குப்பை அரசியல்..!! (கட்டுரை)
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பற்றிச் சிந்திப்பதில் நமது அரசியல்வாதிகள் முதன்மையானவர்கள்.
மீதொட்டமுல்ல அனர்த்தத்தினையும் அதனைத் தொடர்ந்து அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் கவனிப்பவர்களுக்கு, மேற்படி உண்மையினைப் புரிந்து கொள்ள முடியும்.
மீதொட்டமுல்லயில் குவிக்கப்பட்டுள்ள குப்பைமலையை அகற்றுமாறு கோரி, அந்தப் பிரதேசத்து மக்களும், சமூக ஆர்வலர்களும் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அங்கிருந்து அந்தக் குப்பைமலை அகற்றப்படவில்லை.
அதன் விளைவு, குப்பைமலை சரிந்ததில் 26 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அலட்சியம் செய்தமையின் விளைவுதான் மீதொட்டமுல்ல அனர்த்தமாகும்.
அங்குள்ள குப்பை மலையை அகற்றுமாறு அப்பிரதேச மக்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் கோரிக்கை விடுத்தனர்; ஆர்ப்பாட்டம் செய்தனர்; ஊடகங்களை அழைத்துத் தமது அவலங்களை அம்பலப்படுத்தியிருந்தனர்.
ஆனால், அது தொடர்பில் அந்த மக்களுக்கு எதுவித தீர்வுகளையும் ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், அந்த மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்கின்றன.
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள்தான் மீதொட்டமுல்லயில் கொட்டப்படுகின்றன. 28 ஏக்கர் நிலப்பரப்பில் தினமும் 800 தொன்னுக்கும் அதிகமான எடையுடைய குப்பைகள் இங்கு கொட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்தக் குப்பை மலையைச் சுற்றியுள்ள 08 ஆயிரத்து 700 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 39 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீதொட்டமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதியால் பயணிக்கும்போது, சில நிமிடங்கள் எதிர்கொள்ளும் துர்நாற்றத்தினையே நமக்குத் தாங்க முடியாதுள்ளபோது, காலமெல்லாம் அந்தச் சூழலில் வசிக்கும் மக்களின் நிலைவரமானது, மிகவும் பரிதாபத்துக்குரியதாகும்.
மீதொட்டமுல்ல குப்பை மலையின் உயரம் 300 அடிக்கும் அதிகமானதாகும். இங்கு 235 இலட்சம் தொன் நிறையுடைய குப்பை உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்வைத்திருந்த வாய்மூலமான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது, மேற்படி தகவலை அமைச்சர் சுசில் வெளியிட்டிருந்தார்.
இந்த விபரங்களை அமைச்சர் தெரிவித்து ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிவிட்டன. அமைச்சர் தகவல் வெளியிட்டதன் பின்னர், சுமார் மூன்றரை இலட்சம் தொன் குப்பை இங்கு கொட்டப்பட்டிருக்க வேண்டுமெனக் கணக்குச் சொல்கிறது. இந்தக் குப்பை மலை சரிந்து விழுந்ததால்தான் மீதொட்டமுல்லயில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி குப்பையினால் ஏற்கெனவே பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை அங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். குப்பை மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம்; அங்குள்ள வீடுகளிலும் பாடசாலையிலும் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொசுக்களின் தொல்லைகள்; அவை காவி வருகின்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் என, அங்குள்ள மக்களின் வாழ்க்கையானது கிட்டத்தட்ட நரகலாகவும் நரகமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலைவரம் குறித்து ஆட்சியாளர்கள் மிக நன்றாக அறிவார்கள். ஆனால், நிலையானதொரு தீர்வினை மீதொட்டமுல்ல மக்களுக்கு இதுவரை நல்லாட்சி அரசாங்கத்தினால் கூடப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்பது பெரும் அவமானமாகும்.
தமது பிரதேசத்திலுள்ள குப்பை மலையினை அகற்றுமாறு மீதொட்டமுல்ல மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் போது, அங்கு செல்லும் அரசியல்வாதிகள் மக்களுடன் சேர்ந்து கோசமெழுப்புவதும் மக்கள் சார்பாகக் கோரிக்கை விடுவதும் வாடிக்கையான விடயங்களாகும்.
மீதொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மலையினை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து, கடந்த மாதம் ஆறாம் திகதியும் அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
பௌத்த மதகுருமாரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் சேர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர்; ஆளுங்கட்சிக்காரர்.
மீதொட்டமுல்ல மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர். அந்த வகையில், அப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அவர் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
அதனை விடுத்து, ஆர்ப்பாட்டம் செய்கின்ற மக்களுடன் இணைந்து, ஓர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரைப் போல் கோசமிடுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
எவ்வாறாயினும் இந்த மாதிரியான அரசியல்களையும் அரசியல்வாதிகளையும் மக்கள் புரிந்து கொள்ளத் தவறுவதில்லை. மீதொட்டமுல்ல அனர்த்தத்தினைக் காண்பதற்காக, அப்பிரதேசத்துக்குச் சென்றிருந்த அமைச்சர் சாகல ரத்நாயக மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஆகியோருக்கு அங்குள்ள மக்கள் ‘கூய்’ சத்தமிட்டு, எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர். “இறந்த பிறகு, எதனைப் பார்க்க வந்தீர்கள்” என்று கேட்டு, அப்பகுதி மக்கள் அவர்களைக் கோபத்துடன் எதிர்கொண்டனர்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் மக்களின் எதிர்ப்பும், கோரிக்கைகளும் ஒருபுறமிருக்க, குறித்த குப்பை மேட்டினை விரைவில் அகற்றுமாறு கொழும்பு மாநகரசபைக்கு கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது. ஆனால், அதன் பிரகாரம் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.
மீதொட்டமுல்ல குப்பை மலையினை அகற்றுவதோடு, கொழும்பிலுள்ள குப்பைகளை வேறு இடங்களில் கொட்டுவதற்கான யோசனைகளையும் அரசாங்கம் அவ்வப்போது வெளியிட்டிருந்தமையினையும் இங்கு பதிவு செய்தல் வேண்டும். ஆனால் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை.
கொழும்பின் குப்பைகளை ஜாஎல – எக்கல பகுதியில் கொட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு, அதற்கான காணியொன்றினையும் அடையாளம் கண்டது. ஆயினும், அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட, திட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, கொழும்பின் குப்பைகளை புத்தளம் மாவட்டத்துக்கு ரயில் மூலம் அனுப்பி வைத்து, அவற்றினை வில்பத்து வனப் பகுதிக்கு அருகாமையில் கொட்டுவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சியும் கைகூடவில்லை. புத்தளம் மாவட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் வெளியிட்ட கடுமையான எதிர்ப்பின் காரணமாக, அந்த யோசனையும் கைவிடப்பட்டது.
கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொட்டும் யோசனைக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், மீதொட்டமுல்ல குப்பை மலையை அகற்றுவதில் அரசாங்கம் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அங்கு பாரிய அனர்த்தமொன்று நிகழ்ந்த பிறகு, குறித்த குற்றச்சாட்டுகள் மேலும் வலுவடையத் தொடங்கியுள்ளன.
தனியார் நிறுவனமொன்றின் அதிகாரியான மாதவ கொடிதுவக்கு என்பவர் 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த தகவலொன்று இங்கு நினைவுகொள்ளத்தக்கது. “மீதொட்டமுல்லயில் குவிக்கப்பட்டு வரும் குப்பைகளிலிருந்து வெளியாகும் மிதேன் வாயு காரணமாக, அங்குள்ள குப்பைகள் எந்த வேளையிலும் பற்றி எரியும் அபாயம் உள்ளது” என்று, மேற்படி மாதவ கொடிதுவக்கு கூறியிருந்தார்.
மேலும், மீதொட்டமுல்லயில் குவிக்கப்படும் குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தனது நிறுவனத்தினால் முடியும் என்றும், அதற்கான அனுமதியினை கொழும்பு மாநகரசபை வழங்க மறுப்பதாகவும் கொடிதுவக்கு நீதிமன்றில் கூறியிருந்தார்.
