கோடை காலத்தில் கூந்தலை எப்படி பராமரிக்கலாம்..!!
கோடை காலத்தில் கூந்தலை அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டும். இல்லாவிட்டால் முடி உதிர்வது, முடி உடைவது, பொடுகு பிரச்சினை போன்றவை தலைதூக்கும். கோடைகாலத்தில் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்.
* கோடையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். அதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும் என்பது உண்மைதான். உடல் குளிர்ச்சியடைவது கூந்தலுக்கும் நல்லதுதான். ஆனால் பலர் கோடைகாலத்தில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்துவிடு கிறார்கள். அதிக எண்ணெய், கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. ஏன்என்றால், தலை முடியில் உள்ள மயிர்க்கால்களில் எப்போதுமே ஒருவித எண்ணெய் சுரக்கும்.
அதுவே கூந்தல் பாதுகாப்புக்கு போதுமானது. அதைதவிர்த்து வழக்கம்போல் ஓரளவு எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். அளவுக்கு மீறி எண்ணெய்யை தலையில் அப்பிக்கொண்டால் அழுக்கு சேர்ந்து பொடுகு பிரச்சினை ஏற்படும். எண்ணெய் தேய்த்தால் 20 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு பயன் படுத்தி கூந்தலை கழுவிவிடவேண்டும்.
* குளித்து முடித்தவுடன் தலைமுடியை உலரவைப்பதற்காக டிரையர் மெஷினை பயன்படுத்துவது நல்லதல்ல. கோடைகாலத்தில் பொதுவாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். அது தலைமுடியிலும் பிரதிபலிக்கும். டிரையரும் வெப்பத்தை உமிழும்போது அது கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குளித்துமுடித்த பின்பு நன்றாக தலையை துவட்டி விடவேண்டும். கூந்தலை இயற்கையாக உலரவைப்பதே சிறந்தது.
* உஷ்ணம் படர்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தலைமுடியை கத்தரிப்பது நல்லது. கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் தலைமுடி வெப்பத்தாக்கத்தின் காரணமாக பிளவுபட்டும், உலர்ந்தும் காட்சியளிக்கும். ஆகையால் கூந்தலை ஓரளவு வெட்டிக்கொள்ளலாம். முடியை வெட்டாவிட்டாலும் கூந்தலின் அடிப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கும் விதத்தில் கூந்தல் அலங்காரத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்.
* சிலர் தலைமுடியை விதவிதமாக ‘கலரிங்’ செய்வார்கள். கோடைகாலத்தில் அந்த பழக்கத்தை கை விடுவது நல்லது. சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கூந்தலில் கலந்திருக்கும் ரசாயன கலவை முடிக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் தீட்டப்படும் நிறம், விரைவாகவே பொலிவை இழந்துவிடும். தலைமுடியும் அதிக வறட்சியடைந்துவிடும்.
* கோடையில் தண்ணீர் அதிகம் பருகுவது உடலுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் ஆரோக்கியம் தரும். குளிர்ச்சியான பானங்களை பருகலாம். குறிப்பாக பழச்சாறுகள், காய்கறி சாலட்டுகள் சாப்பிட்டு வரலாம்.
* கற்றாழையுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். அது கூந்தலை வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
* முட்டையும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எண்ணெய் பசையுடைய கூந்தலை கொண்டவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை தலையில் தேய்த்து தண்ணீரில் அலசி வரலாம்.
* 4 டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். அதனுடன் முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்துக்கொள்ளலாம். அது சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து கூந்தலை பாதுகாக்க உதவும்.
Average Rating