வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது.
முப்படையினர் ஊடாகவும் பொதுமக்களின் காணிகளை அரசு அபகரித்துக் கொள்கிறது. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்தானை எனும் இடத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் விவசாயக் காணிகளை, தொல்பொருளியல் திணைக்களம் வளைத்துப் போட்டது.
இந்த நிலையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, பொத்தானை காணிகளைச் சில மாதங்களுக்குள் விடுவிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் போன்று, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் இதுவரை உரத்த குரலில் பேசப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
தமிழர் சமூகமும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இந்த விவகாரத்தில் காட்டும் அக்கறையும் நடவடிக்கைகளும் சிலாகிக்கத்தக்கவை.
ஆனால், முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பெரிதாக அக்கறை செலுத்தவில்லை. ஆட்சியாளர்களை அணுசரித்துக்கொண்டு, ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வரும், காணி அபகரிப்புகளுக்கு எதிராகப் பேச வேண்டிய ‘இக்கட்டு’க்குள், அநேகமாக முஸ்லிம் அரசியல் சிக்கித் தவித்து வருகிறது.
வடக்கு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளில் வில்பத்து விவகாரம் முக்கியமானதாகும். வடக்கிலிருந்து 1990 களில் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களின் வாழ்விடங்களை மீளப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் வெளியேறிய பின்னர் காடாகிப் போன அவர்களின் நிலங்களை, வில்பத்து காட்டுடன் அரசு இணைத்துக் கொண்டது. யுத்தத்துக்குப் பின்னர் தமது நிலங்களுக்குத் திரும்பி, அங்கு வளர்ந்திருந்த காடுகளை மக்கள் வெட்டித் துப்புரவு செய்யத் தொடங்கிய போது, ‘வில்பத்து காடுகளை முஸ்லிம்கள் அழித்துக் குடியேறுகின்றனர்’ என்கிற இனவாதக் கோசம் எழுந்தது. அந்தக்கோசம் இப்போது அரசியலாகி விட்டது.
அதனால், வில்பத்து காணிப் பிரச்சினையை விடவும், அதனைச் சுற்றி எழுந்துள்ள அரசியல், சிக்கல் மிகுந்ததாக மாறியுள்ளது. பேரினவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினையாக ஒருபுறம் வில்பத்து விவகாரம் திசை திரும்பியுள்ளது.
இந்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையிலான சச்சரவாகவும் வில்பத்து மாறிப் போயுள்ளது. இதன் காரணமாக, வில்பத்துக் காணிப் பிரச்சினையினைத் தீர்த்துக் கொள்வதிலுள்ள முடிச்சு, மேலும் இறுகிப் போயுள்ளது.
வில்பத்து விவகாரத்தில், முஸ்லிம்கள் சார்பாக அதிக அக்கறை காட்டி வருபவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பதை மறுக்க முடியாது. ‘தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்’ என்பார்கள். அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் வடக்கைச் சேர்ந்தவர் என்பதால், வில்பத்து விவகாரத்தில் அவர் காட்டிவரும் அக்கறை இயல்பானதாகும்.
வடக்கிலிருந்து 1990 களில் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது, ரிஷாட் பதியுதீனும் ஏதிலியாக வெளியேறினார். இன்றுவரை, வாழ்விடத்தை இழந்து அவர் வசித்து வருகின்றார். அதனால், ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை விடவும், வாழ்விடத்தை இழத்தலின் வலியை அனுபவபூர்வமாக ரிஷாட் பதியுதீன் அறிந்தவராக உள்ளார்.
எனவேதான், வில்பத்து விவகாரத்தில் காணிகளை இழந்துள்ள முஸ்லிம் மக்களுக்கு, நியாயத்தினைப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதீத அக்கறை காட்டி வருகின்றார்.
ரிஷாட் பதியுதீனின் இந்த செயற்பாடுகள், அவருடன் நேரடியாக போட்டி அரசியலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கண்ணில் விழுந்த தூசியாக மாறி, கரிக்கத் தொடங்கியுள்ளது.
