மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை..!! (கட்டுரை)

Read Time:19 Minute, 49 Second

imagesஇன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள் இறைமைக்கும் மதிப்பளித்துள்ளதா? மதிப்பளிக்கின்றதா? என்ற மிகப்பெரிய சந்தேகத்துக்கு விடைதேடும் முகமாக நாடாளுமன்றம் நீதியியல் ரீதியாக எவ்வாறான கடப்பாட்டைச் செலுத்துகின்றது? இதில் மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமையவேண்டும்? போன்ற விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடும் நோக்கத்துடனும் இது தொடர்பான விவாதங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இக்கட்டுரைத் தொடர் பிரசுரமாகின்றது.

முன்னைய (23.02.2017 ஆம் திகதி) கட்டுரையில், 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் பாயிரம், அரசகொள்கை வழிக்காட்டல் தத்துவங்கள் பற்றி நாம் அவதானம் செலுத்தவில்லை என்பது குறித்து ஆராய்ந்தோம்.அதாவது, அத்தியாயம் IV அரச கொள்கை வழிகாட்டல் கோட்பாடு, நாடாளுமன்றத்தினையும் ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் வழிகாட்டுவதோடு, அதில் அரசு ஜனநாயக சோசலிசச் சமூகம் ஒன்றை தாபிக்கும் குறிக்கோள்களை உள்ளடக்குவதாக கூறுகின்றது.

அதில், (ஆ) தேசிய வாழ்வின் அமைவுகளெல்லாம், சமூக, பொருளாதார, அரசியல், நீதியால் வழிப்படுத்தப்படுவனவாக அமைந்த ஒரு சமூக ஒழுங்குமுறையைச் செவ்வையான முறையில் ஆக்கிப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் சேமநலனை மேம்படுத்தல்.

(இ) போதிய உணவு, உடை, வீட்டுவசதி, வாழ்க்கை நிலைமைகளில் தொடர்ச்சியான சீர்த்திருத்தம், ஓய்வு நேரத்தை முழுமையாகத் துய்த்தல், சமூக கலாசார வாய்ப்புகள் என்பன உட்பட, எல்லாப்பிரசைகளும் அவர்களது குடும்பத்தினரும் போதியதான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தல்.

(ஈ) பகிரங்க பொருளாதார முயற்சியின் மூலமும் அத்தகைய பகிரங்க பொருளாதார முயற்சியையும் தனியார் பொருளாதார முயற்சியையும் சமூகக் குறிக்கோள்களுக்காகவும் பொதுமக்கள் நலனுக்காகவும் நெறிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உகந்ததாக இருக்கக்கூடிய அத்தகைய திட்டமிடலையும் கட்டுப்பாடுகளையும் விதித்துரைக்கின்ற சட்டங்களின் மூலமும் நாடு முழுவதையும் விரைவாக அபிவிருத்தி செய்தல் என்பன எம்மால் நோக்கப்பட வேண்டிய முக்கியமாக குறிக்கோள்களாக உள்ளன. அத்தோடு,

(5) இனக் கூட்டத்தினர் மதக் கூட்டத்தினர், மொழிக்கூட்டத்தினர் எப்போதும் வேறு கூட்டத்தினரும் உட்பட, இலங்கையிலுள்ள எல்லாப் பிரிவினரான மக்களிடையேயும் ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதன் மூலமும் அரசானது தேசிய ஐக்கியத்தை பலப்படுத்தல் வேண்டும் என்பதுடன் ஓரங்கட்டுதலையும் பராபட்சத்தையும் நீக்குவதற்கென போதித்தல், கல்வியூட்டல், தகவலறிவிப்பு ஆகிய துறைகளில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

(6) அரசானது பிரஜை எவரும் இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அரசியல் அபிப்பிராயம் காரணமாக அல்லது முயற்சி காரணமாக ஏதேனும் தகுதியீனத்துக்குட்படாத வண்ணம் பிரஜைகளுக்குச் சமவாய்ப்புகளை உறுதிப்படுத்தல் வேண்டும்.

(7) அரசானது பொருளாதார சமூகச் சலுகையையும் ஏற்றதாழ்வுகளையும் மனிதன் மனிதனைச் சுரண்டுதலையும் அல்லது அரசு மனிதனைச் சுரண்டுதலையும் ஒழித்தல் வேண்டும்.

(8) பொருளாதாரக் கட்டமைப்பின் செயற்பாடானது, செல்வமும், உற்பத்தி சாதனங்களும் பொதுமக்களில் சிலரிடமே குவியாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.

