ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’..!! (கட்டுரை)
தற்போதைய அரசாங்கம், தேசிய அரசாங்கம் என்பதாகவே கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பொன்றும் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் இருக்க வேண்டிய ஐக்கியம் அரசாங்கத்துக்குள் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது மோசமான நிலையை எட்டியுள்ளது.
அரசாங்கத்துக்குள் இருக்கும் இந்த முரண்பாடுகள், தற்போது பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாட்டையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம்.
ஸ்ரீ ல.சு.கவின் மைத்திரி குழுவின் உறுப்பினரான மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்து பயன்பெறும் நோக்கில் கடந்த வருடம் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு வந்து குப்பை மேட்டைப் பார்வையிட்டனர்.
ஆனால், அதற்காக குப்பை மேட்டின் அருகே 60 பேர்ச்சஸ் காணி அவசியமாகியது. அதனைச் சம்பந்தப்பட்ட அரச நிறுவனமான நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். அதற்கிடையே அரசாங்கத்தின் மற்றொரு அமைச்சர் குப்பை மேட்டை ஜாஎலைக்கு எடுத்துச் செல்ல திட்டம் தீட்டினார். ஜாஎல மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்தவ மதகுருக்களும் அதனை எதிர்த்தனர்.
கடந்த மாதமும் கொலன்னாவ மக்கள் குப்பை மேட்டை மீதொட்டமுல்லயிலிருந்து அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் குப்பை மேடு அகற்றப்படவும் இல்லை; மீள்சுழற்சி செய்யப்படவுமில்லை.
இறுதியில் கடந்த தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் குப்பை மேடு, அருகிலுள்ள வீடுகள் மீது சரிந்ததில் இது வரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் பலர் காணாமற்போயுள்ளனர். இப்போதும் அரசாங்கத் தலைவர்கள் நடந்த அனர்த்தத்தைப் பற்றியும் குப்பைப் பிரச்சினையை தீர்ப்பதைப் பற்றியும் ஒன்றுக்கு ஒன்று முரணான விளக்கங்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
குப்பை மேடு சரியும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்தார். அங்கிருந்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், குப்பை மேடு சம்பந்தமாகத் தீர்வொன்றை அமுலாக்கவிருக்கும் போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குப்பை மேட்டை மீதொட்டமுல்லயிலிருந்து அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். பிரதமர் வைத்திருக்கும் தீர்வுத் திட்டத்தைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குப் பொறுப்பான பெரு நகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குப்பை மேட்டை ஜாஎலைக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, ஜாஎல மக்கள் காட்டிய எதிர்ப்பை நினைவூட்டினார். அதாவது, அவர் இன்னமும் குப்பை மேட்டை ஜாஎலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திலேயே இருக்கிறார். அந்தத் திட்டத்தை நியாயப்படுத்தவே அவர் அந்த எதிர்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், ஜனாதிபதி ஜாஎலைக்கு குப்பை மேட்டை எடுத்துச் செல்வதாகக் கூறவில்லை.
கொலன்னாவ பகுதியில் வேறு திட்டமொன்றின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் வீடுகளை இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த மக்களுக்கு வழங்க ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தக் குப்பை மேட்டை அகற்றும் போராட்டத்தில் ஆரம்பம் முதல் ஈடுபட்டு வருபவருமான எஸ்.எம். மரிக்கார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
ஆனால், ஜனாதிபதி மேற்படி நிவாரணக் கூட்டத்தில் ஆற்றிய உரையை ஒளிபரப்பிய எந்தவொரு ஊடகமும் ஜனாதிபதி அவ்வாறு கூறியதாகக் கூறவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக வீடுகளை நிர்மாணிக்க போதிய நிதியை வழங்குவதாக அமைச்சர் ரணவக்க கூறியதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
குப்பை மேட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாகவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவது தொடர்பாகவோ அரசாங்கத்துக்குள் பொதுவானதோர் கருத்தோ அல்லது திட்டமோ இல்லை என்பதையே இது காட்டுகிறது.
திடீரென அவ்வாறானதோர் திட்டத்தை தாயாரிக்க முடியாது தான். ஆனால், இது ஒன்றும் எவரும் எதிர்பார்க்காத அனர்த்தம் அல்ல. குப்பை மேட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த மீதொட்டமுல்ல மக்கள் இந்தக் குப்பை மலை எப்போதாவது தமது பிள்ளைகளின் தலை மீது சரியும் என்பதை எத்தனையோ முறை ஊடகங்களிடம் கூறியிருந்தார்கள்.