“வில்பத்து விவகாரத்தினை தனது அரசியல் சுய இலாபங்களுக்காக ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திக் கொண்டிக்கின்றார்” என்று, அவரின் போட்டி அரசியல்வாதிகளும் கட்சியினரும் குற்றம் சாட்டி வருவதோடு, ஊடகங்களிலும் தோன்றி கோசமிடத் தொடங்கியுள்ளனர்.
இதனால், வடக்கு முஸ்லிம்களின் மிகப் பெரும் காணிப் பிரச்சினையான வில்பத்து விவகாரம் திசைமாறி வருகிறது.
வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள ஐந்து வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டிருந்தார்.
ஏற்கெனவே, 2012ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் வில்பத்து வனத்தின் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.
இந்த வர்த்தமானி அறிவித்தல்களினூடாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் ஓர் இலட்சம் ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலினூடாக முஸ்லிம் மக்களின் 44 ஆயிரம் ஹெக்டயர் காணிகள், அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று, இந்த ஆட்சியில் முக்கிய அமைச்சராகவுள்ள ரிஷாட் பதியுதீன் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வில்பத்திலுள்ள ஐந்து வனங்களை ஒன்றிணைத்து தனியானதொரு வனமாகப் பிரகடனப்படுத்தியமையினை அடுத்து, முசலி பிரதேச சபைக்குட்பட்ட 11 முஸ்லிம் கிராமங்களின் பெருமளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, காயன்குழி, அளக்கட்டு, கொண்டச்சி, கூழான்குளம், தம்பட்ட முசலி, அகத்தி முறிப்பு, பொற்கேணி மற்றும் பிச்சை வாணிபன் நெடுங்குளம் ஆகிய முஸ்லிம் கிராமங்களுக்குச் சொந்தமான காணிகள்தான் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் 40 பிரதேச சபைகள் உள்ளன. அவற்றில் முசலி மட்டுமே முஸ்லிம் பிரதேச சபையாகும். முசலி பிரதேச சபை மன்னார் மாவட்டத்தில் உள்ளது. இந்தப் பிரதேச சபையின் கீழ் 22 முஸ்லிம் கிராமங்களும் ஆறு தமிழர் கிராமங்களும் சிங்களக் கிராமமொன்றும் உள்ளன.
இன்னொருபுறம், வில்பத்து காடுகளின் எல்லை, மன்னார் மாவட்டத்துக்குள் வராது என்றும், மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேசங்களை வில்பத்து வனப் பகுதிகளாக அறிவித்துள்ளமையானது முற்றிலும் தவறானதாகும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.
வில்பத்து விவகாரத்தில் ரிஷாட் பதியுதீன் தனித்து இயங்குவதை அவருடன் எதிர் அரசியல் செய்யும் தரப்பினர்கள் எதிர்த்து வருகின்றனர்.
வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்குமாயின், அதற்குரிய நற்பெயர், ரிஷாட் பதியுதீனை மட்டும் சென்றடைந்து விடக்கூடாது என்பதும், அவ்வாறு நிகழ்வது தமது அரசியலுக்குப் பாதகமாக அமைந்து விடும் என்பதும்தான் மேற்படி எதிர்ப்புக்கு பிரதான காரணமாகும்.
வடக்கு மண்ணுடனும் மக்களுடனும் அதிக நெருக்கத்தினைக் கொண்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், வில்பத்து பிரச்சினையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம்கள் சார்ந்து எடுத்து வரும் முயற்சிகளுக்கு, கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று, ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தோள் கொடுப்பதுதான், சமூகம் சார்ந்த அரசியலாகும்.
வில்பத்து விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பிழையானதொரு நபராகச் சித்தரித்துக் காட்டுவதற்கான முயற்சிகளை, அவருடன் எதிர் அரசியல் செய்கின்றவர்கள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமையினை, ஊடகங்களில் காணக் கிடைக்கிறது.
இன்னொருபுறம், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தனிப்பட்ட குரோதத்தினைக் கொண்டுள்ள சில ஊடகப் பிரமுகர்கள், ரிஷாட் பதியுதீனுக்கு எதிரானவர்களை தமது அலைவரிசைகளுக்கு அழைத்து வசைபாட வைக்கின்றமையினையும் அடிக்கடி காண முடிகிறது.
