ட்ரம்ப்புக்கு வீழ்ந்துள்ள பாரிய அடி..!! (கட்டுரை)
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்புத் தொடக்கம், பல்வேறான சவால்களை எதிர்கொண்டுவருகிறார். அந்தச் சவால்கள், எப்போதும் குறைந்தபாடாக இல்லை. இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் விசாரணைகள், அவருக்கான பாரிய அடியை வழங்கியுள்ளன எனக் கருதப்படுகிறது.
புலனாய்வுக்கான கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) தலைவர் ஜேம்ஸ் கோமி, தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் தலைவர் மைக் றொஜர்ஸ் ஆகியோர், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் முன்னால் சாட்சியமளித்தனர்.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட மைக்கல் பிளின், தான் பதவியேற்றுச் சில வாரங்களிலேயே, ரஷ்யாவுடன் முன்னர் காணப்பட்ட தொடர்புகள் காரணமாகப் பதவி விலகினார். அதற்கு முன்னர், வேட்பாளராக ட்ரம்ப் இருந்தபோது, அவரது பிரசாரக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட போல் மனபோர்ட், அப்போதைய வெளிநாட்டு ஆலோசகர் கார்ட்டர் பேஜ் ஆகியோரும், ரஷ்யாவுடனான தொடர்புகள் காரணமாக, தமது பதவியை இழந்திருந்தனர்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென்பது, பரவலான வேண்டுகோளாக இருந்தது. ஜனாதிபதி ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட, இந்த வேண்டுகோளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையிலேயே, இந்தச் சாட்சியமளிப்பில் கருத்துத் தெரிவித்த ஜேம்ஸ் கோமி, ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பில், ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, உறுதிப்படுத்தினார்.
ஆரம்பம் முதலேயே, ரஷ்ய அரசாங்கம், ட்ரம்ப்புக்கு ஆதரவாகச் செயற்படுகிறது என்ற எண்ணம் இருந்தாலும், அதை உறுதிப்படுத்த முடிந்திருக்கவில்லை. ஆனால் ட்ரம்ப்போ, ரஷ்ய ஜனாதிபதியைப் புகழ்ந்து, அச்சந்தேகத்தை அதிகரித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், இந்த விசாரணையில், ஜேம்ஸ் கோமி குறிப்பிட்ட விடயங்கள், முக்கியமானவை.
ஹிலாரி கிளின்டனை, புட்டின் மிகவும் வெறுத்தார் எனக் குறிப்பிட்ட கோமி, அதன் மறுபக்கமாக, தான் மிகவும் வெறுத்த நபருக்கெதிராகப் போட்டியிட்ட நபர் (ட்ரம்ப்), வெல்ல வேண்டுமென அவர் எண்ணினார் எனவும், கடந்தாண்டு ஜூலை மாதத்திலிருந்து, தேர்தலில் தலையீடு செய்வதற்கு, ரஷ்யா மேற்கொண்டுவரும் முயற்சிகள் சம்பந்தமாக, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம், விசாரணை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைக்குள், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான இணைந்த செயற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்துகள், எதற்காக இந்தத் தேர்தலில், ரஷ்யா தலையிட்டது என்பதற்கான சாத்தியப்பாடுகளை வழங்குகின்றன. ஆகவே, எதுவிதக் காரணங்களுமின்றி, நாட்டின் ஜனநாயகத் தேர்தலைக் குழப்புவது, ரஷ்யாவின் நோக்கமாக இருந்திருக்கவில்லை. மாறாக, ட்ரம்பை, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ய வேண்டுமென்ற எண்ணம், ரஷ்யாவுக்குக் காணப்பட்டிருக்கலாம் என்பதே, தற்போதைய கருத்தாக உள்ளது.
அதிகளவு தன்முனைப்புக் கொண்டவரான டொனால்ட் ட்ரம்ப், இந்தத் தேர்தலில், பிரபல்ய வாக்குகள் என அழைக்கப்படும் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையில், ஹிலாரி கிளின்டனை விட 3 மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்றமையால், சட்டவிரோதமான வாக்களிப்பு இடம்பெற்றது என, ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
தற்போது, இந்தத் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டது என்பது தொடர்பான முதற்கட்டமான சந்தேகம், உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை மறைப்பதற்காக, எவ்வாறான உத்தியை அவர் கையாள்வார் என்பது, இதுவரை தெரியாததாகவே உள்ளது.
இதில் சுவாரசியமான சம்பவமாக, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்பது தொடர்பாக, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம், வழக்கமாக வெளியில் கூறுவதில்லை என்ற போதிலும், இவ்விடயத்தை வெளிப்படுத்த, நீதித் திணைக்களத்தால் தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 நாட்கள் இருக்கும்போது, ஹிலாரி கிளின்டனின் தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கிப் பாவனை தொடர்பான விசாரணைகளில், புதிதாகக் கிடைத்திருக்கும் தகவல்கள், சம்பந்தப்படுகின்றன என எண்ணுவதாகவும் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாகவும், ஜேம்ஸ் கோமி தெரிவித்தமை, சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அவரது அந்தக் கடிதம்தான், ஹிலாரியின் வெற்றியைப் பறித்தது என, ஹிலாரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது அந்நிலை மாறி, ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதவிக் காலத்தின் ஆரம்பத்திலேயே, அவரது நிர்வாகம் தொடர்பாகவும் அவரது வெற்றி தொடர்பாகவும், கேள்விகள் எழுந்துள்ள நிலைமையை, ஜேம்ஸ் கோமி ஏற்படுத்தியுள்ளார்.
