அகலத் திறக்க மறந்த அறிவுக் கண்கள்..!! (கட்டுரை)
ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் போசாக்கு, வீட்டு வசதி, ஆயுள் காலம் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய பௌதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டெண்னில் இலங்கை முன்வரிசையில் இடம் வகிக்கின்றது.
உயர் கல்வி என்ற விடயத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் சிறப்பான கல்வியை வழங்குகின்றன. இவ்வாறு கணிசமான பண்புகளில் முன்னனி வகிக்கும் எம் நாடு, இனவாதம், மதவாதம் போன்ற பரப்புகளில் கடை நிலைவகிக்கின்றது.
இதன்காரணத்தால், நாட்டின் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்தும் அழிவுக்கும் ஆபத்துக்கும் உள்ளாகி வருவதுடன், அவர்களது இருப்பும்கேள்விக் குறியாக உள்ளது.
இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களும் சிறப்பான கற்றல் செயற்பாடுகளை வழங்கினாலும், அங்கு கல்வி பயிலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த மாணவர்களுக்கிடையே, ‘நாம் அனைவரும் இலங்கையர்’ என்ற ஒரு பொதுவான இணக்கப்பாடு இல்லாத சூழ்நிலையே காணப்படுகின்றது.
ஒரு நாட்டினது மாணவர் சக்தி என்பது மிகவும் பலம் பொருந்திய மாபெரும் வல்லமை கொண்டது. நாட்டின் அரசியல் நிலைவரத்தைப் பலவேளைகளில் தீர்மானிக்கக் கூடிய வாண்மை வாய்த்தது. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் எனும்போது, அதுமேலும் ஒருபடி உயர்வானது.
ஆகவே, அப்படிப்பட்ட மாணவர்கள் மத்தியில் மதம், மொழி ஆகியவற்றின் பெயரில் இடைவெளி ஏற்படுவது, ஜனநாயக விழுமியங்களை விழுங்குவதாகவே அமையும்.
இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் இயங்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஜக்கியத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் வேலைத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து, இந்தச் சிறப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளன.
நல்லினக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல், முரண்பாடுகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவைகளாக கற்கை நெறிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இலங்கையின் தேசிய கல்விக் கொள்கையில், இடை நிலைக் கல்வியில் பாடசாலைகளில் ஆறு பாடங்கள் கட்டாய பாடங்களாகும். சமயம், மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் வரலாறு என்பன அவையாகும்.
ஒருநாட்டின் எதிர்காலச் சிற்பிகளாக வரக்கூடிய மாணவச் சமுதாயம், தம் நாட்டின் வரலாற்றுத் தடங்களை நன்றாக, அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே அவை பாடப்பரப்பில் உள்ளடக்கம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் 1505 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர்த்துக்கேயர் இங்கு வந்த போது, மூன்று இராச்சியங்கள் காணப்பட்டமையை வரலாறு உறுதி செய்கின்றது. மூன்று இராச்சியங்கள் எனும்போது, மூன்று நாடுகளுக்கு உரிய அடிப்படை அம்சங்களுடனேயே அவை காணப்பட்டதுடன் நிர்வகிக்கப்பட்டும் வந்துள்ளது.
அவையாவன கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாண இராச்சியங்களாகும். கோட்டை இராச்சியம் போர்த்துக்கேயரிடம் அடிபணிந்தது. கண்டி இராச்சியமானது பிரித்தானியரிடம் மண்டியிட்டது. ஆனால், யாழ்ப்பாணத் தமிழ் அரசு, போர்த்துக்கேயருக்கு எதிராகச் சளைக்காது போராடியது.
அத்துடன் வன்னித் தமிழ்ச் சிற்றரசு, ஆங்கிலேயருடன் சமராடி வீரவரலாறு படைத்தது. இவை கட்டுக்கதைகளோ அல்லது இட்டுக்கட்டிய கதைகளோ அல்ல. உண்மையாக இடம்பெற்ற சம்பவங்கள். அவை ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்ட வரலாறுகள் ஆகும்.
இவை, நம்நாட்டு வாரலாற்றுப் பாடத்திட்டங்களில் இடம்பெறவில்லை. இவ்வாறான பதிவுகள் வரலாற்று புத்தகத்தில் 13 வயதில் உள்ள ஒரு மாணவன் இதயத்தில் இடம் பிடிக்காமல், 23 வயதில் எவ்விதம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் இதயங்களுக்கு இடையில் நல்லுறவு ஏற்படுத்தும்.
