இறக்காமம்: கந்தூரி சோறு, நஞ்சான துயரம்..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 54 Second

article_1491808112-Food-poisoning---2222-newசுனாமிக்குப் பிறகு அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தத்தினை ஏற்படுத்திய அந்தச் சமையல், பிரமாண்டமான தயார்படுத்தல்களுடன் கடந்த புதன்கிழமை அதிகாலை ஆரம்பமானது. வாங்காமம் பகுதியிலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அந்த சமையலை ஏற்பாடு செய்திருந்தனர். பொதுமக்களின் நிதியுதவிகளைப் பெற்று, சோறு, கறி சமைத்து ஊருக்குப் பங்கிடும் அந்த நிகழ்வுக்கு ‘கந்தூரி’ என்று பெயர்.

நேர்ச்சைகளை முன்னிறுத்தியும், இறை நேசர்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பகுதிகளிலும் கந்தூரி நிகழ்வுகள் இடம்பெறும். வாங்காமம் முகிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நீண்ட காலமாக கந்தூரி நிகழ்வினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆயிரம் கிலோகிராம் அரிசி மற்றும் 06 மாடுகளின் இறைச்சி என்று அந்த சமையலானது, பெரும் ஏற்பாடுகளுடன் நடந்தது. அவ்வளவையும் சமைத்து முடிக்க வேண்டும் என்பதால், முன் காலைப் பொழுதிலேயே சமையல் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள். ஒரே நேரத்தில் சமைத்து முடித்து விட வேண்டும் என்பதால், 20 கிடாரங்களில் (பெரிய சமையல் பாத்திரம்) சோறு சமைக்கப்பட்டது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறியதொரு ஊர்தான் வாங்காமம். அங்குள்ள பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருந்த அந்த கந்தூரியை ஊரவர்கள் முன்னின்று நடத்தினார்கள். பொத்துவில் பிரதேசத்திலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த இரண்டு சமையல்காரர்கள் கந்தூரிக்குரிய உணவுகளைச் சமைத்தனர்.

புதன்கிழமை விடிந்ததும், கந்தூரி உணவுகளை பொதுமக்களுக்கு பகிரும் வேலை ஆரம்பித்தது. வாங்காமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி இறக்காமம் உள்ளிட்ட அருகில் உள்ள ஊரவர்களும் கந்தூரி உணவினை பெற்றுச் சென்றார்கள். கந்தூரி சமையல் நடைபெற்ற இடத்துக்குச் சென்றவர்கள் அங்கு சாப்பிட்டு விட்டு, குடும்பத்தினருக்கும் உணவினை எடுத்துக் கொண்டு சென்றனர்.

கந்தூரி என்பதை சமய ரீதியானதொரு சடங்காக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் பார்க்கின்றனர். அதனால், கந்தூரி உணவுகளை உண்பது, அவர்களுக்கு ஆத்மீக ரீதியிலும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது. எனவே, கந்தூரி சோற்றை கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. இன்னொருபுறம், தங்களின் நிதியில் நடைபெறும் சமையல் என்பதால், அந்த உணவினை பொதுமக்கள் மகிழ்வுடன் பெற்று உண்பது வழமையாகும்.

காலையிலிருந்து பகல் வரை சாப்பாடு பகிரப்பட்டது. அவற்றினை உட்கொண்டவர்களில் அநேகமானோருக்கு தலைசுற்று, வாந்தி, வயிற்றோட்டம் போன்றவை ஏற்பட்டன. அத்துடன் கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு கிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வரத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கானது. வைத்தியசாலையும் நிறையத் தொடங்கியது. அப்போதுதான் நிலைமையின் அபாயம் உணரப்பட்டது.

இறக்காமம் பிரதேச வைத்தியசாலை ஏராளமான குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு 05 வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில் மூவர்தான் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். போதிய கட்டட வசதிகள் இல்லை. மருத்துவ உபகரணங்களும் தேவையாக இருக்கின்றன.

அதனால், நூற்றுக் கணக்கான நோயாளர்களுக்கு, ஒரே நேரத்தில் – அவசர சிகிச்சை வழங்கும் வசதி இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் இருக்கவில்லை. போதாக்குறைக்கு, அந்த நேரத்தில், நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும், கந்தூரி உணவினை உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு அங்கிருந்த வைத்தியர்களும், ஏனைய பணியாளர்களும் நம்பிக்கையுடன் சிகிச்சை வழங்கத் தொடங்கினார்கள்.

வைத்தியசாலை விடுதிகளிலுள்ள கட்டில்களெல்லாம் பாதிக்கப்பட்டவர்களால் நிறைந்தன. எனவே, வைத்தியசாலை வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, அதனுள் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைகள் இடம்பெற்றன.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ள வைத்தியசாலைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிப்பு அதிகமாக உணரப்பட்டவர்கள், அம்பாறை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை தொடக்கம் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம் வரை (ஞாயிறு பகல் வேளை) கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு வந்துகொண்டிருந்தனர்.