(13) பிள்ளைகளினதும் இளம் ஆட்களினதும் உடல் வளர்ச்சியை உளவளர்ச்சியை, ஒழுக்க வளர்ச்சியை, மதவளர்ச்சியை, சமூக வளர்ச்சியை, முழுமையாக விருத்தி செய்வதனை உறுதிப்படுத்துவதற்கும் சுரண்டலிலிருந்தும் ஓரங்கட்டப்படுவதிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்கும் என, அரசானது அவர்களின் நலன்களை விசேட கவனத்தோடு மேம்படுத்துதல் வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது.

மக்களுக்கான மக்களாலான ஆட்சியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் சேர்த்து மக்கள் உரிமைகளும் அதிகாரமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இலங்கை மக்களின் இறைமை நாடாளுமன்றம், ஜனாதிபதி, நீதிமன்றம், மக்கள் தீர்ப்பு (தேர்தல்), அடிப்படை உரிமைகள் எனும் ஐந்து விடயங்களைக் கொண்டுள்ளது என அரசியலமைப்புக் கூறுகின்றது.

இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைமை இடம் பெறுகின்றதா? மக்கள் இறைமை பேணப்படுகின்றதா? பாதுகாக்கப்படுகின்றதா? நாடாளுமன்றம் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும், மக்கள் உரிமைகளையும் பேணுகின்றதா? எனும் கேள்விகளுக்கு பதில் தேடும் பட்சத்தில் அதற்கு அசாதாரணமான பதில் கிடைக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

மாறாக, இவை தொடர்பாக மக்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதற்கு அப்பால், நாடாளுமன்றம், அமைச்சரவை, ஜனாதிபதி, அரசஅலுவலர்கள் ஆகியோர் அரசியலமைப்பினைப் பின்பற்றுகின்றனரா? அதைப் பேணுகின்றனரா? என்பதும் முக்கியமான விடயமாகும். ஏனெனில், இன்று இலங்கைச் சமூகம் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் அரசியலமைப்பைப் பற்றி சிந்திக்காமையாகும். அரசியலமைப்பு என்று ஒன்றுள்ளது என்பதை அவர்கள் ஞாபகம் வைத்திருப்பார்களானால் அதுவே பெரிய வெற்றி.

ஏனெனில், இலங்கையில் அதிகாரத்தில் உள்ளோரும், அதிகாரத்தில் இருந்தோரும் ஆளப்படுவோரும் அரசியலமைப்பினை, சட்டத்தினை மிகவும் சாதாரணமாக, எந்தவிதமான மனஉறுத்தல்கள் இல்லாமல் மீறுகின்றனர்.

இதனாலேதான் பிரச்சினைகள் மலிந்த நாடாக இலங்கை காணப்படுகின்றது. இனங்களுக்கிடையே ஐக்கியம் இல்லாமல் போயுள்ளது. உதாரணமாக அரசியலமைப்பு பாயிரத்தில் இவ்வாறு ஒரு வாசகம் ‘….எல்லா மக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி, அடிப்படை மனிதஉரிமைகள் ஆகியவற்றையும் நீதித்துறை சுதந்திரமானதுமான சமூகம் ஒன்றை ஏற்படுத்திப் பேணிக் காக்கவென முயற்சி எடுக்கப்படும்….’ எனக் கூறுகின்றது. இதனை யார் அறிவார்? யார் பின்பற்றுகின்றார்?
அரசகொள்கை வழிகாட்டல் தத்துவங்களில் ‘பொருளாதார கட்டமைப்பின் செயற்பாடானது, செல்வமும், உற்பத்தி சாதனங்களும் பொதுமக்களில் சிலரிடம் குவியாமல் இருப்பதை அரசு உறுதிபடுத்தல் வேண்டும்’ என ஓர் உறுப்புரை கூறுகின்றது. Water’s Edge case, Gale face Green case எனும் மிக முக்கியமான இரண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்களில் (வேறு சில தீர்ப்புகளிலும் கூட) அரசு எவ்வாறு இயற்கை வளங்களை மக்களுக்காக, எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க, நம்பிக்கைப் பொறுப்பாளராகச் செயற்படக் கடமைப்பட்டுள்ளது என அரசியலமைப்பினைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பு வழங்கியது.
இதனால் அரச வளம், சேற்றுநிலம், கடற்கரைகள் வெளிநாட்டவருக்கு விற்காமல் பேணப்பட்டன. ஆனால், மஹிந்தவின் ஆட்சியில் கொழும்பு மாநகரத்தில் பல சேற்று நிலங்கள், நீர் நிலைகள் மண் நிரப்பப்பட்டுக் கட்டடங்கள் கட்டப்பட்டன.
கடைசியில் அடை மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தனர்; ஆதனங்கள் சேதமடைந்தன. இதற்கு யார் பொறுப்பேற்றார்கள்?

