இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு முடிச்சுப்போடல்..!! (கட்டுரை)
கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதக் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தச்சம்பவத்தை முஸ்லிம் தீவிரவாதமாகக் காட்டுவதற்கான முயற்சிகளும் சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதற்கான கைங்கரியங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால், எப்போது இப்படியான ஒரு பிரசாரத்தை முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த நாசகார சக்திகளுக்கு, முஸ்லிம்களே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர் என்றும் கூறலாம்.
உலகளவில், இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் பிரிவினர் பற்றிய பார்வை வித்தியாசமானது. சாந்தியைப் போதிக்கும் மார்க்கத்தை தீவிரபோக்குடைய ஒரு சமயமாகவே மேற்கத்தேயம் உருவகித்திருக்கின்றது. தாங்களே பயங்கரவாதிகளை திரைமறைவில் உருவாக்கி, அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அந்த இயக்கங்களை உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபடச் செய்து, அப்போது அழையா விருந்தாளியாக அந்த நாட்டுக்குள் அடாத்தாக உள்நுழைந்து ‘சமாதானத்தை நிலைநாட்டுதல்’ என்ற பெயரில் அங்குள்ள முஸ்லிம்களை அழித்தொழிக்கின்ற, இயற்கை வளத்தை கைப்பற்றுகின்ற நீண்டதொரு நிகழ்ச்சி நிரலை அமெரிக்காவும் அதனது கூட்டாளிகளும் செய்துகொண்டிருக்கின்றன என்பது உலகம் அறிந்த விடயமாகும்.
இதேவேளை, இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதன் மூலம், ‘இதுதானோ இஸ்லாத்தின் போதனைகள்’ என்று ஏனைய சமூகங்கள் எண்ணும் விதத்தில் செயற்பட்டுவருகின்ற சர்வதேச ஆயுதக் குழுக்களும் மேற்குலகின் அந்தரங்க நோக்கத்தை அடைவதற்கான களச்சூழலைத் தம்மை அறியாமலேயே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அரபு நாடுகளில் சம்பந்தப்பட்ட ஆட்புல பிரதேசங்களில் வெளிநாட்டுப் படைகள் செய்கின்ற எந்த ஒரு நகர்வும், மனிதாபிமான அடிப்படையிலானது அல்ல என்பது வெள்ளிடைமலை.
ஆனால், அங்கு போராடுகின்ற ஆயுதக் குழுக்களின் போக்குகள் எவ்வாறிருந்தபோதும், அங்கு பாதிக்கப்பட்டுள்ள, வெளிநாட்டுப் படைகளுக்கு எதிராகத் தைரியமாக முன்னிற்கின்ற அப்பாவி மக்களின் விடுதலை உணர்வும் தைரியமும் பாராட்டப்பட வேண்டியது. அவர்களது நோக்கங்களும் சிந்தனைகளும் தூய்மையானவை; அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறான நாடுகள் உள்ளடங்கலாக இலங்கையிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்கள் தங்களது உரிமைகளில் அக்கறையுடன் இருக்கின்றார்களேயொழிய, 90 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இப்போது சொல்லப்படுகின்ற ‘இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு’ ஆதரவானர்கள் அல்லர்.
இன்னும் தெளிவாகச் சொன்னால், ‘தீவிரவாதம்’ என்ற சொல் கூட உண்மையான இஸ்லாமியர்களின் அகராதியில் இல்லை. நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் எல்லோரையும் கிட்டத்தட்ட பயங்கரவாதிகளைப் போல கையாளுகின்ற, சித்திரிக்கின்ற வேலையை இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகள் கனகச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன. காத்தான்குடி சம்பவத்தைப் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெறுகின்ற தற்செயல் சம்பவங்களும் இதற்குத் துணைபோவதாக அமைந்துவிடுகின்றமை துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும்.