நாடு தழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும், மேற்படி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் வைத்தியர்கள் மனிதாபிமானத்துடன் செயற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், இறக்காமம் வைத்தியசாலைக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினார்கள். இறக்காமம் வைத்தியசாலைக்கு நாம் சென்றிருந்த வேளை, இதனைக் நேரடியாகக் காணக்கிடைத்தது.

மட்டுமன்றி, ஏனைய வைத்தியசாலைககளிலிருந்து வந்திருந்த தாதியர்கள் மற்றும் பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்கள்.

இறக்காமம் வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எஸ்.எல். மன்சூர் என்பவருக்கு 52 வயது. இறக்காமத்தைச் சேரந்தவர் வாங்காமத்தில் வழங்கப்பட்ட கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் மன்சூரும் பாதிக்கப்பட்டிருந்தார். கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த அவருக்கு ‘சேலைன்’ வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. மிகவும் சோர்ந்து போயிருந்த அவருடன் பேசினோம். “புதன்கிழமை பகல், கந்தூரி சோறு கிடைத்தது. நானும் மனைவியும் சிறிதளவு சாப்பிட்டோம். அதன் பிறகு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் தலை வலியால் நான் பாதிக்கப்பட்டேன். அதனையடுத்து, வியாழக்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்” என்று, தனக்கு நடந்ததை மன்சூர் விபரித்தார். வெள்ளிக்கிழமை இரவு அவருடன் நாம் பேசினோம். இதில் ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், அதே உணவினை உட்கொண்ட மன்சூரின் மனைவிக்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

இந்த அனர்த்தத்தினால் கணிசமான சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். தனது கைக் குழுந்தையை மடியில் வைத்துக் கொண்டு, இறக்காமம் வைத்தியசாலையின் வெளி இருக்கையொன்றில் மிகவும் சோகத்துடன் அமர்ந்திருந்த அந்த இளைஞரை நெருங்கிப் பேசினோம்.

இஜாஸ் என்பது அவரின் பெயர். சம்பந்தப்பட்ட உணவை இஜாஸின் மனைவியும், மனைவியின் தாயும் சாப்பிட்டிருந்தனர். அதனையடுத்து, இஜாஸின் மனைவி கடுமையான பாதிப்புக்குள்ளாகினார். அந்த நிலையில், மனைவியிடம் பால் குடித்த இஜாஸின் ஒன்றரை வயது பெண் குழந்தையும் பாதிக்கப்பட்டது.

இப்போது இஜாஸின் மனைவி, மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறிப்பிட்ட உணவினை உட்கொண்ட இஜாஸின் மனைவியினுடைய தாயாருக்கு பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என்கிற செய்தியை இஜாஸ் நம்மிடம் கூறினார். சேலைன் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஜாஸின் குழந்தையைத் தொட்டுப் பார்த்தபோது காய்ச்சலின் வெம்மை கொதித்தது.
இறக்காமம் வைத்தியசாலை, விபரிக்க முடியாத சோகத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. நாம் அங்கிருந்த போது, பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைகளுக்காக வந்து கொண்டிருந்தனர். அதிக பாதிப்புக்குள்ளான சிலர், அம்பாறை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பியுலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த அனர்த்தத்துக்கு என்ன காரணம் என்பதை வைத்தியர்கள் உடனடியாக அனுமானித்துக் கொண்டனர். கந்தூரி உணவு விசமாகியிருக்க வேண்டும். அதற்கான ஆரம்ப சிகிச்சைகள்தான் வழங்கப்பட்டன. ஆனாலும், குறித்த கந்தூரியில் சமைக்கப்பட்ட உணவினை சாப்பிட்டவர்களில் சிலருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.எல். நிஸார், தனது குடும்பத்துடன் அந்த உணவினை சாப்பிட்டிருந்தார். ஆனால், அவர்களுக்கு எதுவித பிரச்சினையும் ஏற்படவில்லை.

ஊடகவியலாளர் நிஸாருடன் பேசினோம். “காலை 11.30 மணியளவில் கந்தூரி நிகழ்வு நடைபெற்ற இடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைத் தெரிந்தவர்கள் பலர் இருந்தனர். சாப்பிடுமாறு கூறினார்கள். அந்த இடத்திலேயே சாப்பிட்டேன். வீட்டுக்கு கொண்டு செல்வதற்கும் சாப்பாடு தந்தார்கள். அதை கொண்டு வந்து வீட்டில் கொடுத்தேன். மனைவி, குடும்பத்தவர்கள் அயலவர்கள் என பகிர்ந்து உண்டனர். ஆனால், அவர்களில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார் நிஸார்.

