கோட்டாவும், பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்..!! (கட்டுரை)
ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச படைகளாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமை மீறப்பட்டமையை எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
இம்முறையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் ஜெனீவாவுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
இலங்கையில் அரச படைகளினால் அபகரிக்கப்பட்ட தமது காணிகளைக் கேட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடித் தருமாறும் வட பகுதியில் மக்கள் நடத்தும் போராட்டங்களும் திட்டமிட்டோ இல்லாமலோ சரியாக அந்தக் கால கட்டத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையில் மனித உரிமை நிலைமை ஜெனீவாவில் ஆராயப்பட்டு வரும் நிலையில், தென் பகுதியிலும் அது தொடர்பான ஒரு விவாதம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அது, ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்படாவிட்டாலும் தற்செயலாக அதே நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதிலும், அரசாங்கத்தின் சார்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்துவதில் தலைமை தாங்கிய இருவரிடையே அந்த விவாதம் நடைபெற்று வருவதும் முக்கிய விடயமாகும்.
போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அதேகால கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலேயே இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக இரகசிய பொலிஸார் முன்னாள் இராணுவத் தளபதியை விசாரித்துள்ளனர்.
லசந்த படுகொலை செய்யப்பட்ட காலத்தில் ஊடகவியலாளர்களையும் ஏனையவர்களையும் கடத்திக் கொலை செய்யும் கொலைக் கும்பலொன்றை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடத்தி வந்ததாகவும் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட அந்தக் குழுவை அக்காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாகவிருந்த கப்பில ஹெந்தாவித்தாரண மூலம் கொட்டாபயவே வழி நடத்தி வந்ததாகவும் பொன்சேகா தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இக்கொலைக் குழு தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்கியதாகவும் கொழும்பின் பாதுகாப்பு, மேஜர் ஜெனரல் அஜித் பெரேராவின் பொறுப்பில் இருந்ததாகவும் அதனால் கொழும்பில் நடைபெற்றவை தமக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
இரகசியப் பொலிஸார் அந்த வாக்கு மூலத்தைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திலும் குறிப்பிட்டனர். சாதாரண ஒருவரன்றி முன்னாள் இராணுவத் தளபதியே அக்காலத்தில் கொலைக் குழுக்கள் இயங்கியதாக பொது மேடையிலன்றி பொலிஸாருக்கு வழங்கி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வாக்குமூலமொன்றில் குறிப்பிடுவதாக இருந்தால் அது விளையாட்டு அல்ல. அது பாரதூரமான விடயமாகும்.
அக்காலத்தில் நாட்டில் பல பகுதிகளில் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத்தகவல் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்துக்கு சார்பான சிலரே இந்தக் கடத்தல்களிலும் கொலைகளிலும் ஈடுபட்டதாகப் பொதுவாக சகலரும் அறிந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக யார் வழிநடத்தினார்கள் என்பது தொடர்பாக இதுவரை எவரும் இவ்வளவு தைரியமாகவும் துல்லியமாகவும் கூறவில்லை.
தமக்குக் கீழ் கொலைக் குழுவொன்று இயங்கியதாக பொன்சேகா கூறியதை கோட்டாபய மறுத்துள்ளார். அத்தோடு இராணுவத்தினர் அவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபட்டு இருந்தால் அக்கால இராணுவத் தளபதி என்ற முறையில் பொன்சேகாவே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறியிருக்கும், அவர் அவ்வாறான சட்ட விரோத விடயங்கள் நடைபெறுவதாகத் தெரிந்திருந்தால் பொன்சேகா அக்காலத்தில் அவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது ஒன்றாய் திருடச் சென்றவர்கள் பின்னர் சண்டை பிடித்தால் என்ன நடக்குமோ அந்த நிலையை உருவாக்கியிருக்கிறது. இப்போது பொலிஸார் பொன்சேகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். அல்லது நீதிமன்றம் அவ்வாறு விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்.
கோட்டாபய, கப்பில ஹெந்தாவித்தாரண மற்றம் அஜித் பெரேரா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். பொன்சேகா கூறியவை அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே இருக்கும் முறுகல் நிலை காரணமாகக் கூறியவையல்ல என்பது தெளிவாக இருந்தால் அம்மூவரை கைது செய்யவும் வேண்டும். ஆனால், பொலிஸார் அந்தளவு தூரம் செல்வார்களா என்பது சந்தேகமே.
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த கொலைக்குழுவொன்று இயங்கியதாக பொன்சேகா கூறும் போது, அதற்குப் பொருத்தமாவதைப் போல் இரகசிய கொலைக் குழுக்களால் குறித்த அக்காலத்தில் சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பல வீரர்கள் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருப்பதேயாகும்.