இந்தப் பிரசாரச் செயற்பரப்புக்குள் இலங்கையும் அண்மைக்காலமாக உள்வாங்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. அதன்மூலம் இலங்கையிலும் இஸ்லாமியத் தீவிரவாதம் இருக்கின்றது என்று அவர்கள் சொல்ல முனைகின்றனர். அவ்வப்பபோது அதற்கான சான்றாதாரங்களும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களிடையே மத அடிப்படையில் ஏற்பட்டிருக்கின்ற முரண்நிலைக்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிட முடியும். ஓன்று, இஸ்லாமிய மாற்றுக் கருத்தியல் மற்றும் மாற்றுக்கொள்கை இயக்கங்களின் செயற்பாடுகள், இரண்டாவது, சர்வதேச ஆயுதக் குழுக்களுடனான தொடர்புபற்றிய புலனாய்வு அறிக்கைகள் மற்றும் சம்பவங்கள். சில மதங்களில் பலதெய்வ நம்பிக்கைகள் இருக்கின்றன.
அவர்கள் அடிப்படையில் ஒரே மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் வழிபடும் தெய்வங்கள் சிலபோதுகளில் வேறுபடுவதைக் காணமுடிகின்றது. சில இனக் குழுமங்களிடையே சாதிய வேறுபாடுகளும் பிராந்திய பாகுபாடுகளும் கூடக் காணப்படுகின்றன. ஆனால், அந்த மக்கள் தங்களுக்கு இடையில் முரண்பட்டதும் சண்டையிட்டதும் மிகக் குறைவாகும். அவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மதத்தின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.
ஆனால், முஸ்லிம்களிடத்தில் பலதெய்வ வழிபாடும் இல்லை, சாதிய வேற்றுமைகளும் இல்லை. எல்லோரும் ஒரே இறைவனையே வழிபடுகின்ற சமமான மக்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உலகெங்கும் வாழ்கின்றனர். ஆனால், அவர்களிடையே மார்க்க அடிப்படையில் கூட ஒற்றுமை இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இதனால் மாற்றுமத சகோதரர்கள் குழம்பிப்போய் இருக்கின்றனர். முஸ்லிம்கள் ஒரே இறைவனையே வழிபடுகின்ற போதிலும், அந்தவழிபாட்டு நடைமுறைமையில் அதனது செயற்கிரமத்தில் மாறுபட்ட கருத்தியல்களை முன்வைக்கும் இயக்கங்களும் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.
இலங்கைச் சோனகர்களும் அவர்களது வாரிசுகளும் பன்னெடுங்காலமாக கடைப்பிடித்து வந்த வழிபாட்டு முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தாரகமந்திரத்தோடு புதிதாக ஓர் அமைப்பு மூன்று தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றது. இதனது கருத்துக்களை ஒரு தொகுதி மக்கள் ஆதரிக்கின்றனர்; சிலர் நிராகரிக்கின்றனர். சிலர் இரண்டு பக்கத்திலும் இருக்கின்ற நல்ல விடயங்களை எடுத்து நடக்கின்றனர். ஆயினும், சிலவேளைகளில் மார்க்கப் பிரசங்கம் என்பது கருத்து மோதலாக மாறிவிடுகின்றது.
பின்னர், அது முற்றி ஆட்களுக்கு இடையிலான நேரடிச் சண்டையாகி…முஸ்லிம்களை வெட்கித் தலைகுனியச் செய்து விடுகின்றது. சிலவேளை, ஒரே மதக் கருத்தியலைப் பின்பற்றும் இயக்கங்களுக்கு மத்தியிலும் குழுக்கள் உருவாகிவிடுகின்றன. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றது. இதனால், இலங்கை முஸ்லிம்கள் பெற்றதைத் தவிர இழந்தவையே அதிகம் என்றால் மிகையில்லை.
இதேவேளை, இன்னுமொரு விதமான இரண்டெழுத்து மாற்றுக் கொள்கை இயக்கம் ஒன்று அண்மைக்காலமாக இலங்கைக்குள் ஊடுருவி இருக்கின்றது. இது, இலங்கையில் உள்ள பாரம்பரிய இஸ்லாமியக் கோட்பாடுகளில் கிட்டத்தட்ட முற்றுமுழுதாக மாற்றுக் கொள்கைகள், நிலைப்பாடுகளை முன்வைக்கின்ற ஒரு முறைமையாக கருதப்படுகின்றது.