ஒரு பிள்ளை பாடசாலையில் ஆறு வயது தொடக்கம் பத்தொன்பது வயது வரையான பதின்மூன்று வருடங்களைக் கழிக்கின்றது. நல்லுறவு வளர்க்கப் பாடசாலை சாலப் பொருத்தமான இடம்.
ஆம்! இப்படியான ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது என பார்ப்போமாயின் ஜந்தில் வளையாதது எப்படி ஐம்பதில் வளையும்.
உண்மையான வரலாற்றைக் கூறினால் மட்டுமே சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்கள் மத்தியில், சிறு வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை, ஏன் மரணம் வரையும் மதிப்பும் மரியாதையும் நல்லுறவும் துளிர் விடும்; ஒளி விடும்.
இல்லையேல் மற்றைய இனத்தின் வீரம், தேசப்பற்று, பாரம்பரிய இருப்பு, சிறப்பான குணவியல்பு என்பன தெரியாமல் போய்விடும்; தெரியாமல் போய் விட்டது.
ஆதலால், தாங்கள் ஆளப் பிறந்தவர்கள் என்றும் தமிழ் மக்கள் ஆளப்படுபவர்கள் என்றும் படையினர், மக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மதகுருமார்கள் எனச் சிங்கள சமூகத்தின் அனைத்து பகுதியினரும் நினைப்பதால், இலங்கைத்தீவில் இனமுறுகல் ஆழமாக இருப்புக் கொண்டு விட்டது.
ஆகவே, அதனைப் பல வரலாற்று பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்ற சிங்களக் கல்விமான்கள் உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தக் குரல் வடக்கு, கிழக்கிலிருந்து உதித்தால் சபை ஏறாது. ஒட்டு மொத்தப் பல்கலைக்கழகங்களும் வரலாற்றை திரிபுபடுத்தாமல் உண்மையைக் கூறவேண்டும். அதனூடாக, சிறு வயதிலேயே சுமணசிறிக்கும் சிறிதரனுக்கும் நல்ல உண்மையான இணக்கம் மற்றும் விட்டுக்கொடுப்பு ஏற்பட வழிவகுக்கும்.
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் மாணவர்களும் பட்டப்படிப்புகளின் போது, பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வது வழமை. அவர்கள் இனமுறுகல், இனமோதல் மற்றும் போருக்கு பிந்திய களநிலை என்ற பாடப்பரப்புக்குள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அவற்றுக்கு தகவல்கள் திரட்டும் முகமாக வினாக்கொத்துகள் தயார் செய்ய வேண்டும்.
இனமுறுகல் ஏன் ஏற்பட்டது? அதன் பரிணாம மாற்றம் அல்லது நீட்சி? விளைவுகள்? பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன? தீர்வு ஆலோசனைகள்? எனப் பல்வேறு வினாக்கள் அதில் இடம்பெற வேண்டும்.
தமது தாய் மொழியில் இலகுவாக விடை அளிக்கக் கூடியதாக வினாக்கள் அமைய வேண்டும். பாமர மக்கள் தொடக்கம் உயர்கல்வி கற்றோர் என அனைத்து வகுப்பினரிடையும் தரவுகள் பெறப்பட வேண்டும்.
நடுநிலையாக, நீதி தவறாது, உண்மையாகத் தகவல்கள் திரட்டப்பட வேண்டும். இன, மத, மொழி ரீதியான கலப்படங்கள் எள்ளளவும் இடம்பெறக் கூடாது. பல்கலைக்கழகங்களது தெளிவான முடிவுகள் எனின், அரசியல்வாதிகளின் வெற்றுக் கோசங்கள் செல்வாக்குச் செலுத்த முடியாது.
ஒவ்வொரு தனி நபர் தொடக்கம், அரச தனியார் நிறுவனங்கள், கோயில்கள், வர்த்தக நிறுவனங்கள் என ஒவ்வொன்றுக்கும் சமூகத்தின் மீதான தனது சமூகப் பொறுப்பு உள்ளது.