இதுவரை லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ‘லங்கா ஈநியூஸ்’ ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, ‘டெய்லி மிரர்’ மற்றும் ‘சிலோன் டுடே’ பத்திரிகைகளின் பிரதி ஆசிரியராகவிருந்த கீத் நொயார் மற்றும் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றி இராணுவப் புலனாய்வுத்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் தாக்கப்பட்டவர்களால் அடையாளம் காணப்பட்டும் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘திவயின’ மற்றும் ‘ரிவிர’ பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த உபாலி தென்னகோனும் அவரது மனைவியும் அடையாள அணிவகுப்பொன்றின் போது உபாலியை தாக்கி கொலை செய்ய முயற்சித்தவர்களை அடையாளம் கண்டனர்.
கோட்டாபய தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கும் போது, சில தமிழ் அரசியல்வாதிகள் அவரைக் குற்றஞ்சாட்ட முன்வந்திருக்கிறார்கள். கோட்டாவின் காலத்தில் கடத்திக் கொல்லப்பட்ட 550 க்கு மேற்பட்ட தமிழர்களின் பெயர்ப் பட்டியலொன்று தம்மிடம் இருப்பதாகத் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அக்காலத்தில் நடந்த படுகொலைகளுக்குக் கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
கோட்டாபய இதனை மறுக்கலாம். ஆனால் லசந்த மற்றும் பல தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையை எவராலும் மறுக்க முடியாது. அதேபோல் கீத் நொயார், உபாலி தென்னகோன் மற்றும் போத்தல ஜயந்த ஆகிய மூத்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் உண்மையே.
பிரகீத் எக்நெலிகொட காணாமல் போனமையும் அது தொடர்பாக அரச தலைவர்களும் எம்.பிக்களும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துகளை வெளியிட்டமையும் சகலரும் அறிந்ததே.
மகாராஜா நிறுவனத்தின் ‘சிரஸ’, ‘சக்தி’ மற்றும் ‘சியத்த’ தொலைக் காட்சி நிறுவனங்கள் தாக்கப்பட்டமையை எவரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகம் பலமுறை தாக்கப்பட்டமை நாடகம் அல்ல.
இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார்? அக்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தமையினாலும் கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தமையினாலும் இவற்றுக்காக அவர்களை குற்றஞ்சாட்ட முடியாது எனச் சிலர் வாதிடலாம்.
உண்மைதான்! நேரடியான ஆதாரங்கள் இல்லாமல் அவர்களைக் குற்றஞ்சாட்ட முடியாதுதான். ஆனால், இவற்றில் எந்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணையும் வெற்றியளிக்காமை ஆச்சரியத்துக்குரியதாகும். இவற்றுக்காக 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவரும் கைது செய்யப்படாமையும் அவர்களது ஆட்சியின் போது விசாரணைகள் இடைநடுவே கைவிடப்பட்டமை அல்லது திசை திருப்பப்பட்டமை அக்கால ஆட்சியாளர்கள் மற்றும் பாதுகாப்புத்துறைத் தலைவர்கள் தொடர்பாக பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
லசந்த 2009 ஆம் ஆண்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய பிரதான சம்பவங்களும் ஏறத்தாழ அதற்கு அண்மித்த காலத்திலேயே இடம்பெற்றன. ஏறத்தாழ ஆறு வருடங்களாக எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் முறையான விசாரணைப் பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டாமா?
இலங்கைப் பொலிஸார் அந்தளவு மோசமானவர்கள் அல்ல. அவர்கள் தாம் மிகத் திறமையானவர்கள் என்பதைப் போர்க் காலத்தில் எடுத்துக் காட்டினர். உதாரணமாக 1991 ஆம் ஆண்டு கொழும்பில் கூட்டுப் படைத் தலைமையகம் தாக்கப்பட்ட போது, 24 மணித்தியாலங்களில் அதன் சூத்திரதாரியை தலவாக்கலையில் கைது செய்ய பொலிஸாரால் முடிந்தது.
பொலிஸார் நடவடிக்கை எடுக்காமைக்கு ஆட்சியாளர்களைக் குறை கூற முடியாது என்றும் சிலர் வாதிடலாம். மேலோட்டமாக எடுத்துப் பார்த்தால் அதுவும் உண்மைப்போல் தெரிகிறது. ஆனால், இலங்கையின் பொலிஸ் அவ்வளவு சுயாதீனமாக இயங்கும் நிறுவனம் அல்ல. ஆட்சியாளர்கள் விரும்பாததை இலங்கைப் பொலிஸார் ஒருபோதும் செய்வதில்லை. அதேபோல், அவ்வாறு நாம் வாதிடுவோமாக இருந்தால் தற்போது இராணுவ வீரர்கள் கைது செய்தமைக்காகவும் பிக்குகளை கைது செய்தமைக்காகவும் விமல் வீரவன்ச போன்றவர்களை் கைது செய்தமைக்கும் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை குறைகூற முடியாது.