இதேபோல் சென்னையில் பெய்த அடை மழையினால் உயிர்ச்சேதம், உடைமைச்சேதம் என மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர். அதன்பின்னர், இதற்கான காரணங்களைத்தேடியபோது, அங்கிருந்த குளங்கள் இல்லாமலாக்கப்பட்டதும், கட்டடங்கள் கட்டப்பட்டமையும் முறையாகத் திட்டமிடப்படாத அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையுமே மிக முக்கியமான காரணங்கள் என அடையாளம் காணப்பட்டது.

இதை யார் செய்தார்? அதிகாரத்திலுள்ளோருக்கு இதைச் செய்ய யார் அனுமதி வழங்கினார்? மக்களின் விருப்பத்துடனா இவை நடந்தன? என உற்றுப் பார்த்தால் மக்களுக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது என்பதுதான் உண்மை.
எனவே, மக்கள் இறைமையை, பிரதிநிதித்துவ ஜனநாயகம் அவ்வாறே பிரதிபலிக்க வில்லை என்பது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பின்பற்றிவரும் நடைமுறையிலிருந்து தெளிவாகின்றது.

ஏன் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் ஒபாமா கொண்டு வந்த திட்டங்களை டொனால்ட் ட்ரம்ப் இல்லாமலாக்கினார்; முஸ்லிம் நாடுகள் சிலவற்றின் மீது பயணத்தடை விதித்தார்.

இந்தப் பின்னணியில்தான், கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினை நோக்க வேண்டும். மஹிந்த ஆட்சியில் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கொழும்புத்துறைமுகம் எல்லாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப்பட்டன என்ற பிரசாரத்தினை முன்வைத்து வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் அதையே முன்னெடுக்கின்றது.

காலிமுகத்திடலில் மக்களுக்கு காற்றுவீசும் அளவை துறைமுக நகரத்திட்டம் கட்டுப்படுத்தியுள்ளது; கடல் மீன் வளத்தினை துறைமுக நகரத்திட்டம் இல்லாதொழித்துள்ளது. மீன் முட்டைகளையும் இனப்பெருக்கத்தையும் மட்டுப்படுத்தி மீனவர் வயி‌ற்றிலடித்து, வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்கின்றது.

கடந்த அரசாங்கம் வழங்கிய அளவை விட அதிகமான அளவில், கடல் சீனர்களுக்கு 99 வருடங்களுக்கு விற்கப்பட்டுள்ளது? இறக்குமதி வர்த்தகம் செய்வோரின் நலனிலும் வெளிநாடுகளின் நலனிலும் அரசாங்ம் அக்கறைக் காட்டுகின்றது. அப்படியென்றால், அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகள் எதற்காக? யாரை வழிப்படுத்துவதற்காக?

பொலன்னறுவை, அனுராதபுரப் பிரதேசங்களில் மன்னர்கள் கட்டிய குளங்களைத் தூர்வாராமலும், குளக்கரைகளை அதிகாரத்திலுள்ளோர் ஆக்கிரமிப்புச் செய்து, உல்லாச விடுதிகள் அமைத்துக் கொண்டும், நீர் கொள்ளளவினைக் குறைத்தும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வரட்சியும் வறுமையும் மக்களை நீங்காமல் இருக்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளனர்.

அரிசி விலையை அவர்களே தீர்மானிக்கின்றனர்; விவசாய உற்பத்திப்பொருட்களின் விலையில் மாத்திரம் உற்பத்தியாளர்கள் விலையைத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதனைத் தரகர்கள் தீர்மானிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளாகியுள்ளனர்.

உலகுக்குச் சோறு போடும் விவசாயி பட்டினியால்ச் சாவதும், கடன் சுமையினால் தற்கொலை செய்து கொள்வதும், உற்பத்தி செய்த நெல்லினை விற்பனை செய்து கொள்ள முடியாமலும், நியாயமானவிலை இல்லாமலும் மா(கு)பியாக்களுக்குள் அகப்பட்டுத் துன்பம் அனுபவிக்கின்றனர்.