அதேவேளை, “பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், இந்த விடயத்தில் கொழும்பு மாநகரசபையானது தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு, நாட்களைக் கடத்தி வருகிறது” என்றும் மேற்படி தனியார் நிறுவனத்தின் அதிகாரியான மாதவ கொடிதுவக்கு நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இருந்தபோதும், மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தனக்கு மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக, கொழும்பு மாநகரசபையின் அப்போதைய மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நீதிமன்றில் கோரியிருந்தார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து, மக்கள் குடியிருப்புகள் மீது விழுந்தபோது, அங்கிருந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தமை இங்கு கவனத்துக்குரியது. “மீதொட்டமுல்லயில் குவிக்கப்பட்டு வரும் குப்பைகளிலிருந்து வெளியாகும் மிதேன் வாயு காரணமாக, அங்குள்ள குப்பைகள் எந்த வேளையிலும் பற்றி எரியும் அபாயம் உள்ளது” என்று, மாதவ கொடிதுவக்கு நீதிமன்றில் தெரிவித்த விடயம் உண்மையானது.
கொழும்பு குப்பைகளை எங்கே கொட்டுவது என்பது அரசாங்கத்துக்குள்ள பாரிய சவாலாகும். ஆனால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் உள்ளன என்பதையும் நாம் மறந்து விடலாகாது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் துரிதமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படவில்லையென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தட்டிக்கழிக்க முடியாதவையாகும்.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டினால் உருவாகியுள்ள சூழல் பிரச்சினைகளுக்கு துரிதமாக, உரிய தீர்வினைக் காணுமாறு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் உயரதிகாரிகளை அழைத்து 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அங்குள்ள குப்பை மேடு காரணமாகச் சுகாதாரப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு, மாற்று இடங்களில் வசிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது பற்றிக் கவனம் செலுத்துமாறும், அதன்போது ஹக்கீம் பணித்தார். ஆனால், அது தொடர்பில் எவ்வித தீர்வுகளும் அந்தக் காலப்பகுதியில் எட்டப்படவில்லை.
இப்படி அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மீதொட்டமுல்ல விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படாமையின் விளைவினைத்தான் இப்போது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கொலன்னாவ – மீதொட்டமுல்ல பகுதியானது இன்றைய நிலையில் குப்பை கொட்டுவதற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றதொரு இடமாகும். மக்கள் குடியிருப்புக்கு நடுவில் குப்பைகளை எடுத்துச் சென்று கொட்டுகின்றமை குறித்து, ஆட்சியாளர்கள் மனிதாபிமானத்துடனாவது சிந்தித்திருந்தால், மீதொட்டமுல்ல அனர்த்தத்தினை பெரும்பாலும் தவிர்த்திருக்க முடியும்.
இன்னொருபுறம், மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றுவதற்கான பணி, பிரித்தானியாவின் எஸ்.ஜே.வி. வேர்ல்ட் எனும் நிறுனத்துக்கு, வழங்கப்பட்டதாக கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இலங்கை அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் மேற்படி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் கைசாத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற இந்த ஒப்பந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், “மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றும் நடவடிக்கைகள் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும்” எனத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மீதொட்டமுல்ல குப்பை மலையைச் சூழவும் வாழுகின்ற மக்களின் நலன்கள் தொடர்பில், அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை என்பதை, நடந்து முடிந்த அனர்த்தம் உறுதிப்படுத்துகிறது.
அதேவேளை, மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கான ஒட்டுமொத்த பழியினையும் தற்போதைய அரசாங்கத்தின் மீது போட்டு விடுவதும் நேர்மையான செயற்பாடாக இருக்க முடியாது. கடந்த ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஒரு சர்வதிகாரிபோல் ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மீதொட்டமுல்ல குப்பை மலைக்கு தீர்வு காண முடியாமல் போனமையானது அதிசயம்தான்.
இது இவ்வாறிருக்க, மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் அரசியல் எதிரொலிப்பதையும் கவனிக்க முடிகின்றமை கவலையளிக்கிறது.
குப்பைகளை வைத்து தமது அரசியலைச் செய்யலாம் என நினைப்பது மிக கேவலமாகும். அவ்வாறானவர்களின் அரசியல் குப்பையாகி விடும். அவ்வளவுதான்.
Average Rating