உதாரணமாக, வீதியால் செல்லும் ஒருவர் பகலில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் ஆழியை அணைக்கத் தவறின் அவர் தனது சமூகப் பொறுப்பை அங்கு இழந்து விடுகின்றார். கோவிலில் மிகையான ஒலியுடன் ஒலிபெருக்கிகள் இயங்கின் அது தனது சமூகப் பொறுப்பை இழக்கின்றது.
இதில், அண்மையில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான மாநாட்டில் இலங்கைப் பிரதமர், இங்கிருந்து காணொளி மூலமாக உரையாற்றியிருந்தார்.
அவ்வேளை, “ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தென்படுபவர் இன்னொருவருக்கு விடுதலை வீரன் ஆக முடியாது” எனக் கருத்து வெளியிட்டருந்தார். மேலும், “அதிர்ஷ்டவசமாக நாங்கள் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அங்கு நடைபெற்ற போரினைத் தமது இருப்புக்கானதும் வாழ்வுக்கான போராகவே கருதினர். ஆதலால்தான் தாங்கள் தோல்வி அடைந்த சமூகமா எனவும் நினைத்து வருத்தப்படுகின்றனர்.
மேலும், அதில் ஈடுபட்டவர்களைத் தமிழ்ச் சமூகம் பயங்கரவாதிகளாகவும் கருதவில்லை. ஆகவே, வடக்கு,கிழக்கில் தமிழ் பிரஜைகளிடம் நேர்மையான முறையில் தகவல் சேகரித்தால் அவர்கள் உள்ளக்கிடக்கைகளை ஒட்டு மொத்த உலகுக்கும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை ஒட்டி (மார்ச் 20) ஆய்வு அறிக்கை ஒன்றை அச்சபை வெளியிட்டிருந்தது.155 நாடுகளைக் கொண்ட அந்தப் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் கிடைத்துள்ளது.
நாட்டு மக்கள் எந்தளவு மகிழ்ச்சியாக உள்ளனர். ஏன் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த மகிழ்ச்சி அறிக்கை தயாரிக்கப்படுகின்றது.
அனைத்து வளங்களும் நிரம்பிக் கிடக்கும் நாட்டு மக்களின் மனதில், கவலை குடி கொண்டுள்ளது. சிலவேளைகளில் தமிழ் மக்களது கவலைகள், துன்பங்கள் கூட இந்தப் பின்னடைவுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
எனவே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது விரக்திநிலை மறையும் வரை, இந்நிலை தொடரலாம். இவைகள் யாவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயப் பரப்பாகின்றன.
“நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது; மக்கள் மகிழ்ச்சியாக ஒருமித்து ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள். எமது நாட்டில் நீதி சகலருக்கும் சமமானது; பொதுவானது” என ஆட்சியாளர்கள் ஜெனீவாவில் முகாமிட்டுத் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகையில், ஜ.நாவின் மகிழ்ச்சியான நாடு அறிக்கை உண்மையை வௌிப்படுத்தியிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்ற காலங்களில் கூட, பெறுமதியான மனித வளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் இழப்பைத் தடுக்க நாட்டின் உயர் கல்விச் சமூகம் தவறி விட்டது.
அரசியல்வாதிகள் தொடர்ந்தும் நாட்டைக் குட்டிச் சுவராக்க, இன்னும் எத்தனை காலம்தான் வெறும் பார்வையாளராக இருக்கப் போகின்றது கல்விச் சமூகம். நாடாளுமன்றத் தேர்தலின் போது 225 ஆசனங்களில் 29 தேசியப் பட்டியல் மூலமாக கல்விச் சமூகத்தை நாட்டின் உயர்சபை கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நடப்பதோ தேர்தலில் தோற்றவர்களும் கட்சிகளின் விசுவாசிகளும் தேர்வு செய்யப்படுகின்ற கேவலமான துர்ப்பாக்கிய நிலை.
ஆகவே, நாட்டைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லக்கூடிய மிக முக்கிய துறையான கல்வித் துறையின், அரசு மீதான கடிவாளம் கழன்று போய் உள்ளது.
மதத்தின், மொழியின் பெயரில் பிரிந்து போகாமல் தாய் நாடு என்ற ஒற்றை நாமத்தால் ஒற்றுமைப்பட, நாட்டின் பல்கலைக்கழகங்கள் அர்ப்பணிப்புடன் அர்த்த புஸ்டியான சமாதானத்தை நோக்கி வேகமாக நடை கட்ட வேண்டும்.
Average Rating