எது எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீனுடனான அரசியல் குரோதத்தினைத் தீர்த்துக் கொள்வதற்கான அரங்காக, வில்பத்து விவகாரத்தினை முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதுதான், சமூக அக்கறையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் தங்களுக்கு வழங்கவில்லை என்பதற்காக, அவரைப் பழி தீர்க்கும் பொறியாக வில்பத்து விவகாரத்தினை பயன்படுத்த நினைக்கின்றவர்களை முஸ்லிம் சமூகம் மன்னிக்காது.
வில்பத்துப் பிரச்சினை என்பது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய தனிப்பட்ட விவகாரமல்ல என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். வில்பத்து விவகாரத்தில் ரிஸாட் பதியுதீன் அரசியல் இலாபம் அடைந்து விடுவார் என்று, அவருக்கு எதிராக அரசியல் செய்வோர் அச்சப்படுவார்களாயின், ரிஷாட் பதியுதீனை விடவும் இந்த விவகாரத்தில் அவர்கள் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.
ரிஷாட்டை வில்பத்து விவகாரத்தில் ஓரம் கட்டுவதற்கு, அதுவே சிறந்த அரசியல் நடவடிக்கையாக அமையும். ஆனாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு, இந்த விடயத்தில் இணங்கி நடப்பதுதான் சமூக அக்கறையுடைய செயற்பாடாக அமையும்.
இன்னொரு புறம், ‘வில்பத்து விவகாரத்தில் ரிஷாட் பதியுதீன் அரசியல் இலாபங்களைப் பெறும் நோக்கில் தனித்துச் செயற்படுகின்றார் என்கிற குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபடுபட்டு வருகின்றார்.
அண்மையில் வில்பத்து தொடர்பாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதியின் செயலாளர்
பி.பி. அபேகோனுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பங்குபற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் சிவில் அமைப்புகளான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் போன்றவற்றினையும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி ஆகியோரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமையும் இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு அழைத்ததாகவும் ஆனால் அவர் வருகை தரவில்லை என்றும் ரிஷாட் தரப்பு கூறுகிறது.
முடிந்த வரையில், இவ்வாறு முஸ்லிம் தரப்புகளை இணைத்துக் கொண்டு, வில்பத்து விவகாரத்துக்குத் தீர்வுகாண முயற்சிக்கும் நடவடிக்கையானது பாராட்டுக்குரியதாகும்.
ஆனாலும், வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரையும் இணைத்துக் கொள்கின்றமையானது எந்தளவு சாதுரியமான செயற்பாடு என்பது கேள்விக்குரியதாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரங்களைக் கையாள்வதற்கான ஓர் அமைப்பாகும். உலமா சபையினை ஏற்கெனவே பல்வேறு விடயங்களில் பொதுபல சேனா போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், வில்பத்து விவகாரத்தில் ஜம்இய்யத்துல் உலமா சபையினர் மூக்கை நுழைத்தால், பதிலுக்கு சிங்கள கடும்போக்கு அமைப்புகளும் படு தீவிரமாகக் களமிறங்கத் தொடங்கும்.
ஏற்கெனவே, வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மற்றும் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வில்பத்துப் பிரச்சினை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெளிவினை ஏற்படுத்தியிருந்தால், அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி வெளியிட்டிருக்க மாட்டார் என்று, ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் உரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்திருந்தார்.
சிங்களக் கடும்போக்கு அமைப்புகளும் சில ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழிநடத்தியுள்ளன என்றும் அதன் காரணமாகவே, ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்றும், குறித்த நபர் அந்த நிகழ்வில் விபரித்திருந்தார்.
ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு குற்றச்சாட்டாக இதைக் கண்டுகொள்ள முடியவில்லை. மிக முக்கியமானதொரு பிரச்சினை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிடுவதற் முன்னர், அவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவற்றவராக இருந்தார் எனக் கூறுவது அபத்தமானதாகும்.
எனவே, வில்பத்து விவகாரத்தினை வைத்துக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டி மோதிக் கொள்வதை விடுத்து, தமது மக்களின் வாழ்விடங்களை மீளப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் முஸ்லிம் சமூக அக்கறையாளர்களின் அவாவாக உள்ளது.
Average Rating