ஆனால், எவரும் ஏற்கெனவே 300 அடிக்கு மேல் உயர்ந்து நாளொன்றுக்கு மேலும் 800 தொன் குப்பை சேரும் இந்தக் குப்பை மலை தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதில் அவசரம் காட்ட வேண்டும் என நினைக்கவில்லை. இப்போதும் சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் இலாபம் தேட தார்மிக உரிமை இல்லை. ஏனெனில், இந்த இரு கட்சிகளின் தலைவர்களே இந்தக் குப்பை மேட்டை வளர்த்தவர்கள். முப்பதாண்டு கால போரை நிறுத்தினோம் என்றும் கொழும்பை அழகுபடுத்தினோம் என்றும் மார் தட்டிக் கொண்டு தமது பெயருக்காகவும் புகழுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவளித்து விமானம் வராத விமான நிலையங்களையும் கப்பல் வராத துறைமுகங்களையும் நிர்மாணித்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோல், மீதொட்டமுல்ல குப்பை மேட்டைப் பற்றிய பிரச்சினையை தீர்ப்பதாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கொலன்னாவ மக்களுக்கு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கமும் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆர்ப்பாட்டம் செய்தும், அப்பிரச்சினையைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மேல் மாகாண முதலமைச்சர் பிரிட்டிஷ் நிறுவனத்துடன் சேர்ந்து குப்பை மேட்டைமீள்சுழற்சி முறை மூலம் அகற்ற முற்பட்டதைப் பற்றி அவரது கட்சித் தலைவரான ஜனாதிபதியாவது அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
இந்த அரசாங்கத்தில இருக்கும் சில தலைவர்கள் ஏனைய நாடுகளில் கைத்தொழில, சுகாதாரம், கல்வி போன்ற பல விடயங்களைப் பற்றி புள்ளி விவரங்களுடன் மக்களுக்கு விவரிவுரை நிகழ்த்துவார்கள். எந்தப் பிரச்சினையை எந்த நாடு எவ்வாறு தீர்த்தது என்று எடுத்த எடுப்பில் விளக்கமளிப்பார்கள்.
ஆனால் ஏனைய நாடுகளில் குப்பைப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்; அல்லது அந்த முறைகளைப் பாவித்து இங்கு குப்பைப் பிரச்சினையை தீர்க்க அவர்களுக்கு அவசியம் இல்லைப் போலும்.
இப்போதும் இந்தக் குப்பை மேட்டை ஜாஎலைக்கோ அல்லது வேறு எங்கோ கொண்டு செல்வதைத்தான் அரச தலைவர்களும் அதிகாரிகளும் தீர்வாகக் கருதுகிறார்கள்.வேறு தீர்வு எதுவும் அவர்களுக்கு தெரியாது. எங்கு எடுத்துச் சென்றாலும் இந்த மலையின் மீது நாளாந்தம் 800 தொன் அல்லது எதிர்க்காலத்தில் அதற்கும் மேலாக குப்பை சேர்ந்த வண்ணமே இருக்கும்.
அவ்வாறு குப்பையை எங்கு எடுத்துச் சென்றாலும் அது பாரிய காடாக இல்லாவிட்டால் நிச்சயமாக மனித குடியிருப்புகள் அருகிலேயே குவியும். அங்கும் இது போன்ற அனர்த்தங்களும் நோய் பரவும் அபாயமும் ஏற்படும்.
பாரிய காடுகளில் இந்தக் குப்பை மலையை கொட்டினாலும் அது வன விலங்குகளைப் பாதிக்கும். ஏற்கெனவே குப்பையை உண்டு இறந்து போகும் யானைகளைப் பற்றிய செய்திகள் பொலன்னறுவை போன்ற பகுதிகளில் இருந்து அடிக்கடி வருகின்றன.
மாகாண சபை உறுப்பினர்கள் அடிக்கடி மக்களின் பணத்தைக் கோடிக் கணக்கில் செலவழித்து கூட்டாக கல்விச் சுற்றுலா என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளில் அபிவிருத்தி மற்றும் நிர்வாக முறைகளைக் கற்றுக் கொள்ளவே அவர்கள் அவ்வாறு செல்கிறார்கள் என அவ்வப்போது கூறப்படுகிறது.
அவ்வாறான சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஏனைய நாடுகளில் குப்பை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அந்நாடுகளில் மீள் சுழற்சி முறையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பிரதேச சபைக்குரிய பிரதேசத்திலாவது அந்த மீள்சுழற்சி முறையை அவர்கள் பயன்படுத்த முயற்சித்ததாக எந்தத் தகவலும் இல்லை.
கொழும்பு என்பது உலகில் மிகப் பெரும் நகரம் அல்ல; அதனை விட பன்மடங்கு பாரிய நகரங்களிலும் குப்பை சேரத்தான் செய்கிறது. அமெரிக்காவில் வொஷிங்டன், நியூயோர்க், நகரங்களிலும் சீனாவில் பெய்ஜிங் நகர், ஜப்பானில் டோக்கியோ நகர், ரஷ்யாவில் மொஸ்கோ நகர் ஆகிய நகரங்களில் சேராத குப்பையா கொழும்பில் சேர்கிறது? ஆனால், அவ்வாறான பாரிய நகரங்களில் குப்பைப் பிரச்சினை இருப்பதாக எந்தவொரு ஊடகத்திலும் நாம் பார்த்தில்லை.
