ரத்தன தேரரும் பொலிஸ் அதிகாரங்களும்..!! (கட்டுரை)
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மீண்டும் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் வெளியிட்ட ஒரு கருத்தை அடுத்தே இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“நான் எதிர்காலத்தில், எனது கட்சியான ஹெல உருமயவிலிருந்தும் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினராகக் கடமையாற்றப் போகிறேன்” என்று அண்மையில் சில இடங்களில் கருத்து வெளியிட்டதனால் ரத்தன தேரர், சில வாரங்களாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அந்த நிலையிலேயே அவர் மாகாண சபைகளுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி, சிங்கள மக்கள் மத்தியில் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
ரத்தன தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வர பெருமளவில் செயற்பட்டவர்.
அதேவேளை, சில காலமாகத் தமிழ் மக்கள் விடயத்தில் பரிந்து பேசி வருகின்றார். ஹெல உருமயக் கட்சியின் உறுப்பினனாக இருந்தும், அரசாங்கம் நல்லிணக்கத்துக்காக மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கையையும் அவர் விமர்சிக்கவில்லை.
அந்த நிலையில், வட மாகாணத்துக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் எனக் கூறினாலும், அதற்குப் பின்னர், அவர் ஆட்கடத்தல் போன்ற சில குற்றச் செயல்களுக்காகப் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்துப் பேசி, தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வரப் பாடுபட்டவர்கள் மத்தியில் மற்றுமொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த வார இறுதியில், அவர் மற்றொரு முக்கியமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார். யுத்த காலப் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்காமையினாலேயே அரசாங்கத்தின் மீது, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது என அவர் கூறியிருக்கிறார்.
இதுவும் நிச்சயமாகச் சிங்கள மக்கள் மத்தியில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த மாதம் 24 ஆம் திகதி, கொழும்பில் நடைபெற்ற தமது தலைமையிலான ஸ்ரீ லங்கா தேசிய சபையின் முதலாவது மாநாட்டின் போதே, ரத்தன தேரர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அவர் இந்தக் கருத்தை அங்கு வெளியிடும் போது, ஜனாதிபதி மைத்திரிபாலவும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது போர் முடிவடைந்துள்ளது. எனவே, இப்போது தமிழ் மக்களுக்குச் சிவில் நிர்வாக அதிகாரங்களுடன் பொலிஸ் படையொன்றை வழங்க முடியும். சிறு குற்றங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவே அந்தப் பொலிஸார் அவசியப்படுவதனால், அவர்கள் ஆயுதம் தரித்து நிற்க வேண்டியதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.
உயர் பாதுகாப்பு வலயங்களில் காக்கிச் சீருடை அணிந்து, கடமையாற்றும் மத்திய அரசாங்கத்தின் பொலிஸாருக்குப் பதிலாக, ஆயுதங்கள் இல்லாமல் வெள்ளைச் சீருடை அணிந்த பொலிஸாரை நாம் கடமையில் ஈடுபடுத்த முடியும் எனவும் தேரர் கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே மாகாண சபைகளுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் புதிதாக வழங்கத் தேவையில்லை. 1987 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அவை வழங்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தத்தை அடுத்து நிறைவேற்றப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலமாகவும் மாகாண சபைச் சட்டத்தின் மூலமாகவுமே மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த அதிகாரங்கள் முறைப்படி ஜனாதிபதியினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். சட்டத்தில் உள்ள அந்த அதிகாரங்களை மாகாண சபைகள் அடைவதாக இருந்தால், அச்சட்டத்தின் நடைமுறைகளை விவரித்து, ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடவும் வேண்டும்.
அதாவது, சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப் படுத்துவதற்காக மாகாணப் பொலிஸ் பிரிவொன்றையும் காணி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்குவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட வேண்டும். அந்த விவரங்கள் இல்லாமல் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாது.
மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், பதவியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வர்த்தமானியை வெளியிட முன்வரவில்லை. அதுவே, தற்போதுள்ள ஒரே தடையாக இருக்கிறது. எனவே, ரத்தன தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்த வர்த்தமானியை வெளியிடுமாறு தூண்ட முடியுமானால் பிரச்சினை அத்தோடு முடிவடைகிறது.
