பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்து கேரள முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதிய சிறுமி..!!
கேரளாவில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்த பன்னிரெண்டு வயது பள்ளிச் சிறுமி ஒருவர், அம்மாநில முதல்வருக்குப் பாதுகாப்பு கோரி கடிதம் எழுதி இருக்கிறார்.
மிகவும் உருக்கமும் அச்சமும் நிறைந்த வரிகளில் எழுதப்பட்ட அந்தக் கடிதம், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில், கேன்சரால் பாதிக்கப்பட்ட 90 வயது பெண்மணியைப் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் கொடுமை செய்தது அதிர்வு அலையை உண்டாக்கியது.
கடந்த மாதம், திரைப்பட நடிகை பாவனாவை காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல், பாலியல் தொந்தரவு செய்தது.
ராபின் வடக்கஞ்சேரி என்கிற பாதிரியார், பதினேழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, ஒரு குழந்தைக்கு தாயாக்கிவிட்டார். அவரை போலீஸார் பிப்ரவரி இறுதியில் கைது செய்தனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தூக்கில் தொங்கினார்.
அடுத்த சில வாரங்களில் அதே இடத்தில் அவரது ஒன்பது வயது சகோதரியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் கேரள சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன், குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதில், சகோதரிகள் இருவருமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில், கொல்லம் மாவட்டம் குண்டாரா என்ற இடத்தில் பத்து வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழப் பிடிக்காததால் சாகிறேன்’ எனக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
இதனால், அந்த வழக்கைத் தற்கொலை என போலீஸார் முடித்துவிட்டனர்.
ஆனால், அந்தச் சிறுமியின் உடலை ஆய்வுசெய்த மருத்துவர்கள், உடலில் இருபது காயங்கள் இருந்ததையும், சிறுமி இறப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியது. உயர் அதிகாரிகள் தலையிட்டு விசாரித்தபோது, அந்த தற்கொலைக் கடிதம், சிறுமியின் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் இருந்த கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை.
அதனால், இந்த விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்டதற்காக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, எஸ்.பி தலைமையில் தீவிர விசாரணை நடந்தது.
அதில், அந்தச் சிறுமியின் தாத்தாவே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தது வெளியாகி அதிரவைத்தது.
அந்தக் கிழட்டு மிருகத்தையும் அவருக்குத் துணையாக இருந்த மனைவியையும் கைது செய்தனர்.
இப்படி நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள், கேரளாவில் பெண்களிடமும் சிறுமிகளிடமும் பீதியைக் கிளப்பி உள்ளது.
பள்ளி, கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பும் வரை பெண்ணைப் பெற்றவர்கள் பதைபதைத்துக் கிடக்கிறார்கள்.
பொது இடங்களுக்குச் செல்லவே சிறுமிகள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில்தான் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவியான அனந்தரா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுது உள்ளார்.
உணர்ச்சிக் கொந்தளிப்புடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தக் கடிதத்தில்…
‘கேரளாவில் தற்போது நடக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
என்னைச் சுற்றிலும் ஏதேதோ நடக்கிறது. அவை பீதியையும் வேதனையும் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் இருக்கும் சமூகத்தில் நான் பய உணர்வுடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
எனது வயதுடைய சிறுமிகளுடன் நிம்மதியாக விளையாட முடியவில்லை. நான் வழக்கமாக விரும்பிச் செல்லும் இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.
பள்ளிக்குச் செல்வதிலும் நிம்மதி இருக்கவில்லை. பயத்துடனேயே செல்லும் மனநிலையில் இருக்கிறேன்.
இப்போது நிலவும் சூழல் காரணமாக, எனது குழந்தைமையை இந்தச் சமூகம் திருடிக்கொள்வதாகவே நான் நினைக்கிறேன்.
பல இரவுகளில் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எப்போதும் மன அழுத்தத்துடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன். எனது சுதந்திரம் முழுமையாகப் பறிபோய்விட்டதாகவே நினைக்கிறேன்.
கொல்லம் மாவட்டம், வாலையாறு பகுதியில் கீர்த்திகா, சரண்யா என்ற சகோதரிகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டனர். அதில் மூத்தவளான கீர்த்திகாவுக்கு எனது வயதுதான்.
என் வயதில் உள்ள ஒரு சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை நினைத்துப் பல இரவுகள் வேதனையில் தனிமையில் அழுது இருக்கிறேன்.
இப்படியான சோகத்துக்கு மத்தியில் என்னால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?
சம வயது உள்ள ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், எனக்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? குண்டாராவில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்குத் தெரியும்தானே?
ஒரு தாத்தாவால் தனது பேத்திக்கு இதுபோன்ற கொடுமையைச் செய்ய எப்படி மனம் வருகிறது? இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் நம்பவே முடியவில்லை.
இப்படி எல்லாம்கூடவா நடக்கும் முதல்வர் அவர்களே? இந்தச் சமூகம் அந்த அளவுக்குக் கொடூரமானதாகவா மாறிவிட்டதா?
நான் உங்களிடம் வேண்டி விரும்பிக் கேட்பதெல்லாம், எனக்குச் சுதந்திரமாக இருக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுங்கள் என்பதுதான்.
நான் எப்போதும் போல சாதாரணமாக வாழ வேண்டும். பயந்துகொண்டே இருக்கக் கூடாது.
சக சிறுமிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி, ஓய்வான நேரத்தைப் பிறருடன் சேர்ந்து சந்தோசமாக செலவிடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
எனது வயதில் எனக்குக் கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை யாருக்காகவும் எதற்காகவும் இழக்கக் கூடாது.
அதற்கான உத்திரவாதம் கிடைக்க வேண்டுமானால், குழந்தைகளிடம் வரம்பு மீறிச் செயல்படுபவர்களுக்கு நீங்கள் மிகக் கடுமையான தண்டனைக் கொடுக்க வேண்டும்.
அதற்கு ஏற்ற வகையில் சட்டம் இயற்றுங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே, என்னைப் போன்ற சிறுமிகள் சுதந்திரத்துடன் எங்களின் வயதுக்கான மகிழ்ச்சியைப் பெறமுடியும்.
எங்களின் கனவுகள் நினைவாக்க முதல்வராகிய உங்களால் மட்டுமே முடியும்.
எங்கள் நலனைப் பாதுகாக்க நீங்கள் மனதுவைப்பீர்களா முதல்வர் சார்?’ என உருக்கமாகக் கடிதத்தை முடித்துள்ளார், சிறுமி அனந்தரா.
இது கேரளாவுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எழுதப்பட்ட கடிதம் என்பதில் சந்தேகமில்லை.
Average Rating