அரசாங்கம் இந்தோனேசியாவிலிருந்து நெல் இறக்குமதி செய்கின்றது. இது மக்கள் வழங்கிய ஆணையா? அரசாங்கத்தின் அராஜகமா? விளை நிலங்கள் எங்கே? அரசாங்கம் விவசாயத்தை ஏன் ஊக்குவிக்கவில்லை?

அமைச்சர்களின் வாகனத்துக்காக ஒதுக்கிய 56 கோடி ரூபாயை ஏன் விவசாய மேம்பாட்டுக்கு, பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக செலவிட முடியாது? மக்கள் பட்டியினால், கடன் சுமையினால் வாடும் போது பிரதிநிதிகளுக்குச் சொகுசு வாகனங்களா? இது ஜனநாயகமா? மக்கள் இறைமை?……..?

யார் இதற்குப் பொறுப்பு? யார் தண்டிப்பது? நீதித்துறை அதைப் பக்கசார்பின்றி சுயாதீனமாகச் செய்கின்றதா? மக்கள் தேர்தலின் போது அதற்கு தண்டணை வழக்குகின்றனரா? மக்கள் கேள்வி கேட்கின்றனரா?

இலங்கையில் தற்போது நிறைவேற்றுத் துறைக்கு நட்புறவாக நீதித்துறை காணப்படுவதாக முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கூறினார். இதுதான் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சித்துறையின் தன்மை.

நீதித்துறையும் அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குமா? ஒரு சில சந்தரப்பங்கள் இல்லாமல் இல்லை. பொதுவாக நீதித்துறை அரசாங்கத்தின் முடிவுகளிலும் செயற்பாடுகளிலும் தலையிடுவதில்லை. நாடாளுமன்றமும் அதை அனுமதிப்பதும் இல்லை.

அப்படியென்றால் யார் மக்களை, நாட்டை, வளங்களைப் பாதுகாப்பது? மக்கள் அதை சரியாக நிறைவேற்றுகின்றனரா? இல்லை! என்பதால்தான் ஜனநாயகம் தோல்விகண்டுள்ளது.

குற்றம் இழைப்போரும், கொள்ளைக்காரர்களும் சுதந்திரமாக, அரச பாதுகாப்புடன் இருப்பதனாலேயே இவர்கள் மக்களை ஆளுகின்றனர். மக்களும் இவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இலங்கையில் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், துமிந்த சில்வா அவருடன் அரசியல் கொலை, அராஜகம் செய்த பலருக்கு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியது. இதுபோல, அரசியல் என்ற பெயரில் குற்றங்கள் பல செய்து வந்தோருக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன. பதுளை மேல் நீதிமன்றம் அரச ஊழியர்களான பொலிசாருக்கு அப்பாவியான 23 வயது இளைஞனை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் தண்டனை வழங்கியது.

இந்திய உச்சநீதிமன்றம் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி (காலஞ்சென்ற) ஜெயலலிதா, நண்பி சசிகலா, சுதாகரன் என்போருடன் சேர்ந்து சட்டத்துக்கு முரணாகச் சொத்துக் குவித்தமை தொடர்பான வழக்கில் முதலமைச்சர், அரசாங்க திணைக்களங்களை கட்டுப்படுத்துவார்; அவற்றின் பலர் இவ்வழக்கின் சாட்சிகள் என்பதால் வழக்கு கர்நாடக மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பதோடு உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டோர் வருமானத்துக்கு மேலதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் எனக் கண்டதுடன் ஆறு நிறுவனங்களை அரசுடைமையாக்கியது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் என்போர் சூட்சுமமாக இணைந்து சொத்துகளை கொள்ளையடித்துள்ளனர். எனவே, அவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பு வழங்கியது. இந்த 563 பக்கங்களைக் கொண்டதீர்ப்பில் மிகவும் ஆழமான ஆய்வின் முடிவிலே, நீதிமன்றம் அரசுஊழியர்கள் (குறிப்பாக அரசியல்வாதிகள்) எவ்வாறு செயற்படவேண்டும் எனக் கூறியுள்ளது. இதுபோன்ற தீர்ப்புகள் உலகில் ஜனநாயகத்தினை வலிமைப்படுத்துவதோடு குற்றவாளிகளுக்குப் பாடமாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

(தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கொன்று சடலத்தை மறைத்த கவுன்சிலர் கைது..!!
Next post `அஞ்சாதே’ படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா..!!