன்று தான், மாபெரும் நகரங்களும், மேலும் நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நகரங்களைத் தாண்டியிருக்கிற சில கிராமப்புற மக்கள், தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்கிறார்கள்.

கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, தாங்கள் ஒதுக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்ற உறுதியளிக்கும் ஒருவருக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைகளைப் பற்றிய கேள்விகள் பல இருக்கும் போது, அவர்கள் வாக்களிக்க எண்ணும் நபர், கடும்போக்கு வலதுசாரியா, பெண்களைக் கீழ்த்தரமாகக் கருதுபவரா, சிறுபான்மையினரை ஒடுக்கக்கூடியவரா என்பதெல்லாம், இரண்டாம் பட்சமாக மாறிவிடுகின்றன.

இதில், கிராமப்புறங்களில் கல்வியறிவு, அனேகமாகக் குறைவாக இருப்பதால், அவர்களை இலகுவாக ஏமாற்றுவது இலகுவாகிவிடுகிறது. உதாரணமாக, டொனால்ட் ட்ரம்ப்பின் அனேகமான தேர்தல் வாக்குறுதிகள், உயர் 1 சதவீதம் என அழைக்கப்படும் செல்வந்தர்களை இலக்கு வைத்தே காணப்பட்டன. சாதாரண மக்கள், அவரது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், அந்த மக்களைச் சென்று பார்க்கும் போது, அந்த மக்களின் இரட்சகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். அந்த மக்களும் நம்பினர்.

இலங்கையிலும் கூட, இந்த நிலைமையை அவதானிக்க முடியும். தற்போதைய நிலையில் தேர்தலொன்று நடைபெற்றால், தற்போதைய அரசாங்கம், அனேகமாக வெற்றிபெறும். அந்த நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால், கிராமப்புற மக்கள், ஒன்றிணைந்த எதிரணி என்று அழைக்கப்படுகின்ற, கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்ற அந்தக் குழுவுக்கு வாக்களிப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள் எல்லாம், தமது வாழ்வாதாரத்துக்குப் பின்னர் தான். வாழ்வாதாரத்தைப் பற்றியே, அவர்களது பிரதான கவனம் காணப்படும்.

இவற்றுக்கெல்லாம் இருக்கும் முக்கியமான காரணம், கிராமப்புறங்கள், அரசியல்ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படாமையும் அமைகிறது. நகரங்கள் என்ன தான், தாராளவாதக் கொள்கைகளையும் பல்கலாசார வாழ்க்கையையும் கொண்டு மிளிர்கின்ற போதிலும், கிராமப்புற மக்களோ, அவற்றைத் தமது எதிரிகளாக எண்ணுகின்றனர். இலங்கையிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து, அதன் செயற்பாடுகள் குறித்து, நகர மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பை விட, கிராமப்புற மக்களுக்கான எதிர்ப்பு அதிகமாக உள்ளது.

நவீன அரசியலென்பது, விழுமியங்களைக் காப்பதற்காக, விட்டுக்கொடுப்புகளுக்குப் பெயர்போன அரசியலாகும். இந்த வகையான அரசியலை, ஐ.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் காணலாம். அவர்களைப் பொறுத்தவரை, அரசியலில் ஒருமித்த கருத்துகளைப் பெறுவது கடினமென்ற யதார்த்தத்தை அறிவர். அதன் காரணமாக, ஒரு விடயம் வெற்றிபெற வேண்டுமாயின், விட்டுக்கொடுப்புகள் அவசியமென்பதை அவர்கள் அறிவர்.

மறுபக்கமாக, கிராமப்புற மக்கள் விரும்பும் அரசியலென்பது, எதையும் நேரடியாக, வெளிப்படையாக எதிர்கொள்ளும் அரசியல். விட்டுக்கொடுப்புகளை விட, உறுதியாக நின்று, ஒரு காரியத்தைச் சாதிப்பர் என்ற எண்ணம். ஏனென்றால், மேலே கூறப்பட்ட விட்டுக்கொடுப்பு அரசியலில், கிராமப்புறங்கள் கோரிநிற்கும் பாரிய மாற்றமென்பது சாத்தியப்படாது. எனவே தான், டொனால்ட் ட்ரம்ப், மஹிந்த ராஜபக்‌ஷ, பொரிஸ் ஜோன்சனும் நைஜல் பராஜும் (இங்கிலாந்தில், பிரெக்சிற்-இன் நாயகர்கள்) போன்றோரை, கிராமப்புற மக்கள், அதிகமாக நம்புகிறார்கள்.

இவ்வாறு, கடும்போக்கு வலதுசாரிகளின் (இதில் இலங்கையின் ஒன்றிணைந்த எதிரணி, கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் பண்புகளைக் கொண்ட, இடதுசாரிகளையே கொண்டது) எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அபிவிருத்தியும் அரசியலும் மாற்றங்களும், கிராமப்புற மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், டொனால்ட் ட்ரம்ப், மரின் லு பென் போன்றோரைப் போன்று, வெற்றிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதே யதார்த்தம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்..!!
Next post வில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு: யாருக்கு தெரியுமா?..!!