“இதன்படி பார்க்கையில், சமைக்கப்பட்ட உணவு ழுமுவதும் விசமடையவில்லை என்பதை ஓரளவு விளங்கிக் கொள்ள முடிகிறது. ஏதோ ஒரு பாத்திரத்தில் அல்லது சில பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவு மாத்திரமே விசமடைந்திருக்கிறது என்பதை அனுமானிக்கவும் முடிகிறது” என்று, ஊடகவியலாளர் நிஸார் விபரித்தார்.

கந்தூரி உணவைச் சாப்பிட்டவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகளைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பியிருந்தனர். தங்கி சிகிச்சை பெறுவதற்காக பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 49 வயதுடைய அபூபக்கர் காசிம்பாவா, சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடைய கலந்தர் மரியங்கண்டு மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயதுடைய அப்துல் மஜீத் ஹலீமா ஆகியோர், சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மரணமடைந்தனர். மேற்படி மூவரும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு உணவு நஞ்சடைந்தமைதான் காரணம் என்பதை வைத்திய அதிகாரிகாரிகளும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், எவ்வாறு நஞ்சடைந்தது என்பதற்கான காரணம், இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை, உறுதிப்படுத்தப்படவில்லை.

திட்டமிட்ட வகையில் மேற்படி கந்தூரி உணவில் விசம் கலக்கப்பட்டதா என்கிற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் தமண பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

முதற்கட்டமாக, சமையலுக்குப் பயண்படுத்தப்பட்ட உபகரணங்கள், சமையல் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவுகள், பாதிப்புற்றவர்களின் வாந்தி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, இரசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கந்தூரி நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட சமையற்காரர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இறக்காமம் மற்றும் வாங்காமம் கிராமங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அங்குள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பளிப்பதில் இராணுவத்தினரும் உதவி புரிந்துள்ளனர். இராணுவ வைத்தியர்கள், தாதியர்கள் இறக்காமம் வைத்தியசாலைக்கு வந்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கியிருந்தனர்.

அவர்களுடைய இரண்டு அம்பியுலன்ஸ் வண்டிகளும் இறக்காமம் வைத்தியசாலைக்கு வந்திருந்தன. இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இராணுவத்தினரின் இந்த உதவியினைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக பொறியியலாளர் மன்சூர் கூறுகையில், “வெள்ளிக்கிழமை காலை, கிழக்கு பிராந்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனாதீரவை தொடர்பு கொண்டு, வாங்காமம் – இறக்காமத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பில் தெரியப்படுத்தியதோடு, அவரிடம் மருத்துவ உதவி கோரினேன். அவர் வழங்குவதாகக் கூறினார். அதன் பின்னர் பாதுகாப்பு படையினரின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் பிரிகேடியர் முதலிகே என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினார். இதனையடுத்து, இறக்காமம் வைத்தியசாலைக்கு படையினரின் மருத்துவ உதவி கிடைத்தது” என்றார்.

இறக்காமத்தில் ஏற்பட்டுள்ள மேற்படி சோக நிகழ்வினையடுத்து, அங்கு அரசியல்வாதிகளும் வந்து செல்கின்றனர். சனிக்கிழமையன்று இறக்காமம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கிருந்த நோயார்களைப் பார்வையிட்டதோடு, சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுக்குமாறு தெரிவித்து ஒரு தொகைப்பணத்தினை வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கு துக்கம் விசாரிப்பதற்காகக் சென்றிருந்த அமைச்சர், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கியதோடு, “மரணித்தவர்களில் வறியவர்கள் இருவரின் குடும்பங்களுக்கு இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவேன்” எனவும் வாக்குறுதியளித்துள்ளார்.

ஆனால், சில அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யாமல், வெறுமனே ஊடக விளம்பரங்களுக்காக மட்டும், பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கின்றார்கள் என்று, பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அதிகளவு மக்கள் வாழ்கின்ற இறக்காமம் பிரதேசத்துக்கு, நல்லதொரு வைத்தியசாலையை வழங்கத் தவறிய ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் குறித்தும் அப் பிரதேச மக்கள் விசனப்பட்டுக் கொள்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் முஸ்லிம்களாக இருந்து கொண்டு, அவர்களின் சமூகத்தவர்களுடைய சுகாதாரத் தேவையில், இத்தனை அலட்சியங்களுடன் இருந்திருக்கின்றார்கள் என்பது கவலையளிக்கிறது.

இன்னொருபுறம், இவ்வாறான பெரும் ஏற்பாடுகளுடன் நடைபெற்ற ஒரு நிகழ்வில், சமைக்கப்பட்ட உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் அங்குள்ள பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளும் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதும் இங்கு கேள்விக்குரியதாகும்.

வழமைபோல், வெள்ளம் வந்த பிறகு அணைகட்டும் மூடர்களாக, எத்தனை காலத்துக்குத்தான் நம்மவர்கள் இருக்கப் போகிறார்கள். இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும், விரைவில் சுகமடைய பிராத்திப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகேஷ்பாபு படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!!
Next post சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!