தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 46 Second

-----------------------------------------------------------------------வடக்கு – கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது.

உறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை எந்தக் காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். கிளிநொச்சிப் போராட்டத்துக்கு இணையாக, வவுனியாவிலும் மருதங்கேணியிலும் திருகோணமலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதுபோல, காணி மீட்புப் போராட்டங்கள் கேப்பாபுலவு, முள்ளிக்குளம், பன்னங்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கின்றது.

இந்தப் போராட்டங்களின் மத்தியில்தான் சித்திரைப் புது வருடமும் பிறந்திருக்கின்றது. புது வருடங்களின் மீது ஒருவித நம்பிக்கையை கொள்வது மனித இயல்பு.

அதுபோலவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் தமது எட்டு வருட காலத்தை அண்மித்துவிட்ட தேடலுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இலங்கையில் அதிகமான மக்கள் சித்திரைக் கொண்டாட்டங்களில் முழ்கியிருக்க, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், காணிகளை மீட்கப் போராடும் மக்களும் கறுப்பு ஆடைகள் அணிந்து கொழுத்தும் வெயிலில் உட்கார்த்திருந்தார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் புதிய வருடத்துக்கு அடுத்த நாள் (சனிக்கிழமை மாலை) சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதன்போது, தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக, “காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், படைத்துறையினருக்கும் கடந்த வருடமே தான் ஆணையிட்டிருந்ததாகவும், ஆனாலும், அவர்கள் அதனைச் செய்து முடிக்கவில்லை என்றும், அதனால் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்தப் பதிலில் எவ்வளவு பொறுப்பற்ற தன்மை வெளிப்படுகின்றது என்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். பாதுகாப்பு அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் இருக்கும் அவர், தன்னுடைய நேரடியான கண்காணிப்பிலுள்ள விடயங்கள் சார்பில் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் எந்தவித செயற்பாட்டு ஊக்கமும் இன்றி, தன் கீழுள்ள அதிகாரிகள் மீது பழி சுமத்தி தன்னுடைய பொறுப்பினைத் தட்டிக்கழித்துக் கொண்டு தப்பிக்க முனைந்திருக்கின்றார் என்றும் புரியும்.

மாற்றங்களின் நாயகனாக தன்னை பெருப்பித்துக் காட்டிக் கொள்வது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன இன்னமும் பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றார். ஆனால், அவரைக் குறித்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் மெல்ல மெல்ல உடைந்து விழுந்து கொண்டிருக்கின்ற தருணத்தில், அவர் முன்னைய ஜனாதிபதிகள், ஆட்சியாளர்கள் போல மற்றவர்கள் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்க நினைக்கின்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கி காத்திருந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் ஆகும்.

ஆனால், அவர்கள் இருவரும் கூட, கடந்த நாட்களில் வெளிப்படையாக அரசாங்கத்தினை விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த 10ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய இரா.சம்பந்தன், “மைத்திரி – ரணில் அரசாங்கம் தமிழ் மக்களின் பொறுமையைச் சோதிப்பதாகவும், தாங்கள் வேறு முடிவினை எடுக்க வேண்டியிருக்கும்” என்றும் எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.

அரசாங்கத்தோடும், தென்னிலங்கையோடும் முரண்பாடுகள் இன்றி விடங்களைக் கையாண்டு வெற்றி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்தும் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற தலைமை இவ்வாறு கூறியதும் சற்று அதிர்வு உண்டாகியது. உண்மையில், அவர் ஏமாற்றத்தின் புள்ளியில்தான் இப்படிக் கூறவும் வேண்டி வந்திருக்கின்றது.

வடக்கு- கிழக்கில் எங்கு திரும்பினாலும் போராட்டங்கள். அந்தப் போராட்டங்களை எந்தச் சாக்குப்போக்குச் சொல்லியும் விலக்கிவிட முடியாத அளவுக்கு அந்தப் போராட்டங்களின் தன்மை மாறிவிட்டது. அப்படியான நிலையில், உறுதியான பதில் (தீர்வு) இன்றி மக்களை அணுக முடியாத சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைக்கு வந்திருக்கின்றது.