இலங்கையில் குப்பையும் அரசியலாகி விட்டுள்ளது. அதேவேளை சிலருக்கு எங்காவது குப்பை குவித்தல் பணம் சம்பாதிக்கும் வழி முறையாகியுள்ளது. இதற்கு முன்னர் கொட்டாஞ்சேனை அருகே புளூமென்டல் பிரதேசத்திலேயே கொழும்பு நகரில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டன. அங்கும் இது போன்றதோர் குப்பை மலை உருவாகியிருக்கிறது.
அந்தக் குப்பை மலை அமைந்த காணி ஒரு தனி நபருக்குச் சொந்தமானது என்றும் அவருக்கு கொழும்பு மாநகர சபை அதற்காக பல இலட்ச ரூபாய் மாதாந்தம் வழங்கி வந்ததாகவும் அந்தத் தொகையில் ஒரு பகுதி மீண்டும் மாநகர சபை அதிகாரிகளுக்கு இலஞ்சமாக வழங்கப்படுவதாகவும் எனவே மாநகர சபை அதிகாரிகள் குப்பையை மீள்சுழற்சி செய்யவோ வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவோ இடமளிப்பதில்லை என மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் அக்காலத்தில் எம்முடன் கூறியிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்துக்குள் நிலவும் கட்சிப் பிளவுகளே தற்போது இந்தப் பிரச்சினையை தீர்க்க இருக்கும் பிரதான தடையாக அமைந்துள்ளது. அது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மட்டும் தடையாக இருக்கவில்லை.
ஏறத்தாழ அரசாங்கத்தின் எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையை அந்த உட்பூசல்கள் உருவாக்கியுள்ளன.
குறிப்பாக இந்த நிலைமை இனப் பிரச்சினையை தீர்ப்பதில் பெரும் தடையாக இருப்பதாகவும் தெரிகிறது. ஏனெனில் அரசாங்கத்துக்குள் இனப் பிரச்சினை விடயத்தில் ஓருமித்த கருத்து இல்லை.
தேசிய அரசாங்கம் என்ற பெயரில் இதற்கு முன்னரும் நாட்டில் அரசாங்கங்கள் இருந்துள்ளன. ஆனால், அப்போது தேசிய அரசாங்கம் என்றால் என்ன என்று சட்ட விளக்கம் இருக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் அதாவது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அதற்கு சட்ட விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தேசிய அரசாங்கம் என்றால் ஒரு தேர்தலில் ஆகக் கூடிய ஆசனங்களைப் பெறும் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்கும் அரசாங்கம் தேசிய அரசாங்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்றது. ஆனால், அக்கூட்டணி ஐ.தே.க சின்னத்தில் போட்டியிட்டதால் சட்டப்படி ஐ.தே.கவே ஆகக் கூடிய ஆசனங்களைப் பெற்ற சட்சியாகக் கருதப்படுகிறது.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐ.தே.க தலைமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. ஆனால், ஸ்ரீ ல.சு.க என்றதோர் கட்சி, சட்டப்படி நாடாளுமன்றத்தில் இல்லை. ஸ்ரீ ல.சு.ககாரர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்திலேயே கடந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
எனவே, அந்த ஒப்பந்தத்தை பாவித்து தற்போதைய அரசாங்கம் சட்டப்படி நிறுவப்பட்ட தேசிய அரசாங்கமென்று எனக் கூற முடியாது. ஆனால், இது தேசிய அரசாங்கம் ஒன்றல்ல எனப் பிரகடனப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, இது தேசிய அரசாங்கமாகச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், ஒரு தேசிய அரசாங்கத்தில் இருக்க வேண்டிய பொதுத் தேசிய கொள்கை இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா என்று பார்த்தால், அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மீதொட்டமுல்லயில் சுமார் 30 பேர் தமது உயிரை கொடுத்து அதனை நிரூபித்துள்ளனர்.
சகல முக்கிய விடயங்களிலும் ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் இடையே முரண்பாடுகள் தென்படுகின்றன. அதுவே அரசாங்கத்தின் தலைவர்கள் கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதிருக்க பிரதான காரணமாக இருக்கிறது.
இவ்வாறு இரு கட்சிகளும் முரண்படும் விடயங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு பார்த்தால், ஊழல் ஒழிப்பு போன்ற ஒரு சில விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களில் ஐ.தே.க தமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முயல்வதாகவும் ஸ்ரீ ல.சு.கவே எப்போதும் முரண்பட்டுக் கொள்கிறது என்றும் தெரிகிறது.
ஸ்ரீ ல.சு.க தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிக்குள் தமது செல்வாக்கு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் எப்போதும் செயற்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகளிடையே முரண்பாடுகள் இருப்பது மட்டுமன்றி சிறு கட்சிகளும் இந்தக் கட்சிகளுடன் சிலவேளைகளில் முரண்பட்டுக் கொள்கின்றன.
அரசாங்கத்துக்கும் மாகாண சபைக்கும் இடையே நிலவும் முரண்பாடே மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். உண்மை தான். ஆனால் அவர் தமது காலத்தில் இந்தப் பிரச்சினையை தீர்க்காததற்கான பொறுப்பையையும் ஏற்க வேண்டும்.
Average Rating