ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்..!! (கட்டுரை)
தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.
‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நூற்றுக்கணக்கான போராட்டங்களைக் கண்டவை. ஆலய வளவுக்குள் போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் அறிவித்த பின்னரும், ஒரு சில போராட்டங்கள் அங்கு நடந்திருக்கின்றன.
ஆனால், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில், அதிகமானோருக்கு என்ன காரணத்துக்காகத் தாங்கள் அழைத்து வரப்பட்டோம் என்றே தெரிந்திருக்கவில்லை.
வெள்ளந்தியான பல தாய்மார், தாம் என்ன கூறி அங்கு அழைத்துவரப்பட்டோம் என்பதை, ஊடகவியலாளர்களிடம் எந்தவித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்தினர்.
அவர்களின் கைகளில் ‘எமது தலைவன்’ என்று நடிகர் ரஜினிகாந்தின் படம் தாங்கிய அட்டைகள் இருந்தன. அந்த அட்டைகளுக்குள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்வதில் அந்தத் தாய்மார் கவனம் செலுத்தினர்.
தம்மை கலைஞர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, மக்களை ஆர்ப்பாட்டக்களத்துக்கு அழைத்து வந்த நபர்கள், ஊடகவியலாளர்களின் கேள்விகளினால் அல்லாடினர்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 150 வீடுகள் வவுனியாவிலுள்ள சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளைப் பயனாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாகக் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பினை அடுத்து, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் சிலரினால் ரஜினிகாந்தை நோக்கி, விமர்சனத் தொனியிலான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அதில், தொல்.திருமாவளவனும் தி.வேல்முருகனும் முக்கியமானவர்கள்.
இந்த நிலைகளை அடுத்து, ரஜினிகாந்த் தன்னுடைய யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை இரத்து செய்வதாகக் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்தப் பின்னணியில்தான், குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.
ஆதரவு- எதிர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவது தனி மனித உரிமை. ஆனால், போராட்டமொன்றின் பின்னணி பற்றி அறிந்து கொள்வது சில புரிதல்களைப் பெற்றுக் கொள்ள உதவும். அதன்போக்கில் சில விடயங்களை இந்தப் பத்தி சுட்டிக்காட்ட விளைகின்றது.
ரஜினிகாந்தின் யாழ். வருகை பற்றிய செய்தி வெளியானதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக சந்திப்பொன்றை யாழ். ஊடக அமையத்தில் நடத்தியிருந்தார். அங்கு, ‘ரஜினியின் வருகை இப்போது அவசியமானதா?’ என்கிற தொனியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், அந்தச் செய்தி இணைய ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்ததோடு சரி; யாழ். முன்னணிப் பத்திரிகைகளில் இரண்டில் துண்டுச் செய்திகளாகக்கூட வெளியாகியிருக்கவில்லை. வழக்கமாக, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஊடகச் சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஊடகங்கள், ஏன் ரஜினிகாந்தின் வருகையை கேள்விக்குள்ளாக்கிய அவரது செய்திக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் மட்டத்தில் சந்தேகத்தோடு உரையாடப்பட்டது.
ஆனால், ரஜினிகாந்த் தன்னுடைய யாழ். வருகையை இரத்து செய்வதாக அறிவித்ததும், அடுத்த நாள் காலை, ‘மாவீரர் மண்ணைத் தரிசிக்க ஆவலாக இருந்த ரஜினியின் வருகை தடுக்கப்பட்டது’ என்கிற தோரணையில், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கேள்விகளைப் புறக்கணித்த ஊடகங்களே செய்தி வெளியிட்டன.
இது, சந்தேகங்களின் அளவினை ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும் அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலரினால் யாழ்ப்பாணத்தின் முன்னணி ஊடகவியலாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியினூடாகச் சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தின் முன்னணி நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும், அதிகமான ஊடகவியலாளர்கள் அந்தச் சந்திப்பினைத் தவிர்த்திருந்தனர். இந்த நிலையில்தான் ஆர்ப்பாட்டப் போராட்டத்துக்கான அழைப்பு, ‘ஈழத்து கலைஞர்கள் – வடக்கு மாகாணம்’ என்கிற பெயரோடு விடுக்கப்பட்டது.
குறித்த தகவலை இணையத்தில் முதலில் பகர்ந்தவர் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனாலும், அந்த நபர்கள் தொடர்பில் ஒருவிதமான சந்தேகமும் எள்ளலும் ஊடகவியலாளர்கள் மட்டத்திலும் இணைய வெளியிலும் பகரப்பட்டன.