இந்த வர்த்தமானியை வெளியிட முன்வராத ஜனாதிபதிகளில் இருவரைப் பற்றி முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஒருவர் ஜே.ஆர்.ஜயவர்தன; மற்றவர் சந்திரிகா குமாரதுங்க.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபைகள் சட்டத்தையும் நிறைவேற்றியவர் தான் ஜே.ஆர்.
ஆனால், அவர் அச்சட்டங்களின்படி மாகாண சபைகளுக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பிரயோகிக்கக் கூடிய வகையில் இந்த வர்த்தமானியை வெளியிடவில்லை.
இந்த வர்த்தமானியை வெளியிடாததற்குத் தமக்கு முன் பதவியில் இருந்த ஜனாதிபதிகளை திட்டித் தீர்த்தவர்தான் சந்திரிகா குமாரதுங்க. 1994 ஆம் ஆண்டு அவர் மேல் மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது, அவர் இந்த அதிகாரங்களைக் கேட்டு, அவற்றை அதுவரை முறையாக வழங்காதிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகிய ஜனாதிபதிகளைக் குறை கூறினார்.
பின்னர் அவரும் அதே வருடம், நவம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனை அடுத்து அவர் 11 வருடங்கள் ஜனாதிபதி பதவியை வகித்தாலும் இந்த வர்த்தமானியை வெளியிடவில்லை.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் விடயத்தில் சந்திரிகா, தமக்கு முன் இருந்த ஜனாதிபதிகளைக் குறை கூறியது மட்டுமல்லாது, இலங்கை, இந்திய ஒப்பந்தத்தையும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ஆதரித்து உயிராபத்தையும் எதிர்நோக்கியவர்.
அவரது கணவர் நடிகர் விஜய குமாரதுங்க, துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காவதற்கு அவர்கள் மாகாண சபைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையும் ஒரு காரணமாகும். ஆனால், அவரும் பதவிக்கு வந்ததன் பின்னர் மாறிவிட்டார்.
தாம் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப் போவதாக ரத்தன தேரர் கருத்து வெளியிட்டதனால் ஜாதிக்க ஹெல உருமய, ஏற்கெனவே அவருடன் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இக்கருத்து, வெளியிடப்பட்டமையை அடுத்து, அவர் அவ்வாறு சுயாதீனமாகச் செயற்பட முடியாது என்றும் அவ்வாறு சுயாதீனமாகச் செயற்படுவதாக இருந்தால் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியின் தவிசாளர் ஓமல்பே சோபித்த தேரர் கூறியிருந்தார்.
ரத்தன தேர் அதனை மறுத்து வருகிறார். இந்த நிலையில்தான், ரத்தன தேரர் ஹெல உருமயக் கட்சியை மேலும் சீண்டும் வகையில், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் என்கிறார். இது இந்த முறுகல் நிலையை மேலும் வளர்த்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரத்தன தேரரின் தலைமையிலான ஸ்ரீ லங்கா தேசிய சபையானது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது களமிறங்கிய ஓர் அமைப்பாகும்.
அக்காலத்திலும் அவ்வமைப்பு ஹெல உருமயவின் சில கருத்துகளுக்கு மாறான கருத்துகளை வெளியிட்டு வந்தது. அக்காலத்தில் ஹெல உருமய நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் எனக் கூறியபோது, தேசிய சபை நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனக் கூறியது.
ஆயினும், அதனால் இரு சாராருக்கும் இடையே மோதல் நிலை உருவாகவில்லை. தற்போது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதைப் போன்ற, ஹெல உருமய விரும்பாத கருத்துகளை முன்வைத்தவாறு ஸ்ரீ லங்கா தேசிய சபை மீண்டும் தலைதூக்குவதானது இரு சாராருக்கும் இடையே உறவு நிலையை மேலும் மோசமாக்கும்.
எவ்வாறாயினும் ரத்தன தேர் கூறுவதைப் போல, மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது நடைமுறைச் சாத்தியமானது அல்ல; சிறு குற்றங்கள் மற்றும் திருட்டுப் போன்ற சம்பவங்களை அடக்க ஆயுதம் தேவையில்லை என அவர் கூறுகிறார்.