இதில் இன்னொரு முக்கியமான விடயமாக, கடந்தாண்டு தேர்தல் காலத்தின்போது, ட்ரம்ப் கோபுரத்தை ஒட்டுக் கேட்பதற்கு, அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா பணித்தார் என்ற, ஜனாதிபதி ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எவையும் கிடையாது என ஜேம்ஸ் கோமி ஏற்றுக் கொண்டார்.
அதேபோல், பிரித்தானிய உளவு அமைப்பால், அது மேற்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டை, றொஜர்ஸ் மறுத்தார். எனவே, ஒன்றன்பின் ஒன்றாக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் கருத்துகள், தவிடுபொடியாக்கப்பட்ட சந்தர்ப்பமாக, இந்தச் சாட்சியமளிப்பு அமைந்தது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், ஜனாதிபதி ட்ரம்ப்பும், தன்னைத் திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை.
டுவிட்டரை அடிக்கடி பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், ஜனாதிபதிக்குரிய உத்தியோகபூர்வ கணக்கிலிருந்து வெளியிட்ட டுவீட் ஒன்றும், இந்தச் சாட்சியமளிப்பில் பொய்யாக்கப்பட்டது.
உண்மைகளுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்குமிடையிலான தூரம், சிறிது அதிகமாகவே உள்ளதென்பது, அனைவரும் அறிந்தது தான். இந்தச் சாட்சியமளிப்பின் போது, கடந்தாண்டுத் தேர்தலை, ரஷ்யா தலையிட்டு, அதில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகமும் தேசிய பாதுகாப்பு முகவராண்மையும் தெரிவித்தன என, அந்த டுவீட் தெரிவித்தது.
அதுகுறித்து, அந்தச் சாட்சியமளிப்பிலேயே கேட்கப்பட, றொஜர்ஸ், அதை விநோதமாகப் பார்த்ததோடு, கோமி, அவ்வாறு தாங்கள் தெரிவித்திருக்கவில்லை எனத் தெரிவித்தார். இதுவும், ஜனாதிபதிக்குரிய பாரிய அடியாக அமைந்தது.
நாட்டின் ஜனாதிபதி, அடிக்கடி பொய் சொல்கிறார் என்பது ஒருபுறமிருக்க, அவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் தவறு தொடர்பாகவும் அவரது கருத்துத் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படும் காங்கிரஸ் விசாரணை பற்றியே, ஜனாதிபதி பொய் சொல்கிறார் என்பது, ஆரோக்கியமான ஒன்றல்ல.
அடுத்ததாக, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, சில தடவைகள் கோல்ப் விளையாடுவதற்காக, வார இறுதி நாட்களில் சில தடவைகள் சென்றபோது, அவற்றைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், தற்போது பதவியேற்று இதுவரை, ஆகக்குறைந்தது 8 வார இறுதி நாட்களில், கோல்ப் விளையாடுவதற்காகச் சென்றுள்ளார்.
இறுதியாக, கடந்த வார இறுதியில், கோல்ப் கழகமொன்றுக்கு அவர் சென்ற போது, அங்கு சந்திப்பில் ஈடுபடுகிறார் என்றே, வெள்ளை மாளிகை தெரிவித்தது. ஆனால், அங்கு சென்ற பின்னர் வெளியான புகைப்படமொன்றில், கோல்ப் விளையாடும் ஆடையில், கையில் கோல்ப் விளையாடுவதற்கான கையுறையுடன், ஜனாதிபதி ட்ரம்ப் காட்சியளித்தார்.
நாட்டில் முக்கியமான பல சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது, அவற்றைப் பற்றிக் கணக்கெடுக்காமல், வாராந்தம் அவர், கோல்ப் விளையாடச் சென்று விடுகிறார் என்பது, முக்கியமான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆதரவுடன், அவரது குடியரசுக் கட்சியினர் சமர்ப்பித்துள்ள சுகாதாரத் திட்டத்தின்படி, சுமார் 23 மில்லியன் பேர் (இந்த அளவு, வேறுபடுகின்ற போதிலும், குறைந்தது 12 மில்லியன் பேர் எனக் குறிப்பிடப்படுகிறது), தங்களது சுகாதாரக் காப்பீடுகளை இழப்பர் என்ற செய்தி, ஏராளமான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது குறித்து, ஜனாதிபதி ட்ரம்ப், பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரது இந்தப் பண்பை, அமெரிக்க மக்களும், ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் பணி ஏற்புச் சதவீதமாக, 40 சதவீதம் காணப்படுகிறது. பொதுவாக, பதவியேற்ற ஜனாதிபதிகள், தங்களது ஆரம்ப காலத்தில், பரவலான ஆதரவைக் கொண்டிருப்பர். அரசியலில் தேனிலவுக் காலம் என்று இதனை அழைப்பர். ஆனால், அவ்வாறான ஒரு காலம், ஜனாதிபதி ட்ரம்ப்புக்குக் காணப்படவில்லை. ஒப்பீட்டுக்குப் பார்ப்போமானால், இதே காலத்தில், 2009ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஒபாமாவுக்கு 63 சதவீத ஆதரவு காணப்பட்டது.
இந்த ஆதரவு, வெள்ளையர்கள் அல்லாதோருக்கு, ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் 20 சதவீதமாக உள்ளது. அதேபோல், பட்டப்படிப்பைக் கொண்டிருப்போரில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆதரவு, 32 சதவீதமாகக் காணப்படுகிறது.
ஜனாதிபதிக்கான இந்த ஆதரவு, ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் பிரிவைக் காட்டுகிறது. இதன்மூலம், ஜனாதிபதிக்கு எதிராகக் காணப்படும் எதிர்ப்புகளை, அவர் எதிர்கொள்வதில் எவ்வளவு சிரமத்தை எதிர்கொள்வார் என்பதையும் காட்டுகிறது.
Average Rating