பெயர் குறிப்பிடத்தக்க ஓரிரு நாடுகள் இதற்கென அதிக முதலீடு செய்து இலங்கையில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் உள்ள பல பிரபலங்கள், வர்த்தகர்கள் இதற்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் புலமைப்பரிசில்கள், மார்க்கப் போதனைகள் என்ற வடிவில் மக்களுக்குள் ஊடுருவிச் செயற்படுகின்றனர்.
மேலே குறிப்பிட்ட மாற்றுக் கருத்தியல் இயக்கங்களை விட, இந்த அடிப்படை மாற்றுக் கொள்கை அமைப்பின் செயற்பாடு மிகவும் தீவிரமானதும் ஆபத்தானதுமாக நோக்கப்படுகின்றது. ஆங்காங்கு, பாரம்பரிய கொள்கை, கருத்தியலோடு வாழ்கின்ற முஸ்லிம்கள் இவர்களோடு முரண்பட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இவ்வாறான முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுகின்றபோது, வெளியில் இருக்கின்ற சக்திகள் இதனை முஸ்லிம் அடிப்படைவாதம் என்றும், தீவிரவாதம் என்றும் சொல்வதற்கும் சர்வதேச பயங்கரவாதத்தோடு இலங்கை முஸ்லிம்களை முடிச்சுப்போடவும் நிறையவே வாய்ப்பு உருவாகி விடுவதைக் காண்கின்றோம். இது தவிர்க்க முடியாததும் ஆகும்.
ஏனெனில், தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நாட்டின் பாதுகாப்புத் தரப்புக்கும் இதிலிருக்கின்ற வேறுபாடுகள், உள்ளரங்கங்களை தெளிவுபடுத்துவது இயலாத காரியமாகும். ஒரு சிறிய குழுவினரால் ஏற்படுகின்ற கலவரங்கள் மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதற்கு காரணமாகி விடுகின்றது. காத்தான்குடி விவகாரத்திலும் கிட்டத்தட்ட அதுதான் நடந்திருக்கின்றதாகத் தெரிகின்றது. காத்தான்குடி பிரதேசம் என்பது முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழ்கின்ற பிரதேசமாகும்.
அங்கு, கடந்த 10 ஆம் திகதி இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கல்லெறி மற்றும் வாள் வெட்டு தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர். இதனையடுத்துப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் என்ன காரணத்துக்காக இடம்பெற்றது என்ற நியாயங்களுக்கு அப்பால், சமயத்தின் பெயரில் வாள், கையில் எடுக்கப்பட்டுள்ளமையும் அது தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் மற்றும் கட்டுக்கதைள் வெளியாகியுள்ளமையும் முஸ்லிம்கள் பற்றிய மிக மோசமான பிரதிபிம்பம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும். ஏற்கெனவே, கிழக்கில் ஜிகாத் அமைப்பு இருக்கின்றது என்றும், முஸ்லிம்கள் தீவிரவாத சிந்தனையுடையோர் என்றும் சிங்கள கடும்போக்காளர்கள் குறிப்பிட்டு வந்த நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்து, “இதோ நாம் சொன்னோமே.