ஆனால், தற்போது சிறு குற்றங்களுக்கும் பயங்கர ஆயுதங்கள் உபயோகிக்கப்படும் நிலையில் ஆயுதம் இல்லாத பொலிஸ் படை என்பது நடைமுறைச் சாத்தியமானதல்ல.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும்போது, தேசியப் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தாலும், தெற்கே சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதனால் தேசியப் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என வாதிடுகிறார்கள்.
ஆனால், விருப்பமின்றி இந்திய நெருக்குதலின் காரணமாகவே, அதிகாரங்களைப் பரவலாக்கிய ஜனாதிபதி ஜே.ஆர் கூடிய வரை மத்திய அரசாங்கத்துக்குச் சாதகமாகவே அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டார்.
உதாரணமாக, 2013 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில் காணி அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட போதிலும், காணிகளின் உரிமை மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது எனக் கூறப்பட்டது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐந்து நாட்களிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட போதிலும், மூக்கணாங் கயிற்றை மத்திய அரசாங்கத்திடம் கொடுத்து விட்டே ஜே. ஆர் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டிருக்கிறார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பொலிஸ் மா அதிபரே பொலிஸூக்குப் பொறுப்பாக இருக்கிறார். பொலிஸ் என்றால் மாகாணப் பொலிஸ் பிரிவையும் உள்ளடக்கியதாகும் என அரசியலமைப்புக் கூறுகிறது.
மாகாணப் பொலிஸ் பிரிவின் தலைவராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரே இருப்பார். தீர்மானங்களை எடுக்கும் அதிகாரமுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலையிலிருந்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வரையிலான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மத்திய பொலிஸ் பிரிவிலிருந்தே நியமிக்கப்படுவர்.
மாகாண பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசித்தே பொலிஸ் மா அதிபர் அந்த நியமனத்தை வழங்க வேண்டும்.
ஆனால், ஒரு மாகாணத்தில் அரசியல் நெருக்கடி நிலை உருவாகியிருப்பதாக ஜனாதிபதி கருதினால் அவர் அந்த மாகாணத்தில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முடியும்.
அத்தோடு, சட்டம் ஒழுங்கு விடயத்தில் முதலமைச்சருக்குரிய அதிகாரங்களை ஜனாதிபதி கையகப்படுத்திக் கொள்ளவும் முடியும். எனவே, மாகாண முதலமைச்சரின் விருப்பப்படியே மாகாண பொலிஸ் பிரிவின் தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் அர்த்தம் இல்லை.
அதேவேளை, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஒரு மாகாணத்துக்குள் மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் பிரிவை அனுப்ப பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையிலும் மாகாணப் பொலிஸூக்கு நெருக்கடி நிலைமையின் கீழ் எதனையும் செய்ய முடியாது. இவ்வாறுதான் பொலிஸ் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறிருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் அஞ்சுகிறார்கள். சாதாரணமாக இருந்த அந்த அச்சத்தை வளர்த்த பெருமை சில தமிழ்த் தலைவர்களையே சாரும்.
உதாரணமாக, இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் படை வீரர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக 1990 ஆம் ஆண்டளவில் சிவில் தொண்டர் படை என்ற பெயரில் ஒரு படை உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் கீழ் அந்தப் படை ஆரம்பிக்கப்பட்டபோது, ஜனாதிபதி பிரேமதாச, இந்தியப் படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தியப் படை வெளியேறும்போது, வடக்கு, கிழக்கு மாகாண சபையின் தலைவர்கள் குழப்பமடைந்து தாமும் இந்தியாவுக்குச் செல்ல நினைத்து, சிவில் தொண்டர் படையை கலைத்துவிட்டனர். அதற்கிடையே அப்படையில் இருந்த 41 முஸ்லிம் வீரர்களைச் சுட்டுக் கொன்றனர். இது போன்ற சம்பவங்கள் தெற்கே மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கும்.
இவ்வாறான சம்பவங்கள் இல்லாவிட்டாலும், சந்திரிகா வழங்காத பொலிஸ் அதிகாரங்களை மைத்திரிபாலவிடம் எதிர்ப்பார்க்க முடியாது.
Average Rating