அதாவது, இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தியிருக்கின்ற அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு எவ்வளவோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமானது. அப்படியான தருணத்தில் இரா.சம்பந்தன், அரசாங்கத்தின் மீது பொறுமையிழந்து சென்றதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஜனவரி மாதமளவில் வடக்கு- கிழக்கில் ஆரம்பித்த தொடர் போராட்டங்களில் அரசியல் கட்சிகளையும், பிரதிநிதிகளையும் முன்னுக்கு வைத்துக் கொள்வதை போராட்டங்காரர்கள் தவிர்த்தார்கள். இது, அரசியல் கட்சிகளுக்கு சற்று அழுத்தமாக மாறியது.

குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளை ஏக நிலையில் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக அழுத்தமாக இருந்தது. இந்தச் சூழலைக் கையாள்வது தொடர்பில் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதிலும், கிடைக்க தீர்வு என்பது பகுதியளவாகவே இருந்தது.

ஆனால், போராட்டங்களோ, இருந்த அளவினைக் காட்டிலும் அனைத்துத் திசைகளிலும் முளைக்க ஆரம்பித்தன. இதனால், விரும்பியோ விரும்பாமலோ மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதுவும், மக்கள் எதிர்பார்க்கும் பதிலை சொல்லியாக வேண்டும்.

அந்தப் பதில்களை அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிய நகர்வுகளின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். அப்படியான சந்தர்ப்பத்தில் காத்திருத்தலுக்கான காலம் என்பது கடந்துவிட்டது என்பதை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டு அதிருப்தி வெளிப்பாட்டின் புள்ளியில் வந்து நிற்கின்றார். இந்தப் புள்ளியில்தான், எம்.ஏ.சுமந்திரனும் வந்து நிற்கின்றார்.

கடந்த வாரம் தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.ஏ.சுமந்திரன், “தமிழ் மக்களின் உணர்வுகளையும், தேவையையும் கூட்டமைப்பு புரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரே நாளிலோ குறுகிய காலத்திலோ தீர்வைக்காண முடியாது. ஆக, சில விடயங்களுக்கு கால அவகாசமும் காத்திருப்பும் தேவை. ஆனால், அதை மக்களிடம் சொல்லும் போது மக்கள் கோபப்படுவது இயல்பானது. அந்தக் கோபத்திலுள்ள நியாயத்தையும் நாம் அறிவோம். ஆனால், எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைக் கைவிட்டு விலகிவிட முடியாது.“ என்றார்.

மற்றொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகக் கோரும் விடயமொன்று மேல் நோக்கி கொண்டு வரப்படுகின்றது. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்கிற ரீதியில் கூட்டமைப்பினால் விடயங்களைக் கையாள முடியாவிட்டால், “பதவி விலகுவதன் மூலம் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க முடியும்” என்பது பதவி விலகல் கோரிக்கைகளை முன்வைக்கும் தரப்பின் வாதமாகும்.

ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினதும், இந்தியாவினதும் ஆசிபெற்ற தற்போதையை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை விடுப்பதற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால், அதனை அந்த நாடுகள் எவ்வாறு நோக்கும் என்கிற கேள்வியும் முக்கியமானது.

பதவி விலகல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, “ஜெயவர்த்தன காலத்தில், நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லோரும் பதவி விலக்கியிருந்தோம். ஆகவே, பதவி விலகுவதென்பது எமக்குப் புதிய விடயமல்ல. பதவி விலகுவதன் மூலம் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் அல்லது எங்கள் இலக்குகளை அடையலாம் என்றதொரு தேவை ஏற்படுமிடத்து நாங்கள் அதைச் செய்வதற்குத் தயங்கமாட்டோம். அது தொடர்பிலான தீர்மானங்களை சர்வதேச சமூகத்தோடு இணைந்து எடுப்போம்.” என்றிருக்கின்றார்.

இப்படியான சூழலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் தங்களது போராட்டங்களோடு இணைந்து கொண்டு முன்செல்வதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

தொடர் போராட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை இரண்டாம் கட்டத்தில் வைத்துக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள், தலைமை ஏற்பதற்கு அழைத்திருப்பது என்பது முக்கியமான கட்டமாகும்.

இந்தச் சூழலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தலையைக் கொடுத்தாவது கையாண்டு சாத்தியமான வழிகளைத் திறக்க வேண்டும்.

இல்லையென்றால், நிலைமை இன்னும் மோசமாக மாறும். அப்போது, கூட்டமைப்பை காப்பாற்றுவது தொடர்பில் யாரும் சிந்திக்க மாட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த திரிஷா..!!
Next post ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது..!!