எனவே, அக்காலப் படுகொலைகள் தொடர்பாக அக்கால அரசாங்கமும் அக்கால பாதுகாப்புச் செயலாளரும் நிச்சயமாக பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். குறைந்த பட்சம் தார்மிக ரீதியிலாவது பொறுப்பை ஏற்க வேண்டும்.
மறுபுறத்தில் பொன்சேகாவும் எனக்கு எதுவும் தெரியாது என்று தப்பித்துக் கொள்ள முடியாது. அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாலான கொலைக்குழுக்கள் இருந்ததாக அவர் கூறுவது உண்மையாக இருக்கலாம்.
கொழும்புப் பிரதேசத்தின் பாதுகாப்பு நேரடியாக மற்றொருவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் கூறுவதும் உண்மையாக இருக்கலாம். ஆனால், கொழும்பில் நிலவிய பாதுகாப்பு நிலைமை தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறுவதை நம்ப முடியாது.
அக்காலத்தில் புலிகள், கொழும்பிலும் பல தாக்குதல்களை நடத்தினார்கள். பஸ்களிலும் ரயில்களிலும் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். கொழும்பில் வைத்தே, அதுவும் இராணுவ தலைமையகத்துக்குள்ளேயே பொன்சேகாவின் வாகனம் தாக்கப்பட்டது. அவரும் படுகாயமடைந்தார்.
அவ்வாறிருக்க கொழும்பில் பாதுகாப்பு நிலைமையைப் பற்றி அவர் அக்கறை கொள்ளாமல் இருந்தார் என்றோ அதனைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றோ கூறுவதும் பொருத்தமற்றது. அதனை நம்புவதும் மடமையாகும்.
அவ்வாறு அவர் கொழும்பில் நடந்தவற்றை அறியாமல் இருந்திருந்தால் கொட்டாபயவின் கட்டுப்பாட்டிலும் இராணுவப் புலனாய்வுத் துறை அதிபராகவிருந்த கப்பில ஹெந்தாவித்தாரணவின் தலைமையிலும் கொலைக் குழுவொன்று இயங்கியதாக அவர் எவ்வாறு கூற முடியும்?
அக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஊடகவியலாளர்கள் கொழும்பில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அந்த ஆரப்பாட்டங்களின் போது பொன்சேகாவுக்கு எதிராகவும் கோஷமெழுப்பப்பட்டது. அப்போது எனது இராணுவத் தளபதியை குறை கூற வேண்டாம் என கோட்டாபயவே கூறியிருந்தார்.
ஊடகவியலாளர்கள் காரணமின்றி ஏன் பொன்சேகாவுக்கு எதிராக கோஷமெழுப்ப வேண்டும்? அக்காலத்தில் அவருக்கும் ஊடகத்துறைக்கும் இடையே நிலவிய உறவின் சுபாவத்தை ஊடகவியலாளர்கள் மறந்திருப்பார்கள் என பொன்சேகா நினைக்கிறார் போலும்.
அது நல்ல உறவாக இருக்கவில்லை. அரச பத்திரிகையொன்றுடன் நடத்திய பேட்டியொன்றின் போது, போன்சேகா சில ஊடகவியலாளர்களைத் ‘துரோகி’கள் என வர்ணித்தார். அது சர்வதேச அளவில் பரவி அவருக்கு எதிராகச் சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.
பொதுவாக பொன்சேகாவும் கொட்டாவும் இப்போது கூறுவதையெல்லாம் மொத்தமாக எடுத்துப் பார்த்தால், அக்காலத்தில் என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை வெளிநாட்டவர் ஒருவராலும்கூட ஊகித்துக் கொள்ள முடியும்.
அவரும் இவரும் அறிந்தும் சிலவேளை பங்களிப்புச் செய்தும் தான் பல காரியங்கள் செய்யப்பட்டன. இப்போது இருவருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒன்றாய் இருக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் பாதுகாத்தனர்.
உண்மை அதுதான். எவ்வாறாயினும் கொலைக்குழுக்கள் இருந்ததாக பொன்சேகா இப்போது கூறுவதை இருவருக்கும் இடையே நிலவும் முறுகல் நிலை காரணமாக கூறும் வெறும் அவதூறாக கருதாது சம்பந்தப்பட்டவர்கள் அது தோடரபாக விசாரணை நடத்தவேண்டும்.
Average Rating