இலங்கை முஸ்லிம்களுக்கு இடையில் தீவிரவாதம், ஜிகாத் இருக்கின்றது பார்த்தீர்களா?” என்ற தோரணையில் கடும்போக்காளர்கள் சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் கருத்துவெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். இது மிக மோசமான ஒரு பின்விளைவாகும். பல வருடங்களுக்கு முன்னர் மாற்றுக் கருத்தியல் இயக்க முரண்பாட்டினால் ஓர் இயக்கம் செய்த முறைப்பாட்டின் காரணமாகவே, நாட்டில் யாரும் 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கி பாவிக்க முடியாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போது, காத்தான்குடி அசம்பாவிதம். அதற்கு முன்னரும் பின்னரும் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை தேசிய அடிப்படையில் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை முஸ்லிம்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே, முஸ்லிம்கள்தான் தமது மாற்று இயக்கங்களுக்கு இடையிலான பிரசாரங்களைக் கவனமாக முன்னெடுக்க வேண்டும். மாற்றுக் கருத்தியல் செயற்பாடுகள் தவறானவை அல்ல. ஆனால், அவற்றை நாகரிகமாக மேற்கொள்ள வேண்டும். கருத்துகளை கருத்துகளால் வெல்ல வேண்டும், கத்திகளால் அல்ல! அதேபோன்று, இலங்கையில் இப்போது ஊடுருவிப் பரவி வருகின்ற ‘இரண்டு எழுத்து’ அமைப்பின் இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் அதன் பாரதூரத்தன்மை என்பவற்றை அறிந்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இதற்கு அடுத்த காரணம்தான் சர்வதேச ஆயுதக் குழுக்களுடனான தொடர்புபற்றிய புலனாய்வு அறிக்கைகள் மற்றும் சம்பவங்கள்.
இவ்விடயத்தை முஸ்லிம்கள் மிகவும் சீரியஸாக நோக்க வேண்டும். ஏற்கெனவே இலங்கை முஸ்லிம்களுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கின்றது என்ற கதைகள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு மரணித்ததாகவும் மேலும் பல முஸ்லிம்கள் இவ்வாறான இயக்கங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் புலனாய்வுத் தரப்பினரை மேற்கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதை மறுதலிக்க முடியாத நிலையில் முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அரசாங்கம் மேலோட்டமாக அறிவித்திருந்தாலும் கூட, சிங்களக் கடும்போக்கு சக்திகள் அதை நம்பிய மாதிரித் தெரியவில்லை.
எது எவ்வாறிருப்பினும், ஒரு பொறுப்புள்ள தரப்பினர் என்ற வகையில் பயங்கரவாதத்தின் ஊடுருவல் பற்றி பாதுகாப்புத் தரப்பினர் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றனர். இலங்கையில் இப்போதிருக்கின்ற அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்களிடையே இருக்கின்ற அரசியல் முரண்பாடு, மாற்றுக் கருத்தியல் இயக்கங்கள், புதிதாக ஊடுருவிக் கொண்டிருக்கும் மாற்றுக் கொள்கையாளர்கள், இனவாதிகளின் போக்குகள் எல்லாமே மிக இலகுவாக நாட்டுக்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான களச்சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் தன்மையுடையது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
சர்வதேச அளவில் சாதாரண முஸ்லிம்களே தீவிரவாதிகளாக சித்திரிக்கப்படுகின்ற நிலையில், இஸ்லாமிய கோஷத்தோடு, ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றாமல் போராடுகின்ற ஆயுத இயக்கங்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் மீது மேற்குலகம் குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கைச் சூழலில் முஸ்லிம்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக, நடைபெறுகின்ற குழுமோதல்கள் எவ்வாறு பூதாகரமாக பெருப்பிக்கப்படுகின்றன என்பதையும் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் இது எவ்விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் ஒரு கணம் முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் தற்போது முஸ்லிம்களிடையே தீவிரவாதம் இருக்கின்றது என்று இக்கட்டுரை ஊடாக நாம் கூறவரவில்லை. மாறாக, அவ்வாறு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற வேண்டுதலாகும். உண்மையில், இலங்கையில் அப்படியான எந்த ஆயுதக் குழுக்களும் கட்டமைக்கப்பட்ட ரீதியில் இல்லை. ஆனால், மாற்றுக் கருத்தியல் இயக்கங்கள், இரண்டெழுத்து அமைப்பின் உள்நுழைவு, நாட்டின் அரசியல், இனவாத சூழல் மற்றும் ஏனைய காரணிகளால் அவ்வாறான சக்திகள் ஊடுருவி விடலாம் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘இலங்கை முஸ்லிம்களிடையே தீவிரவாதம் இருக்கின்றது’ என்றோ அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் அவர்களுக்கு தொடர்பிருக்கின்றது என்றோ ஓர் அதிகாரபூர்வ நிலைப்பாடு, சிங்கள மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் யாரும் காரணமாகி விடக்கூடாது.
Average Rating