ஆனால், அன்றிரவே பெரியளவில் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டிகளை ஒட்டுவது உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்வதற்கான ஒப்பந்தம் அரசியல் கட்சியொன்றை நடத்தும் நபரொருவருக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரவழைக்கப்பட்ட மக்களில் குறிப்பிட்டளவானவர்கள், சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளையும் பெறவுள்ள பயனாளர்கள். அவர்களிடம் வீடுகளை வழங்குவது தொடர்பிலான கூட்டம் என்று கூறி அழைத்து வரப்பட்டார்கள்.
இன்னொரு பகுதியினர் யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் எதிர்காலத்தில் வீட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் என்று கூறப்பட்டதாக அங்கு வந்திருந்த தாய்மார் கூறினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 30 சதவீதமானவர்களுக்கே தாம் ஏன் அங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது. அவர்களில் பலருக்கும், “ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால், வீடுகள் வழங்கப்படாது” என்கிற தொனியிலான விடயமும் பகரப்பட்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் கொடூரங்களைச் சந்தித்துவிட்டு, கடந்த எட்டு ஆண்டுகளாகத் தகரக் கொட்டில்களில் வாழும் மக்களுக்கு வீடு எவ்வளவு முக்கியமானது என்பது, அந்த வாழ்க்கையோடு உழன்று பார்த்தவர்களுக்குப் புரியும்.
ஆனால், அந்த மக்களின் நிலையைத் தங்களின் தனிப்பட்ட அரசியலுக்காகவும் நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்வதிலுள்ள வக்கிரம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வீடுகள் என்பது தவிர்க்க முடியாத தேவை. அவர்களை நோக்கி, “பிச்சையெடுக்க வந்திருக்கின்றார்கள், இவர்களினால்தான் தமிழ்த் தேசியப் போராட்டங்களுக்கே அவமானம்” என்கிற தோரணையிலான வசைபாடல்கள் ஒருவகையில் பொறுக்கித்தனமானவை.
அதிகாரத்தின் கைகள் அல்லது சதி வலைகளைப் பின்னியவர்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை நோக்கி ஓர் ஏளன மனநிலையோடு கைகளை நீடிக்கொண்டு துப்புவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
எப்போதுமே அதிகாரத்தின் கைகளுக்குள் அகப்பட்டு, அல்லாடும் மக்கள் சில நேரங்களில், அதன்போக்கில் பயணித்தே அந்தக் கொடுங்கரங்களுக்குள் இருந்து வெளி வந்திருக்கின்றார்கள்.
இதுதான் கடந்த கால வரலாறும் கூட. இதற்கான உதாரணங்கள் சிலவற்றையும் இங்கு பட்டியலிடுவது சுலபமானது. வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், யாழ். நகரப்பகுதியில், வடக்கின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகளைக் கொண்டு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடத்தியது யார்? எந்தத் தரப்பு என்று அனைவருக்கும் தெரியும். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் போராளிகளுக்கு எவ்வளவு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பதுவும் தெரியும்.
அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற அரச ஆதரவுக் கூட்டங்களுக்கு மக்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதுவும் நாம் அறிந்தது.
அப்போதெல்லாம், அரசாங்கத்தோடு கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மஹிந்தவினால் வழங்கப்பட்ட ஒப்பந்தம் எப்படியானதோ, அதேமாதிரியான ஒப்பந்தமே நல்லூரில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை அழைத்து வருவதற்காகவும் விடுக்கப்பட்டது.
இதில், என்ன புதுமை என்றால், மஹிந்த காலத்தில் ஒப்பந்தக்காரராக செயற்பட்ட ஒருவரே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் ஒப்பந்தக்காரராக இருந்தார் என்பதுதான்.
இந்தப் பத்தியாளரிடம் இளம் ஊடகவியலாளர் ஒருவர் கூறினார், “அண்ணா, ரஜினியின் வருகையை பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ரஜினியை அழைத்து வருவதன் மூலம் தாம் பெரியவர்கள் என்கிற விலாசம் காட்டவும் தனிப்பட்ட வர்த்தக இலாபங்களைப் பெறவும் ஒரு தரப்பு முயற்சித்தது.
அந்தத் தரப்பிடம் பெரும் பணம் உண்டு. அந்தப் பணத்துக்கு அரசியல் தரகர்கள் இணங்கிச் செல்வதும் இயல்பு. ஆனால், தங்களைத் தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்கின்ற ஊடகங்கள் சிலவும் பணிந்திருப்பதுதான் வருத்தமான செய்தி” என்றார்.
நிலைமை இப்படியிருக்க, இந்த அப்பாவி மக்களை நோக்கி வசை மாரிகளைப் பொழிந்துதான், உங்களின் தமிழ்த் தேசியப் பற்றினையெல்லாம் காட்ட வேண்டியதில்லை. அலைக்கழிப்பின் வலி பெரியது. அந்த மக்களுக்காக இரங்குவோம். சூழ்ச்சிகளை இனம்கண்டு தோற்கடிப்போம்.
Average Rating